தமிழர்களின் உரிமைக்காக தன்னையே அர்ப்பணித்த “ஜீ.ஜீ“

தமிழர்களின் உரிமைக்காக தன்னையே அர்ப்பணித்த “ஜீ.ஜீ“

அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 116ஆவது பிறந்த தினம் இன்று அவரின் பிறந்த தினத்தில் அவரைப்பற்றி வெளியிடப்பட்ட "உலக மாமேதை' என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள் தொகுப்பாக...

இலங்கையில் ஒப்பாரும் மிக்காருமற்ற நாவரசனாகப் பிரகாசிக்கும் ஜீ.ஜீ.தன் பேச்சு வன்மைக்கு நிகரை உலகில் வேறெங்கும் காணமுடியாதென்பதை வெளிநாடுகளிலேயே பல தடவைகள் நிரூபித்துள்ளார். "யானை வரும் பின்னே. அதன் மணியோசை வரும் முன்னே'' என்பதற்கொப்ப ஜீ.ஜீ. மாநாட்டுக்குப் போவதற்கு முன்னதாகவே அவரது புகழ் அங்கு சென்றுவிட்டது. அதன் விளைவாக ஜீ.ஜீ. உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது கனடாவின் முன்னாள் முதலமைச்சர் டீபன் பேக்கர் எழுந்து, "எமக்கெல்லாம் தரப்பட்டதுபோல இந்த அறிவுக் களஞ்சியத்துக்கும் அரை மணிநேரம் கொடுப்பது அறிவுக்கும் திறமைக்கும் மதிப்புக் கொடுக்கும் செயலாகாது. ஆகவே, இவருக்கென மேலதிகமாக 15 நிமிடங்கள் கொடுக்கப்படல்வேண்டும்'' எனக் கேட்டு மேலதிகமாகக் கால் மணிநேரம் பெற்றுக்கொடுத்தார்.

இந்தியாவில் ஜீ.ஜீக்குப் புகழ்
இந்தியாவின் சிருஷ்டி கர்த்தா, நடுநிலைமைத் தத்துவத்தின் தந்தை, உலக மக்கள் யாவரினதும் உள்ளங்கவர்ந்த நேருஜி இந்து சமுத்திரத்தின் திலகம், உலக சரித்திரத்தில் தனக்கெனத் தனியிடம் பெற்றுவிட்ட ஜீ.ஜீயுடன் உற்ற நண்பனாக விளங்கியதில் வியப்பில்லை.

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். ஆகவே, ஜீ.ஜீ. கற்றுத் தேர்ந்த மாமன்னன். ஆதலால் அவரது புகழ் இலங்கையுடன் நின்றுவிடாது கடல் கடந்த நாடுகளெல்லாம் பரவியிருந்தது. இவர் அமைச்சராக இருந்த காலத்தில் ஒருமுறை பாரதப் பிரதமர் ஸ்ரீ ஜவஹர்லால் நேருவைப் பார்க்கச் சென்றார்.

இவர் சென்றவேளையில் நேருஜி அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமைதாங்கிக்கொண்டிருந்தார். கூட்டம் நடந்துகொண்டிருக்கையில் ஜீ.ஜீயின் வருகை நேருவுக்கு அறிவிக்கப்பட்டது. அவ்வளவுதான். நேருஜி வேறொருவரைத் தலைமைதாங்க விட்டுவிட்டு ஓடோடிவந்து ஜீ.ஜீயை வாரியணைத்துக் கட்டித் தழுவி தன் மகிழ்ச்சியையும் மரியாதையையும் தெரிவித்துக்கொண்டார்; குசலம் விசாரித்தார். பின் நீண்டநேரம் உரையாடினார்.

நேருஜியின் இத்தகைய மதிப்புக்கு ஒருசிலரே ஆளாகியிருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதொன்று. ஒரு மேதையின் உள்ளத்தை இன்னொரு மேதையால்தான் அறியமுடியுமல்லவா?

அமெரிக்காவில் பொருளியல் விற்பன்னன் ஜீ.ஜீக்குப் புகழ்
ஜீ.ஜீயின் புகழ் அவர் ஒரு சட்டநிபுணன், அரசியல் மேதை, சொல்லின் சக்கரவர்த்தி என்பதுடன் நிற்கவில்லை. அவர் ஒரு பொருளியல் விற்பன்னன். ஒருமுறை நியூயோர்க் சென்றிருந்தார். அச்சமயம் உலக வங்கியின் பொருளியல் நிபுணரான கொட்வின் என்பவர் இலங்கைக்கு வந்து இலங்கையின் பொருள்வளம் பற்றியும், தொழில் வளர்ச்சி பற்றியும் ஆராய்ந்து ஓர் அறிக்கை சமர்ப்பித்தார்.

