Items filtered by date: Thursday, 11 January 2018

முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கின் சாட்சிய விசாரணைக்கான தினமாக மே மாதம் 4ஆம் திகதியை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், நேற்று குறித்தது.

2010ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சொத்துகளையும் பொறுப்புகளையும் வெளிப்படுத்தாதன் காரணமான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில், எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, மேற்கண்ட திகதி குறிக்கப்பட்டதுடன், 4,5ஆம் சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

Published in உள்நாடு
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளல் செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி நேற்று அனுமதித்தார்.
 
சட்டபூர்வமான வருமானத்துக்கு மேலதிகமாக 75 மில்லியன் ரூபாய் சொத்துக்ககள் சேர்த்துள்ளமை தொடர்பிலேயே விமல் எம்.பிக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
2009ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் 2014ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதி வரையான ஆறு வருட காலப்பகுதிக்குள்ளே சொத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று விமல் எம்.பிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இலஞ்சச் சட்டத்தின் 23 அ(1) பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் 32 சாட்சியாளர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், 40 வழக்குப் பொருட்கள் உள்ளன என்றும் குற்றப்பத்திரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கு நீதிபதி விக்கும் களுஆராச்சி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, பிணை வழங்கப்பட்டதுடன், வழக்குப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான தினமாக பெப்ரவரி 19ஆம் திகதி குறிக்கப்பட்டது. அத்துடன், விமல் எம்.பிக்கு குற்றப்பத்திரமும் வழங்கப்பட்டது.
 
இதேவேளை, தேசிய வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சராக இருந்த போது, 2011 - 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில், தனது அமைச்சுக்குக் கீழிருந்த, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட 40 வாகனங்களை தமது அரசியல் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தி, 91 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்ததாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விமல் எம்.பிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published in உள்நாடு

“நாட்டின் கொள்கைகளை வெளிப்படுத்தும் பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையில்லாத தன்மை நிலவுவதை நேற்றைய அமர்வின் போது நாட்டு மக்களே அறிந்துக் கொண்டனர். அரசாங்கத்தின் நிலை கேள்விக்குறியாகியுள்ள நிலையில் நம்மவர்களை வெற்றியடைய செய்து நமது பகுதிகளை நாமே ஆட்சியாள வேண்டுமென“ இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலவாக்கலை நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நமது வாக்குரிமைகளை கொண்டு நாமே நமது பிரதேசங்களை ஆட்சிக்கொள்ள வேண்டும். தொடர்ந்தும் மக்களுக்குரிய வாக்குரிமைகளை அடுத்தவர்களுக்கு வழங்கி வருவதனால் நிலையான ஓர் அபிவிருத்தி மற்றும் உரிமைகளை அடைய முடியாமல் போய்கின்றது.

ஹட்டன் நகரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆட்சியில் இருந்த பொழுது ஒழுக்கங்களும் கட்டுப்பாடும் நிரம்பிய பாரிய அபிவிருத்தியினை முன்னெடுத்தது. இன்று அவ்வாறான நிலை உள்ளதா? சிந்தித்து பாருங்கள்.

ஹட்டன் நகரை ஆட்சிக் கொண்டது போல் தலவாக்கலை நகர சபையை கைப்பற்றுவதற்கு சேவல் சின்னத்திற்கு `வாக்களியுங்கள். அபிவிருத்தியில் ஒரு மாற்றத்தினை நம்மவர்களை கொண்டு செயற்படுத்துவோம்.

மூன்று வருடங்களுக்கு முன்பாக மாற்றம் தேவை என்பதற்காக வாக்களித்தீர்கள். அந்த மாற்றம் உங்களை திருப்பி அடித்துள்ளது என்பதை உணர்ந்து இம்முறை அவரவர் பகுதியில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு சந்தரப்பமாக அமைந்திருக்கும் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சேவல் சின்னத்தை வெற்றிப்பெற செய்து ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துங்கள்.” எனக் குறிப்பிட்டார்

Published in உள்நாடு

""தாமதமாகும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும்'' இந்த வார்த்தையை பல சந்தர்ப்பங்களில் பல சூழ்நிலைகளில் குறிப்பாக, நீதி கிடைக்க தாமதமாகும் போது, பலர் பயன்படுத்துவதை பார்த்திருக்கின்றோம். ஆனால், அண்மையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் இந்த வார்த்தையை பயன்படுத்தியமை அவதானிக்க வேண்டிய விடயமாகும்.

