கூட்டரசின் பட்ஜட் நாளை சமர்ப்பிப்பு

கூட்டரசின் பட்ஜட் நாளை சமர்ப்பிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம், நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதன்பின்னர் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 10ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதிவரை நடைபெறும்.

குழுநிலை விவாதங்கள் இம்மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அடுத்த ஆண்டு பட்ஜட்டுக்கான மூன்றாம் வாசிப்பு மற்றும் வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசின் மொத்தச் செலவு 3,982 பில்லியன் ரூபா எனவும், மூலதனச் செலவு 668 பில்லியன் ரூபா எனவும், வெளிநாட்டு மானியங்களின் மொத்த வருமானம் 175 பில்லியன் ரூபா எனவும் நிதி அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு ஆதாரங்களிலிருந்து பெறப்படும் கடன்கள் 1,813 பில்லியனாகவும், மீண்டெழும் செலவீனங்கள் 1308.9 பில்லியனாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டு 1,807 பில்லியன் ரூபா துண்டுவிழும் தொகையின் அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை (துண்டுவிழும் தொகை) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3 சதவிகிதமாகும்.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் தற்போது அரசால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும், வெளிநாட்டு முதலீட்டு வருவாய் தொடர்பாகவுமே அதிக கவனம் செலுத்தியுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளதால், அடுத்த ஆண்டுக்கான பட்ஜட்டில் மக்கள் சலுகைகளையே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். பொருட்கள் விலைக் குறைப்பு, வரி விலக்கு உட்பட மேலும் பல நிவாரணங்களை அவர்கள் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top