சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையும் அரசியல் பித்தலாட்டமும்

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையும் அரசியல் பித்தலாட்டமும்

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சிசபை தொடர்பிலான பரவலான வாதங்கள் இப்போது கிழக்கில் எழுந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாய்ந்தமருது மக்கள் பிரதேசம் தழுவிய போராட்டத்த்தினை மேற்கொண்டனர். பாடசாலைகள் மூடப்பட்டு, பொது ஸ்தலங்கள் மற்றும் வியாபார இடங்கள் என்பன மூடப்பட்டு, பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். சாத்வீகமாக நடைபெற்ற இப்போராட்டத்தின் மூலம் அவர்கள் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தினை எப்படியாவது பெற்றுக்கொள்ள முடியும் எனும் அதிகபட்ச நம்பிக்கையுடன் இவர்கள் செயற்படுகின்றார்கள்.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சிசபை பற்றிய பேச்சுக்கள் சுமார் 30 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டவை. இந்தக்கோசமானது அவ்வப்போது எழுவதும் பின்னர் காலவோட்டத்தில் அது காணாமல்போவதும் வாடிக்கையாக இருந்தது. 1995ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஸ்ரப்பிடம்; அப்போதைய தேர்தலில் சாய்ந்தமருது மக்களின் வாக்குகளை பெறவேண்டுமாயின் சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபையை பெற்றுத்தர வேண்டும் அல்லது பிரதேச செயலகத்தினை பெற்றுத்தரவேண்டும் என்ற கோரிக்கையை பள்ளிவாசல் நிருவாக த்தினர் மற்றும் புத்திஜீவிகள் முன்வைத்தனர். சிலர் பிரதேசசபை இன்னும் சிலர் பிரதேச செயலகமென்றும் வேண்டும் எனப் பிடிவாதமாக நின்றனர்.

அரச கருமங்களை நிறைவேற்றுவதற்கு பிரதேச செயலகத்தின் முக்கியத்துவம் அங்கு பெரிதாக பேசப்பட்டது. வயோதிபர்கள் தமது ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ளவும், பெண்கள் தமது தேவைகளை இலகுவாக முடித்துக்கொள்ளவும் பிரதேச செயலகமே கட்டாயம் என பெரும்பாலானாவர்கள் அங்கு கருத்து தெரிவித்தார்கள். எனவே தலைவர் அஸ்ரப், அன்றைய தினம் தீர்க்கமான ஒரு முடிவினை எடுத்தார் அதுதான் பிரதேச செயலகத்தை சாய்ந்தமருத்துக்கு பெற்றுக்கொடுத்தல் ஆனால் பிரதேசசபை கிடையாது எனும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அப்போது அந்தப்பிரச்சினை நிறைவுக்கு வந்தது. தலைவர் அஸ்ரப் சொன்னது போலவே சாய்ந்தமருதுக்கான பிரதேச செயலகம் வழங்கப்பட்டது.

இதன்பிறகு சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேசசபைக்கான குரல் அடங்கிப் போனது. ஆனால், மீண்டும் கடந்த கல்முனை மாநகர சபைத்தேர்தலில் இந்த விடயத்தை மூலதனப்படுத்தியவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப். அதுவரைக்கும் அடங்கிக்கிடந்த தனியான பிரதேசசபைக்கான தாகம் மீண்டும் கிளர்ந்து எழுந்தன. இருந்தும் அவை தேர்தல் முடிந்தவுடன் அடங்கிப்போய்விட்டன. மீண்டும் கடந்த நாடாளுமன்றத்தேர்தலின் போது சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் இது தொடர்பில் சாய்ந்தமருது மக்கள் தமது கோரிக்கையை முன்வைத்தனர். அமைச்சர் ஹக்கீமும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடம் இது தொடர்பில் பேசி அனுமதியையும் பெற்று அதனை தேர்தல் மேடையில் பிரதமர் ரணிலின் வாயாலேயே சொல்லவும் வைத்தார். இந்தநிகழ்வு வரை எல்லாம் சுபமாகவே நடைபெற்றன.

