Items filtered by date: Friday, 12 January 2018

நாட்டின் அபிவிருத்தி செயற்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு நல்லொழுக்கமுள்ள மக்கள் பிரதிநிதிகளை தேர்தலில் ஊடாக தெரிவு செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் தெரிவித்தார்.

ஹிங்குராங்கொட பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

எமது நாட்டின் அரசியல் கலாசாரத்தில் உள்ள தவறுகளை சரி செய்யும் ஊழல் மோசடியற்ற மக்கள் சார்பு பயணத்தின் ஆரம்ப அடியாக இத்தேர்தலில் மக்கள் மிகுந்த பொறுப்புடன் தமது கடமையை நிறைவேற்ற வேண்டும்.

தேசிய அரசியலானது தலைவர்களினது பயணத்தின் ஆரம்பம் என்ற வகையில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நல்லொழுக்கமுள்ள பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டியது அவசியமாகும். உள்ளூராட்சி நிறுவனங்களில் நேர்மையான மக்கள் சார்பு பிரதிநிதிகளை உருவாக்குவதன் மூலம் முழு அரசியல் கலாசாரத்தையும் சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்றார்.

மேலும், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்படும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரதிநிதிகள் தவறிழைக்க இடமளிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த பொறுப்பை கட்சியின் தலைவர் என்ற வகையில் தான் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

Published in உள்நாடு

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலொன்றின் பேரில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கல்கிஸ்ஸ பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவந்த நடமாடும் விபச்சார விடுதியொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த விபச்சார விடுதியை நடத்திச் சென்ற நபர் ஒருவரும், இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மஹரகம மற்றும் நுகேகொட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது.

கிடைக்கப் பெறும் தொலைபேசி அழைப்புக்களுக்கு ஏற்ப பெண்களை விநியோகிப்பதும், வாகனத்திலேயே அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதும் இந்த நடமாடும் விடுதியை நடத்தியவர்களின் நடவடிக்கையாக இருந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Published in உள்நாடு

திஸ்ஸமஹாராம மாகம பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் கூட்டு வண்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதே பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரும் 22 வயதுடைய இருவரும் இணைந்து சிறுமியை வண்புனர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

வண்புனர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டிற்கு பின்னால் உள்ள வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய போது, வீட்டில் இருந்தவர்கள் அதனை கண்டு சிறுமியை காப்பாற்றி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

அதேநேரம், சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்களும் யால காட்டுப் பகுதில் மறைந்து இருந்த போது பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கியபின் வீரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மூன்று இளைஞர்களும் திஸ்ஸமஹாராம நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிரதேசவாசிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ள மூன்று இளைஞர்களும் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் தெபரவெவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Published in உள்நாடு

ஒரு நாளாவது பாடசாலை செல்லாத கைதிகள் 1,523 பேர் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள 2017ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின் படி, தரம் 5 வரை பாடசாலையில் கல்வி கற்றவர்கள் 6,879 பேரும், தரம் 5 சித்தியடைந்த 5894 பேரும், தரம் 8 சித்தியடைந்த 6129 பேரும் சிறைச்சாலையில் கைதிகளாக உள்ளனர்.

அத்தோடு, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை தோற்றிய 2643 பேர், உயர்தரத்தில் தோற்றியவர்கள் 909 பேர், பட்டதாரிகள் 55 பேர் சிறையில் உள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெலிக்கடை, போகம்பர, மஹர உட்பட நாட்டிலுள்ள 25 சிறைச்சாலைகளில் மொத்தம் 24060 பேர் கைதிகளாக உள்ளதாகவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Published in உள்நாடு

அவிசாவளையில் காதலியின் வீட்டை தேடி மாற்று வழியில் சென்று கொணடிருந்த இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் கொடூரமாக தாக்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளது.

மேலும், காயமடைந்துள்ள காதலன் அவிசாவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இவர் பாதுக்க பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் அவிசாவளைக்கு வாடகை முச்சக்கர வண்டியொன்றிலேயே பயணித்துள்ளார். இரவு நேரம் காதலி வழங்கிய முகவரிக்கமைய மாற்று வழியில் அவர் சென்று கொண்டிருந்தபோதே, இனந்தெரியாத நபர் ஒருவர் அவரை கொடூரமாக தாக்கி தொலைபேசியை பறித்து சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கு விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Published in உள்நாடு

ஹட்டன் கல்வி வலய பணிமனைக்கு உட்பட்ட வெளிஓயா மேற்பிரிவில் இயங்கும் வித்தியாலயமொன்றின் அதிபர் உட்பட ஆசிரியர்கள் அனைவரையும் இடமாற்றம் செய்ய கோரி நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

பெற்றோர் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் பணிபகிஸ்கரிப்பை முன்னெடுத்து பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டதத்தில் ஈடுபட்டள்ளனர்.

