Items filtered by date: Saturday, 06 January 2018

முஸ்லிம்களுக்கான தனி மாகாணம் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் வடக்கும் கிழக்கும் ஒருபோதும் இணையாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நிந்தவூர் பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் தலைமையில் நேற்று நிந்தவூரில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உறையாற்றிய அவர்,

வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு நான் இரகசியமாக ஒப்பந்தம் செய்ததாக சிலர் அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் நடக்காத ஒரு விடயத்தைப் பற்றி பேசுவதில் எந்த நியாயம் இருக்கிறது.

அரசியல் பிழைப்புக்காக தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச போன்றோர் வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பாக பேசலாம். அவர்களைப் போன்று அரசியல் பிழைப்பு நடத்தவேண்டும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்படவில்லை.

வடக்கு - கிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மு.கா. பகிரங்கமாக எதையும் பேசப்போவதில்லை. ஏனெனில், அப்படியொரு விடயம் நடந்தால் நாங்கள் அதைப்பற்றிப் பேசுவோம். ஆனால், முஸ்லிம்களுக்கான தனி மாகாணம் அமையாமல் அது எதுவும் நடக்கப்போவதில்லை. முஸ்லிம்களின் உரிமைகளையும் நாம் அடகுவைக்கப் போவதில்லை.

அத்தோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் தேசியப்பட்டியல் பெற்‌ற 15 பேரில் 11 பேர் கட்சியை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். இவ்வாறு, பதவிக்காக மட்டும் கட்சியில் இருந்துவிட்டுப் போகின்றவர்கள் பற்றி நாங்கள் ஒருபோதும் அலட்டிக்கொள்வதில்லை. இவர்களுக்கு எமது மரச்சின்னம் தொடர்பில் கருத்து வெளியிடக்கூட தகுதியற்றவர்களே.

மேலும், முஸ்லிம் காங்கிரஸ் என்ற பஸ் இலக்;கை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்கும். பஸ்ஸில் யாரும் ஏறலாம், இறங்கலாம். சாரதியாக இருக்கின்ற நான்கூட மாறலாம். ஆனால், இந்த மக்கள் இயக்கம் வாழவேண்டும். இந்த இயக்கத்துக்கு இருக்கின்ற புனிதத்தை யாரும் பிழைப்புக்காக பாவிக்கமுடியாது என்றார்.

இந்தக் கூட்டத்தில் 15 வருடங்களாக தேசிய காங்கிரஸின் நிந்தவூர் அமைப்பாளரான கடமையாற்றியவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டார் என்பதும்; சுகதார பிரதியமைச்சர் பைசால் காசிம், கட்சியின் தவிசாளர் அப்துல் மஜீத், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் இதில் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Published in உள்நாடு

ஹிக்கடுவ , காஸ்லன்ட் தோட்டப் பிரதேசத்தில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் ஹெரிஸ்லன்ட் தோட்டம், கோனபீனுவல பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் படுகாயங்களுக்கு உள்ளான நபரை, ஆராச்சிகந்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்து பின்னர், ​மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில், 16 வயதான நபரொருவரை தற்போது பொலிஸார் கைது செய்துள்ளனர் என்பதும் சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் மீது சாவகச்சேரியில் வைத்து நேற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் நகர சபைக்கான தற்போதைய வேட்பாளருமான காசிலிங்கம் சற்குணதேவன் என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாவகச்சேரிப் பகுதியில் பிரசார நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்த போதே, மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த வேட்பாளர், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் இதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

கிரேன்பாஸ் பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவரை, மேல் மாகாண ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று கைது செய்ததாக, பொலிஸ் தலைமைக் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கிரேன்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பெண்​ ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 50 கிராம் மற்றும் 100 மில்லி கிராம் ​ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Published in உள்நாடு

விவசாய சமூகத்தினருக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால்; மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்பினதும் விடாமுயற்சியினதும் பெறுபேறே மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டமாகும் என்று ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாளை மறுதினம் 8 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ள மொரகஹகந்த அபிவிருத்தி திட்டம் தொடர்பாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனை தெரிவித்தார்.

அதாவது, இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட மகாவலி திட்டத்தைப் பார்க்கிலும் விரிவான திட்டமாகவும் நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு வலுசேர்க்கக்கூடிய திட்டமாகவும் மொரகஹகந்த திட்டத்தை அடையாளப்படுத்த முடியும். இந்த அபிவிருத்தித் திட்டம் ஜனவரி 8 ஆம் திகதியுடன் முடிவுறாமல் அதன் நன்மைகளை கிழக்கு மற்றும் வடக்கு மக்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றார்.

