மறுக்கப்படும் நீதியும் வெறுக்கப்படும் அரசும்

மறுக்கப்படும் நீதியும் வெறுக்கப்படும் அரசும்

"தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம், கைதிகளின் உயிர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அரசாங்கமே பொறுப்பு ,ஆட்சி மாற்றம் இதுவா?, சம்பந்தனின் பொறுமை எதுவரை'' இவைகள் இந்த நாட்களில் ஊடகங்களில் காணக்கூடிய தலைப்புச் செய்திகள்.

உண்ணாவிரதப் போராட்டம்
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமது வழக்கு விசாரணைகளை வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவருக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்க் கூட்டமைப்பு மௌனம்
பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் சந்தேகத்தின் பேரில் கைதாகி கடந்த பல வருடங்களாக அநுராதபுரம், வெலிக்கடை,நீர்கொழும்பு உள்ளிட்ட பல சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 200இற்கும் மேற்பட்ட (சரியான எண்ணிக்கை தொடர்பிலான தகவல்கள் இல்லை) தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை மற்றும் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு போராட்டங்களை பல வடிவங்களில் அவ்வப்போது முன்னெடுப்பதும், பின்னர் அரசு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குறுதிகளை நம்பி கைவிடுவதும் வாடிக்கையாகிப்போன விடயமே. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த மூன்று கைதிகள் தொடர்பில் அரசோ அல்லது தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என தம்மை கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எவ்வித ஆக்கபூர்வமான பதிலையும் இதுவரை வழங்கியதாகத் தெரியவில்லை (இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை) வழமைபோல் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என அறிக்கை விட்டதோடு, தமது கடமையை முடித்துக்கொண்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. எனினும், கடந்த மாதம் 13ஆம் திகதி வட மாகாணத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், குறித்த கைதிகளின் வழக்கு விசாரணை மாற்றப்பட்டமைக்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் பூரண கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டதோடு, 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடிப் போராட்டம் நடத்தப்பட்டது. எனினும், இந்தப் போராட்டத்தை நடத்தியவர்களை சந்தித்த ஜனாதிபதி வழமைபோல் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்துவிட்டு கொழும்பு திரும்பினார்.

இலங்கையில் தமிழர்களை அடக்கி ஆள்வது, அவர்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் விடுவது, தமிழர்களை மனித இனமாகக் கூட மதிக்காமல் செயற்படுவது ஒன்றும் சிங்களப் பேரினவாதிகளுக்கு புதினமான விடயமல்ல. கடந்த கால வரலாற்றில் நாம் கண்கூடாக அவற்றை கண்டிருக்கின்றோம். குறிப்பாக, கடந்த 30
வருடங்களாக தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகைளை முன்னிறுத்தி போராடிய தமிழீழ
விடுதலைப் புலிகளை அழிப்பதாகக் கூறி சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலை உலகறிந்த விடயம். இவ்வாறான ஒரு சூழலில் எஞ்சியிருக்கும் தமிழர்களையும் அழித்துவிட வேண்டும் அல்லது தமிழர்களே அவர்களது அழிவை தேடிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் அதிகாரத்தில் இருந்த (இருக்கின்ற) அரசாங்கங்கள் செயற்படுவதை அவதானிக்கக்கூடியதாகவே இருக்கின்றது.

அடக்கி ஆளப்படும் தமிழ் மக்கள்
கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக சந்தேகத்தின் பேரில் எவ்வித வழக்கு விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கோ அல்லது அவர்களது விசாரணைகளை துரிதப்படுத்தவோ இதுவரை எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில்,
தமிழர்களை அடக்கி ஒடுக்குவதற்கும் அவர்களை சித்திரவதைக்கு உட்படுத்துவதற்குமே உருவாக்கப்பட்ட சட்டமாகவே கடந்த 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் பார்க்கப்படுகின்றது. பொலிஸாருக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்கும் இந்த சட்டத்தின் கீழ் இதுவரை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட, பலர் எவ்வித குற்றங்களும் இழைக்காத நிலையில், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 99 வீதமானவர்கள் தமிழர்களே. ஆகவே, தமிழர்களுக்காகவே இந்த சட்டம் உருவாக்கப்பட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. யுத்தத்தின்போது சட்ட ரீதியாக எந்தவொரு அரசும் இது தொடர்பில் அக்கறைகாட்டவில்லை அந்த சந்தர்ப்பத்தில் தமிழில் பேசினாலே கைதாகும் நிலைமை காணப்பட்டது. எனினும், யுத்தம் நிறைவுபெற்றதன் பின்னர் கடந்த 2015ஆம் ஆண்டுவரை அதிகாரத்தில் இருந்த மஹிந்த அரசாங்கம் அரசியல் கைதிகள் தொடர்பில் எந்தவொரு முன்னேற்றகரமான நகர்வுகளையும் மேற்கொள்ளவில்லை. 11,400 முன்னாள் போராளிகளை புனர்வாழ்வின் பின்னர் சமூகமயமாக்கிய மஹிந்த ராஜபக்ஷவிற்கு சந்தேகத்தில் கைதானவர்களை விடுதலை செய்வதில் என்ன பிரச்சினை என்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது. மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய பொறுப்புகளில் தளபதிகள் அந்தஸ்தில் இருந்தவர்களுக்கு அமைச்சு மற்றும் முதலமைச்சர் பதவிகளை வழங்கி அழகு பார்த்த முன்னாள் ஜனாதிபதிக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை விடுதலை செய்வதில் ஏற்பட்ட அச்சம் அல்லது பிரச்சினை என்னவென்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

அதன் பின்னர் பல ஏமாற்று வித்தைகள் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த மைத்திரி ரணில் அரசு அந்த செயற்பாடுகளை சிறப்பாகவே முன்னெடுத்து வருகின்றது. வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பு, காணாமற்போனோர் விவகாரம், யுத்தக் குற்ற விசாரணை அதுபோல் அரசியல் கைதிகள் விவகாரம் இவை எதிலுமே சர்வதேசத்திற்கோ தமிழர்களுக்கோ வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இதுவரை எவ்வித ஆக்கபூர்வ நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. அரசின் வாக்குறுதிகளை நம்பி நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த இரு வருடங்களாக அமைதியாகவே இருக்கின்றது. அவ்வப்போது அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்து அறிக்கை விடும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கையில் கேலிக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெயரையும் பெற்றுவிட்டார்.

