யாரிடம் சொல்லி அழ?

யாரிடம் சொல்லி அழ?

இலங்கையில் புதிய அரசமைப்பொன்றை உருவாக்க இடம்பெற்றுவரும் முயற்சிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன. நாடாளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நடைபெற்ற நான்கு நாட்கள் விவாதம் மூலம் புதிய அரசமைப் பொன்றை உருவாக்கும் செயற்பாடு குறித்து நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன என்பது தெட்டத் தெளிவாகியுள்ளது. 

புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு எந்தவொரு கட்சியும் இதயசுத்தியுடன் நேர்கோட்டில் பயணித்து தீர்வுகாண விருப்பமில்லை என்பதையே இந்த நான்கு நாட்கள் விவாதத்தின் ஊடாக தமிழ் மக்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய ஒரு கசப்பான உண்மையாகவுள்ளது.

அதிகாரப் பகிர்வுக்குத் தயாரில்லை
தந்தை செல்வநாயகம் கூறியது போன்று ""தமிழர்களின் எதிர்காலம் கடவுளின் கையில்தான் உள்ளது'' என்ற விடயம் இதன்மூலம் நிதர்சனமாகியுள்ளது. எவ்வளவோ விட்டுக்கொடுப்புகளுக்கு மத்தியில் பல படிகள் கீழிறங்கி ஒரு பொது இணக்கப்பாட்டுடன் தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண தமிழ்த் தலைமைகள் தயாராகவிருந்தும் தெற்கில் உள்ள அரசியல்வாதிகளின் பேரினவாத நிகழ்ச்சி நிரல் காரணமாக நியாயபூர்வமான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு தயாரில்லை என்பதை அச்சொட்டாகப் புடம்போட்டுக் காட்டியுள்ளனர்.

இந்த நான்குநாள் விவாதத்தில் பழைய கறைபடிந்த வரலாற்றை ஆக்ரோஷமாக எடுத்துக்காட்டியவர்கள் எதிர்கால சந்ததியினர், இந்த நாட்டில் சகோதரத்துவத்துடன், வாழ்வதற்கான முன்மொழிவுகளையும் சிபாரிசுகளையும் சுட்டிக்காட்டத் தவறிவிட்டனர்.

தமிழர்கள் தரப்பில் 1956ஆம் ஆண்டு மொழிப்பிரச்சினை ஆரம்பமாகியது முதல் 2009 யுத்தம் நிறைவடையும்வரை ஏற்பட்ட அரசியல் தோல்விகள் குறித்தும், யுத்தத்திற்குப் பின்னர் அரசு முன்னெடுக்கவேண்டிய நல்லிணக்க முயற்சிகள் தோல்விகண்டமை குறித்தும் தீர்க்கமாக எடுத்துரைக்கப்பட்டிருந்தன. ஆனால், ஆளும் தரப்பும், எதிர்த்தரப்பும் தமது தரப்பு நியாயங்களையும், ஐ.தே.க. தீர்வைக் கொண்டுவரும்போது சு.க. எதிர்த்ததையும், சு.க தீர்வைக் கொண்டுவரும்போது ஐ.தே.க. எதிர்த்ததையும் கூறி இரு தரப்புகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டனவே தவிர, அரசமைப்பில் முன்வைக்கப்படவேண்டிய தீர்வு குறித்து எவரும் வாய்திறக்கவில்லை.

புதிய அரசமைப்பு பற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களின் பெரும்பான்மையான நிலைப்பாடு நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்வதுடன், பௌத்த மதத்திற்கான முன்னுரிமை அவ்வாறே தொடரவேண்டும் என்பதுடன், ஒற்றையாட்சி பத வரைவிலக்கணத்தில் ஒரு சொல்லைக்கூட மாற்றமுடியாதெனக் கூறியுள்ளனர்.

சமஷ்டிக்குப் பதில்
சுகந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களின் கருத்து, புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை, இருக்கும் அரசமைப்பை மறுசீரமைப்புச் செய்தாலே போதும் என்பதே. தற்போதைய அரசமைப்பின் ஒன்பதாவது உறுப்புரிமையில், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பதுடன், பௌத்த மதத்தைப் பேணி வளர்த்தல் அரசின் பிரதான கடமையாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், 10ஆம் 14ஆம் உறுப்புரைகள் ஏனைய மதங்களுக்கான காப்புறுதியை வழங்குகின்றன.

