அரசியல் கொந்தளிப்பைத் தணிக்க டில்லியும், வொஷிங்டனும் தீவிரம்

அரசியல் கொந்தளிப்பைத் தணிக்க டில்லியும், வொஷிங்டனும் தீவிரம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தணிப்பதற்கான முயற்சியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப்பும், இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங்கும் நேரடியாகவே களமிறங்கியுள்ளனர் என்று உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை நேற்று தனித்தனியாகச் சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கேஷாப், தற்போதைய அரசியல் நிலைமையை சீர்செய்ய கூட்டாட்சியின் இரண்டு தலைவர்களும் புரிந்துணர்வுடன் செயற்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், மாலைதீவில் ஏற்பட்டுள்ள நிலைமைபோல் இலங்கையிலும் ஓர் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுவிடக்கூடாதென்பது அமெரிக்காவின் நிலைப்பாடு என்று அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்றுக்காலை அலரிமாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்திய இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தான இந்தியாவின் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரதமர் ரணில் எதிர்வரும்வாரம் இந்தியா செல்லவுள்ள நிலையில் அந்த விஜயம் குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது என அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பில் தற்போது எழுந்துள்ள அரசியல் நெருக்கடி நிலைமை அரசியல் தீர்வு முயற்சிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடும் என இராஜதந்திர வட்டாரங்கள் கவலை கொண்டிருப்பதாக மூத்த இராஜந்திரியொருவர் நேற்றிரவு தெரிவித்தார்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top