சமூக நீதியின் ஆன்மா இன்னும் சாந்தியடையவில்லை

சமூக நீதியின் ஆன்மா இன்னும் சாந்தியடையவில்லை

''இலங்கை ஒரு சிறிய நாடு. இங்கு சிங்கள , தமிழ் , முஸ்லிம் , மலாய் , பேகர் வாழ்கிறோம். நாம் எவ்வாறு ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதை சிந்திக்கவேண்டுமே தவிர, பிரிந்து போவதை ஒருபோதும் சிந்திக்கக்கூடாது. ஒவ்வொரு தருணமும் பிரிவைப் பற்றி பேசும்போது நாம் பிரிந்துபோகிறோம். 30 வருட யுத்தத்தில் யாரும் வெற்றியாளர்கள் இல்லை. நாம் அனைவரும் தோற்றுப்போனவர் களே. மனிதாபிமானம் மரணித்துவிட்டது. ஜனநாயகம் காணாமல் போயுள்ளது. நாம் அனாதையாகிவிட்டோம் '' என்ற மாதுலுவாவே சோபிததேரரின் வாக்கு இன்று கேலிக்கூத்தாகியுள்ளது.

புதிய அரசமைப்புக்கு முக்கிய எதிரியாகவும், நாட்டில் பலமான சக்தியாகவும் தற்போது வெளிக்காட்டப்படும் மகாநாயக்க தேரர்களுள் ஒரு இனத்தை சாராது மக்களுக்காக பாடுபட்டவரே சோபிததேரர்.

1942 ஆம் ஆண்டு மே 27 ஆம் திகதி பிறந்த சோபித தேரர், தனது 73 ஆவது வயதில் 2015 நவம்பர் 8 ஆம் திகதி உயிர்நீத்தார். இன்னும் இரு தினங்களில் சோபித தேரர் நம்மைவிட்டு மறைந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனால், அவரது கனவுமட்டும் இன்றும் எவ்வித மாற்றமும் இல்லாது மௌனித்துக்கிடக்கின்றது. நல்லாட்சி அரசு தோற்றம் பெற்றதற்கு இவர்தான் காரணம். ''கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதுவிட்டால் எல்லாம் முடிந்துவிடும்'' என, தான் அமைத்த நல்லாட்சி அரசிடமே சவால் விட்டவர். ''நாடாளுமன்றத்திலுள்ளவர்களை மாற்றாதீர்கள், ஊழல் செய்தவர்களை மாற்றுங்கள் நிறம், இனஅடையாளம், தனிப்பட்ட அபிப்பிராயங்களை விட்டுவிடுங்கள். யுத்தத்தில் வென்றவர்கள் எல்லாம் வீரர்கள் அல்லர். உண்மையான வீரர்கள் யார் என்பதை அடையாளம் காணுங்கள்'' என அறைகூவல் விடுத்தவர்.

கோட்டே ஸ்ரீ நாகவிகாரையின் விகாராதிபதியாகவும் ஊழலுக்கு எதிரான தேசிய அமைப்பின் அழைப்பாளராகவும், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவராகவும், தன்னை பன்முகத் தோற்றத்தில் வெளிப்படுத்தியவர். பிக்குகள் என்றாலே இனவாதிகளா? என்று கேட்கும் அளவுக்கு தற்போது நிலைமை மோசமாகியுள்ளது. அப்படியிருக்கும் போது, யுத்தம் முடிவடைந்து எத்தனையோ துன்பங்களை அனுபவித்துவந்த தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தவர் இவர். இறுதி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால் நிச்சயம் விசாரணை நடத்தவேண்டும் என்று கூறியவர். அந்த திராணி இன்று எந்தஒரு பிக்குவிடமும் இல்லாமல்போயுள்ளது. மனிதாபிமானத்தை அடகு வைத்துவிட்டு போலியான சாயத்தை பூசிக் கொண்டவர்களே இன்று பெரும்பான்மையாக காவியுடை அணிந்திருப்பதை பார்க்கின்றோம். 