பௌத்த மதத்திற்கான முன்னுரிமையைக் கொடுப்பதுடன், ஒற்றையாட்சியைத் தொடர்ந்தும் கூடிய பாதுகாப்புடன் பேணுவதே சுதந்திரக் கட்சியின் தலையாய கடமை என்பதை ஆணித்தனமாக எடுத்துரைத்துள்ளது. ஒற்றையாட்சிக் கட்டமைப்பில் ஒருபோதும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக்காண முடியாது எனத் தமிழ்த் தலைமைகள் தெளிவாக சுதந்திரக் கட்சியின் முன்னே வலியுறுத்தும்போதே அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஒருபோதும் இணங்கமுடியாதென திட்டவட்டமாக நிராகரித்தனர்.

புதிய அரசமைப்பு குறித்து அனைத்துக் கட்சிகளும் தமது நிலைப்பாட்டை அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலை யில், ஐக்கிய தேசிய கட்சி எதுவித யோசனை களையும் முன்வைக்கவில்லை. தமிழர்களை ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தள்ளியதிலும், தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கத் தூண்டியதிலும் பெரும்பாலான பங்கு ஐ. தே.கவையே சாரும். மலையகத் தமிழர்களை அந்நியர்களாக அடையாளப்படுத்தியதில் ஆரம்பித்த ஐ.தே.கவின் இனவாத அரசியல், 2004ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வரும்வரை தொடர்ந்திருந்ததை எவரும் மறுக்கமுடியாது.

ஐ.தே.கவின் வரலாற்றுத் தவறு
2000ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரத்துங்கவால் கொண்டுவரப் பட்டிருந்த கூட்டாட்சித் தீர்வுத்திட்டத்தை நாடாளுமன்றில் தீயிட்டுக் கொளுத்திய கருமை படிந்த வரலாறுகளை தமிழ் மக்கள் இன்னும் மறக்கவில்லையாயினும், தற்போது ஐ.தே.கவுடன் கைகோத்து தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆதரவும் கொடுத்து வருகின்றனர். வரலாற்றை மாற்றியமைப்பற்கான சந்தர்ப்பமே தற்போது சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கிட்டியுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உரையில், ""புதிய அரசமைப்பை ஏன் கூட்டு எதிரணி எதிர்க்கிறது? உங்களின் அனைத்துக் கோரிக்கைக்கும் நாங்கள் இணங்குகின்றோம். இப்போதாவது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்போம்'' என்றார். இதில் தெளிவாக விளங்கும் விடயம்தான் தேசிய இனப்பிரச்சினைக்கு இதயசுத்தியுடனான தீர்வொன்றைக் காண்பதற்கு அவர் தயாரில்லையென்பது.

தமிழர்களின் வரலாற்றில் மன்னிக்க முடியாத தவறுகளைச் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வரும்போது எத்தகைய கொள்கைகளுடன் முன்னோக்கி வரவேண்டும், மாறாக கூட்டு எதிரணியின் நிலைப்பாடு இதுதான் என்றால், நாங்களும் அதற்கு இணங்குகின்றோம் என்கிறார் பிரதமர். அனுபவமிக்க அரசியல் ஆளுமையின் முற்போக்குவாதக் கருத்துகள் இவ்வாறுதான் இருக்கவேண்டுமா?

தலைமைகளின் பொய்
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த போது 1987ஆம் ஆண்டு இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுடன் கொண்டுவரப்பட்டிருந்த 13ஆவது திருத்தச்சட் டத்திற்கு அப்பால் சென்று தீர்வொன்றை வழங்குவதாகக் கூறியிருந்தார். ஆனால், இன்று 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்லமுடியாதெனக் கூறுகின்றார்.

