Items filtered by date: Tuesday, 02 January 2018

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் பாரம்தூக்கி கடந்த 6 ஆண்டு காலமாக செயலிழந்து காணப்படுவதால், கர்ப்பிணி தாய்மார்களையும் நோயாளிகளையும் மனிதர்கள் சுமந்துச் செல்ல வேண்டியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், மாடியில் இருந்து இறந்தவர்களின் சடலங்களை தூக்கிக்கொண்டு கீழே வரும்போது, பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிவனொளிப்பாத மலை பருவகாலம் ஆரம்பித்துள்ள நிலையில், அங்கு வரும் யாத்திரிகர்கள் சுகவீனமடையும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது

வைத்தியசாலையின் குறைப்பாடுகளை நீக்குமாறு, பல முறை மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கு தெரிவித்தும் பயன் இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வைத்தியசாலை 1969ஆம் ஆண்டு மவுசாக்கலை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட போது, சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாகக் கட்டப்பட்டது. அப்போது மாவட்ட அதிகாரி உட்பட உதவி வைத்திய அதிகாரி 2 பேர், பல் வைத்தியர் ஒருவர், ஆய்வு கூட அதிகாரி ஒருவர், தாதிகள் 24 பேர், ஆண் தாதிகள் 6 பேர், சிற்றூழியர்கள் 28 பேர் பணிபுரிந்ததுடன், அப்பியுலன்ஸ் வண்டிகள் இரண்டுடன் 2 சாரதிகளும் கடமையில் இருந்தனர்.

எனினும் தற்போது, ஊழியர்களின் வளம் மிகக்குறைவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

“மத்திய வங்கியின் பிணை முறி மோசடி நாட்டில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியாகும். இந்த மோசடி குறித்து நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை கடந்த 31ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் நாம் அவதானத்துடன் இருக்கின்றோம். ஏன்னென்றால் மக்களின் பணத்தைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆணைக்குழுவே மக்களின் பணம் தொடர்பில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை நடத்தியது.” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டம் கொட்டகலை டெரிக்கிளயார் தோட்டத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற 17 பாரிய ஊழல் மோசடி தொடர்பான அறிக்கைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பான உண்மையான தகவல்களையும், வெளியிடுமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

அதேபோல் இந்த பிணை முறிகள் தொடர்பில் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை தெளிவுப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளரிடம் இன்று நாம் மணு ஒன்று கையளித்தோம். அந்த மணு தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அமைவாகவே கையளிக்கப்பட்டுள்ளது. எனவே அது தொடர்பில் அறிந்துக்கொள்வதற்கான உரிமை எமக்கு உள்ளது. மேலும் தேர்தல் காலங்களில் ஊடகங்களின் செயற்பாடு தொடர்பில் பல்வேறு அழுத்தங்கள் விடுக்கப்படுகின்றன.

உள்ளூராட்சி மன்றங்களே ஊழலுக்கு எதிராக செயற்படுவதற்கான சிறந்த களம். இதனால் உள்ளூராட்சி மன்றங்கள் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் நாடு இன்று எங்கே செல்கின்றது. டக்ளஸ் தேவானந்தவிற்கும், அமைச்சர் மனோ கணேஷனுக்கும், திகாம்பரத்திற்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நாட்டு மக்களுக்கு பிரச்சனை உள்ளது. தற்போதைய மைத்திரி, ரணில் தலைமையிலான அரசாங்கம் திருடர்களை பிடிப்பதாகவே கூறியே ஆட்சிக்கு வந்தது. ஆனால் இங்கு ரணில் விக்கிரமசிங்க திருடர்களுக்கு பாதுகாப்பாக மாறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவும் திருடர்களை பாதுகாக்கவே முயற்சிகின்றார். முன்பு மஹிந்த ராஜபக்ஷவும் திருடர்களை பிடிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்து பின்னர் அவரும் பொது சொத்துகளை துஷ்பிரோயகம் செய்தார். இன்றைய மைத்திரி தலைமையிலான அரசாங்கத்திலும் எஸ்.பீ.திஸாநாயக, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந், டிலான் பெரேரா உட்பட இன்னும் பலர் பொது மக்களின் சொத்துகளை சூறையாடுகின்றனர்.