நான்கு தசாப்தங்களின் பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமாக மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டம் மக்களிடம் கையளிக்கப்படும் நிகழ்வு நாளைய தினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இத்திட்டத்தால் 3 இலட்சம் ஏக்கர் காணிகள் புதிதாக பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டு, 15 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நன்மைக் கிடைக்கும் என்றும் 3 இலட்சம் பேருக்கு சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நீர்த்தேக்கத் திட்டத்தின் மொத்த நீர் கொள்ளளவு 660,000 ஏக்கர் அடிகளாகும் என்பதுடன் இது பராக்கிரம சமுத்திரத்தை பார்க்கிலும் 6 மடங்கு நீரைக் கொண்டதாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்நீர் தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவில் நூற்றுக்கு 99 வீதம் நீரினால் நிறைந்துள்ளது. மொரகஹகந்த – களுகங்கை திட்டத்தின் கீழ் வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களில் 2000 குளங்களுக்கு புதிய நீர் கிடைக்கவுள்ளது. அந்தவகையில் வடமேல் மாகாணத்தில் 303 குளங்களுக்கும் வடமத்திய மாகாணத்தில் 1600 குளங்களுக்கும் நீரை வழங்குவதுடன் நவ லக்கல மற்றும் மெதிரிகிரிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய நகரம் மற்றும் புதிய குடியேற்றங்களிலும் 48 புதிய குளங்கள் இதற்காக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் காரணமாக நாவுல, லக்கல பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெயர்ந்த சுமார் 3500 குடும்பங்கள் தற்போது மீள்குடியேற்றப்பட்டு வருவதுடன், சொத்துக்களை இழந்தவர்களுக்கு நட்டஈடும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்நீர்த்தேக்கத்தில் எதிர்பார்க்கப்படும் நன்னீர் மீன் உற்பதியின் அளவு வருடாந்தம் 3000 தொன்களாகும் என்பதுடன், இதன் மூலம் வருடாந்தம் 225 மில்லியன் ரூபா வருமானமும் எதிர்பார்க்கப்படுகிறது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மூலம் 25 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்சார முறைமையுடன் சேர்க்கப்படவுள்ளதுடன் இதன் மூலம் 336 மில்லியன் ரூபா எரிபொருளும் மீதப்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெண் வேட்பாளர் ஒருவரது வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி நகர சபை வேட்பாளர் சோமசுந்தரம் சந்திரிக்காவின் வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளல் அல்லது அவமானப்படுத்துதல், அவர்களுக்கு எதிராக அவதூறு பேசுதல் மற்றும் அவர்களின் நற்பெயருக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுதல் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு செயற்படுவோருக்கு எதிராக அரசியலமைப்பின் 104 ஆவது சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

வணக்கஸ்தலங்களில் வேட்பாளர்கள் சார்பாக மத நிகழ்வுகள் இடம்பெற்றால் அல்லது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டால் வேட்பாளர்களுக்கு எதிராக மாத்திரமன்று மத ஸ்தலத்தின் குருக்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.

இவ்வாறாக செயற்படுபவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் பிரஜாவுரிமை 7 வருடங்களுக்கு பறிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அத்தோடு, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் எனவும் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து வேட்பாளர்களும் தமது வருமானங்களையும் சொத்துக்களையும் சமர்பிக்க வேண்டும் எனவும் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

உலகில் குறைந்த வயதில் புத்தகம் ஒன்றை வெளியிட்டவர் என்ற ரீதியில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவனான தனுவக சேரசிங்கவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இச் சிறுவன் தனது பெற்றோருடன் சிசேல்ஸில் வசித்து வருகிறார். இவர் 'துரமெ குழழன' என்ற ஆங்கில நூல் ஒன்றை வெளியிட்டுள்ளதோடு, இதனை எழுத மூன்று நாட்களே செலவிட்டுள்ளார் என்பதும் விஷேட அம்சமாகும். மேலும், இப்புத்தகம் வெளியாகும் போது அவரது வயது 4 வருடங்கள் மற்றும் 356 நாட்களுமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இச்சிறுவனின் திறமையை பாராட்டியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நினைவுச் சின்னம் ஒன்றையும், அவரது எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்கு தனது ஆசிர்வாதங்களையும் வழங்கியுள்ளார்.

Published in உள்நாடு

பூநகரி - செல்லையாதீவு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 32 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியைக் குறுக்கறுத்த மாடு ஒன்றுடன் கிளிநொச்சியில் இருந்து பூநகரி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியமையாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சட்ட வைத்திய அதிகாரியினதும் மரண விசாரணை அதிகாரியினதும் அறிக்கைகளின் பிரகாரம் குறித்த நபர் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்த ஒருவர் பொலிசாருக்கு வைத்தியசாலையில் வைத்து வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக, குறித்த விபத்து பார ஊர்த்தியுடன் மோதுண்டு இடம்பெற்றிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பெயரில் பொலிஸ் தரப்பு சாட்சியாக இருந்த பார ஊர்த்தி சாரதியை தற்போது கைதுசெய்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபரை பொலிசார் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதேவேளை, குறித்த விபத்தை தான் பார்க்கும் போது, பார ஊர்தியில் அடிப்பட்டதற்கான தடயங்களும் காயங்களும் இருந்ததாகவும் இதனை தான் பொலிசாருக்கு தெரிவித்திருந்ததாக, சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பாதிக்கப்பட்டவரை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்ற போது, இடையில் வருகைதந்த நோயாளர் காவுவண்டிக்கு அவரை மாற்றிவிட்டு அவரது உடைமைகள் இருப்பதனை தெரிவித்து விட்டு சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு இருக்க, இவ்விபத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் வெளியிட்ட மரணித்தவரின் குடும்பத்தார், பொலிஸார் உண்மையான குற்றவாளியைக் காப்பாற்ற முயல்வதாக, தெரிவித்து அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூநகரி மற்றும் கிளிநொச்சிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top