இந்தத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் தனித்து அம்பாறையில் போட்டியிட்டது. தனது தேர்தல் பிரசாரமாக சாய்ந்தமருத்துக்கான தனியான பிரதேசசபையினை பெற்றுத்தருவதாக உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபாவினை மேடையில் வைத்து சொல்லவைத்தார் அமைச்சர் ரிஷாட். இங்கிருந்துதான் பிரச்சினைக்கான அத்திபாரம் போடப்பட்டது. இந்த நாட்டின் அதிகாரமிக்க பிரதமரையும்மீறி அமைச்சர் பைசல் முஸ்தபா இவ்வாறு வாக்குறுதியளித்தது ஏன்? ஏற்கெனவே சொல்லப்பட்ட விடயத்தை மீண்டும் தாம் செய்து தருவதாக தமது அரசியலுக்கான மூலதனமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இதனை செய்தமை இங்கு

இதற்கிடையில் கல்முனை மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை சந்தித்துத் தமது நிலைப்பாட்டை முன்வைக்கின்றார்கள். அதாவது சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை கொடுப்பதில் எமக்கு எவ்வித கருத்துவேறுபாடும் கிடையாது ஆனால் முன்னர் இருந்தது போல நான்கு சபைகளாக கல்முனை மாநகர சபையானது பிரிக்கப்பட வேண்டும் என்று தமது முன்மொழிவினை முன்வைத்தார்கள்.

தூரசிந்தனையும், ஆழமான சமூகப்பார்வையும் கொண்ட அமைச்சர் ஹக்கீம் இந்த விடயத்தில் தீர்க்கதரிசனமாக சிலமுடிவுகளை எடுக்க வேண்டி இருந்தது. அது அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக கல்முனை மாநகர சபையின் வாழ்புல எல்லையில் முஸ்லிம், தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். கல்முனை மாநகர சபையினை நான்காக பிரித்து முஸ்லிம்களுக்கான மூன்று சபைகளும் தமிழர்களுக்கு ஒரு சபையும் என்கின்ற வகையில் பிரிப்பதற்கான முடிவினை புத்திஜீவிகள் குழுவினரின் ஆலோசனைகளைப் பெற்று செயற்படுத்துகின்ற ஆரம்பக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். இதற்கான உத்தரவாதத்தினை பிரதமர் ரணிலும் அமைச்சர் ஹக்கீமுக்கு வழங்கியிருந்தார்.

இங்கு சாய்ந்தமருதுக்கான தனியான சபையினை யாரும் எப்போதும் மறுதலிக்க வில்லை என்பதனை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நான்கு சபைகளை பிரிப்பதனால் அதற்கான நிர்வாக எல்லை வரையறை செய்யப்படவேண்டும் சபைகளின் தரங்கள் நிர்ணயம் செய்யப்படவேண்டும் எனும் நிர்வாக ரீதியான செயற்பாடுகளுக்கான நியாயபூர்வமான கால அவகாசமே இதுவரைக்கும் இந்தப்பிரச்சினைக்கு தீர்வு வாராமைக்கான உண்மையான காரணங்களாகும். அத்தோடு ஒரு மாநகர சபையினை இரண்டாகவோ அல்லது நான்காவோ பிரிப்பதில் உள்ள சட்டச்சிக்கல்கள் என்பனவும் இந்த தாமதங்களின் பின்னணியில் இருக்கலாம். இருந்தும் இவைமட்டுமே காலதாமதற்கு காரணமாக கொள்ளமுடியாது இதன் பின்னணியில் கண்ணுக்குத்தெரியாத அரசியல் ரீதியான சில தடைகளும் இப்போது அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