எனவே திருடர்களை பிடிப்பதாக கூறிய ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அணைவரும் திருடர்களோடு பந்தி அமர்கின்றனர்.” என்றார்.

Published in உள்நாடு

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் இன்று மதியம் சிறுத்தை தாக்குதலுக்குள்ளான அத்தோட்டத்தின் தொழிலாளர்கள் ஐவர் சிகிச்சைக்கென டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பன்மூர் தோட்டத்துக்கு இச்சம்பவம் தொடர்பில் வருகை தந்த நுவரெலியா மாவட்ட வனவிலங்கு அதிகாரிகள் தொழிலாளர்களை தாக்கிய சிறுத்தையை பிடிக்காது அதனை விரட்டியடிக்க முயற்சிக்கும் செயலை ஆட்சேபித்து அத்தோட்டத்தின் தொழிலாளர்கள் சீற்றமடைந்தனர்.

இன்று மதியம் 12 மணியளவில் குறித்த தோட்டத்தில் அப்பகுதியில் நாய் ஒன்றை சிறுத்தை இழுத்துச் செல்வதை கண்டு பெண் ஒருவர் கூச்சலிட்டுள்ளார்.

இக்கூச்சல் சத்தத்தில் சிறுத்தை நாயை விட்டுவிட்டு பெண்ணை தாக்க விரைந்துள்ளது. இதனால் அயலில் இருந்த ஆண்கள் சிறுத்தையை விரட்டுவதற்காக முயற்சித்த போது குறித்த பெண் உட்பட் நான்கு ஆண்களும் சிறுத்தையால் தாக்கப்பட்டுள்ளனர்.

பலத்த காயங்களுடன் ஐவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிட்டனர். பன்மூர் தோட்ட நிர்வாக அதிகாரி இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்டத்தின் வனவிலங்கு பராமரிப்பு அதிகாரிகளுக்கு தெரிவித்ததையடுத்து, குறித்த அதிகாரிகள் ஸ்தலத்திற்கு விரைந்தனர்.

இவர்கள் சிறுத்தையை பிடிக்காது விரட்டியடிக்கும் செயலலில் ஈடுப்பட்டுள்ளனர். இதன்போதும் சிறுத்தையை பார்வையிட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவரையும் சிறுத்தை தாக்கிச் சென்றுள்ளது.

குறித்த மலையில் ஒன்றுக்கூடிய தோட்ட மக்கள் சிறுத்தையை பிடிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்ட பொழுதிலும் அதிகாரிகள் சிறுத்தையை விரட்டியப்பதில் மாத்திரம் கவனத்தை செலுத்தியதையடுத்து பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை சிறுத்தையை பிடிக்காவிட்டால் நாம் பணிபகிஷ்கரிப்பை மேற்கொண்டு போராட்டங்களை முன்னெடுப்போம் என தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

Published in உள்நாடு

பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினது அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யு குணதாச அறிக்கையை கையளித்துள்ளர்.

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணை செய்யப்பட்ட 15 அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

கொழும்பில் நாகலகம் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published in உள்நாடு

‘காதல், தீபாவளி, வழக்கு எண் : 18/9’ போன்ற பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்  விஜய் மில்டன்.