திருகோணமலையில் படு கொலைசெய்யப்பட்ட 5 மாணவர்களுக்கு நீதிகோரி மீண்டும் ஒரு தடவை சர்வதேச அளவில் கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அதுல் கேசாப்பின் இந்த டுவிட்டர் பதிவு முக்கியத்துவமிக்கதாகவும், இவர்களுக்கு நீதி
கிடைப்பதை துரிதப்படுத்தும் ஒரு தூண்டுகோலாக நாம் பார்க்க முடியும்.

2006 ஜனவரி 2 ஆம் திகதி இலங்கையின் திருகோணமலை கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். சுமார் 3 தசாப்த காலங்களாக போரால் துன்பங்களை மட்டுமே அனுபவித்து வந்த தமிழ் மக்களுக்கு, அன்றைய தினம் "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல' தான் அமைந்திருந்தது.

கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப்பரீட்சை எழுதிவிட்டு, எதிர்காலத்தை நோக்கி காத்திருந்த மாணவர்கள் எதிர்பாராத தருணத்தில் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதை யாரால் ஜீரணிக்க முடியும்?

20 வயதை எட்டிப்பிடித்த மனோகரன் ராகிர் (22.09.1985); (2) யோகராஜா ஹெமாச்சந்திரா (04.03.1985); (3) லோகிதராஜா ரோஹன் (07.04.1985); (4) தங்கத்துரை சிவானந்தா (06.04.1985) மற்றும் (5) சண்முகராஜா கஜேந்திரன் (16.09.1985) ஆகிய 5 மாணவர்களே துப்பாக்கிச் சன்னங்களுக்கு தங்கள் உடலை பலிகொடுத்தவர்கள்.

குறித்த மாணவர்கள் படுகொலை தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன், பல்கலைக்கழக நுழைவு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்த இவர்களின் படுகொலையை அப்போதைய அரசாங்கமும் இலங்கை பாதுகாப்புத் தரப்பினரும் ஆரம்பத்தில் மறுத்திருந்தாலும், பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் என்றும், பாதுகாப்புப் படைகள் மீது கிரனைட் தாக்குதல் நடத்த முற்பட்ட போது, கிரனைட் வெடித்து இவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியதாக அப்போது செய்தி வெளியாகியிருந்தது.

எனினும், மரண விசாரணையின் போது, அவர்களது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதுடன், மிகக்கிட்டிய தூரத்தில் இருந்து சுடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்தப் படுகொலைகள் குறித்து விசாரணையை மேற்கொள்ளவும், சந்தேக நபர்களை சட்டத்தின் முன் ஆஜர்படுத்துமாறு திருகோணமலை நீதிமன்றம் அப்போது உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சிறப்பு அதிரடிப் படையினர் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 12 விசேட அதிரடிப்படையினர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 2013 ஜுலை மாதம் 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், இவர்கள் அனைவரும் 2013 ஓக்டோபர் 14 ஆம் திகதி திருகோணமலை நீதிவானால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணையின் அறிக்கையைத் தயாரிக்குமாறு குற்றவியல் புலனாய்வுப் பிரிவிடம் கோரப்பட்ட நிலையில், அவர்கள் அவ்வாறு செய்யத் தவறிவிட்டதுடன், தாமதத்திற்கு நியாயமான காரணங்களை வழங்கவில்லை என்பதால், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பல சாட்சிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளதுடன், இந்த வழக்கின் முன்னேற்றம் ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில், திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சிகள் நாட்டில் இல்லை என்றும், வெளிநாடுகளில் இருப்பதால் விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவர்களுக்கு நீதி கிடைப்பது தாமதமாவது குறித்து அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப்பின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியிருந்தார்.

2006ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் வைத்து ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று, 12 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், இன்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
இந்நிலையில்தான், ஐந்து மாணவர்கள் தொடர்பில் நீதி வேண்டும் என்று, சர்வதேச மன்னிப்பு சபை, டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு, இந்த வழக்கை மீள உயிர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருந்தது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் நாட்டில் இல்லாததால் வழக்கு தொடரமுடியவில்லை என்று, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளதுடன், அவர்கள் வெளிநாடுகளில் உள்ளதால், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கும் நிலை இல்லையென்றும் கூறியுள்ளார்.

