தகர்க்கப்படும் நான்காம் தூண்

தகர்க்கப்படும் நான்காம் தூண்

"ஊடகத்துறை உங்களைக் கொன்றுவிடும்.எனினும், நீங்கள் உயிரோடு இருக்கும்போது அதை நீங்கள் உயிரோடு வைத்திருப்பீர்கள்'' என்கின்றார் நியூயோர்க் ட்ரிபியுன் பத்திரிகையின் ஸ்தாபகரும் ஆசிரியருமான ஹொரஸ் கிரீலி (ஏணிணூச்ஞிஞு எணூஞுஞுடூஞுதூ). நூற்றாண்டைக் கடந்துவிட்ட இந்த வாசகத்தில் எவ்வளவு பெரிய உண்மை புதைந்து கிடக்கின்றது.

ஊடகவியலாளன் ஒருவனின் வாழ்க்கையின் சாராம்சத்தை கனகச்சிதமாக சொல்லியிருக்கின்றார் கிரீலி. உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அதனை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் செயலே ஊடகப்பணி. எவரும் செல்வதற்கு நினைத்துக்கூட பார்க்காத பகுதிகளில்கூட ஊடுருவி உண்மையை உலகத்திற்கு அறிவிக்கும் பணியை ஊடகவியலாளர்கள் ஆற்றுகின்றார்கள். தகவல் பரிமாற்றத்தில் ஊடகங்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
உலகின் பல்வேறு அரசியல் மற்றும் ஆட்சி மாற்றங்கள், புரட்சிகள், போராட்டங்கள், ஏன் அமைதியின்போதும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊடகங்களின் பங்கு அளவிடமுடியாதது.

எனினும், அந்த அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்குக் கிடைக்கும் வரவேற்பு மிகப்பெரியதாக இருக்கும் என்பதில் எவ்வளவு உண்மை இருக்கின்றதோ அதே அளவுக்கு அதற்கு நேர் எதிரான பாதிப்பும், பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஒரு ஊடகவியலாளனுக்குக் காணப்படுகின்றது. உண்மையை உலகறியச் செய்வதால் மக்கள் நன்மையடையும் அதேவேளை, ஓர் ஊடகவியலாளன் அதிகளவு வர்க்கத்தின் நேரடி எதிரியாகின்றான்.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் நேற்று முன்தினம் (நவம்பர் 2) நினைவுகூரப்பட்டது.

கடந்த 2014ஆம் ஆண்டு இந்தத் தினம் உலகளாவிய ரீதியில் முதற்தடவையாக அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது கூட்டத் தொடரின்போது ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் பிரகடனம் செய்யப்பட்டது. 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் திகதி மாலியில் பிரான்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு இந்தத் தினம் பிரகடனம் செய்யப்பட்டது. கடந்த 11 வருடங்களில் மாத்திரம் 900 ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 2) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தக் கொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய தரப்பினரில் ஒருசிலருக்கு மாத்திரமே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இத்தகைய நிலைமையின்கீழ், ஊடகவியலாளர்கள் தைரியம் இழக்கும் அதேவேளை, ஊடகப்பணியும் பாதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மக்களுக்கு உண்மையைச் சொல்ல தன் உயிரையும் துச்சமென மதித்து செயற்படும் ஊடகவியலாளர்களின் வாழ்க்கை பாதுகாப்பு அச்சுறுத்தலுடனேயே நகர்கின்றது.