2015 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வெளிப்படையாக சவால் விடுத்தவர். ''இப்போது எதுவும் சரியில்லை. மாற்றியே ஆகவேண்டும்'' என்று கூறியதால்தான் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கவேண்டுமெனவும் பிரதமருக்கு அதிகபட்ச அதிகாரம் வழங்கவேண்டாமெனவும், நாடாளுமன்றத்தை சக்திமிக்கதாக்கி ஐந்துவருட கால எல்லை நீடிக்கவேண்டு மெனவும் கோரிக்கை விடுத்திருந்தார். தனது சமூக நீதிக்கான இயக்கத்தில் பல சட்டத்தரணிகளை ஒன்றுசேர்த்துக்கொண்டு இந்நாட்டுக்கு தற்போது என்ன தேவை என்பதை உலகறியச் செய்தவரும் இவரே. ஜயம்பதி விக்கிரமரத்ன எம்.பி, எல்மொன் பெரேரா, வில்லியமுன ஆகிய சட்டத்தரணிகளின் கருத்துக்களை பெற்று நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க மேற்கொள்ளவேண்டிய 120 நாள் செயற்றிட்டத்தை ஆரம்பித்ததன் மூலம் இந்நாட்டு பெரும்பான்மை மக்களுக்கு விரோதியாகவும், தமிழ் மக்கள் சார்பானவராகவும் விமர்சிக்கப்பட்டிருந்தார். 

ஆனால் ''நான் இந்நாட்டுக்கு என்ன தேவையோ அதையே கேட்கிறேன். இவ்வளவு காலமும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் நாம் பட்ட துன்பங்கள் எல்லாம் போதும்'' என்று உரக்க குரல் கொடுத்தார். அரசமைப்பு மாற்றங்கள் அத்தியாவசியம் எனவும், அரசமைப்பு பேரவை ஒன்று உருவாக்கப்படவேண்டுமெனவும், வெளிப்படையாக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

தற்போது பிரதான பேசுபொருளாக மாறியுள்ள அரசமைப்பு சீர்திருத்தத்திற்கு முதல் வித்திட்டவரே சோபித தேரர். இன்று இனவாதத்திற்காக அரசியல் தீர்வொன்றை வழங்கக்கூடாது என்ற முனைப்பில் ஒரு குழுவும், அரசியல் நோக்கத்திற்காக தீர்வை பூதாகரமாக்கும் இன்னொரு குழுவுமே உள்ளன. யாரிடமும் நேர்மை இல்லை என புலம்பிக்கொண்டிருக்கும்போது ஓர் பௌத்த துறவியொருவர் எம்மைப் பற்றி சிந்தித்தது எவ்வளவு பெரிய விடயம்.

தர்மத்தை போதிக்கும் மார்க்கத்தில் எந்தவிதமான குறையும் வந்துவிடக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டவர்கள் எமக்குள் பிரிவினை வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்த சோபித தேரரின் எந்தவொரு கனவும் முழுமையாக நிறைவேறவில்லை.

ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பேன் என்று ஆட்சியமைத்த நல்லாட்சி அரசு தற்போது கட்சிகளின் விருப்புக்களுக்காக ஜனாதிபதி முறை அவசியமோ என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளது. யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரிக்கவே மனமில்லாத இந்த அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் எப்படி விடிவை காட்டப்போகின்றது? புதிய அரசமைப்பில் நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரமும் வழங்கப்படவேண்டுமெனவும்அதில் ஜனாதிபதி, பிரதமர் என்போர் பெயரளவு நிர்வாகிகளாக இருக்கவேண்டுமென்ற அவரின் கனவை இன்று ஆட்சியாளர்கள் மறந்துவிட்டார்கள்.

புதிய அரசமைப்பில் சோபித தேரரின் எந்தவொரு கனவும் நிறைவேறப்போவதில்லை என்றே தெரிகின்றது. பிக்குகள் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் இனசார்பாக நடந்துகொள்ளக்கூடாது என்ற விமர்சனம் காணப்படுகின்ற நிலையில் சமூக நீதி இயக்கத்தினுடாக இந்த அரசை உருவாக்கிக் காட்டியது மட்டுமல்லாது, மஹிந்தவின் எதேச்சாதிகாரத்திற்கு கடிவாளமிட்ட தைரியம் இனி எந்த தேரருக்கு வரும்.

தமிழ் முஸ்லிம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை கூட கண்டுகொள்ளமுடியாத நல்லாட்சி அரசை தற்போது சோபித தேரர் இருந்திருந்தால் கடுமையாக விமர்சித்திருப்பார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நல்லாட்சி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கருத்து தெரிவித்த சோபித தேரர் ''இங்கு வெற்றி என்று ஒன்றும் இல்லை, மாற்றவேண்டிய பல விடயங்கள் உள்ளன. தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். ஊழல் இல்லாதொழிக்கப்படவேண்டும். மக்களுக்கு சமாதானமான வாழ்வு கிடைக்கப்படவேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் அந்தக் கனவின் மூலமே தேர்தல் முறைமை மாற்றத்திற்கான அத்திபாரமே இடப்பட்டிருந்தது. தேசிய கணக்காய்வு சட்டம் மூலம் உருவாக்கப்பட்டு நீதியான நிதி முகாமைத்துவம் அவசியம் எனவும், தெரிவித்தார்.

