Items filtered by date: Wednesday, 10 January 2018

அமைச்சர் ராஜித சேனாரத்தன 18 பில்லியன் டொலர் பணம் டுபாய் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து கூறிவருகின்றார். ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதனையும் அவர் சமர்ப்பித்தாய் தெரியவில்லை. ஆகவே இந்த பணம் அவரின் வங்கிக் கணக்கு மாற்றப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் தமக்கு தோன்றுவதாக பிவிதுர ஹெலஉருமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “நாட்டின் பெருந்தொகை பணம் கொள்ளையிடப்பட்டு வெளிநாட்டில் இருந்தால் அதனை நாட்டிற்குள் கொண்டுவந்து, அதனை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் டுபாய் நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து அமைச்சர் ராஜித்த சேனாரத்தன கூறி வருகின்றார்.

6 பில்லியன் டொலர் பெறுமதியான இலங்கையின் சொத்துக்களே வெளிநாட்டு வங்கிகளில் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் ராஜித கூறும் அவ்வளவு பெரிய தொகைக்கு என்ன நடந்தது? இது ராஜிதவின் வங்கிக்கணக்குகளுக்கு பரிமாற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எமக்கு தோன்றுகிறது.

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பில் ஆணைக்குழுவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையினை முழு நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். விசேடமாக ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இதனை வெளிப்படுத்த வேண்டும். அதன் பின்னரே இது தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிக்கப்பட வேண்டும்.” என்றார்.

Published in உள்நாடு

அநுராதபுரம் பஸ் தரிப்பிடத்தில் இருந்த 17 வயதான பிக்கு ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பிக்குவின் வைத்திய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அனுராதபுரம் - கும்பிச்சன்குளம் பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் 17 வயதான குறித்த பிக்கு குருநாகலில் கல்வி பயின்று வருவதாகவும், கடந்த 5 ஆம் திகதி விடுமுறைக்காக தனது வீட்டுக்கு செல்ல அநுராதபுரம் நோக்கி அவர் பயணித்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அத்தோடு, துடன் அநுராதபுரம் நகரில் இருந்து தனது வீட்டுக்கு செல்வதற்காக இரவு 8.00 மணியளவில் பஸ்ஸுக்காக அவர் காத்திருந்துள்ளார். இந்தநிலையில் பொதுக் கழிப்பிடம் எங்குள்ளது என அவர் சந்தேகநபரிடம் வினவிய நிலையில், அவர் பிக்குவை புதிதாக அமைக்கப்பட்டு வரும் (இன்னும் திறக்கப்படாத) பஸ்தரிப்பிடம் நோக்கி அழைத்துச் சென்றே துஸ்பிரயோகம் செய்துள்ளார் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Published in உள்நாடு

“என்னையும், என் கட்சியையும் துடைத்து எறியப்போவதாக சொல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் கருத்து, இந்த புதிய ஆண்டின் நகைச்சுவையாக இருக்கிறது. இவரைவிட மிகப்பெரிய கொம்பர்களையெல்லாம் எதிர்கொண்டவன் நான். எனவே, அரசியலில் என்னுடன் விளையாட வேண்டாம் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரான மனோ கணேசன் தெரிவித்தார்.

கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஜனநாயக இளைஞர் இணைய செயற்குழு கூட்டத்தில் விளக்க உரையாற்றிய அமைச்சர் மனோ இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர்,

ஐக்கிய தேசிய கட்சியுடன் கொழும்பு மாநகர சபை தேர்தலில் கூட்டு சேர்ந்து போட்டியிடும் ஏனைய சிறுபான்மை கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களை பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கடும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளார்.

வேட்பு மனுவில் இரவில் கையெழுத்து போட்ட சிலரது பெயர்கள் காலையில் வெட்டி அழிக்கப்பட்டு மாற்று பெயர்கள் புகுத்தப்பட்டுள்ளன. எங்கள் கட்சியும் உடன்பட்டு இவர்களது வேட்பு மனுவில் கையெழுத்திட்டிருந்தால், எங்களின் வேட்பாளர்களின் பெயர்களும் கடைசி நேரத்தில் இப்படி வெட்டி அழிக்கப்பட்டு இருக்கும். ஏனைய சிறுபான்மை கட்சிகள் இந்த சதியில் சிக்கிக்கொண்டார்கள். நாம் சிக்கவில்லை.