இவர்தான் அன்று 13ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டுவரும்போது நாட்டைப் பிளவுபடுத்தப் போகின்றனர் எனக் கோட்டையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தார். ஆனால், மாகாணசபை முறையால்தான் இலங்கை ஒற்றையாட்சி கட்டமைப்பில் பிரித்தானியாவை விடவும் வலுவானதாகக் காணப்படுகிறது. 1987ஆம் ஆண்டு 13ஆவது திருத்தச்சட்டம் வடக்கு,கிழக்கில் முறையாக அமுல்படுத்தப்பட்டிருக்குமாயின் இலங்கையின் நிலை இன்று சர்வதேச அரங்கில் வேறுவிதமாக இருந்திருக்கக்கூடும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது ஒரு கருத்தையும் அதிகாரம் இல்லாதபோது அரசியல் சுயலாபங்களுக்காக இன்னொரு கருத்தையும் பெரும்பான்மை அரசியல்வாதிகள் காலங்காலமாகத் தெரிவித்து வருகின்றமையாலேயே
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது எட்டாக்கனியாகவுள்ளது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்திருந்த மக்கள் விடுதலை முன்னணி, அதிகாரப் பகிர்வின் மூலம் நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது. பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்தும்போதுதான் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமெனக் கூறியிருந்ததுடன், நாடு பிளவுபடும் ஏற்பாடுகளைத் தவிர ஏனைய அனைத்து விடயங்களையும் பேசித் தீர்த்துக்கொள்ளலாமென வலியுறுத்தியது.

எதிரணியின் நிலைப்பாடு
அதிகாரப் பகிர்வு குறித்து எதிரணியைத் தவிர ஏனைய கட்சிகளின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளபோதிலும், தமிழ்த் தலைமைகளின் பிரதான கோரிக்கைகளான வடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி ஆட்சிமுறையை அனைத்துக் கட்சிகளும் முற்றாக நிராகரித்துள்ளன.

வடக்கு, கிழக்கை இணைக்க சிங்கள தலைமைகளைப் போன்று முஸ்லிம் தலைமைகளும் ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டோமெனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டன. வடக்கு, கிழக்கு இணைப்பு, இணைந்த வடக்கு,கிழக்கில் சமஷ்டி ஆட்சிமுறை, உச்சக் கட்ட அதிகாரப் பகிர்வு, காணி, பொலிஸ், சட்டமியற்றல் மற்றும் மாகாண உயர் நீதிமன்ற மொன்றை ஸ்தாபித்தல் இவைதான் கூட்டமைப்பின் பிரதான கோரிக்கைகள்.
ஆனால், இவை எவற்றிலும் முழுமையான தீர்வைக்காண அரச தரப்புக்கு விருப்பமில்லை. அத்துடன், சமஷ்டி, வடக்கு,கிழக்கு இணைப்புக் கோரிக்கைள் முற்றாக நிராகரிக்கப்பட்டுமுள்ளன. எந்தவொரு கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத சூழலில் எவ்வாறு புதிய அரசமைப்பைக் கொண்டுவர முடியும்? காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாட்டையும் அரசியல் கபட நாடகத்தையுமே அரசு முன்னெடுத்து வருகின்றதென எழுப்பப்படும் கேள்விகள் நியாயமானதே.

எதற்கு நடந்தது விவாதம்?
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்காகவா இந்த விவாதம் இடம்பெற்றதென நான்கு நாட்கள் விவாதம் முடிவில் சந்தேகம் எழுந்துள்ளது. கறைபடிந்த வரலாற்றைப் பேசியவர்கள் அரசியல் தீர்வு குறித்த எந்த யோசனைகளையும் முன்மொழியவில்லை என்பதுடன், தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்வதற்கும் தயாராக இல்லை.

தமிழர் தரப்பில் நல்லிணக்கத்திற்கும் சமாதானத்திற்குமான பல ஆணித்தனமான கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டிருந்தன. இவ்வாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பல தடவைகள் பெரும்பான்மை சமூகத்துடனான அதிகாரப் பகிர்வில் நாங்கள் தோல்விகண்டிருந்தாலும், இதனை இறுதிச் சந்தர்ப்பமாகப் பார்க்கின்றோம்; அதனால் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அனைவரும் ஒரு பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் எனக் கூறியிருந்தார்.

இவ்வாறுதான் அனைத்து தமிழ் உறுப்பினர்களும் அதிகாரப் பகிர்வுக்கு பூரண ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்திருந்த போதிலும், விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் மாத்திரமே அதிகாரப் பகிர்வு குறித்து நடுநிலைத் தன்மையான கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.

புதிய அரசமைப்புப் பணிகள் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர்தான் ஆரம்பிக்கப்படுமென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இடைக்கால அறிக்கை இறுதிப்படுத்தப்பட்ட அரசமைப்பு போன்று தெற்கில் அடிப்படைவாதிகள் புடம் போட்டுக் காட்டி வருகின்றனர்.

