Items filtered by date: Tuesday, 09 January 2018

கிளிநொச்சி - மாங்குளம் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏ9 வீதியின் மாங்குளம் - கொக்காவில் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Published in உள்நாடு
எதிர்வரும் 2021ஆம் ஆண்டு வரையில் ஜனாதிபதியாக பதவியில் நீடிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திடம் சட்ட விளக்கம் கோரியுள்ளார்.
 
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்று முழுதாக இல்லாதொழிக்கப் போவதாக வாக்குறுதி அளித்தே ஜனாதிபதி மைத்திரி சிறிசேன நல்லாட்சியினை அமைத்திருந்தார்.
 
எனினும், 19ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி  எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரையிலேயே பதவியில் நீடிக்க முடியும்.
 
தனது  பதவிக் காலத்தில் ஓராண்டை தியாகம் செய்துள்ளதாக முன்னதாக ஜனாதிபதி கூறியிருந்த நிலையில், தற்பொழுது ஆறு ஆண்டுகள் பதவி வகிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட முடியுமா  என்பது தொடர்பில் விளக்கம் கோரியுள்ளார்.
 
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி செயலகம் எழுத்து மூலம் உச்ச நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published in உள்நாடு

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழா தொடர்பான கலந்துரையாடல் யாழ். அரசாங்க அதிபர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கடந்த வருடத்தைப் போன்று இம்முறையும் முன்னெடுக்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் தினேஷ் பண்டார குறிப்பிட்டார்.

அதற்கான திட்டங்களை வகுக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். இலங்கை, தமிழக மீனவர்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் நிகழ்வாக கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா அமைந்துள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்கவில்லை. எனினும் இந்த முறை பங்கேற்பதற்காகன நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இராமேஸ்வரம் பங்குத்தந்தை அந்தோனிச்சாமி குறிப்பிட்டார்.

Published in உள்நாடு

இந்தியாவில் ஆதார் தொடர்பான விதிமீறல்களை தெரியப்படுத்தும் ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்க வேண்டுமே தவிர விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது என அமெரிக்கா குறித்த ரகசியத் தகவல்களை வெளியிட்ட சர்ச்சையை ஏற்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன் தெரிவித்துள்ளார்.

“500 ரூபா அளித்தால் ஆதார் விபரங்களை தரகர் மூலம் 10 நிமிடங்களில் பெற்றுவிடலாம்" என இந்தியாவின் சண்டிகரில் இருந்து வெளியாகும் 'தி டிரிபியூன்' பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.

இதையடுத்து ஆதார் ஆணைக்குழு செய்த முறைப்பாட்டிற்கு அமைய அந்த பத்திரிகையின் பெண் ஊடகவியலாளர் ரச்னா கைரா மீது டெல்லி பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இது தொடர்பான செய்தியை குறிப்பிட்டு எட்வர்ட் ஸ்னோடன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆதார் தொடர்பான விதிமீறல்களை வெளிக்கொண்டு வரும் பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்க வேண்டும். விசாரணை அல்ல. இந்திய அரசாங்கம் உண்மையில் நீதியின் மீது அக்கறை கொண்டிருந்தால் கோடிக்கணக்கான இந்தியர்களின் தனியுரிமையை அழிக்கும் ஆதார் திட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். அதை தவிர்த்து பொறுப்பான பத்திரிகையாளரை கைது செய்ய விரும்புகிறீர்களா?”என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் உளவு இரகசியங்கள் பலவற்றை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் எட்வர்ட் ஸ்னோடன்.

பிற நாடுகளின் அரசு செயற்பாடுகளையும், சொந்த நாட்டு மக்களையும் அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து இரகசியமாக கண்காணித்து வருவதை அவர் உலகிற்கு பகிரங்கப்படுத்தினார்.

இதன் காரணமாக அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட எட்வர்ட் ஸ்னோடன், ரஷ்யாவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தங்கள் நாட்டு வீரர்கள் கலந்துகொள்வார்கள் என வடகொரியா அறிவித்துள்ளது.

மேலும் குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வடகொரியா வீரர்களுடன் தமது நாட்டைச்சேர்ந்த குழுவும் அனுப்பப்படும் என்றும் வடகொரியா கூறியுள்ளது.

முன்னதாக, தென்கொரியா வடகொரியா இடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழலில் தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க வடகொரியா விருப்பம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று சியோலில் தென் கொரியா - வடகொரியா பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

இதில் தென்கொரிய அமைச்சர் சோ மியோங் கியோன், வடகொரியாவின் பிரதிநிதிகள் குழு தரப்பில் ரி சன் க்வான் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில் குளிர்கால ஒலிம்பிக், இரு நாடுகளுக்கு இடையே நிலவும் இதர பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தமது நாட்டு வீரர்களை தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கச் செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது. வீரர்களுடன் ஆதரவாளர்கள், பிரதிநிதிகள் உடன் செல்வார்கள் என்றும் வடகொரியா கூறியுள்ளது.

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரு நாட்டுக்கு இடையே முதன்முறையாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் இப்பேச்சுவார்த்தையில் கொரிய போரின்போது பிரிந்த உறவுகள் மீண்டும் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென் கொரியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிணை முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி விசாரணை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை சபையில் சமர்ப்பிக்காமல் நாளைய தினம் பாராளுமன்றத்தைக் கூட்டுவதில் பயனில்லை என அரசியல் கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை பிறிதொரு தினத்தில் நடத்த கட்சித்தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். பாராளுமன்றத்தில் இன்று மாலை நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பிணை முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நாளைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

முறிகள் விசாரணை அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்கு அமைய நாளைய தினம் பாராளுமன்றத்தினைக் கூட்டுமாறு பிரதமர், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பிற்காக போராடி வரும் யூசுப் பத்தான் பயன்படுத்திய மருந்து ஒன்றில் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து இருந்தது தெரியவந்ததையடுத்து தற்காலிகமாக போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இருமல் மருந்துகளில் பொதுவாகக் காணப்படும் ‘டெர்புடலைன்’(terbutaline) என்ற மருந்துப்பொருள் உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையகத்தினால் வெளியிடப்பட்ட தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துப் பட்டியலில் இருப்பதாகும்.

கடந்த மார்ச் 16ஆம் திகதி உள்ளூர் இருபதுக்கு-20 தொடரின் போது யூசுப் பத்தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் ஊக்கமருந்து தடுப்புச் சோதனைக்காக சிறுநீர் மாதிரியை அளித்திருந்தார்.

பரிசோதனையில் டெர்புடலைன் இருந்தது தெரியவந்ததையடுத்து இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படும் வரை தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யூசுப் பத்தானிடம் இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விளக்கம் கேட்டபோது, தனக்கு பரிந்துரை செய்யப்பட்ட மருந்துக்குப் பதிலாக டெர்புடலைன் உள்ள மருந்து தவறாகக் கொடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

கடுவெல கொரதொட பிரதேசத்தில் அலவாங்கால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

52 வயதுடைய கொரதொட மொரகெடிய பிரதேசத்தை சேர்ந்தவர் ஒருவரே இவ்வாறு இன்று காலை கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் சகோதரியின் முன்னாள் கணவரே தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Published in உள்நாடு

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top