கொழும்பு மாநகரசபை தேர்தலில் எமது கட்சி தனித்து போட்டியிடுகிறது. ஆனால், கொழும்பு மாவட்டத்தில் தெஹிவளை, கொலொன்னாவை, அவிசாவளை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுகிறது. நாடு முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட சபைகளில் நமது கூட்டணி ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுகிறது. பதினான்கு சபைகளில் நாம் தனித்து ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

கொழும்பில் நாம் தனித்து போட்டியிட்டு வாக்குகளை பெற்றுக்கொள்ள போவதுதான் ரவி கருணாநாயக்கவின் பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு என் மீது கோபப்பட்டு பிரயோசனம் இல்லை. இந்நிலை உருவாவதற்கு காரணமே இவர்தான். ஆகவே கொழும்பில் நாம் ஏன் தனித்து போட்டியிடுகிறோம் என்ற காரணத்தை தேடுபவர்கள் அதை ரவி கருணாநாயக்கவிடம்தான் கேட்க வேண்டும்.“ எனக் குறிப்பிட்டார்.

Published in உள்நாடு

கண்டி மாநகர சபையின் சமூக உதவி நலன்புரி திணைக்களத்தினால் 2018 ஆம் வருடத்திற்கான இலவசமாக நடாத்தப்படவுள்ள தையல், கைப்பணி, ஆங்கில மொழி, நடனம் ஆகிய பயிற்சி பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன

நடனம் இரண்டு வருடம், தையல் மற்றும் கைப்பணி ஒரு வருடம், ஆங்கிலம் ஆறு மாத காலம் என, குறித்த பயிற்சி நெறிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பத்தையும் விவரங்களையும் கண்டி டி.எஸ்.சேனாநாயக்க ஞாபகார்த்த நூல்நிலையத்தில் இம்மாதம் 31 திகதி வரை பெற்றுக்கொண்டு விண்ணப்பிக்க முடியும்.

இப்பாடநெறிள் தொடர்பான மேலதிக தகவல்களை 0812203145, 2922371 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Published in உள்நாடு

நுவரெலியா மாவட்டத்தில் அதிகமான அரசாங்க வைத்திய சாலைகளில் வெளி நோயாளர் பிரிவுகள், போயா மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 08. மணி தொடக்கம் 09 மணிவரை மாத்திரமே இயங்குகின்றது.

இதனால், தோட்ட தொழிலாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இத்தினங்களில் வைத்தியசாலை வெளிநோயார் பிரிவு குறிப்பிட்ட நேரத்தின் பின் இயங்காத காரணத்தால் பல சிரமங்களை இப்பிரதேச மக்கள் எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது.

தூர இடங்களில் இருந்து வரும் தோட்ட மக்களால், போக்குவரத்து வசதியின்மை காரணமாக காலை 9 மணிக்கு முன்னர் வைத்தியசாலைக்கு வரமுடியாத நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக அக்கரப்பத்தனை, டயகம ஆகிய பிரதேசங்களில் இந்நிலை தொடர்கின்றது.

இந்நிலையில், அக்கரப்பத்தனை பிரதேச மக்களின் நலன் கருதி இம்மாதம் 07 திகதி முதல் வெளி நோயாளர் பிரிவு காலை 08 மணிதொடக்கம்11 மணிவரை இயங்கவுள்ளதாக வைத்திய அதிகாரி வைத்திய அதிகாரி எம் ஜெயராஜன் தெரிவித்துள்ளார்.

எனவே போயா மற்றும் ஞாயிறு தினங்களில் காலை 08மணி முதல் 11 மணிவரை வெளிநோயாளர் பிரிவு இயங்கவுள்ளதால் பொதுமக்களின் சிரமங்கள் குறைவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Published in உள்நாடு

“ஊவா மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மாகாண சபையின் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றும். அதற்கான துரித ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என, ஊவா மாகாண சபை உறுப்பினரும், முன்னால் தமிழ்க்கல்வி அமைச்சருமான முருகன் சச்சிதானந்தன் குறிப்பிட்டார்.