அபிவிருத்தியும் தேசியப் பிரச்சினையும்
காலங்காலமாக இவ்வாறு தீர்வுகாண உருவாகியிருந்த சந்தர்ப்பங்களை சீர்குலைத்து வந்தமையாலேயே அபிவிருத்தி என்பது எமக்கு எட்டாக்கனியாக வெகுதூரத்தில் உள்ளது. இந்த நாட்டில் நிலையான அபிவிருத்திஎட்டப்பட வேண்டுமென்றால் முதலில் செய்யவேண்டிய விடயம், தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்படவேண்டியதே என அமைச்சர் மனோகணேசன் தெளிவுபடுத்தியிருந்த கூற்றே நிதர்சனம்.

அபிவிருத்திக்குப் பின்னடைவாக அமைந்தது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாதுபோனமைதான் என்பதை தெற்கின் அரசியல் தலைமைகளால் இன்னமும் புரிந்துகொள்ளமுடியாதுபோயுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. தனிச் சிங்களச் சட்டத்தால் 1956ஆம் ஆண்டு மொழிப் பிரச்சினை ஆரம்பமானது முதல் காலத்துக்குக்காலம் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களால் ஏற்பட்ட வன்முறைகளும், கலவரங்களும், அரசியல் ஸ்திரத்தன்மையின்மையுமே அபிவிருத்திக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவருகின்றன.

இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் காணப்பட்ட சுதேச பொருளாதார முறையால் உள்நாட்டு உற்பத்தி நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்யக்கூடியதாக இருந்தது. இலங்கை அரசியல்வாதிகள் இன்றும் பேசும் விடயம்தான் 1970ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மறைந்த சிங்கப்பூரின் தந்தை லீக் யுவான், "இலங்கையைப்போன்று சிங்கப்பூரை மாற்றியமைப்பேன்'' எனக் கூறியிருந்த கருத்து.
ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்து அபிவிருத்தியில் முன்னோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கையின் நிலைமை 1970ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் படுமோசமான கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியது. அபிவிருத்தியும், தேசிய பிரச்சினையும் இலங்கையில் ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளமையே இதற்கான காரணம்.

இலங்கையர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
தற்போதைய அரசின் பெரும்பாலான உறுப்பினர்கள் இதனை ஏற்றுக்கொண்டுள்ளதாலேயே அதிகாரப் பகிர்வு விடயத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர். இருந்தாலும், இதய சுத்தியுடனான தீர்வை முன்மொழிவதற்கு அரசு முன்வராவிடின் உண்மையில் அமைச்சர் மனோகணேசன் கூறியுள்ளதைப் போன்று இலங்கையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

ஆளும் தலைமைகளால் இலங்கை பல்லின, பல்மத கலாசாரத்தைக்கொண்ட நாடு என ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. சர்வதேச தலையீடுகளும் அழுத்தங்களும் இலங்கையில் தொடர்ந்து நிலைகொள்ளக் காரணமும் இதுவே. இலங்கையை பல்லின சமூகம் வாழும் நாடாகவும், மதச்சார்பற்ற நாடாகவும் பிரகடனப்படுத்தும் போதே "இலங்கையர்கள்' என்ற நாமத்தை அனைவரும் உணர்வுடன் சுமந்துகொண்டு பயணிக்க முடியும். பௌத்த மதத்திற்கு முன்னுரிமை, ஒற்றையாட்சியெனத் தொடர்ந்து இனவாதப் போக்கைக் கைவிட மறுப்பதானது, வரலாற்றுத்தவறாகவே மாறும்.

புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண எதிரெதிர் திசையில் பயணித்த இரண்டு தேசியக் கட்சிகளும் ஓரணியில் இணைந்துள்ள நிலையில், இன்னமும் ஒரு பொதுவான இணக்கப்பாட்டுக்கு வராது வெவ்வேறு கருத்துகளைக் கூறிவருகின்றமை மேலும் காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடே. இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை தமிழ்த் தலைமைகள் புரிந்துகொண்டு செயற்படுகின்ற போதிலும், பெரும்பான்மைத் தலைமைகள் எள்ளளவும் புரிந்துகொள்ளவில்லை. இதன் காரணமாகவே வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை குறித்து நான்கு நாட்கள் அரசமைப்பு நிர்ணய சபையில் விவாதம் நடைபெறும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் உறுதியான கருத்துகளை எவரும் முன்மொழியவில்லை.

ஆக்கம்; சு.நிஷாந்தன்

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top