தற்போது, ஸ்கைப் ஊடாக சாட்சியமளிக்கும் முறை வளர்ச்சியடைந்து வருவதால், இந்த வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

"டிரிங்கோ5' என அழைக்கப்படும் இந்த வழக்கு, 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்ட தமிழ் மாணவர்களின் வழக்கானது, இலங்கைத் தீவில் நீதிக்கான நீண்ட, கடினமான போராட்டத்திற்கும் அடையாளமாக மாறியுள்ளது.

2014 ஜனவரி 20ஆம் திகதி ஜனாதிபதி செயலாளருடனான சந்திப்பின் போது, சட்டமா அதிபர் திணைக்களம் 14 சாட்சிகளிடம் இருந்து ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும், ஏழு விடயங்களைச் சோதனையிட்டதாகவும் சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.

நாட்டிற்கு வெளியே உள்ளவர்களைத் தொடர்பு கொள்வதில் சிக்கல் இருந்தபோதிலும், சட்டமா அதிபர் திணைக்களம் மேலும், 14 சாட்சிகளை அழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. எட்டு ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு, விசாரணையை குழுக்கள் அமைத்து மறுபரிசீலனை செய்யப்பட்டாலும், இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரவில்லை என்பது கவலையளிக்கும் விடயமாகவே உள்ளது.

எவ்வாறாயினும், இந்தனை வருடங்கள் கடந்தும் இன்று வரை, இந்தக் கொலைகளுக்கு எந்த ஒருவரும் பொறுப்பு இல்லை என்பது சட்டத்தில் உள்ள வலுவற்ற தன்மையைக் காட்டுகின்றது. இந்த வழக்கு விசாரணைகளை மேற்கொள்பவர்களுக்கு இந்த வழக்குகள் ஆயிரத்தில் ஒன்றாக இருக்கலாம் ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது மாத்திரமே மிகப்பெரிய விடயமாக இருக்கும்.

குறிப்பிட்ட விடயம் நடைபெற்ற குறுகிய காலத்துக்குள் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுகப்படும் போது, அந்த மக்களுக்கு நீதி கிடைப்பது, பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதலாகவாவது இருந்திருக்கும். ஆனால், தசாப்த காலம் கடந்து இன்னும் நீதி கிடைக்காமல் அவர்கள் எத்துணை வேதனையில் இருப்பார்கள் என்பதை யோசித்து பார்த்ததால் தான் புரியும்.

இலங்கை இராணுவத்தினர் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டு, சர்வதேச நாடுகள் அதனை ஆயுதமாக்கி பயன்படுத்தும் நிலையில், பொதுமக்களை அதிகளவில் வேதனைக்கு உள்ளாக்கிய இவ்வாறான வழக்குகள் குறித்தாவது அதிக கவனம் செலுத்தி துரிதமாக விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் இனியாவது முன்வர வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என்பதால் நல்லாட்சி அரசாங்கத்தை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு அராசாங்கம் விரைவில் தீர்வு வழங்க முன்வரவேண்டும் என்பதே தமிழ் மக்களின் அபிலாஷையாகும்.

இதேவேளை, கடந்த 2017 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதிக்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 5,614 முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், அதில் ஆகக்கூடிய முறைப்பாடுகள் தடுப்புக் காவலில் இருக்கும்போது முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலானவை என, ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீப்பிக்கா உடகம தெரிவித்துள்ளதை நாம் இங்கு நினைவுபடுத்தலாம்.

இவ்வாறான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,174 ஆகும் என்பதுடன், 249 முறைப்பாடுகள் சித்திரவதைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதும், அவை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டவை என்பதையும் இங்கு குறிப்பிடலாம்.

இதில், 171 முறைப்பாடுகள் துன்புறுத்தல்கள் வடக்கில் புலனாய்வு அதிகாரிகள் பொதுமக்களை துன்புறுத்தியமை, மற்றும் 323 முறைப்பாடுகள் பொலிஸாரால் விடப்பட்ட அச்சுறுத்தல்கள் என்பதும், 298 முறைப்பாடுகள் பலவந்தமாக கைது செய்து தடுத்து வைத்தல் தொடர்பானது என்று நினைக்கும் போது, நியாயமான விசாரரணைகள் குறித்த கேள்விகள் எழாமல் இல்லை.

