Items filtered by date: Tuesday, 12 December 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈபிஆர்எல்எவ் வெளியேறியுள்ள போதிலும், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நான்கு கட்சிகளின் கூட்டமைப்பாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எவ் அண்மையில் வெளியேறியுள்ளது.

இந்தக் கட்சி ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், “தமிழ் அரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகிய மூன்று பங்காளிக் கட்சிகளும், உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் ஒன்றாக இணைந்து போட்டியிடும்.

கூட்டமைப்பை விட்டு ஈபிஆர்எல்எவ் வெளியேற முடிவு செய்தமை ஜனநாயக ரீதியாக அவர்கள் எடுத்த முடிவு.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் சொந்தமாக அரசியல் கட்சியை உருவாக்கியுள்ள போதிலும், புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பை விட்டு சிலர் வெளியேறி, ஏனையோருடன் இணைந்து போட்டியிடுவதால், தேர்தலில் ஏனைய கட்சிகள் வெற்றி பெற்று விட முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

Published in உள்நாடு

உள்ளூராட்சித் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் தமது சொந்தச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக லங்கா சமசமாஜக் கட்சி தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச ஆதரவு சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இடம்பெற்றுள்ள லங்கா சமசமாஜக் கட்சியே, கிளிநொச்சி மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

லங்கா சமசமாஜக் கட்சியின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே, கிளிநொச்சி, நுவரெலிய மாவட்டங்களில், சாவி சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாகவும் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

எனினும், ஏனைய மாவட்டங்களில் ஸ்ரீலங்கா  பொதுஜன முன்னணியுடன் இணைந்தே தமது கட்சி போட்டியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Published in உள்நாடு

தமிழ் சமூக ஜனநாயக கட்சி என பெயரை மாற்றிக் கொண்ட வரதராஜப்பெருமாள் தலைமையிலான பத்மநாபா ஈபிஆர்எல்எவ் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் பணியகத்தில், இன்று பிற்பகல் வடக்கு - கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் மற்றும் சுகு சிறிதரன் ஆகியோர் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும், ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இந்தக் கட்சியை இணைத்துக் கொள்வது தொடர்பாக கூட்டமைப்புத் தலைமை இன்னமும் எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில், தாம் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக, பத்மநாபா ஈபிஆர்எல்எவ் தெரிவித்துள்ளது.

இதற்கமையவே முதற்கட்டமாக சாவகச்சேரி நகரசபைக்கு இந்தக் கட்சி சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

Published in உள்நாடு

உள்ளூராட்சித் தேர்தலில் வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 50 முஸ்லிம் வேட்பாளர்களைப் போட்டியில் நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

“வட மாகாணத்தில், உள்ள பல்வேறு உள்ளூராட்சி சபைகளில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 32 வட்டாரங்கள் உள்ளன. இங்கு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபை, வவுனியா நகரசபை, முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றில் உள்ள இரட்டை உறுப்பினர் தொகுதிகளுக்கு கூட்டமைப்பு சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி பிரதேச சபைக்கும் முஸ்லிம் வேட்பாளர்களை கூட்டமைப்பு களமிறக்கவுள்ளது“ என வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்துள்ளார்.

Published in உள்நாடு

இராணுவத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவப் பேச்சாளராக இருந்த மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன யாழ்ப்பாணத்தில் உள்ள 51ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து 52ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

யாழ்ப்பாண மாவட்டத்தில், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான, தமிழரசுக் கட்சிக்கும், புளொட்டுக்கும் இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் கடந்தவாரம் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, யாழ். மாவட்டத்தில் புளொட் சார்பில் கோரப்பட்ட சங்கானை, மானிப்பாய், சுன்னாகம் பிரதேச சபைகளின் ஆசனப்பங்கீடு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் தமிழ் அரசுக் கட்சிக்கும், புளொட்டுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களின் முடிவில், சுன்னாகம் பிரதேச சபையை புளொட்டுக்கு கொடுக்க இணக்கம் காணப்பட்டது.

அத்துடன், மானிப்பாய் பிரதேச சபையை முதல் இரண்டு ஆண்டுகளில் தமிழ் அரசுக் கட்சியும், அடுத்த இரண்டு ஆண்டுகள் புளொட்டும் நிர்வகிப்பது என்றும் இணங்கப்பட்டது.

சங்கானைப் பிரதேச சபையை முதலிரு ஆண்டுகள் புளொட்டும், அடுத்த அரு ஆண்டுகள், தமிழ் அரசுக் கட்சியும் நிர்வகிப்பதாகவும் இணக்கப்பாடு காணப்பட்டது.

எனினும், இந்த முடிவு குறித்து தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகள் கடும் அதிருப்தி வெளியிட்ட நிலையில், நேற்று மீண்டும் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, சங்கானைப் பிரதேச சபையை முழுமையாக நான்கு ஆண்டுகளும் தமிழ் அரசுக் கட்சியே நிர்வகிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான ஆசனப்பங்கீட்டு பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்பட்டுள்ளன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Published in உள்நாடு

உள்ளூராட்சித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் அறிவித்துள்ளார்.

93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள், கடந்த நவம்பர் 28ஆம் திகதியும் ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 4ஆம் திகதியும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரப்பட்டிருந்தன.

இந்த நிலையில், மொத்தமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளுக்குமான அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக கால எல்லையை டிசம்பர் 22ஆம் திகதி வரை நீடித்திருப்பதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

Published in உள்நாடு

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் இன்றைய தினமும் பல்வேறு பிரதேசங்களில் கட்டுப் பணங்களை செலுத்தியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது.

கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் சமரகோன் தலைமையிலேயே கரைச்சி பிரதேச சபைக்கான கட்டுப் பணம் இதன்போது செலுத்தப்பட்டுள்ளது. இது தவிர சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஐக்கிய தேசிய கட்சி செலுத்தியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து கட்டுப்பணத்தை செலுத்தினார்கள்.யாழ் மாவட்ட செயலகத்திலுள்ள உதவித் தேர்தல்கள் ஆணையாளர் அகிலனிடம் இவர்கள் தமது கட்சி சார்பில் கட்டுப்பணத்தை செலுத்தி வேட்பாளர் விண்ணப்ப படிவம் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை நுவரெலியா மாநகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடுகின்றது. கூட்டணியின் போட்டியிடுகின்ற உறுப்பினர்களும், பட்டியலில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களும் இன்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான இராதாகிருஸ்ணன் முன்னிலையில் நுவரெலியா காரியாலயத்தில் பட்டியலில் கையொப்பமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top