19 ஆம் அரசியலமைப்பு திருத்தமும் இவரின் அழுத்தத்தினாலேயே உருவாக்கப்பட்டது. இப்படி சோபித தேரரின் யாருக்கும் அஞ்சாத நீதியும் இலக்கை நோக்கி பயணிக்கும் நேர்மையும் அரசை கடுமையான அழுத்தத்திற்குட்படுத்தி இருந்தன. அந்த அழுத்தம் அரசை ஒரு சாதகமான முடிவை நோக்கி நகர்த்த காரணமாக இருந்தது. ஆனால், இன்று சங்கசபையினர் முன்வைக்கும் கருத்துகளும், கோரிக்கைகளும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு மட்டுமே ஆதரவாக இருக்கின்றது. ஒற்றையாட்சி என்ற பதம் எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாகக் கூடாது என்றும் பௌத்த மதத்திற்கான முதன்மை ஸ்தானம் அப்படியே பேணப்படவேண்டுமெனவும், கூறுவதில் அவர்கள் தனி வியாக்கியானமே வைத்துள்ள நிலையில், தனது அதிகாரத்தை இனவாதப் போக்கில் எடுத்து செல்கின்றனர்.

இவ்வாறானவர்களுக்கு மத்தியில் பௌத்த இனவாதத்தை மேலெழ செய்யாது அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றி குரலெழுப்பிய ஒரே தலைவர் இவர். தென்னாபிரிக்காவின் அரச முறைமையில் அதிக நாட்டம் கொண்டதால் அரச மாற்றம் தொடர்பிலும் ஆட்சியாளர்கள் எவ்வாறிருக்கவேண்டும் என்பதிலும் தனிக்கோட்பாட்டை வைத்திருந்தார். இவரை "இலங்கையின் நெல்சன் மண்டேலா' என்று சொன்னாலும் தவறில்லை. ஊழலுக்கெதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும். அவர்களின் உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்று போராடி அனைத்தின மக்களுக்கும் ஊழலுக்கெதிரான கருத்துக்களை தெளிவாக கொண்டு சேர்த்தவர்.

மூவின மக்களதும் பொது உடைமையா ளராக சோபித தேரர் பார்க்கப்படுவதற்கும் இதுவே காரணம். 2014/2015 காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடும் போக்கை விமர்சித்து அரசியல் அபிலாஷைகள் அரசியல்மயப்படுத்தக்கூடாது என்ற தெளிவான கோரிக்கையின் அடிப்படையிலேயே மைத்திரிபால சிறிசேன 2015 ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

சோபித தேரரின் எதிர்பார்ப்பை ஜயம்பதி வெளிப்படுத்துகிறாரா?
நல்லாட்சி அரசு உருவாக்கப்படுவதற்கு முன்னர் சோபித தேரரினால் உருவாக்கப்பட்ட அரச முன்மொழிவுகள் ஜயம்பதி விக்கிரமரத்ன தலைமையிலேயே இடம்பெற்றிருந்தது. சோபித தேரரின் அனைத்து அபிலாஷைகளையும் அறிந்தவர் என்ற வகையில் தற்போது சோபித தேரரின் விம்பமாக ஜயம்பதியை பார்க்கமுடியுமா என எண்ணத்தோன்றுகின்றது.

இவ்வாரம் அரசமைப்பு நிர்ணய சபையில் இடம்பெற்ற புதிய அரசமைப்பின் வழிநடத்தல் குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜயம்பதி விக்கிரமரத்ன, ஒற்றையாட்சி கட்டமைப்பில் மாகாணங்களுக்கு உச்சக்கட்ட அதிகாரப்பகிர்வு இடம்பெறவேண்டுமென்று பெரும்பான்மையினத்தின் பிரதிநிதியாக வலியுறுத்தியிருந்தார். ஆனால், இன்று சோபித்த தேரர் இருந்திருப்பாரானால் இந்த முன்மொழிவுகளை அப்படியே ஏற்றிருப்பாரா என எண்ணத் தோன்றுகின்றது. காரணம், இந்த முன்மொழிவுகள் இன நல்லிணக்கத்திற்கான பரிந்துரைகளாக அமைந்துவிடும் என்பதில் எவ்வித உத்தரவாதமும் இல்லை.