அறிக்கை அரசியல் எதற்கு?
இவ்வாறான சூழலிலேயே அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி பல போராட்டங்களை கடந்த காலங்களில் முன்னெடுத்தனர். எனினும், வாக்குறுதிகளை வழங்கி அரசாங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவர்களது போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவந்தன. எனினும், அதன் பின்னர் எவருமே அது தொடர்பில் கேள்வி எழுப்புவதில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையைக் கூட ஏற்க அரசாங்கம் தயாராக இல்லை. உண்மையில் குறித்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் தங்களை விடுதலை செய்யக்கோரியோ அல்லது பிணை வழங்கக்கோரியோ போராட்டத்தில் ஈடுபடவில்லை. வவுனியா மேல் நீதிமன்றில் நடைபெற்ற தமது வழக்கு விசாரணைகளை தொடர்ந்தும் அங்கேயே நடத்த வேண்டுமெனவும், காரணமே இன்றி வழக்கினை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாமெனவும் கோரியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெறும்போது மொழிப் பிரச்சினை (தமிழ் மொழி பெயர்ப்பு) மற்றும் தமது உறவினர்கள் வந்துசெல்வது போன்ற விடயங்களில் தமக்கு பிரச்சினை இருக்காது என்பது கைதிகளின் கோரிக்கை. எனினும் வழக்கின் சாட்சிகளின் பாதுகாப்புக் கருதியே இந்த வழக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. உலகத்திலேயே மிக பயங்கரமான தீவிரவாதக் குழுவான, தமிழீழ விடுதலைப் புலிகளையே அழித்தொழித்ததாக பெருமை பேசும் இலங்கையின் பாதுகாப்புத் தரப்பு, இந்த சாட்சிகளுக்கு பாதுகாப்பினை வழங்க முடியவில்லை எனக் கூறுவது நகைப்பிற்குரிய விடயமே.

தமிழ் அரசியல் கைதிகளில் பலர் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு புரியாத மொழியில் எழுதப்பட்ட வாக்கு மூலங்களில் அவர்களின் கையொப்பம் காணப்படுவதால் மாத்திரம் அவர்கள் குற்றவாளிகளாக ஆகிவிட முடியாது. எனினும், அந்த வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு கைதிகளுக்கு தண்டனை வழங்கும் நோக்கில் நீதித்துறையும் சட்ட மா அதிபர் திணைக்களமும் செயற்படுவதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் குற்றம்சாட்டுகின்றது. இந்தக் குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமல் இல்லை. கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தண்டனை வழங்கியிருந்தால்கூட அவர்கள் தண்டனை நிறைவடைந்து விடுதலை ஆகியிருப்பார்கள். எனினும், அதனை செய்யவும் எந்தவொரு அரசும் தயாராக இல்லை.

தமிழர்கள் பலரும் கைதாவதற்கு காரணமான பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும்படி உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அது தொடர்பில் இலங்கை அரசு காதில் வாங்கிக்கொள்ளவில்லை. எனினும், கடந்த 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அரசாங்கமானது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, அதற்குப் பதிலாக சர்வதேச நியமங்களுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமொன்றை உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், அது நடைமுறையில் சாதத்தியப்படவில்லை. இந்த சட்டத்தை நீக்கும் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள இழுத்தடிப்பு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் அரசாங்கத்தின் அக்கறையின்மையையும், தமிழர்களை தொடர்ந்து கைது செய்வதற்கான உச்சபட்ச அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்குவதற்கான செயற்பாட்டையும் வெளிப்படையாகவே காட்டி நிற்கின்றது.

நியாயம் எப்போது?
எவ்வாறெனினும் பயங்கரவாதத் தடைச் சட்டமானது நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையில் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். அந்த சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றவர்கள் தமிழர்களே. இந்த சட்டம் தமிழ் மக்களுக்கும் அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றது. இந்த சட்டத்தின் கீழ் கைதாகி சிறைச்சாலைகளில் கடந்த இரண்டு தசாப்தங்களாக பலர் வழக்கு விசாரணைகள் எதுவும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பலர் பல தடவைகள் வழக்கு விசாரணைகளுக்கு முகம்கொடுத்தும் தீர்வின்றி வாடுகின்றனர். மூன்று கைதிகளின் வழக்கு விசாரணையைக் கூட நியாயமாக நடத்த இணங்காத இந்த அரசு யுத்தக் குற்ற விசாரணை, காணி விடுவிப்பு, காணாமற்போனோர் விவகாரம் அதேபோல் புதிய அரசமைப்பின் ஊடாக தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை வழங்குதல் போன்ற விடயங்களில் நியாயமாக நடந்துகொள்ளும் என எந்த நம்பிக்கையின் அடிப்படையில் எதிர்பார்க்க முடியும்.?

ஆக்கம் - சா.பார்தீபன்

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top