Items filtered by date: Tuesday, 05 December 2017

ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் '2.0' படம், ஜனவரி 26ஆம் திகதி வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி ஜனவரியில் படம் வெளியாகாது. ஏப்ரலில் வெளியாகும் என்று '2.0' இசை வெளியீட்டு விழா முடிந்த பிறகு செய்திகள் வெளியாகின.

இந்த செய்தியை தயாரிப்பு நிறுவனம் மறுத்து வந்தது.

2.0 படத்தில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகரான அக்ஷய்குமாருடைய நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியிருக்கும் 'பேட்மேன்' படம் ஜனவரி 26ல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னரே 2.0 படம் ஜனவரியில் வெளியிடுவதில் சிக்கல் இருப்பது தெரிய வந்தது.

வேறுவழியில்லாமல் 2.0 திரைப்படத்தின்  வெளியீடானது ஏப்ரலுக்கு மாற்றியிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது லைகா புரொடக்ஷன் நிறுவனம்.

இந்நிலையல் ஏப்ரல் மாதம் 2.0 படத்தை வெளியிட தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அந்த திகதிகளில் நேரடி தெலுங்குப்படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதால் 2.0 படத்தை வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடல் நீர் வெப்பமாகிய காரணத்தினாலேயே மட்டக்களப்பு கடற் பகுதியில் பெருமளவிலான பாம்புகள் கரையொதுங்கின என்று நாரா நிறுவனம் கூறியுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், கடல் நீர் வெப்பமடைந்தமைக்கான காரணம் குறித்து தற்போது விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில், மட்டக்களப்பு - நாவலடி பகுதி கடற் பகுதியில் பெருமளவான பாம்புகள் கரையொதுங்கி இருந்ததோடு, மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் சிக்கியிருந்தன. இந்தநிலையில், இதற்கான காரணம் குறித்து ஆராயுமாறு நாரா நிறுவனத்திடம் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு தெரியப்படுத்தியிருந்தது.

இதற்கமைய, அவர்களால் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, கடல் நீரின் அதிக வெப்பமே இதற்கான முக்கிய காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு
தலைமன்னார் வீதியல் 15 சடலங்கள் தோண்டிய எடுப்பு மன்னார் - தலைமன்னார் வீதிப் பகுதியிலுள்ள மயானத்தில் இருந்து  15 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
 
மன்னார் கத்தோலிக்கச் சபை நீதிமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, நேற்று மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 
10 வருடங்களுக்கு முன்னர் மன்னார் கத்தோலிக்க சபையில் பணியாற்றிய கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட15 பேரின் சடலமே இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த மயானம் முன்னர் கத்தோலிக்கச் சபைக்கு சொந்தமானதாக காணப்பட்டு பின்னர் அப் பகுதியில் மரணிப்பவர்களின் உடல்களை புதைக்கும் மயானமாக அமைந்திருந்தது.
 
இந்தநிலையில் குறித்த 15 பேரின் உடல்களையும்  புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள, கத்தோலிக்க மயானத்தில் புதைக்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கைக்க அமைய மேற்படி உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் மீண்டும் அவை புதிய மயானத்தில் புதைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published in உள்நாடு
புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் தப்பிச்சென்றமை தொடர்பான வழக்கில் தலைமறைவாகவுள்ள உதவி பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
யாழ் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இவ்வழக்கில் கைதாகி தற்போது பிணையில் உள்ள வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க இன்று யாழ் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
 
அத்துடன் இவ்வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுவந்த விசாரணைகளின் அறிக்கையினை அரச சட்டவாதி நிசாந்த் மன்றில் சமர்ப்பித்ததுடன் அது தொடர்பான சட்ட மா அதிபரின் விளக்கத்தினையும் மன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
 
இதேவேளை இவ்வழக்கில் முக்கிய சந்தேகநபரும் சம்பவம் இடம்பெற்றவெளை யாழ் பொலிஸ் பிரிவில் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி தற்போது தலைமறைவாக இருந்துவரும் சிறிகஜன் என்பவரை கைது செய்வதற்கான பிடியாணையினை நீதிபதி இதன்போது பிறப்பித்தார்
 
அத்துடன் அவர் தொடர்பான சகல ஆணவங்களையும் அடையாளத்திற்குட்படுத்தி அவர் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முடியாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினருக்கும் அந்த உத்தரவை அனுப்பிவைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார் இந்த நிலையில்  இவ்வழக்கு வரும் பெப்ரவரிமாதம் 28ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Published in உள்நாடு
சமூகத்தில் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த இளம் தலைவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் பிரித்தானிய மஹாராணியினால் இலங்கையர் ஒருவரை கௌரவித்து விருது வழங்கி வைக்கப்பட்ட உள்ளது.
 