இந்நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் வெளிநாடுகளில் உள்ள சாட்சியாளர்களிடம் ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாலும், சாட்சி சொல்ல வந்து சட்டத்தின் மறுமுகத்தை சந்திக்க வேண்டி ஏற்படலாம் என்ற அச்சத்தில் சாட்சிகள் முன்வருவார்களா என்பதும் கேள்விக்குறியே.

2015 ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும், இதுவரை இவ்வாறான வழக்குகள் நிறைவுக்கு வருவதில் காலதாமதம் இன்னும் நிலவுகின்றது. சம்பவம் நடைபெற்று, இத்தனை வருடங்களாக குற்றவாளிகள் நம் மத்தியில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டுள்ளனர் என்ற நினைப்பு மாணவர்களின் மரணங்களால் ஏற்பட்ட வலியைவிட, பலமடங்கு வேதனையை தரும் விடயமாகும்.

சட்டத்துக்கு சாட்சிகள் மாத்திரமே தேவை எனும்போது, பாதிக்கப்பட்டவர்களின் நிலை மிகவும் கவலைக்குரியது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவ்வாறான விடயங்களை பார்க்கும்போது ரஜினிகாந்த் சொன்னதுபோல "சிஸ்டம் சரியில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.'

ஜே.ஏ.ஜோர்ஜ்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள வியொன் (WION) செய்தி நிறுவனத்தின் தலைமை பத்திரிக்கையாளர் டாஹா சித்திக்கியை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு, டாஹா காரில் சென்று கொண்டிருந்த நேரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாட்டின் சக்தி வாய்ந்த இராணுவத்தை விமர்சிப்பதற்காக அறியப்படுபவர் டாஹா. சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு அமைப்புகளால் அச்சுறுத்தல் அளிக்கப்படுவதாக டாஹா முறைப்பாடு செய்திருந்தார். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் அவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

ஆயுதமேந்திய சுமார் 10 தொடக்கம் 12 பேர் தன்னை கடந்த முயற்சி செய்ததாக, டாஹா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தனது நண்பரின் ட்விட்டர் கணக்கிலிருந்து ட்வீட் செய்த அவர், "நான் அவர்களிடம் இருந்து தப்பி, பொலிஸாரிடம் பாதுகாப்பாக உள்ளேன்" எனக் கூறியுள்ளார்.

துப்பாக்கி ஏந்திய சில பேரால் தாம் காரிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், அவர்கள் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் டாஹா கூறினார்.

மதுபான விற்பனை நிலையங்களின் வணிக நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இரவு 10 மணி வரை மதுபான விற்பனை நிலையங்களை திறந்து வைத்திருக்க முடியும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பெண்களுக்கு மதுபானம் உற்பத்தி செய்யும் நிலையம் மற்றும் மதுபானம் விற்பனை செய்யும் நிலையங்களில் பெண்கள் பணி புரிதல் மற்றும் மதுபானத்தை விலைக்கு வாங்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு விதிகக்கப்பட்டிருந்த தடையும் நீங்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Published in உள்நாடு

2018 ஆம் ஆண்டுக்காக முதலாம் தரத்திற்கு மாணவர்களை எதிர்வரும் 15 அம் திகதி முதல் இணைத்துக் கொள்ளவுள்தாக கல்வி அமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு - இசிபதன வித்தியாலயத்தில் தேசிய நிகழ்வு 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published in உள்நாடு
 
போக்குவரத்து குற்றங்களை புரியும் சாரதிகளுக்கு தண்டப்பண பத்திரம் வீட்டுக்கு அனுப்பும் முறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பரீட்சித்துப் பார்க்கவுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க  தெரிவித்துள்ளார்.
 
இதன்படி, போக்குவரத்து விதி முறைகளை மீறும் போது எடுக்கப்படும் புகைப்படத்துடன் குறித்த தண்டப்பணப் பத்திரிக்கை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
செஞ்சிலுவை சங்கத்தினரின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
பொலிஸ் திணைக்களம் தற்போதுள்ளதை பார்க்கிலும் தரமுயர்த்தப்படும். செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன்யுடன் பொலிஸாருக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் அடுத்தகட்டமான பொலிஸ் திணைகளத்தினால் வீதிபோக்குவரத்தின் போது குற்றமிழைக்கும் சாரதிகளுக்கு தண்டபணம் அறவிடுவதற்காக வழங்கப்படும் பத்திரத்தினை வீட்டிற்கே சென்று விநியோகிக்கும் திட்டத்தினையும் பரீட்சித்து பார்க்கவுள்ளோம்.
 