இந்த சபைபிரிப்பு தொடர்பில் அமைச்சர் றிசாதின் அறிக்கையானது சாய்ந்தமரு துக்கு மட்டுமே தனியான சபை வழங்க வேண்டுமென்பதாகும். அதாவது சாய்ந்தமருது தவிர்த்து ஏனைய கல்முனைக்குடி, மருதமுனை, நற்பிட்டிமுனை போன்ற முஸ்லிம் பிரதேசங்கள் எப்படிப்போனாலும் பரவாயில்லை ஆனால், சாய்ந்தமருதுக்கு சபை வழங்கவேண்டும் என்பதாகும். நாலு சபைகள் வழங்க முடியும் என்று இருக்கின்றபோது வெறும் இரண்டு சபைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனும் றிஷாத்தின் நிலைப்பாட்டில் சந்தேகம் எழுகின்றது.
அமைச்சர் பைசல் முஸ்தபா வேண்டுமென்றே இந்த விடயத்தை இழுத்தடிக்கின் றாரா? இதன் பின்னணியில் அமைச்சர் றிஸாத்தின் கரம் செயற்படுகின்றதா? எனும் நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன. காரணம் இவர்கள் இருவருமே தேர்தல் காலத்தில் இடையில் வந்து மூக்கை நுழைத்தவர்கள்.

சாய்ந்தமருது மக்களை தூண்டிவிடுவதில் சிராஸம் கல்முனைக்குடி மக்களை தூண்டிவிடுவதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கிய புள்ளியும் செயற்படுவதாகவும் கதைப்படுகிறது. அத்தோடு கலாநிதி ஜெமீல் இரண்டு தரப்பினையும் தூண்டிவிடுகின்ற செயற்பாட்டினை செய்யவதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீதான தனது முன்னைய பகையினை தீர்த்துக்கொள்ள முயற்சிப்பதாகவும் நம்பப்படுகின்றது. இதனைவிடவும் அமைச்சர் றிஸாத்தின் கட்சியானது நீதிமன்ற வழக்கில் சிக்கியுள்ளது. வழக்கு முடியும் வரைக்கும் மயில் சின்னத்தை தேர்தல்களில் அவர்களால் உபயோகிக்க முடியாது, எனவே சாய்ந்தமருது மக்களை பிரதேசவாதத்தின் மூலம் துண்டாடி தனது அணியை சுயேச்சையாக அங்கே களமிறக்குகின்ற முஸ்தீபுகளில் இறங்கியுள்ளதாகவும் அவரது கட்சிக்காரர்களே பேசிக்கொள்கிறார்கள்.

அமைச்சர் ரிஷாத் குழப்பிய குட்டையில், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் மீன்பிடிக்க முயற்சிக்கின்ற நிகழ்வும் இதற்குள் ஓடுகிறது. ஆக சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கைக்கு பிரதேசவாத அடையாளத்தை விதைத்து இப்போராட்டத்தின் திசையை மாற்றிய தீயசக்தியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸினை மக்கள் பார்க்கின்றனர். இவர்களின் இந்த அரசியல் ரீதியான காய்நகர்த்தலில் அபத்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினையும் அதன் தலைமையையும் இழுத்து தமது இயலாமையை நிறுவ முயற்சி செய்துள்ளமை இவற்றை ஆழமாக பார்க்கின்ற நடுநிலைவாதிகளுக்கு மிகத்தெளிவாகப்புரியும்.

இதுவரை காலம் பொறுமை காத்த சாய்ந்தமருது மக்களின் உள்ளங்களில் பிரதேசவாதத்தை சமயோசிதமாக விதைத்து சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வழங்குவதை லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கிறது எனும் மாயையை திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்டுள்ளது. இது அரசியல் ரீதியாக பலமில்லாததினால் குறிப்பிட்ட கட்சி சார்பானவர்களின் அம்பாறை மாவட்டத்தில் தமது சூழ்ச்சியின் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் மக்கள் சக்தியை மக்களிடமிருந்து பிரிக்கின்ற வேலையாகவே கருதமுடியும். சாய்ந்தமருது மக்கள் நூற்றுக்கு நூறு விகிதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள். எல்லாத் தேர்தல்களிலும் கட்சியின் வெற்றியில் முன்னின்று செயலாற்றிய உண்மையான ஆதரவாளர்கள். இவர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரித்தெடுக்க உபயோகிக்கப்படு கின்ற ஆயுதமாகவே இந்த விடயத்தை எதிரிக்கட்சிகள் கையாள்கின்றன. இந்த மாற்றுக் கட்சிக்காரர்களின் சதிவலையில் அப்பாவி சாய்ந்தமருது மக்கள் விழுந்துவிட்ட அவலம் இடம்பெற்றுள்ளது கவலைக்குரிய விடயமாகும்.

சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கை கட்டாயம் நிறைவேற்றப்பட வேண் டியதே ஆனால் அவர்களைச்சுற்றி பின்னப்பட்டுள்ள பெரும் சதிவலையிலிருந்து அவர்கள் வெளியேறவேண்டும் அதுமட்டுமல்ல அவர்களின் கோரிக்கைகளுக்கான அதேகோரிக்கைகளை அடுத்தவர்கள் முன்வைக்கும்போது அந்த நியாயங்கள் தொடர்பிலும் அவர்கள் சிந்திக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கின்ற முடிவுகள் சமயோசிதமானதாக இருக்காது என்பதனை அவர்கள் மனங்கொள்ள வேண்டும்.

சாய்ந்தமருது மக்கள் அவர்களது கோரிக்கைகளை வெற்றி கொள்ள வேண்டும். அதற்காக தம்மை பிரதேசவாதம் உள்ளவர்களாக காட்டமுனைவது அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பெரும்பான்மைக்கான அபாயகரமான சமிக்ஞையாகவே கருதவேண்டியுள்ளது. மிகவும் நூதனமான முறையில் பெறவேண்டிய பிரதேச சபையை, போராட்டங்கள் நடத்தி அந்தப்பிரதேசத்தின் அமைதித்தன்மையை சீர்கெடுத்து, தனிநாட்டுக்கோரிக்கைக்கு ஒப்பான செயற்பாடுகளினால் அரசை அடிபணிய வைக்க முனைவது அடிமுட்டாள் தனமான செயலாளாகும்.

தென்பகுதியின் பெரும்பான்மை அரசியல் சக்திகள் மற்றும் இனவாதக்கரங்கள் நம்மை கூர்ந்து அவதானித்துக் கொண்டிருக்கும் இந்தநேரத்தில் ஒருசிலரின் தூண்டுதல்களினால் இப்படி பிரதேசவாதத்தினை வெளிப்படையாக வெளிப்படுத்துவது எதிர்கால சாய்ந்தமருதின் வளர்ச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தலாம். அப்போது இன்று சுய அரசியல் இலாபத்திற்காக மக்களை தூண்டிவிட்ட அரசியல் கூலிகள் வரமாட்டார்கள் என்பதனையும் இவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தப்பிரச்சினையை வெற்றுணர்ச்சியின் அடிப்படையில் அணுகாமல், நீண்ட நெடுந்தூர சிந்தனையின் அடிப்படையிலேயே அணுகவேண்டும். மாறாக முகநூலின் மூலம் கோஷங்கள் எழுப்புவதானால் ஒன்றும் ஆகிவிடாது. எனவே சாய்ந்தமருது மக்கள் ஒன்றைப்புரிந்து செயற்படவேண்டும் அதுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூலமே இந்த சபைகள் பிரிப்புக்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.அவர்களுக்கே அதிகாரமும், அதனை பெற்றுக்கொடுக்கும் வியூகமும் தெரியும். மாற்று அரசியல் சக்திகள் மக்களை குழப்பி அதில் தம்மை அடையாளப்படுத்த முனைகின்ற வெறும் சடவாத சிந்தனையாளர்கள் மட்டுமே என்பதனை புரிந்து கொள்ளவேண்டும்.

ஆக்கம் - மதியுகன்

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top