பாக்யா விஜேவர்தன என்னும் இலங்கையரே இவ்வாறு கௌரவிக்கப்பட உள்ளார். 18 முதல் 29 வயது வரையிலான இளம் தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது. பால்நிலை சமத்துவம், உளவியல் ரீதியான பாதிப்புக்களை
எதிர்நோக்கியோர், சிறுவர்  உதவிகள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு மட்டத்தில் மக்களின் வாழ்க்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு இவ்வாறு விருது வழங்கப்பட உள்ளது.
 
பொதுநலவாய நாடுகளின் 52 உறுப்பு நாடுகளிலிருந்து இந்த விருதிற்கான தெரிவு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published in உள்நாடு

மனித உயிர்கள் இயற்கை அனர்த்தங்களால் காவுகொள்ளப்படுவது இயற்கையானது. உலக சமனிலையைப் பேணுவதற்கு இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் உதவுவதாக பலரும் கூறிவந்தாலும் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை சிலரிடம் இருக்கத்தான் செய்கின்றது.

உலகம் முழுவதும் வருடத்திற்கு 80 முதல் 100 சதவீதமான சூறாவளிகள் உருவாகுவதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. வடஇந்து சமுத்திர பிராந்தியத்தில் வருடாந்தம் 4 முதல் 6 சதவீதமான சூறாவளிகள் உருவாகின்றன. அதேவேளை, வருடாந்தம் உலகம் முழுவதும் உருவாகும் சூறாவளிகளில் 5 சதவீதமானவை வங்காள விரிகுடா பிராந்தியத்திலும், ஒரு சதவீதமானவை அரேபியக் கடல் பிராந்தியத்திலும் உருவாகின்றன.

வங்காள விரிகுடா மற்றும் அரேபியக் கடற்பகுதியில் உருவாகும் சூறாவளிகள் இலங்கையில் தாக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்திவருகின்றதை காணமுடிகின்றது.

இவ்வாறு இலங்கைத் தீவைச் சூழவுள்ள பிராந்தியங்களில் உருவாகும் சூறாவளிகள் அநேகமாக மேற்கு அல்லது வடமேற்கு திசைகளில் காணப்படுவதனால் அரேபியக் கடல் பிராந்தியங்களில் தோன்றும் சூறாவளியால் இலங்கைக்கு நேரடியாக பாதிப்புகள் இல்லை.

வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தாலேயே புயல்கள் உருவாகின்றன. எப்பொழுதெல்லாம் காற்று சூடாகிறதோ, அது விரிந்து இலேசாகிறது. இலேசான காற்று மேலே செல்கிறது. அது ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்ப கனமான குளிர்ந்த காற்று ஓடோடிச் செல்கிறது. இந்தக் காற்று செல்லும் வேகம் காரணமாகவே புயல்கள் உருவாகுகின்றன.

 

 

 

image.jpg

 

புயலின் வகைகள்

புயலின் வேகம் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கத்தை அளப்பதற்கு 'ஓர் அளவுகோல் தேவை என்பது தொடர்பில் 19ஆம் நூற்றாண்டில் ஆராயப்பட்டது. குறித்த காலப்பகுதியில் பிரித்தானிய இராணுவ அட்மிரலாக இருந்த சார் பிரான்சிஸ் பீபோர்ட் என்பவர் புயலை வகைப்படுத்த ஓர் அளவு கோலை உருவாக்கியிருந்தார்.

உருவாக்கப்பட்ட அளவுகோலின்படி பூஜ்ஜியம் என்றால் எதுவுமே அசையாது. 5 என்றால் மிதமான தென்றல் காற்று. 8 என்றால் ஓரளவு புயல் காற்று (எச்டூஞு), மரக்கிளை களுக்கு பாதிப்பு ஏற்படாலாம், 10 என்றால் புயல் காற்று (குtணூணிட்).