“கல்வி பொதுத் சாதாரண தர பத்திர சாதாரண தர மாணவர்களுக்கு விஷேட வகுப்புக்கள் நடத்த வசதிகள் இருந்தும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் எவரும் மாலை நேர வகுப்புகள் நடத்த முன்வராததால் மாணவர்களின் கல்வி நிலை மிகவும் பின்தங்கியுள்ளதாக” அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனால், அதிபர் மற்றும் ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்து, புதிய ஆசிரியர்களை அங்கு சேவையில் ஈடுபடுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கல்வி அமைச்சர், வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

Published in உள்நாடு

உமாஓயா பலநோக்கு வேலைத்திட்டத்தினால் பண்டாரவளைப் பகுதியில் மேலும் மூன்று இடங்களில் இன்றைய தினம் நிலம் தாழிறற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மெதபேருவ என்ற இடத்திலும் ஹீல்ஓய என்ற இடத்தின் ஆற்றுப்பகுதியிலும், மேட்டு நிலமொன்றிலுமே நிலம் தாழிறங்கியுள்ளது.

நிலம் தாழிறங்கிய பகுதியில் நீர் நிரம்பியுள்ளதுடன், அங்குள்ள வெடிப்பின் ஊடாக நீர் பூமிக்கடியில் செல்வதை அவதானிக்க முடிந்தது.

20 அடி, 18 அடி, 15 அடி என்ற அளவில் குறித்த பகுதிகளில் நிலம் தாழிறங்கியுள்ளன. அதனையடுத்து, கட்டட ஆய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் மேற்படி நிலம் தாழிறங்கியமை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

Published in உள்நாடு

தூய்மையானதும், ஆரோக்கியமானதுமான அரசியல் கலாசாரமொன்றினை கட்டியெழுப்பும் வகையில், புரட்சித் தமிழர் பேரவை காத்திரபூர்வமான வேலைத்திட்டமொன்றினை முன்னெடுத்து வரும் நிலையில், அமைச்சரொருவர் மக்களை நிந்தித்தமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது விடயத்தில், அவ் அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று, புரட்சித் தமிழர் பேரவையின் ஹாலி-எலை பிரதேச சபைக்கான வேட்பாளர் அருண் வெங்கடேஸ் தெரிவித்தார்.

ஹாலி-எலையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “மக்கள் திருப்திப்படும் வகையில், அமைச்சரின் வேலைத்திட்டமும் இருக்க வேண்டும். அதற்கமைவான பதிலையும், அவ் அமைச்சர் மக்களுக்கு வழங்கியாக வேண்டும். இதை விடுத்து சிங்கள வார்த்தைப் பிரயோகங்களுடன், எமது மக்களை நிந்தித்தமை ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.

அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கூறவதையெல்லாம் சரியென்று நம்பிக்கை கொள்ள வேண்டிய அவசியமில்லை. தமக்கான அபிவிருத்தி திட்டங்கள் குறித்து, மக்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை உண்டு.

இத்தகைய அடாவடித்தனங்களை எதிர்க்கவும், ஊழல் மோசடியற்ற ஆரோக்கியமானதும், தூய்மையானதுமான அரசியல் கலாசாரமொன்றினை கட்டியெழுப்பும் புனித பணியிலேயே, புரட்சித் தமிழர் பேரவை இறங்கியுள்ளது. மக்களை மதிக்கும் தன்மை அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டும். எமது இலக்கையடையுமட்டும் எமது பயணம் தொடரும்.

பசறையில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே, அமைச்சர் ஒருவர் எமது மக்களை நிந்தித்துள்ளார். அவருக்கு தகுந்த பாடத்தினை, எமது மக்கள் புகட்டுவர். அத்துடன், அவ் அமைச்சர் எமது மக்களிடம் பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும்”என்றார்.

Published in உள்நாடு

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் முழந்தாலிட்டு, முதலமைச்சரிடம் மன்னிப்பு கோரிய விவகாரம் தொடர்பில், ஊவா மாகாண சபை அமர்வின் போது பெரும் அமளிமளி ஏற்பட்டது.

சபை அமர்வு ஆரம்பமான போது, சபையின் உறுப்பினர் எம்.சச்சிதானந்தன் இந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சரிடம் வினவினார்.

அதையடுத்து, ஊவா மாகாண சபையின் ஜே.வி.பி. உறுப்பினர் சமந்த வித்தியாரட்ணவும், சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தனுடன் இணைந்து மன்னிப்பு கோரிய விவகாரத்தினை எழுப்பினர்.

