Items filtered by date: Monday, 08 January 2018

ஒஸ்கார் விருதுகளுக்கு அடுத்து பெரிய கௌரவமாகக் கருதப்படும் “கோல்டன் க்ளோப் விருதுகள்" அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் ஹொலிவுட் பத்திரிகை கூட்டமைப்பால் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்தந்த வருடத்தில் வந்த சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சி தொடர்களுக்கும், கலைஞர்களுக்கும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான 75ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் வழங்கப்பட்டது விழாவை அமெரிக்க நகைச்சுவை நடிகர் சேத் மெயர்ஸ் தொகுத்து வழங்கினார்.

நடிகைகள் பலர் ஹொலிவுட் திரைப்பட உலகில் நிலவும் பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்களுக்கு தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கறுப்பு நிற ஆடைகள் அணிந்து வந்திருந்தினர்.

திரைப்படங்கள் பிரிவு

சிறந்த திரைப்படம்: த்ரி பில்போர்ட்ஸ் அவுட்ஸ் எபிங், மிசோரி

சிறந்த நடிகை: பிரான்சஸ் மெக்டோர்மண்ட் (த்ரி பில்போர்ட்ஸ் அவுட்ஸ் எபிங், மிசோரி)

சிறந்த நடிகர்: கெர்ரி ஒல்ட்மென் (டார்க்கஸ்ட் அவர்)

சிறந்த திரைப்படம் (இசை & நகைச்சுவை பிரிவில்): லேடி பேர்ட்

சிறந்த நடிகை (இசை & நகைச்சுவை படப்பிரிவில்): சாய்ரஸ் ரோனன் (லேடி பேர்ட்)

சிறந்த நடிகர் (இசை & நகைச்சுவை படப்பிரிவில்): ஜேம்ஸ் பிரான்கோ (தி டையாஸ்டர் ஹாடிஸ்ட்)

சிறந்த துணை நடிகை : அலிசன் ஜான்னே (ஐ டோனியா)

சிறந்த துணை நடிகர்: சாம் ராக்வெல் (த்ரி பில்போர்ட்ஸ் அவுட்ஸ் எபிங், மிசோரி)

சிறந்த இசையமைப்பு: தி ஷேப் அப் வோட்டர்

சிறந்த பாடல்: தி இஸ் மீ ( தி கிரேடஸ்ட் ஷோமென்)

சிறந்த திரைக்கதை: த்ரி பில்போர்ட்ஸ் அவுட்ஸ் எபிங், மிசோரி

சிறந்த பிறமொழி திரைப்படம்: இன் தி ஃபேர்ட்

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: கோகோ

 

தொலைக்காட்சி

சிறந்த தொலைக்காட்சித் தொடர்: தி ஹேன்மெய்ட்ஸ் டேல்

சிறந்த நடிகை (தொலைக்காட்சித் தொடர்) : எலிசபெத் மோஸ் (தி ஹேன்மெய்ட்ஸ் டேல்)

சிறந்த நடிககர் (தொலைக்காட்சித் தொடர்): ஸ்டெர்லிங் கே.ப்ரவுன் (தி இஸ் அஸ்)

சிறந்த தொலைக்காட்சித் தொடர் (இசை & நகைச்சுவைப்பிரிவு): தி மார்வெல்லஸ் மிஸ் மைசல்

சிறந்த நடிகை (இசை & நகைச்சுவைப்பிரிவு): ரேச்சல் புரோஸ்னகன் (தி மார்வெல்லஸ் மிஸ் மைசல்)

சிறந்த நடிகர் (இசை & நகைச்சுவைப்பிரிவு): அசிஸ் அன்சாரி (மாஸ்டர் ஆப் நோன்)

 

வரையறுக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள் பிரிவு

சிறந்த நாடகம்: பிக் லிட்டில் லைஸ்

சிறந்த நடிகர்: இவான் மெக்ரிகர் (ஃபார்கோ)

சிறந்த நடிகை: நிக்கோலா நிக்மன் (பிக் லிட்டில் லைஸ்)

சிறந்த துணை நடிகர்: அலெக்ஸ்சாண்டர் ஸ்கேர்ஸ்கார்ட் (பிக் லிட்டில் லைஸ்)

சிறந்த துணை நடிகை: லாரா டெர்ன் (பிக் லிட்டில் லைஸ்)

70 வயதான மூதாட்டியின் சடலத்தை, அவ்வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், சில நாட்களாகப் பாதுகாத்து வந்த சம்பவமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.

பதுளை - நெலும்கம வித்தியாலத்துக்கு முன்பாக அமைந்துள்ள வீட்டில் வளர்க்கப்பட்ட நாயே, இவ்வாறு நடந்துகொண்டுள்ளது.