இத்திட்டம் பரீட்சார்த்த ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும்போது ஏற்படும் செலவீனங்கள் மற்றும் வாகன பயன்பாடுகள் உள்ளிட்ட தேவைகளுக்கு ஏற்படும் செலவீனங்களையும் குற்றவாளிகளிடத்திலிருந்து அறவிடப்படும் தண்டப்பணத்தை கொண்டு செலுத்த முடியும்.
 
விபத்துக்களால் ஒவ்வொருநாளும் 10 உயிர்கள் பலியாகின்றது. சில தினங்களில் அதனை விடவும் பலியாகின்றவர்கள் தொகை அதிகமாகவுள்ளது. அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் முறையின் அடிப்படையில் காப்பாற்றப்பட வேண்டியவர்களும் கூட உயிரிழக்கின்ற சம்வங்கள் பல பதிவாகின்றது.
 
அதனால் எதிர்காலத்தில் பொலிஸ் அதிகாரிகளை முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கு பயிற்சியளிக்கவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக போக்குவரத்து பொலிஸார் முகம்கொடுக்கும் சவால்களை கருத்திற்கொண்டே இத்திட்டம் அமுல்படுத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
Published in உள்நாடு

நல்லாட்சி அரசாங்கத்தின் தோற்றத்தில் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன. கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுடன், மூன்று வருடங்களை இந்த அரசாங்கம் எப்படிக் கடந்தது என்று எண்ணுமளவுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையில் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தேவை வலுப்பெற்றுள்ளது. இவ்வாறு எத்தனையோ மாறுதல்களைத் தழுவி, முட்டி மோதிக்கொள்கிறது நல்லாட்சி அரசாங்கம்.

2018 ஆம் ஆண்டு மாற்றத்தை யார் விரும்புகிறார்களோ இல்லையோ நிச்சயம் அரச தரப்பினர் மாற்றத்தை விரும்புகின்றனர். தேர்தல் கால சுவாரஸ்யங்களை விட, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டுமென்ற ஒருசாராரின் எண்ணம் தற்போது வெளிப்படையாகத் தென்படுகிறது.

பிணைமுறி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டதிலிருந்து தேர்தல் தொடர்பான சர்ச்சைகள் குறைந்துவிட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து, கூட்டு எதிரணியினரும் சுதந்திரக்கட்சியினரும் பிரசாரம் செய்வார்கள் என்று நினைத்தால், அதுவும் நடந்தபாடில்லை.

பிணைமுறி அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர் என்ன எதிர்பார்த்தார்களோ, அதில் எதுவுமே இதுவரை நடக்கவில்லை.

பிரதான பேசுபொருளான நடனம் சர்ச்சைக்குரிய பிணைமுறி அறிக்கை வெளியிடப்பட்டவுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிவிலகுவார் என்று எதிர்பார்க்குமளவுக்கு பிரச்சினை தீவிரமடைந்திருந்தது. அப்படியிருக்கும்போது, பிரதமர் ரணிலின் நடனம் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியது.

பிரச்சினையைத் திசைதிருப்பும் வகையில், பிரதமரினால் வெளியிடப்பட்ட ஆவணம் என்று ஒருசிலரும், பொறுப்புமிக்க பதவியில் உள்ளவர் இவ்வாறு அநாகரிகமாக நடனமாடியது தவறா? என இன்னொரு சாராரும் வாதாடிக்கொண்டிருக்க, தனது சாமர்த்திய அரசியலை செய்துகாட்டிக் கொண்டிருக்கிறார் ரணில்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திருமண நிகழ்வொன்றில் மூத்த நடிகை ஐராங்கனி சேரசிங்கவுடன் நடனம் ஆடுவதாக வெளியான விடியோவை "பிரச்சினைக்குரிய சூழ்நிலையின் போது, இவ்வாறு செயற்படும் அமைச்சருக்கு எமது வாழ்த்துக்கள்'' என தலைப்புச் செய்தியில் பிரசாரம் செய்துகாட்டியிருந்தமையும் "அந்தச் சந்தர்ப்பத்தில் ரணில் தன்னுடைய உறவினராகவே தெரிந்தார்; பிரதமராக அல்ல என்று மூத்த நடிகை ஐராங்கனி சேரசிங்க தெரிவித்திருந்தமையும் ரணிலை நல்லவராக விளம்பரப்படுத்த வேண்டிய தேவை உணர்ந்தவர்கள் செய்ததாகவே பார்க்கப்படுகிறது.