பதுளை 'கெப்பிட்டல் சிட்டி' விடுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “நடைபெறப்போகும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலையடுத்து, நாட்டின் மத்திய அரசின் ஆட்சிப் பொறுப்பும், ஐக்கிய தேசியக் கட்சி வசமாகும். தற்போதுள்ள கூட்டாட்சியினாலேயே, ஐக்கிய தேசியக் கட்சியினர் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி தனியாக ஆட்சி செய்யுமானால், நாட்டு மக்கள் பல்வேறு நன்மைகளை அடையக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும்.

தனியாட்சி இருக்கும் போது, தீர்க்கமான முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்தவும் முடியும். ஆகவே, எமது மக்கள் அனைவரும் நன்கு சிந்தித்து, எதிர்காலத்தை கருத்திற் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து, அக் கட்சியை அமோக வெற்றியடையச் செய்ய வேண்டும்.

பதுளை மாவட்டத்தின் பசறை, லுணுகலை, பதுளை, எல்ல, பண்டாரவளை, ஹப்புத்தளை, அல்துமுள்ளை, ஊவாபரணகமை ஆகிய இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சி வரலாறு காணாத வெற்றியையடைவதுடன் ஏனைய பத்து உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியையும் ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றும்.

கல்வி அபிவிருத்திக்கென்று பெருந்தொகை நிதியை, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வழங்கியுள்ளார். அதைப்போன்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும் பாதை அபிவிருத்திக்கு பெருந்தொகை நிதியினை ஒதுக்கியுள்ளார்.

வீடமைப்பிற்கென்று அமைச்சர் பழநி திகாம்பரம், அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோர் கூடுதல் நிதிகளை வழங்கியுள்ளனர். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நிறைவுற்றவுடனேயே, மேற்படி வேலைத்திட்டங்கள் துரிதமாக மேற்கொள்ளப்படும்.

தற்போதைய ஊவா மாகாண சபையினால் இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு கமிஷன் பணம் பெறப்படுகின்றது.

ஊழல், மோசடிகள் தலை விரித்தாடுகின்றன. மக்கள் சொல்லொணா துயரங்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய நிலையினை தடுத்து நிறுத்தி, ஊழல், மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தூய்மையான அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள, நடைபெறப்போகும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து, அக்கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் ஊவாமாகாண சபை ஆட்சியில், மாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் முற்று முழுதாக புறக்கணிக்கப்பட்டனர். அவர்களினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள், ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அப்படியே, பிரேரணைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அப்பிரேரணைகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. ஆட்சி மாற்றமே இதற்கான தீர்வு' என்று கூறினார்.

Published in உள்நாடு

ஊவா மாகாணத்திலுள்ள பிரபல அரசியல்வாதியொருவர் பதுளையிலுள்ள பெண்கள் கல்லூரியின் பெண் அதிபரை தனது வீட்டுக்கு அழைத்து மண்டியிட வைத்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த அரசியல்வாதியின் ஊடாக மாணவி ஒருவரை பாடசாலையில் சேர்ப்பதற்கு பெண் அதிபருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக, ஆணைக்குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மாணவியின் பெற்றோர் அரசியல்வாதியின் சிபாரிசு கடிதத்துடன் பாடசாலைக்கு சென்ற போது, அதனை அதிபர் நிராகரித்துள்ளார். அத்துடன், அரசியல்வாதியின் தேவைகளை நிறைவேற்ற தான் அதிபராக நியமிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கல்வியமைச்சின் அதிகாரிகளின் பணிப்புக்கு அமையவே தாம் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்று பெற்றோரிடம் அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அறிந்துகொண்ட அரசியல்வாதி, பின்னர் மாகாண கல்வியமைச்சின் அதிகாரிகள் ஊடாக அதிபரை பதுளையிலுள்ள தனது உத்தியோகப்பூர்வ வசிப்பிடத்துக்கு அழைத்துள்ளார்.