11 தொடங்கி 17 வரையிலான வேகத்தில் வீசும் காற்றுகள் வெப்பமண்டலப் புயல்களாகவும் இவை அனைத்துமே மணிக்கு 74 கிலோமீட்டர்  வேகத்துக்கு அதிகமாக காற்று வீசுபவையாகவும் கணிக்கப்படுகின்றன.

அதேநேரம் புயல் என்பது உலக நாடுகளில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. அமெரிக்காவில் Tornado (சுழன்றடிக்கும் சூறாவளி), ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில்  Willy Willy என்றும், மேற்கிந்திய தீவுகளில் ததணூணூடிஞிச்ணஞு (சூறாவளி) என்றும், அதேவேளை, சீனக் கடற்பிராந்தியங்களில் கூதூணீணிணிண  (சூறாவளிப் புயல்), இந்தியப் பெருங்கடல் பகுதியில் Cyclone (புயல்) எனப்படுகிறது. இவை அனைத்தும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும் அதன் பொருள் ஒன்றுதான்.

சூறாவளிக்கு பெயர் சூட்டுதல்

வானிலை ஆய்வாளர்களும், கடற்றொழிலாளர்களும், பொதுமக்களும் வானிலை முன்னறிவிப்புகளைத் தெளிவாக புரிந்துகொண்டு செயற்படுவதற்கும் நினைவில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே  சூறாவளிகளுக்கு பெயர் வைக்கப்படுகின்றது. இவ்வாறு பெயர் வைப்பதால், புயலால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து ஓரளவேனும் தப்பிக்க வாய்ப்புகள் உள்ளன.

ஒரே கடற்பிராந்தியத்தில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே  மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் நகர்கின்றது என்பதை உடனடியாக அறிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவே இவ்வாறு புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் வந்துள்ளது.

புயலுக்கு இலக்கங்கள் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை  இதன்மூலம் தவிர்த்துக்கொள்ளமுடியும். எனினும், இவ்வாறு பெயர்கள் வழங்கப்படும்போது அப்பெயர்கள் சுருக்கமாக இருக்கவேண்டும் என்பதே அடிப்படையான விதி.

ஆஸ்திரிலேயாவின் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகளுக்கு அதிக நகைச்சுவை உணர்வு இருந்திருக்க வேண்டும். அதனால்தான் ஆரம்பத்தில் இவ்வாறு தோன்றும் புயல்களுக்கு மக்களிடத்தில் பிரபல்யம் இல்லாத அல்லது தோற்றுப்போன அரசியல்வாதிகளின் பெயர்களை சூட்டி மகிழ்ந்தனர்.

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில்   குறிப்பாக, 1939 ஆண்டு தொடக்கம் 1945 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கம் வானிலை ஆய்வாளர்களிடம் காணப்பட்டது.

பின்னர் இந்த வழக்கத்தை அமெரிக்காவும் கடைப்பிடிக்க ஆரம்பித்தது. குறிப்பாக, 1953ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரும் அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்கு பெண்களின் பெயர்களை வைப்பது ஆணாதிக்கத்தைக் காட்டுவதாகச் சுட்டிக்காட்டிய பெண்ணியவாதிகளால் புயல்களுக்குப் பெண்களின் பெயர்கள் வைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இது நீண்ட விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு பின்னர் 1978ஆம்  ஆண்டுமுதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர்வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுடில்லியிலுள்ள உலக வானிலை அமைப்பின் வானிலை ஆய்வு மையம் 2004ஆம் ஆண்டு செப்டெம்பரிலிருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்குப் பின்னர் 2004ஆம் ஆண்டு இலங்கையும் புயல்களுக்குப் பெயர் சூட்டும் நடைமுறையை உள்வாங்கிக்கொண்டது. அதே ஆண்டில் வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடற்பிராந்தியங்களில் உருவாகும் புயல்களுக்கும் பெயர் வைக்க ஆரம்பித்தனர்.

காலப்போக்கில் புயல்களுக்குப் பெயர் வைப்பதற்காக வடஇந்திய சமுத்திரத்தில் அமைந்துள்ள இலங்கை, இந்தியா, மாலைதீவு, ஓமான், பாகிஸ்தான், பங்களாதேஷ், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் இணைந்து ஒரு கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டன.