2014ஆம் வருடம் இவரது இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். புதுமுக நடிகர்கள் நடிக்கும் இந்த படத்திற்கு விஜய் மில்டனே ஒளிப்பதிவு செய்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரப் நோட் புரொடக்ஷன்’ மூலம் தயாரிக்கிறார். இப்படத்தின் கதையில் ஒரு பகுதி மட்டும் கூடைப்பந்து விளையாட்டின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் இயக்குநர் சமுத்திரக்கனி வில்லனாகவும், இயக்குநர் கெளதம் மேனன் காவல் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். அச்சு இசையமைத்து வரும் இப்படத்திற்கு தீபக் படத்தொகுப்பாளராக பணியாற்றுகின்றார். இந்நிலையில், படத்தின் முதல் பார்வை(firstlook) போஸ்டரை  நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் டிப்போவுக்கு, கடந்த வார இறுதியில் 40 இலட்சம் ரூபாய் இலாபம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வார தொடர் விடுமுறை காரணமாக சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகர்கள் வருகை அதிகரித்தமை மற்றும், நத்தார் விடுமுறையில் வந்து சென்றவர்களினால் அதிகளவு வருமானம் கிடைத்துள்ளதாக டிப்போ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Published in உள்நாடு

உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் மக்கள் அரசுக்கு வாக்களித்து நல்லாட்சியை முன்னோக்கிக்கொண்டுச் செல்ல ஆதரவளிக்க வேண்டுமென பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

தேர்தலில் ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கக் கோவையில் பிரதமர் கையொழுத்திடும் நிகழ்வு இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இவ்வொழுக்கக் கோவையில் கையழுத்திட்டப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் “சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அரசு என்ற ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். அனைத்துத் தேர்தல் சட்டங்களுக்கும் அதிகூடிய மதிப்பளிக்கின்றோம். புதிய தேர்தல் முறையொன்றை நாட்டுக்கு அறிமுகப்படுத்த எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இத்தேர்தல் முறையூடாக தமது வட்டாரத்திற்கு ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுக்க முடியுமென்பதுடன், பெண்களுக்கும் 25சதவீத வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

சில வட்டாரங்களில் அதிகூடிய வாக்குகள் அளிக்கப்பட்டு உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படாத சந்தர்ப்பம் ஏற்படும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் விகிதாசார முறைப்படி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படுவார்கள். புதிய தேர்தல் முறையை முறையாக நடைமுறைப்படுத்தி நல்லாட்சியை முன்னோக்கிக் கொண்டுசெல்ல எதிர்பார்க்கின்றோம். நல்லாட்சியை முன்னோக்கிக் கொண்டுசெல்ல எதிர்வரும் தேர்தலில் அனைவரும் அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Published in உள்நாடு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது இராணுவத்திற்கு சாதகமான ஓர் அறிக்கையை விடுத்துள்ளார். யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படமாட்டார்கள் என்று பகிரங்கமாகக் கூறியுள்ளார். எனவே, இராணுவத்திற்கு உள்நாட்டு விசாரணைகளுக்கு முகங்கொடுக்க இலகுவாக இருக்கும். ஆனாலும் யுத்தக்குற்றம் நாட்டில் இடம்பெறவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும் என்று இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், அமெரிக்க இராணுவம் தம்மிடத்தில் உள்ள திறமைகளைக்கொண்டு பயனடைந்ததாகவும், அதனால் தாம் அமெரிக்க உளவாளி என்று அர்த்தப்படுத்தப்படுவதும் போலியான குற்றச்சாட்டுகளை எழுப்புவதும் புரிதலில் உள்ள குறைபாடெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகமொன்றிற்கு அவர் வழங்கியுள்ள செவ்வியொன்றின்போதே மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் வழங்கிய செவ்வியின் முழு வடிவம் வருமாறு:

கேள்வி: நீங்கள் இராணுவத்தில் இணையும் போது எவ்வாறான நோக்கத்துடன் இணைந்தீர்கள்? இராணுவத்தின் உயர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உங்களுக்கு இருந்
ததா?