உலகின் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலான நாடாக ஈராக் தொடர்ந்து பல வருடங்களாக முதலிடத்தில் காணப்படுகின்றது. அந்த நாட்டில் இதுவரை 309 ஊடகவியலாளர்கள் தமது பணியின்போது படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, இரண்டாம் இடத்திலிருக்கும் பிலிப்பைன்ஸில் 146 ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்கள். மூன்றாம் இடத்திலிருக்கும் மெக்சிக்கோகோவில் 120 ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்தடுத்த இடங்களைப் பாகிஸ்தான், ரஷ்யா, அல்ஜீரியா, இந்தியா, சோமாலியா, சிரியா, பிரேஸில் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. இத்தனை படுகொலைகளுக்கும் பாதிக்குக்கூட இதுவரை நீதி நிலைநாட்டப்படாத நிலையில், இந்த வருடமும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லையே என பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. இலங்கையில் கடந்த 1990ஆம் ஆண்டுமுதல் 2009ஆம் ஆண்டுவரை 41 ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்கள். தமிழர்கள் 35 பேர், முஸ்லிம் ஐவர், சிங்களவர்கள் இருவர். ஆட்சியாளர்களின் அட்டூழியங்களை மக்களுக்கு வெளிப்படுத்தியமையே இவர்கள் படுகொலைசெய்யப்பட்டமைக்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது.
மயில்வாகனம் நிமலராஜனில் ஆரம்பித்த படுகொலைகளின் பட்டியல் மிக நீளமானது. லசந்த விக்ரமதுங்க, நடேசன், பிரகீத் எக்னெலிகொட (காணாமற் போயுள்ளார்) என மொழி, சமயம், இனம் பாராது படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன. முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலமான 2005 முதல் 2015 வரை 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் இலங்கையில் பெரும் அச்சுறுத்தலான காலப்பகுதியாகவே அது பார்க்கப்படுகின்றது. இந்தக் காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டமை மாத்திரமன்றி, 20 ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்குள்ளானதோடு, 5 ஊடக நிறுவனங்கள் தாக்குதலுக்கு இலக்காகின.

உண்மையில் உலகில் எந்தவொரு நாட்டிலும் 100 வீதம் ஊடக சுதந்திரம் என்பதை எதிர்பார்க்கமுடியாது. ஊடகவியலாளர்கள் ஏதோ ஒருவகையில் தமது கடமையை நிறைவேற்றத் தடைகளை எதிர்நோக்குகின்றார். ஒவ்வொரு ஊடக நிறுவனமும் ஏதோ ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமையவே செயற்படுகின்றன. எனினும், ஒரு சில ஊடக நிறுவனங்கள் ஊடகவியலாளர்கள் சுயாதீனமாக இயங்குவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. எனினும், அதிலும் ஓர் அரசியல் கலந்திருப்பதை அவதானிக்கமுடிகின்றது.

இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவருவதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் காமினி வியன்கொட தெரிவிக்கின்றார். கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் இதற்குச் சிறந்த உதாரணம், என்றாலும் அது தொடர்பில் விசாரணைகள் சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டதா என்பதே ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் எழுப்பும் கேள்வி.

இலங்கையில் மாத்திரமல்ல, சர்வதேச ரீதியாக பல ஊடகவியலாளர்களின் படுகொலைகள், தாக்குதல்களின் பின்னால் அதிகாரத்தில் இருந்த இருக்கின்ற அரசாங்கங்களும், மிகப்பெரிய அமைப்புகளும், நிறுவனங்களும் இருக்கின்றன. ஆகவே, அவர்களுக்கு எதிராக அல்லது அவர்களின் சட்டவிரோதச் செயற்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதால் பாதிக்கப்படும் ஊடகவிலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. என்றாலும் ஒருசில சம்பவங்களுக்கு நியாயம் கிடைத்திருப்பதை மறுப்பதற்கில்லை.

ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் மோசமடைந்துவரும் ஊடகவியலாளர்கள் படுகொலை மற்றும் தாக்குதல் நிலைமை தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டுமென்ற கோரிக்கைகள் வலுப்பெறுகின்ற நிலையில், இலங்கையில் சுதந்திர ஊடக இயக்கம் என்பது ஊடக சுதந்திரத்திற்காகப் போராடுகின்ற ஒரு முக்கியமான அமைப்பாகக் காணப்படுகின்றது. உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம், ஊடகத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் நாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான படுகொலைகள், தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றன. லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரணைகளில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டாலும் ஏனைய ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை நிலைநாட்ட இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

எவ்வாறெனினும் மக்களுக்கு நடுநிலையாக நின்று உண்மையை மட்டுமே அறிக்கையிடவேண்டுமென்ற நோக்கத்துடன் செயற்படும் ஊடகவியலாளர்களுக்கு எதிரிகள் உருவாவது என்பது இயல்பே. எனினும், அவர்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் அநியாயங்கள், உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். அன்றேல் நான்கு தூண்களில் ஒன்றை இழந்து, ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆக்கம்; ச.பார்தீபன் 

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top