அத்தோடு, "சிரிக்கக்கூடிய மற்றும் அழக்கூடிய சாதாரண மனிதனாகவே பிரதமரை நான் காணுகின்றேன். யாரோ ஒருவர் வந்து அங்கு நடனம் இடம்பெறுவதாக அழைத்தார். எனக்கு நடனமாட விருப்பம் என்று அவருக்குத் தெரியும் போல. நான் அங்கு சென்றதும், பிரதமரைக் காட்டி நடனமாடுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர்.

பிரதமரும் வாருங்கள் என்று அழைத்ததும், நான் நடனமாடினேன். சுற்றியுள்ளவர்கள் கேட்கும் போது எவ்வாறு மறுப்பது?'' என்று மூத்த நடிகை ஐராங்கனி சேரசிங்க குறிப்பிட்டதை அமைச்சர்களும் கோடிட்டுக்காட்டி பேசுமளவுக்கு இந்த நடனத்தை பிரதான கருப்பொருளாக்க என்ன தேவை எழுந்தது என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

நாடாளுமன்றில் பிரதமரின் மாற்றுருவம்

பிணைமுறி தொடர்பான அறிக்கை தொடர்பில் நேற்று கூடிய நாடாளுமன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடந்துகொண்ட விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் எம்.பிக்களை தனது பக்கம் வரவழைத்துக்கொண்டு ""மஹிந்த கள்ளன்'' என கோஷமிடுமாறு கேட்டு தானும் கையை உயர்த்தி கத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு எதிர்ப்பை வேறு எந்தவொரு எம்.பி. செய்திருந்தாலும் அது இவ்வளவுதூரம் பேசப்பட்டிருக்காது. காரணம் எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் தனதுபக்க நியாயத்தை வெளிப்படுத்தக்கூடியவர் பிரதமர் ரணில்.

அப்படியிருக்கும் போது கூட்டு எதிரணியினர் கூச்சலிடும் போது பிரச்சினையை சமாளிக்க முடியாமல் சிறுபிள்ளைத்தனமாக இவ்வாறு நடந்துகொண்டமை என்ன அரசியல் வியூகமென்று விளங்கவில்லை.

ஜனாதிபதியின் ஆசை உள்ள பிரச்சினையெல்லாம் போதாதென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலத்தின் நிறைவுக்காலம் எப்போது என எண்ணத் தொடங்கியிருப்பது மைத்திரியின் பேராசைக்கான அறிகுறியா? அல்லது சட்ட சீர்திருத்தங்களின் அவசியம் இந்நாட்டில் உணரப்படாமலிருப்பதா? என்று விமர்சிக்கப்படுகின்றது.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கமைய ஜனாதிபதியொருவரின் பதவிக்காலம் 6 வருடங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதும் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய அந்தக் காலப்பகுதி 5 வருடங்களாகக் குறைக்கப்பட்டது.

இதன்படி, அரசியலமைப்பு திருத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இருக்கும் ஜனாதிபதிக்கு இது பொருந்துமா என்ற சந்தேகத்திற்கு பதிலளிக்குமாறு கோரியுள்ளார். தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் இருக்குமாக இருந்தால் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2020ஆம் ஆண்டுடன் முடிவடையும்.

இல்லையேல் 2021ஆம் ஆண்டிலேயே முடிவடையும் எனக் குறிப்பிடப்படுகின்ற நிலையில் அவரின் சந்தேகத்துக்கு இன்று ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

பிணைமுறி அறிக்கைப் பிரச்சினைப் பற்றியெரிகின்ற நிலையில் அந்தச் சூட்டில் குளிர்காய எத்தனையோ தரப்புக்கள் காத்திருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் இந்த சந்தேகம் நீதியான அரசியல் சாணக்கியத்துக்கான தற்போதைய தேவையை உணர்த்தியுள்ளது.