பதில்: நான் இராணுவத்தில் இருந்தபோது யுத்தம் இருக்கவில்லை. அவ்வாறு யுத்தமில்லாமல் சமாதான காலத்தில் இராணுவத்தில் இணைந்த இருவர் மாத்திரமே இன்று இராணுவத்தில்
உள்ளோம். குறிப்பாக, நான் கல்வி கற்ற ஆனந்தா கல்லூரியின் அதிபர் எங்களிடத்திலிருந்த திறமைகளை அறிந்து நாங்கள் இராணுவத்தில் இணைந்துக்கொள்ள தகுதியானவர்கள் என்று கூறுவார்.

கேள்வி: அவ்வாறாயின் பாடசாலை காலத்தி லிருந்தே இராணுவத்தில் இணைந்துகொள்ளும் நோக்கம் உங்களுக்கு இருந்ததா?

பதில்: ஆம். ஆர்வம் இருந்தது. அப்போதைய காலத்தில் பாடசாலை அதிபரே என்னை இராணுவத்தில் இணைந்துகொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

கேள்வி: நீங்கள் இராணுவத்திலிருந்து ஏன் அவசரமாக வெளிநாடு சென்றீர்கள்?

பதில்: குறிப்பாக, 2010ஆம் ஆண்டில் இராணுவத்திலிருந்து ஓய்வூதியம் கூட வழங்கப்படாமல் வெளியேற்றப்பட்ட 10 பேரில் நானும் ஒருவன். அப்போது இராணுவத்திலிருந்து விலகினேன். ஆனால், விருப்பத்துடன் விலகவில்லை. அதன் பின்னர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றினேன். அமெரிக்க இராணுவத்துடன் இணைந்தே இந்த நாடுகளில் சேவையாற்றினேன். அதன் பின்னர்தான் 2015ஆம் ஆண்டுஇலங்கைக்கே மீண்டும் வர வாய்ப்புக் கிடைத்தது.

கேள்வி: முன்னாள் கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னையாவுக்கு அமெரிக்க உளவாளி என்ற குற்றச்சாட்டு இருந்தது. அவ்வாறாயின் அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து பணியாற்றி நீங்களும் அமெரிக்க உளவாளியாகக் கருதப்படுவீர்களா?

பதில்: உளவாளி என்பது அவரவர் வழங்கும் அர்த்தத்தைப் பொறுத்தே அமையும். எவர் வேண்டுமானாலும் போலி குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும். எவ்வாறாயினும் அந்த நாட்டில் உள்ளவர்கள் எனது திறமையைக்கொண்டு பயன்பெற்றார்கள் என்பதே மெய்யான விடயமாகும். அத்துடன், தற்போது அமெரிக்க இராணுவத்துடனான தொடர்புகளையும் நான் பேணவில்லை.

கேள்வி: சரி அது ஒருபுறமிருக்க, நீங்கள் தற்போது இந்த நாட்டின் இராணுவத் தளபதி. இதற்கு முன்னர் மற்றுமொரு நாட்டில் பணியாற்றியுள்ளீர்கள். அவ்வாறாயின் முன்னர் பணியாற்றிய நாட்டுடன் முழுமையாக தொடர்பை அறுத்துக்கொள்வது சாத்தியமா?

பதில்: நிச்சயமாக. காரணம் அமெரிக்காவில் ஒப்பந்த அடிப்படையிலேயே இணைந்து சேவையாற்றியுள்ளேன். அதனால் நாங்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்களை வைத்து எங்களிடத்திலிருந்து பயன்பெறுவது பற்றியே நாட்டு மக்களும் சிந்திக்க வேண்டும். குறிப்பாக, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் யுத்தம் இலங்கையில் போன்று சீராக முற்றுப்பெறவில்லை. அதனால் அந்த நாடுகளில் கற்றுக்கொண்ட பாடங்கள் எமது நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாதவாறு அவதானத்துடன் செயற்படுவதற்கும் இராணுவத்தை வழிநடத்துவதற்குமான பாடங்களைப் பெற்றுத்தந்துள்ளது.

கேள்வி: இராணுவத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலையீடு இல்லாமல் தீர்மானங்களை எடுக்க முடியுமா?