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த அயலவர்கள் கடந்த 6ஆம் திகதி மாலை 6 பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து செயற்பட்ட பொலிஸார், வீட்டின் கூரையை உடைத்து உள்ளே சென்றபோது, அவ்வீட்டில் வசித்த மூதாட்டி இறந்து கிடந்துள்ளார். அந்த மூதாட்டியின் சடலத்துக்கு அருகில், நாயொன்று காவல் காத்துக்கொண்டிருந்துள்ளது.

இந்நிலையில், பதுளை நீதவான் ஆனந்த மொரகொடவின் முன்னிலையில் மரண விசாரணை இடம்பெற்றது.

நித்திரையில் இருந்தவாறே இவர் மரணித்திருக்கலாம் என்றும், இவர் உயிரிழந்து பல நாட்கள் ஆகியிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம், பதுளை தேசிய வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற விசேட வைத்தியரால் பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்து, அதன் அறிக்கையை நீதிமன்றிடம் கையளிக்குமாறு பதில் நீதவான் ஆனந்த மொரகொட, பதுளை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை தான் கொழும்பு - தலவத்துகொட பகுதியில் உள்ள வீட்டில் பணிபுரிவதாகவும், தனது மனைவிக்கு துணையாக நாய் மட்டுமே இருந்ததாகவும் உயிரிழந்த பெண்ணின், 71 வயதான கணவர் தெரிவித்துள்ளார்.

Published in உள்நாடு
3.19 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தரொருவரைக் குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தார்.
 
கொழும்பைச் சேர்ந்த 23 வயதான சந்திம ராஜேந்திர பெரேரா என்பருக்கே மேற்குறித்த தண்டனை வழங்கப்பட்டது.
 
2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் திகதியன்று கொழும்பு கிராண்ட்பாஸ் ஸ்ரேஸ் வீதியில் வைத்து, கொழும்பு குற்றப் பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த குறித்த நபருக்கு எதிராக ஹெரோய்ன் வைத்திருந்த மற்றும் வியாபாரம் செய்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
 
சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, இதுவரை சாட்சிய விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.
 
நபருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கிடமின்ற நிரூபணமாகியுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதிபதி இரண்டு குற்றங்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
Published in உள்நாடு
 
அம்பகமுவ பிரதேச சபை உட்பட மூன்று பிரதேச சபைகள் தொடர்பில் வெளியிடப்பட்ட எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட அடிப்படை உரிமைகள் மனு, எதிர்வரும் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 
குறித்த மனு, உயர்நீதிமன்ற நீதியரசர்களான புவனேஹ அலுவிஹார, கே.டி.சித்திரசிறி, நளின் பெரேரா ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
அதன்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட வேண்டிய அறிக்கைகள் தமக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் ஜயரத்ன, மன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்தே, மனு ஒத்திவைக்கப்பட்டது.
 
அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான எச்.டி.டி. நடராஜன் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவில், இந்நடவடிக்கையானது தனது அடிப்படை உரிமையினை மீறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கடந்த நவம்பர் 2ஆம் திகதியன்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறே கோரப்பட்டிருந்தது.
 
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, அந்த அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 
அம்பகமுவ பிரதேசமானது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயத்தின் போது, மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது என்றும் இதனால் அப்பகுதி மக்களுக்கும், அப்பகுதி பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் பாரியளவில் அநீதியிழைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Published in உள்நாடு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாணந்துறை, வெலிகம நகரசபைகள் மற்றும் திரப்பன பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையைச் சவாலுக்கு உட்படுத்தி அக்கட்சியால், உயர் நீதிமன்றத்தில் மூன்று ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
 
இதைச் சவாலுக்கு உட்படுத்தி அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், அந்தந்த பிரதேசங்களுக்குரிய அங்கிகரிக்கப்பட்ட முகவர்களால் இந்த மனுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
அம்மனுவில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், அவ்வாணைக்குழுவின் அங்கத்தவர்கள் நால்வர், களுத்துறை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ரசிக்க பீரிஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் காசிம், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, மக்கள் விடுதலை முன்னணயின் செயலாளர் டில்வின் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டப்பட்டுள்ளனர். 
 
களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை நகரசபைக்கான வேட்பு மனுவில் திகதி குறிப்பிடப்படவில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரின் சான்றொப்பம் இடப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும், மாத்தறை மாவட்டத்தின் வெலிகம நகரசபை மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தின் திரப்பன பிரதேசபை ஆகியவற்றுக்கான வேட்புமனுக்களிலும் எழுத்து மூல தவறுகள் காணப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
 
எனவே, இந்த மனு தொடர்பில் தீர்ப்பு வழங்கப்படும் வரை மூன்று பிரதேசங்களுக்கும் தேர்தல் நடத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
.............
Published in உள்நாடு

நாட்டின் பல பாகங்களிலும் நிலவிவரும் குளிருடன் கூடிய காலநிலை எதிர்வரும் மாதத்திலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வழமையாக குளிருடன் கூடிய காலநிலை நிலவும் நுவரெலியாவில் நேற்றைய தினம் 4.7 செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டதாகவும், அதிகூடிய வெப்பநிலையாக 32.7 பாகை செல்சியஸ் இரத்தினபுரி மாவட்டத்தில் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெரும்பாலான பிரதேசங்களில் எதிர்வரும் 10ஆம் திகதி தொடக்கம் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published in உள்நாடு

“மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் புகுந்த தொழிற்சங்கமும் ஆமைபுகுந்த வீடும் ஒன்றுதான்” என தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன் தெரிவித்தார்.

பொகவந்தலாவையில் ஸ்ரீ தண்டாயுபானி ஆலய கலாசார மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் உறையாற்றிய போது,“அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஊடாக பொகவந்தலாவை பகுதியில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். ஆனால், மத்திய மாகாண சபை உறுப்பினர் எங்கள் தலைவர் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

கடந்த அரசாங்கத்தின் போது பொகவந்தலவா கிலானி தோட்ட வீதியை புனரமைக்க ஆரம்பித்தார். ஆனால் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து சுமார் நான்கு வருடங்கள் கடந்துள்ளது. இதேபோல், பொகவந்தலாவை சென்மேரிஸ் மத்திய கல்லூரிக்கு அருகாமையில் ஒரு பாதுகாப்பு மதில் அமைத்தார். பல இலட்சம் ரூபா செலவில் அந்த வேலைதிட்டமும் முழுமை பெறவில்லை இதுவா அவரின் அபிவிருத்தி.

ஆரம்பகாலத்தில் அமரர் சந்திரசேகரனுடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டார். அதன் பிறகு மத்திய மாகாண சபை உறுப்பினராக இருக்கின்ற சாதாசிவத்தோடு இணைந்து செயற்பட்டார். ஆனால், தற்போது இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இணைந்து மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இ.தொ.கா.வை இல்லாமல் ஆக்குவதற்கு எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்” என்றார்.

Published in உள்நாடு

பெருந்தோட்ட நிர்வாகங்களினால், தோட்டப் பெண் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த ஊழியர் சேமலாப நிதி மற்றும் சேவைகாலப்பணம் உள்ளிட்டு ஏனைய கொடுப்பனவுகளான 26 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவினை, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி பெற்றுக்கொடுத்துள்ளது.

பதுளை உதவித் தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் 05 மற்றும் 08 ஆகிய தினங்களில் நடைபெற்ற தோட்ட முகாமைத்துவங்களுக்கும், பாதிக்கப்பட்ட தோட்டப்பெண் தொழிலாளர்கள் சார்பிலான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் இராஜநாயகம் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

பதுளை உதவித் தொழில் ஆணையாளர் கே.ஜி.ஜயவர்தன மற்றும் தொழில் அதிகாரி சி.பி.கே.எம். குமாரிஹாமி, பதுளை மாவட்டத்தின் டவுன்சைட், ரொசட், எல்டெப், வேவெஸ்ஸை ஆகிய பெருந்தோட்டங்களின் முகாமையாளர்கள், பாதிக்கப்பட்ட தோட்டத்தொழிலாளர்களான பூசகர் பெரியசாமீஸ்வரர் சரோஜாதேவி , கறுப்பையா செல்லம்மா, காளிமுத்து இந்திராணி, பெருமாள் இந்திராணி, பீ.எய்ச். லீலாவதி ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எஸ்.சதாசிவத்தின் பணிப்பின்பேரில், பிரதிப் பொதுச்செயலாளர் இராஜநாயகம் சலோபராஜா, தோட்ட முகாமைத்துவத்தினருடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். பல மணி நேரம் நீடித்த இப் பேச்சுவார்த்தையின் போது, இரு தரப்பினருக்கிடையே கடுமையான வாக்குவாதங்கள் இடம் பெற்றன.

இறுதியில், உதவித் தொழில் ஆணையாளர் மற்றும் தொழில் அதிகாரி ஆகியோரும் சமரசத்தில் ஈடுபட்டு, குறிப்பிட்ட ஐந்து பெண் தொழிலாளருக்கும் முழுக் கொடுப்பனவுகளாக 26 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவினை, தோட்ட முகாமைத்துவத்தினர்கள் வழங்கியாக வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளனர்.