குறித்த 8 நாடுகளும் இணைந்து தாங்கள் விரும்பும் பெயர்களைப் பரிந்துரைத்து ஒரு பட்டியல் உருவாக்கப்படும். இதில் ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு பெயர் அடுத்தடுத்து சுழற்ச்சி முறையில் சூட்டப்படுகிறது.

குறித்த நாடுகள் கொடுத்துள்ள 64 பெயர்களில் 24 பெயர்கள் இதுவரை உருவான புயல்களுக்கு சூட்டப்பட்டுள்ளன. 1990 ஆண்டுக்குப் பிறகு வடஇந்திய பெருங்கடலில் உருவாகிய முதல் சூறாவளிக்கு பாகிஸ்தான் "லைலா' எனவும், அதே ஆண்டு நவம்பர் மாதம் உருவாகியிருந்த சூறாவளிக்கு "ஜல்' என இந்தியாவால் பெயர் சூட்டப்பட்டிருந்தது.  குறித்த சூறாவளியால் இலங்கையில் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை என்றபோதிலும், இந்தியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறிருக்க, தற்போது இலங்கை, இந்திய நாடுகளை மிரட்டிவிட்டுச் சென்ற புயலுக்கு  "ஓகி' என்று பங்களாதேஷ் பெயர் சூட்டியிருந்தது. இதற்கு தாய்லாந்து மொழியில் கடல் நட்சத்திரம் என்பது பொருள். ஒவ்வொரு நாடுகளும் புயலுக்குப் பெயர் சூட்டும் மரபின்படி அண்மையில் ஏற்பட்டிருந்த புயலுக்கு பங்களாதேஷûம் "ஓகி' என்று பெயர் வைத்திருந்தது.

வங்காள விரிகுடாவில் சமீபத்தில் உருவான புயல்களுக்கு  பைலின், ஹெலன், லெஹர்.என பெயரிடப்பட்டன. அடுத்து வரவிருப்பது "மடி' புயல். இந்தப் பெயர்களுக்குப் பின்னால் பல்வேறு அர்த்தங்கள் காணப்படுகின்றன.

பைலின் என்றால் நீலக்கல், ஹெலன் என்றால் பிரகாச ஒளி, லெஹர் என்றால் அலை இப்படி எல்லா நாசகாரி புயல்களுக்குப் பின்னாலும் ஒவ்வொரு   நாமங்கள் இடப்பட்டுள்ளன.

பா.நிரோஸ்

தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிதலைவர் வீரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி மைத்திரிபா சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சி அணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வீரகுமார திஸாநாயக்க எம்.பி.யினால் தான் மைத்திரி அணியில் இணைந்து போட்டியிட வேண்டியதற்கான 8 காரணங்கள் அடங்கிய அறிக்கையொன்று வெளியிடப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Published in உள்நாடு

இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கை அணியின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் ஒன்பது பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டீ20 போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக ஒருநாள் போட்டியில் கலந்து கொள்ள குறித்த 9 வீரர்களும் நேற்று இரவு இந்தியாவிற்கு செல்ல இருந்த நிலையில், விளையாட்டுத் துறை அமைச்சின் அனுமதியின்றியே செல்ல முற்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

இதன் காரணத்தால் பட்டியலில் இல்லாத வீரர்கள் 9 பேர் இவ்வாறு மீள அழைத்துள்ளனர்.

எதிர்வரும் 12ம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன.

இதனால் சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், தனியார் வகுப்புக்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் நாளை நள்ளிரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தடைவிதிக்கப்பட்ட காலப்பகுதியினுள் மாதிரி வினாக்களை அச்சடித்தல், கலந்துரையாடுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Published in உள்நாடு

மாத்தறை தெவிநுவர பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மின்னல் தாக்கி நேற்று உயிரிழந்துள்ளார்.

தெவிநுவர மீனவ துறைமுகத்தில் இருந்து படகு மூலம் கடற்தொழிலுக்காக சென்ற 68 வயதுடையவரே இவ்வாறு மின்னல் தாக்கியத்தில் உயிரிழந்துள்ளார்.

படகில் அவருடன் ஒருவர் சென்றிருந்த போதிலும் அவருக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நிலவியுள்ள காலநிலை மாற்றத்தை தொடர்ந்து கடற்தொழிலில் ஈடுப்படுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு காலநிலை அவதான நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Published in உள்நாடு

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top