இதற்கு முதலமைச்சர் நடந்த சம்பவம் குறித்து தெளிவுப்படுத்தினார். முதலமைச்சரின் அக்கருத்தினை ஏற்றுக்கொள்ளாமல், எதிர்க்கேள்விகள் கேட்கப்பட்ட போது, இரு தரப்பினருக்குமிடையே காரசாரமான விவாதங்களும், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்டன.

சபையை அமைதிக்கு கொண்டு வர, சபைத்தலைவரினால் எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து சபை அமர்வு மறு திகதி குறிப்பிடப்படாலேயே ஒத்திவைக்கப்பட்டது

அதனையடுத்து, இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், “பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர், முழந்தாலிட்டு என்னிடம் மன்னிப்பு கேட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை” என மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

தொடர்நது அவர் பேசுகையில், 'தேர்தல் காலம் என்பதால், எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்தே, மாகாண அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றேன். அதைப்போன்று, பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சம்பவமொன்றினையடுத்து, வித்தியாலய அதிபர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரையும், பிரச்சினைக்குரிய பெற்றோரையும் அழைப்பித்து, கலந்துரையாடல்களை மேற்கொண்டேன்.

இக்கலந்துரையாடல் சுமூகமான முறையிலேயே நடத்தப்பட்டது. எந்தவொரு உத்தரவும் வித்தியாலய அதிபருக்கு விடுக்கப்படவில்லை. வித்தியாலய நடைமுறைகளைப் பின்பற்றும்படியும், அதிபரிடம் கேட்டுக்கொண்டேன். அதிபரும் அதற்கு இணக்கம் காட்டினார். அதையடுத்து, அதிபர் புத்தாண்டு வாழ்த்துக்களையும் கூறிவிட்டு சென்றார்” என்றார்.

Published in உள்நாடு

பாகிஸ்தானில் 8 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரு தாயை வெகுவாக பாதித்துள்ளது.

பத்திரிகையாளராக பணி புரியும் குறித்த தாய் செய்தி வாசிக்கும் போது தனது சிறிய மகளை மடியில் அமரவைத்துபடியே செய்தியை வாசித்துள்ளார்.

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் இவ்வாறு செய்துள்ளார்.

பாகிஸ்தானின் சமா டிவியைச் சேர்ந்த கிரண் நாஸ் குறித்த செய்தியை வாசிக்கத் ஆரம்பித்தபோது, "நான் இன்று வெறும் கிரண் நாஸ் இல்லை. நான் ஒரு தாய். 8 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலையும் செய்யப்பட்டிருக்கிறார். இது மனிதநேயத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை. இது இந்த அரசாங்கத்தின் இயலாமையை உணர்த்துகிறது" என்று கூறியுள்ளார்.

 

நடந்தது என்ன?
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி கடந்த ஜனவரி 5 ஆம் திகதி குரான் வகுப்புக்காக சென்றிருந்தார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. இரண்டு நாட்களுக்குப் பின் அவர் சடலமாக மீட்கப்பட்டார். அவர் பல முறை பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்தி, நீதி கோரி மக்கள் தொடர்ந்து தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். நிலைமையை சமாளிக்க பொலிஸார் தடியடி நடத்தியும் இன்னும் அங்கு போராட்டங்கள் நிறுத்தப்படவில்லை. பொலிஸாரின் அலட்சியமே இந்த சம்பவத்துக்கு காரணம் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

சிறுமியின் தந்தை முகமது அமின் கூறும்போது, "போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வேகத்தை எனது மகளை மீட்பதில் காட்டியிருந்தால் அவள் உயிருடன் இருந்திருப்பாள்" என வேதனை தெரிவித்தார்.

எனினும், குறித்த வழக்கை பாக்கிஸ்தான் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. சிறுமி பலாத்கார, கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபரை கண்டுபிடிக்க பொலிஸாருக்கு ராணுவமும், ஐ.எஸ்.ஐ அமைப்பும் உதவுமாறு பாகிஸ்தான் ராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.

 

ஒவ்வொரு நாளும் 11 குழந்தைகள்
பஞ்சாப் மாகாணத்திலிருந்து இயங்கும் சாஹில் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனமானது, பஞ்சாப் மாகாணத்தில் ஒவ்வொரு நாளும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 11 பேர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகின்றனர் என அதிர்ச்சித் தகவலினை வெளியிட்டிருக்கின்றது. கடந்த ஆண்டில் மாத்திரம் 4139 சம்பவங்கள் நடந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.

 

மூலம் - தி இந்து

Page 1 of 4

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top