அத்துடன், தன்னிடம் மன்னிப்புக்கேட்டு மண்டியிடுமாறு கூறியதுடன், பலாத்காரமான முறையில் பெண் அதிபரை வணங்க வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published in உள்நாடு

2018 ஆ ம் ஆண்டுக்கான மஸ்கெலியா பிரதேச சபைக்கு உரித்தான வரியை, அம்பகமுவ பிரதேச சபை முன்கூட்டியே 10சதவீத கழிவுடன் பெற்றுக்கொள்ள அதற்கான படிவங்களை வழங்கியுள்ளது.

இவ்வாறு வரியை வழங்கினால், எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் மஸ்கெலியா பிரதேச சபையை எவ்வாறு கொண்ட நடத்துவது? என கேள்வி எழுப்பட்டுள்ளது.

நிர்வாக எல்லைகள் பிரிக்கப்பட்டு, மஸ்கெலியா பிரதேச சபை, நோர்வூட் பிரதேச சபை, அம்பகமுவ பிரதேச சபையின் அலகுகள் உருவாக்கப்பட்டு தேர்தல் நடத்த திகதி குறித்த பின்னர், இவ்வாறு ஆதன வரியை கட்டுமாறு சட்ட ரீதியான அறிவித்தல் கொடுப்பது நியாயமில்லை என வர்த்தகர்கள், குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Published in உள்நாடு

திறைசேரி முறிகள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றிய பிரதமர், நிதி அமைச்சராக மஹிந்த ராஜபக்ச பதவி வகித்த காலத்தில் இதுகுறித்து பாராளுமன்றத்திற்கு கூற்றொன்றை முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் நிதி நிர்வாகத்தை பாராளுமன்றத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. 2015ஆம் ஆண்டு திறைசேரி கொடுக்கல் வாங்கலுக்கு அமைவான பணிகள் இதனூடாக இடம்பெற்றன. இதுபற்றி பாராளுமன்றத்தின் கோப் குழு நீண்ட விசாரணையை நடத்தியது. தாம் நியமித்த குழுவும் விசாரணைகளை மேற்கொண்டதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

திறைசேரி கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது அவசியம் என்று உரிய அறிக்கைகளில் வலியுத்தப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.

2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் இதனுடன் தொடர்புடைய இரண்டு அறிக்கைகள் பாராளுமன்ற சபை முதல்வரின் செயலாளரின் ஊடாக திறைசேரியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது தொடர்பாக சட்டமா அதிபர் கோரியிருந்த சகல அறிக்கைகளையும், ஆவணங்களையும் சபாநாயகரின் அங்கீகாரத்துடன் சட்டமா அதிபருக்கு அனுப்புமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களம் தனியான சட்டத்தரணிகள் குழுவை நியமித்து இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்டமா அதிபருக்கு இதுபற்றி எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

பர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 12 பில்லியன் ரூபாவை மத்திய வங்கி பொறுப்பேற்றுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக திறைசேரி கொடுக்கல் வாங்கலின் ஊடாக மத்திய வங்கிக்கு ஏற்பட்ட நட்டம் 11 பில்லியன் ரூபாவாகும். இதற்கு அமைவாக, சட்டமா அதிபர் ஊடாக நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்துகொள்ள வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இலங்கையின் வரலாற்றில் இவ்வாறான விசாரணை நியாயமான முறையிலும், பக்க சார்பின்றியும் நடத்தப்பட்டுள்ளமை இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பெரும்பாலான திறைசேரி முறிகள் நேரடி, தனிப்பட்ட வெளியீட்டு முறையிலேயே இடம்பெற்றுள்ளன. இவற்றில் எந்த வெளிப்படைத் தன்மையும் இருக்கவில்லை.

நிதிச் சபையின் அனுமதி இதற்காக பெற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற திறைசேரி கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளை நடத்த பாராளுமன்றம் அரச நிதிக் குழுவின் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Published in உள்நாடு

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top