இவ்வறிக்கையை செய்தித்தாள்களில் படித்த ஜீ.ஜீ. அது வெளிவந்து 24 மணிநேரத்தில் நியூயோர்க்கில் கொட்வினை சந்தித்து அவ்வறிக்கையில் இருந்த பல தவறுகளையும், பிழையான பொருளாதாரக் கொள்கைகளையும் சுட்டிக்காட்டித் தன் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்தார்.

உண்மையை உணர்ந்த நிபுணரும் தவறை ஏற்று மன்னிப்புக் கோரினார். இதனால் அமெரிக்கா எங்ஙனும் ஜீ.ஜீயின் புகழ் பரவலாயிற்று. அத்தனை பொருளியல் விற்பன்னர் ஜீ.ஜீ. டாக்டர் என்.எம்.பெரேரா போன்ற அறிஞர்களை அவர்கள் பிரபல்யமடைந்த பொருளியலில் விவாதித்தும் திணறவைத்த மாமேதையாவார்.

பர்மாவில் அரசியல் மேதை ஜீ.ஜீயின் புகழ்
பர்மாவுக்கு ஜீ.ஜீ. ஒருமுறை விஜயம் செய்தார். அங்கு அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு மக்கள் அவருக்கு வேண்டிய பெருமதிப்பைக் கொடுத்து வரவேற்றனர். அவருக்குக் கிடைத்த அச்செல்வாக்கை அந்நாட்டுச் செய்தித்தாள்கள் இரத்தினச் சுருக்கமாக மூன்றே மூன்று வரிகளில் விளக்கி எழுதின. அவை பின்வருமாறு, “அவர் வந்தார், கண்டார், சென்றார்.“

அவுஸ்திரேலியாவில் அரசியல் நிபுணன் ஜீ.ஜீயின் புகழ்
ஜீ.ஜீயைப் பற்றி அவுஸ்திரேலிய செய்தித்தாளொன்று அறிவின் மின்விசைக் கருவி என்று குறிப்பிட்டிருந்தது. அந்நாட்டின் பிரதமர் றொபட் மென்சீஸ் இலங்கை வந்த போது நேராகக் காலஞ்சென்ற பிரதமர் டி.எஸ்.சேனநாயக்காவிடம் சென்று ஜீ.ஜீயைப்பற்றி உண்மையில் இந்நாடு பெருமையடைய வேண்டுமென்று கூறியிருந்தார்.

ஜேர்மனியில் இயந்திர நிபுணர் ஜீ.ஜீயின் புகழ்
ஜீ.ஜீ. பொன்னம்பலம் கைத்தொழில் ஆராய்ச்சி, கடற்றொழில் அமைச்சராக இருந்த பொழுது இயந்திரங்கள் வாங்குவதற்காக ஜேர்மனிக்குச் சென்றிருந்தார். அப்பாழுது சின்னஞ்சிறு இலங்கையிலுள்ள இவருக்கு இயந்திரங்களைப் பற்றி என்னத் தெரியும். விலைமதிப்பற்ற இயந்திரங்களை இவரிடம் செலுத்திவிடலாம் என்று எண்ணினார்கள். இவர் இயந்திரங்களைப் பார்வையிட்டு அவர் வினாவிய ஆராய்ச்சிக்கிடமான வினாக்களைக் கேட்டதும் மூக்கின் மேல் விரலை வைத்துத் திகைப்படைந்தனர். இவருடைய திறமையைக் கண்டு இவருக்கு வேண்டிய நல்ல இயந்திரங்களைக் கொடுத்துதவினர்.

இவருக்குக் கீழ் வேலை செய்த மேல்நாட்டுப் பொறியியலாளர்கள் இவரின் வேலைத் திறமையால் இவருக்குக்கீழ் வேலை செய்ய முடியாதுபட்ட அவஸ்தையையும் வேலையைவிட்டு ஓடியதையும் அறிந்திருந்தால் இவரின் பொறியியல் திறமையை அறியலாம்.

தொகுப்பு - டி.எம்.ஆர்

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top