பதில்: இராணுவக் கட்டமைப்பைப் பார்க்கின்றபோது முதலில் பாதுகாப்பு அமைச்சு பதவி நாட்டின் தலைவரான ஜனாதிபதியிடத்தில் இருக்கும். அடுத்த இடத்தில் பாதுகாப்புச் செயலாளர் இருப்பார். அவருக்கு அடுத்தபடியாக சீ.டி.எஸ். என்ற ஒரு பதவி உள்ளது. அவர்களுக்கு அடுத்தபடியாக நாட்டின் முப்படைத் தளபதிகள் உள்ளனர். அப்போது முப்படை செயற்பாடுகளின்போது ஒருங்கிணைப்பு செயற்பாடுகளை பாதுகாப்புச் செயலாளர் முன்னெடுக்க முடியும்.
அதனையடுத்து இராணுவத்திற்கு ஏதேனும் கட்டளைகளை வழங்கும் அதிகாரம் இராணுவத் தளபதிக்கே உரியதாகும். எவ்வாறாயினும் பெரும் செயற்பாடுகளின்போது அனைவரினதும் கூட்டு ஆலோசனைகள் அவசியப்படும் என்பதையும் மறுக்க முடியாது.

கேள்வி: அவ்வாறாயின் இராணுவத் தளபதி ஒருவரால் தனித்து தீர்மானம் எடுக்கமுடியாது என்பதையா கூறுகின்றீர்கள்?

பதில் : இராணுவத் தளபதியால் தனித்து ஒரு தீர்மானத்தை எடுக்க முடியாது. நிச்சயமாக பாதுகாப்புச் செயலாளரின் ஆலோசனையும் அதற்கு அவசியமாகும். அத்துடன், ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சர் கடமைகளை முன்னெடுப்பதற்கான நேரச்சிக்கல் இருப்பதால் முப்படைகள்ஒருங்கிணைந்து செயற்படும் செயற்பாடுகளை முன்னெடுப் பார்.

கேள்வி: தற்போது இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் இராணுவச் சிப்பாய்கள் அங்குள்ள அரசியல்வாதிகளின் பெயர்களை பட்டியலிட்டுக்கொள்வதாக குற்றஞ்சாட்டப்படுகின்றதே?

பதில்: தேர்தல் காலத்தில் இராணவத்திற்கு எந்தக் கடமையும் இருக்காது. ஆனால், பொலிஸாருக்கு உதவி தேவைப்பட்டால் அதனைச் செய்ய முடியும். நாம் மக்களுடன் நெருக்கமானவர்கள் என்ற வகையில் வேட்பாளர்கள் தொடர்பில் தகவல் திரட்டுவதாக இராணுவத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நாம் மறுக்கின்றோம். ஆனால், வேட்பாளர்களாக களமிறங்குகின்ற சகலரினதும் தரவுகள் எம்மிடத்தில் இருக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். வடக்கில் மாற்றமில்லை. தெற்கிலும் கூட இதே நிலைதான். காரணம், சில வேளை வேட்பாளர் ஒருவரால் தமக்கு அச்சுறுத்தல் உள்ளதாக எவரேனும் குற்றஞ்சாட்டினால் அவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பதற்கு தேர்தல் வேட்பாளர்கள் குறித்த தரவுகள் எமக்கு அவசியமாகும்.

கேள்வி: சாதாரண சட்டம் அழுலில் இருக்கும்போது இராணுவம் தகவல் திரட்டுவது சரியானதா?

பதில் : இராணுவத்தினர் என்கின்ற ஒரு குழு கூட தேர்தலில் ஈடுபடமுடியும் அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை கண்காணிக்கவேண்டிய அவசியம் எமக்கு உள்ளது.

கேள்வி: இலங்கை இராணுவம் மீது தற்போது சர்வதேச அளவில் யுத்தக்குற்ற விசாரணை முன்வைக்கப்படுகின்றது. யுத்தக்குற்றம் இடம்பெற்றது உண்மையாயின் யுத்தக்குற்றம் இழைத்தவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுகொள்கின்றீர்களா?