வெற்றிடம்
சோபித தேரரின் மறைவு இயற்கையானதா? திட்டமிடப்பட்டதா? என்பதை தாண்டி அனைத்தின மக்களினதும் பொதுவானதொரு அரசியல் சாயம் பூசப்படாத அரச தலைவர் ஒருவர் தோன்றுவாரா என்பது சந்தேகமே. சோபித தேரரின் எதிர்காலத்தை நோக்கிய சிந்தனைகளை வைத்துக்கொண்டு எத்தனையோ விடயங்களை சாதித்திருக்கலாம். ஆனால், இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கமுடியாமல் அல்லது தீர்வை பெற்றுக்கொடுக்கமுடியாத அரசியல் தலைவர்களையே காண்கிறோம்.

பெரும்பான்மையின மக்களுக்கான எந்தவித சலுகையும் குறைக்கப்படாத, அதேநேரத்தில், சிறுபான்மையின மக்களுக்கு தற்போதுள்ள அரசமைப்பு வழங்கப்பட்ட குறைந்தபட்ச அதிகாரத்தைத்தாண்டி எதையும் வழங்கிவிடக்கூடாது என்பதில் பெரும்பான்மையின அரச தலைவர்கள் தெளிவாக உள்ளனர். இவ்வாறிருக்கும்போது, சோபித தேரர் போல ஒருவர் இல்லாது போனது தமிழ் மக்களின் குறைகளை அறிய அல்லது தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகள் பற்றி அரசுக்கு தெளிவுபடுத்த ஒருவர் இல்லாமல்போனது மிகப்பெரும் வெற்றிடமே.

அரசமைப்பு சீர்திருத்தத்தில் சோபிததேரரின் கனவு
சோபித தேரர் முன்வைத்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு அதியுச்ச நாடாளுமன்ற அதிகாரம் சிறுபான்மை மக்களுக்கு பயனளிக்கக்கூடிய தேர்தல் சீர்திருத்தம் இனப்பிரச்சினை தீர்வுக்கான முன்மொழிவுகள் என எதுவுமே நல்லாட்சி அரசினால் முழுமையாக வெளிக்கொணரப்படவில்லை.

பெரும்பான்மை மக்களுக்கு என்ன விருப்பமோ அதை கொடுத்துவிட்டு எஞ்சியுள்ளதை சிறுபான்மையினருக்கு கொடுக்கலாம் என்ற கடும்போக்காளர்கள் சிந்தனைக்கும் சோபிததேரரின் சிந்தனைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நல்லாட்சி அரசு ஆட்சிமைக்கும் போதே அனைத்து மக்களுக்குமான பொதுவான தீர்வு வழங்கப்படாவிட்டால் இந்த அரசு இல்லாமல் போய்விடும் என்று எதிர்வு கூறியிருந்தார். அதற்கான சமிக்ஞைகளே தற்போது தென்படுகின்றன.

ஒருபுறம் கூட்டு எதிரணி இனவாதத்தை பரப்பி இழந்த ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்றும் இன்னொருபுறம் நல்லாட்சி அரசு இருதுருவங்களாக மாறி காட்டிக்கொடுப்புகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் ஆட்சியை தக்கவைப்பது அல்லது ஆட்சியை பறிப்பது என்ற கேட்பாட்டுக்குள்ளே நல்லாட்சி அரசு நகர்ந்துகொண்டிருக்கிறது.
ஊழல் அற்ற அரசியல் மீது வெறுப்படைந்த சோபித தேரர் இனிமேல் ஊழல் அற்ற அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், நல்லாட்சி அரசிலும் எத்தனையே ஊழல்கள் கொள்ளைகள், திருகுதாளங்கள். இப்படியிருக்கும்போது சோபித தேரர் நல்லாட்சி அரசிடமிருந்து எதிர்பார்த்த எந்தவொரு விடயமும் நிறைவடையவில்லை. காலம் கடந்த ஞானம் இனி நல்லாட்சி அரசுக்கு வராது. ஆனாலும், பௌத்த கோட்பாடு மத சித்தார்ந்தம் என பிரச்சாரம் செய்யும் இந்த அரசு, சோபிததேரர் வலியுறுத்திய உண்மையான கேட்பாடுகளை பின்பற்றியிருந்தாலே இன்று எமக்குள்ள பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்திருக்கும்.

ஆக்கம் - பா.ருத்ரகுமார்

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top