இதன் பிரகாரம், வெளிமடைப் பகுதியின் டவுன் சைட் தோட்டத்தின் சின்னையா கதிராயி 1976ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையிலான 33 வருடங்களுக்கான ஊழியர் சேமலாப நிதி மறுக்கப்பட்டதினால் அவர் பதுளை உதவித்தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் செய்து, பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வந்தன.

அவ்வேளையில், அவர் நோய்வாய்ப்பட்டு இறந்ததினால் அவரது மகளான கோட்டகொடை தோட்ட ஆலய பூசகரான பெரியசாமீஸ்வரரின் மனைவியான சரோஜாதேவி தனது தாயின் ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னனியுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

இதனடிப்படையில், அவருக்கு 33 வருடங்களுக்கான ஊழியர் சேமலாப நிதியான 14 இலட்சரூபாவினை வழங்க, பதுளை உதவித் தொழில் ஆணையாளர் உத்தரவிட்டார்.

ஹாலி - எலப் பகுதியின் ரொசட் தோட்டத்தின் கறுப்பையா செல்லம்மா என்பவருக்கு 1977ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான மறுக்கப்பட்ட சேவைகாலப்பணமான 65 ஆயிரம் ரூபாவினை வழங்க, பதுளை உதவித்தொழில் ஆணையாளர் உத்தரவிட்டார்.

பசறைப் பகுதியின் எல்டெப் தோட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து இந்திராணி, பெருமாள் இந்திராணி ஆகிய இருவரும் ஒரே சான்றுகைப் பத்திரத்தில் தொழில் செய்து வந்தனர். இதனை நிவர்த்தி செய்து காளிமுத்து இந்திராணிக்கு 12 எஸ் 6653, பெருமாள் இந்திராணிக்கு 12 எஸ் 3231 என்ற வகையில் வெவ்வேறு 'பி' சான்றுகைப்பத்திரங்களை ஏற்படுத்தி, கடந்த 1981ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரைக்குமான காலப்பகுதியில். அவர்களுக்கு சேர வேண்டிய 11 இலட்ச ரூபாவினை வழங்கவேண்டுமென்று, பதுளை உதவித் தொழில் ஆணையாளர் சம்பந்தப்பட்ட தோட்ட முகாமைத்துவதிற்கு உத்தரவிட்டார்.

பதுளைப் பகுதியைச் சேர்ந்த வேவெஸ்ஸை தோட்டத்தின் பி.எய்ச். லீலாவதி என்ற தோட்டத் தொழிலாளி கடந்த 1978ஆம் ஆண்டு தொடக்கம் 2003ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அவருக்கு சேரவேண்டிய 65 ஆயிரம் ரூபாவினை வழங்கவேண்டுமென்று, பதுளை உதவித் தொழில் ஆணையாளர் வேவெஸ்ஸை தோட்ட முகாமைத்துத்திற்கு உத்தரவிட்டார்.

இவ் வகையில், மேற்படி ஐந்து பெண் தொழிலாளிகளுக்கும் சேவைகாலப்பணம் உள்ளிட்டு ஊழியர் சேமலாபநிதியாக 26 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவினை வழங்க, பதுளை உதவித் தொழில் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

Published in உள்நாடு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களுக்காக புதிய எரிபொருள் விநியோகத் திட்டம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிலிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்கவின் தலைமையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி திட்டத்தில் புதிய விமான தளங்களை உருவாக்கும் பணி இடம்பெற்று வருகினறது. இதன் ஒரு பகுதியாக விமான நிலையத்திலேயே புதிய விமானங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

2013ஆம் ஆண்டு இத்திட்டத்தை மேற்கொள்ளும் பணியை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரமும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

எனினும் பல காரணங்களால் இந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்க அமைச்சினால் முடியாமல் போனது. இந்நிலையில் பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் வழிகாட்டலுக்கமைவாக இத்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய 45 நாட்களுக்குள் ஒப்பந்த விதிமுறைகளுக்கமைவாக வெளிநாட்டு நிறுவனத்தோடு தொடர்புடைய ஒப்பந்தக்காரர்களை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Published in உள்நாடு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், லசந்த விக்ரமதுங்கவின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்குச் சென்ற கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் துணைத் தலைவர் ரொபர்ட் ஹில்டன் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாது ரொபர்ட் ஹில்டன் “ஒரு தைரியமான பத்திரிகையாளர் மற்றும் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க 9 ஆண்டுகளுக்கு முன் இன்று இலங்கையில் படுகொலை செய்யப்பட்டார். இவரது குடும்பம் நீதிக்காக காத்திருக்கின்றது” என லசந்த விக்ரமதுங்க குறித்து தனது டுவிட்டர் சமூக வளைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Published in உள்நாடு

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top