பதில்: இராணுவத் தளபதியாக 30 வருடங்கள் எனக்கு இராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. இராணுவம் யுத்தக்குற்றம் இழைக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும். கதிர்காமம் வழக்கு, குமாரசுவாமி வழக்கு, சரசாலி வழக்கு, மீசாலி வழக்கு என்ற பல வழக்கு விசாரணைகள் முடிவடைந்துள்ளன. அதன்போது இராணுவம் விசாரணைகளுக்கு முகங்கொடுத்துள்ளது. எனவே, இனியும் அவ்வாறுதான் செயற்படும். சிறந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் விசாரணைகளுக்குச் செல்ல நாங்கள் தயார் நிலையிலேயே இருக்கின்றோம். அதனைவிடுத்து தவறுகளை மறைக்கவேண்டிய அவசியம் எமக்கு இல்லை.

கேள்வி: நீங்கள் பதவியேற்றவுடன் உண்மையான வீரர்களையும் கொலைகாரர்களையும் வேறுபடுத்தி அறிவேன் என்று கூறினீர்கள். மறுமுனையில் யுத்தக்குற்றம் இடம்பெறவில்லை என்கின்றீர்கள். ஆனால், யுத்தக்குற்றம் இலங்கைக்கு எதிராக பலமாக உள்ளபோது உண்மையைக் கண்டறியவேண்டிய அவசியம் இல்லையா?

பதில்: நிச்சயமாக செய்துபார்க்கவேண்டும். இது தொடர்பில் இராணுவம் செய்த விசாரணைகளில் யுத்தக்குற்றம் இடம்பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது. இவ்வாறிருக்க, இனி ஏதேனும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அதற்கு முகங்கொடுக்க இராணுவம் தயாராகவுள்ளது. அந்த விசாரணைகள் நாட்டின் சட்ட கட்டமைப்புக்கமைவாக நாட்டின் தலைமைத்துவத்தினால் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும் ஜனாதிபதி வெளிநாட்டு விசாரணைகள் அவசியமில்லை எனக் கூறியுள்ளார். அது இராணுவத்திற்கும் இலகுவாக இருக்கும். காரணம், உள்நாட்டிலேயே விசாரணைகளுக்கு முகங்கொடுப்பது இலகுவானதாகும்.

கேள்வி: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடத்தில் எம்முடன் இணைந்துகொண்ட போது மார்ச் மாதத்தில் யுத்தக்குற்ற விசாரணைகள் குறித்து ஆராய்வோம் என்று கூறியிருந்தார். இதுகுறித்து ஐ.நாவின் அவதானம் இலங்கை மீது பலமாக இருக்கின்றபோது இராணுவத்திடம் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமல்லவா?

பதில்: இராணுவம் முடிந்தவரையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. அதனால் இனிவரும் காலங்களில் உரிய தரப்புகள் விசாரணைகளை முன்னெடுத்தால் முகங்கொடுப்போம் என்ற நிலைப்பாட்டையே மீண்டும் கூறுகின்றேன்.

கேள்வி: பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் நீங்கள் வழக்கு விசாரணைகளுக்கு பங்களிப்பு செய்வதாக கூறிவிட்டு தற்போது வரையில் அவ்வாறான எந்தவொரு பங்களிப்பையும் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டப்படுகின்றது?

பதில்: இலங்கையில் வெளியாகும் ஒரு பத்திரிகை ஒன்று மாத்திரமே கூறியிருந்தது. நிச்சயமாக அது தொடர்பிலான விசாரணைகளுக்கு நாங்கள் பங்களிப்புச் செய்ய தயாராகவே உள்ளோம். நான் இராணுவத்திலிருந்து விலகிய பின்பே இந்த விடயம் இடம்பெற்றது. தற்போது அது தொடர்பிலான தகவல்கள் அடங்கிய கோப்புகள் மாயமாகியுள்ளன. இருப்பினும், சட்டரீதியான புலனாய்வு தகவல்களின் பிரகாரமான தகவல்களை நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்துள்ளோம்.