2020 ஆம் ஆண்டு வரை தேசிய அரசாங்கத்தைக் கொண்டுசெல்வது இமாலய சாதனையாக அமைந்துள்ளது. இந்நேரத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் இருவேறு முரண்பட்ட அரசியல் கலாசாரத்தை வெளிப்படுத்துவது ஆரோக்கியமாக இருக்காது என்பதே உண்மை.

அதேநேரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையினரின் கோரிக்கையெல்லாம் மஹிந்த காலத்துக் கொள்ளைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில்தான் 10 பில்லியன் ரூபாய் இல்லாது போயுள்ளது. ஊழியர் சேமலாப நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4,000 பில்லியன் ரூபாய் நிதி சபையின் அனுமதியின்றி ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

"இந்த விடயங்கள் தொடர்பாக அவர்களிடம் கேட்க வேண்டும். யாரும் பயப்பட வேண்டாம் 10,000 பில்லியன் ரூபாய் கடனை மஹிந்த விட்டுச்சென்றுள்ளார். 10 பில்லியன் ரூபாய் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதனை விடவும் 10 மடங்கு அதிக திருட்டு முன்னர் நடந்துள்ளது. யார் அந்த 10,000 பில்லியன் ரூபாய் திருடியது? இதனைத் தேடவேண்டும்.

இது பற்றி நடவடிக்கையெடுக்க நானும் தயார். கடந்த காலங்களைப் பற்றி தேடும்போது 19 விடயங்கள் தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 40 விசாரணை நடவடிக்கைகளில் இருக்கின்றன. "நாங்கள் திருடனை பிடிப்போம்'' என, பிரதமர் தேர்தல் பிரசாரத்துக்காக மட்டும் கூறவில்லை.

பிணைமுறி தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பு பிரதமருக்கு தலையிடியைக் கொடுக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கெல்லாம் பிரதமர் தனது புன்னகையால் பதிலடி கொடுக்கப் பார்க்கின்றார். பிரச்சினையைத் திசைதிருப்பப் பார்க்கின்றார். "மிஸ்டர் கிளீன்'' என்றெல்லாம் புகழாரம் குவிகின்றபோது ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமான மோதல் அம்பலமாக ஆரம்பித்துள்ளது.

நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியொருவர் இலங்கையில் இதுவரையில் எவ்வாறு செயற்பட்டாரோ அதே மிடுக்கு மைத்திரியிடம் தென்பட ஆரம்பித்துள்ளது. தனது கட்சியை பாதுகாத்து, முழுமையான அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்ற கனவு தற்போது ஓரளவுக்கு பலித்துவிட்டது என்றே கூறவேண்டும். காரணம், பிணைமுறி அறிக்கையை காட்டி இனிவரும் நாடாளுமன்ற அமர்வுகள் ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்தும். கூட்டு எதிரணியினரின் கை ஓங்கும்.

இதனையெல்லாம் சுதந்திரக் கட்சியினர் வேடிக்கை பார்ப்பார்கள். ஆகமொத்தம் கட்சித்தாவல்கள், காட்டிக்கொடுப்புக்கள், அமைச்சரவை மாற்றங்கள் என அனைத்தும் முடிந்து இந்த வருடத்தை கடத்திவிட்டு அடுத்த வருடம் தெளிவான அரசியல் சாயத்தைப் பூசிக்
கொள்ள தயாராகிக்கொள்வார்கள். அந்தக் காலப்பகுதிவரையாவது, தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள இரு அரச தரப்பினரும் போராடுகின்றனர். அந்தப் போராட்டத்துக்கு பல்வேறு சுவாரஸ்யமான கதைகளை அரங்கேற்றுகின்றனர்.

மக்களை முட்டாள்களாக்கியோ, திசைதிருப்பியோ தனதுபக்க குற்றத்தை மறைத்துவிடலாம் என எண்ணுவது தவறு. இதனை சந்தர்ப்பம் என்று கருதி பழிவாங்கல்களை மேற்கொள்வதும் தவறு. நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியவர்கள் தங்களை எந்தளவு தூய்மையானவர்களாக வெளிக்காட்டிக்கொண்டார்களோ, அதனை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்துவிட்டனர்.

மக்களை துச்சமாகக் கருதி அவர்களின் அரசியல் விளையாட்டுக்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்கள் இவற்றுக்கெல்லாம் அடிபணிந்துவிடாது தெளிவான நோக்கோடு சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இது.

பா.ருத்ரகுமார்

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top