கேள்வி: இராணுவத்திலிருந்து பாய்ந்துசென்ற பலர் குற்றவாளிகளாக உள்ளதாகக் கூறப் படுகின்றது. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

பதில்: அவர்கள் சமூகத்திற்கு இடையூறாக இருப்பதால் மன்னிப்பு கோரியுள்ளோம். நாம் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கியபோது 13 ஆயிரம் பேர் சரணடைந்து சட்டரீதியாகவே விலகிச் சென்றார்கள். அதன் பின்னர் சரணடையாத பலர் கைது செய்யப்பட்டார்கள். அதனால் மக்களும் இவ்வாறானவர்களால் இடையூறு ஏற்படும்போது பொலிஸாருக்கு அறிவிப்பார்களாயின் உதவியாக இருக்கும். எதிர்வரும் தேர்தல் காலத்தில் இவர்கள் தவறான செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் அது இராணுவத்திற்கே களங்கமாகும்.

கேள்வி: இலங்கை இராணுவம் இரகசிய முகாம் களை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது?

பதில்: அது குறித்து கடந்த காலங்களில் அதிகமாக கேட்கப்பட்டது. ஆனால், அவ்வாறான ஓர் இரகசிய முகாமை அமைத்து செயற்படுவதற்கான எந்த அவசியமும் இலங்கை இராணுவத்திற்கு இருக்கவில்லை.தமிழ் சிறைக்கைதிகளை வதைமுகாம்களில் வைத்து இராணுவத்தினர் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் உள்ளனவே? இது தொடர்பிலான பிரச்சினையை அமெரிக்காவிலிருந்து வந்த ஊடகவியலாளர் ஒருவரும் வினவியிருந்தார். அவரிடத்தில், ""நீங்கள் எப்போது இலங்கைக்கு வந்தீர்கள்'' என்று நான் கேட்டேன். அவர் தான் முன்தினம் வந்ததாக பதிலளித்தார். அப்போது, ""தயவுசெய்து இந்தக் கேள்வியை என்னிடத்தில் கேட்காதீர்கள்'' என்று கூறினேன். ஒருவாரமாக இந்த நாட்டில் இருந்து, இந்நாட்டிலுள்ள மில்லியன் கணக்கிலான தமிழ் மக்கள் எப்படி ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் எனப் பாருங்கள் என்று கூறினேன்.அவரிடத்தில் அதற்கு பதில் இருக்கவில்லை.

கேள்வி: எவ்வறாயினும் மேற்படி குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விசாரணையும் மேற்கொள்ளப் படவில்லையா?

பதில்: வதைமுகாம்கள் இலங்கையில் இருந்ததாகக் கூறினாலும் அது தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டால் விசாரணைகளை மேற்கொண்டு ஒரு நாடு என்ற வகையில் விசாரணையில் பெறப்பட்ட முடிவை பகிரங்கமாக அறிவிக்க இராணுவம் பின்நிற்காது. தவறு செய்தவர்களை கண்டறிந்து தண்டனை வழங்கவும் நாம் தயார்.

கேள்வி: விஹாரைகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்களா?

பதில்: இராணுவம் என்ற வகையில் புத்தசாசன அமைச்சின் அனுமதியுடன் பாதுகாப்புக் கடமைகளுக்காக இலங்கையிலுள்ள நான்கு மதங்களையும் பிரதிபலிக்கும் மத ஸ்தலங்களில் சேவைக்கு அமர்த்தியுள்ளோம். இவ்வாறு ஆயிரத்திற்கும் குறைந்த தொகையிலானவர்கள் தற்போதும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கேள்வி: மக்கள் இருக்கின்றபோது இராணுவம் எதற்கு மத ஸ்தலங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்?

பதில்: அவ்வாறு இராணுவச் சிப்பாய்கள் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படாமல் இருப்பது சிறந்தது என்பதுதான் எனது நிலைப்பாடுமாகும். குறிப்பாக, வடக்கு, கிழக்கிலுள்ள பல மத ஸ்தலங்களை மக்கள் நடத்திச் செல்லமுடியாமல் இருக்கின்றது. எனவே, மனிதாபிமான முறையில் இராணுவம் அவர்களுக்கு உதவிகளை வழங்குகின்றது. நல்லூர், தலதா மாளிகை, மடு தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். ஆனால், இராணுவச் சிப்பாய்கள் அங்குநீண்ட காலம் இருப்பது தவறானது.

கேள்வி: நாட்டில் பெரும் யுத்தமொன்று இடம்பெற்று தற்போது நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அவ்வாறிருக்கின்றபோது இந்தளவு நீண்ட காலப்பகுதி வடக்கு, கிழக்கின் நிலைமைகளை சீரமைப்பதற்கு அவசியப்படுகின்றதா?

பதில்: வடக்கின் பல பகுதிகள் நீண்ட காலத்தின் பின்பே மீட்கப்பட்டது. எனவே, அங்கு வாழும் மக்களுடன் நாட்டின் ஏனைய பகுதியிலுள்ள மக்களுக்கு அந்நியோன்யமான தொடர்புகள் ஏற்பட வேண்டும். அப்போதுதான் நிலைமைகள் முழுமையாக சீரமைக்கப்படும்.

கேள்வி: வடக்கு கிழக்கில் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பதில் இராணுவம் ஏன் தாமதப்படுத்துகின்றது?

பதில்: நாட்டினுள் தற்போது கேரள கஞ்சா அதிகளவில் கொண்டுவரப்படவுள்ளது. அவ்வாறான செயற்பாடுகளிலிருந்து பாதுகாப்பு பெறவேண்டிய காரணத்திற்காகவே இராணுவம் தொடர்ந்தும் வடக்கு, கிழக்கில் நீடித்துள்ளது. எவ்வாறாயினும் 2018 நடுப்பகுதியில் காணி விடுவிப்பு தொடர்பில் சரியாக தரவுகளைப் பெற்றுகொள்ள முடியும்.

க.கமல்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட லெமன்மோரா தோட்ட மக்கள் நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
 
எதிர்வரும் உள்ள10ராட்சி மன்ற தேர்தலில் எவருக்கும் வாக்களிக்காமல் உள்ள10ராட்சி மன்ற தேர்தலை தாம் புறக்கணிக்கப்போவதாகவும் அந்த மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
 
தனியாருக்கு சொந்தமான லெமன்மோரா தோட்டத்தில் தங்களது அடிப்படை உரிமைகள்,சலுகைகளை தோட்ட நிர்வாகம் வழங்க மறுப்பதாக தெரிவித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் 16 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
 
தோட்ட நிர்வாகம் தங்களது ஊழியர் சேமலாப நிதி மற்றும், ஊழியர் நம்பிக்கை நிதியினை செலுத்த வேண்டும், முறையாக வேலை வழங்கப்பட வேண்டும், வீடமைப்பு திட்டத்திற்கு காணிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
 
எனினும் லெமன்மோரா தோட்டத்தின் உரிமையாளர் அத்தோட்ட மக்களின் கோரிக்கையினை புறக்கணித்து வருவதோடு, போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்களுடனும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
 
தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் போரட்டத்தில் ஈடுப்பட்டு வருதால் பொருளாதார ரீதியாக தாம் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இதனால் குறித்த தோட்டத்தில் உள்ள மாணவர்களும் தங்களது முதலாந்தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமங்களுக்குள்ளாகியிருப்பதாகவும் அத்தோட்ட மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
 
எமது வாழ்வாதாரத்தினை கருத்திற்கொண்டு மலையக அரசியல் தலைமைகள் எமது பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published in உள்நாடு

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top