அந்த 5 நிமிடங்கள்; 'கடவுளே எனக்கு இனி எவரும் இல்லையே'

அந்த 5 நிமிடங்கள்; 'கடவுளே எனக்கு இனி எவரும் இல்லையே'

நீராடுவதற்காக வந்தோம். அப்போது நீர் குறைவாக இருந்தது. எனது கணவர் கல்லொன்றின் மீது ஏறி நின்றார். 5 நிமிடங்கள் சென்றிருக்கும். கடவுளே எனக்கு இனி எவரும் இல்லையே. இரண்டு குழந்தைகளையும், கணவரையும் ஒரு நிமிடத்தில் பறிகொடுத்த தாயின் அவலக்குரல் இது. கேட்டவர்கள் அனைவரையும் கண்ணீர் சிந்தவைத்த அந்தத் தாயின் வாழ்க்கை அந்த 5 நிமிடங்களுக்கு முன்புவரை அமைதியாகத்தான் இருந்தது.

குடும்பத்தினருடன் உறவினர்களுடன் சுற்றுலா நகரத்திலிருந்து கிராமத்தை நோக்கிய நீண்ட பயணம். அன்று காலை அவர்களுக்கு மகிழ்ச்சியானதாகத்தான் இருந்தது. இரவொன்று வராமல் காலைப்பொழுதே நீண்டிருந்தால் இப்படி தனிமரமாக நின்று புலம்பும் நிலை நிச்சயம் வந்திருக்காது. மாத்தளை, லக்கல, தெல்கமுஓயாவில் நீராடச் சென்றபோது திடீரென்று நீர்வரத்து அதிகரித்து அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த 8 பேரைப்பற்றித்தான் பிரதேச மக்கள் இன்று அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த நபரொருவர் லக்கல பகுதியில் சுற்றுலா விடுதியை நிர்மாணித்துவந்துள்ளார். அதன் நிர்மாணப் பணிகளைப் பார்வையிடுவதற்காக தனது நண்பரின் குடும்பத்துடன் கடந்த 3ஆம் திகதி யக்கலவுக்கு சென்றிருந்தார்.

நான்காம் திகதி பிற்பகல் வேளையில் நீராடுவதற்காக தெல்கமுஓயாவுக்கு அவர்கள் சென்றிருந்தனர். ஹோட்டல் உரிமையாளரான கிங்ஸ்லி ரத்னாயக்க, அவரது மனைவி மற்றும் மகள்கள் இருவரும் இந்தக் குழுவில் அடங்கியிருந்தனர்.

வழமைபோலவே பார்ப்பதற்கு அழகாகவும், அமைதியாகவும் இருந்த அந்த ஆற்றில் நீராடவேண்டும் என்ற உந்துதலில் இரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும் ஆற்றில் இறங்கினர். சிறிதுநேரம் மாத்திரமே குளிர்ந்த ஆற்றுநீரில் குளிக்கமுடிந்தது. எதிர்பாராதவிதமாக எங்கிருந்தோ வந்த அதிகளவு நீர் அவர்கள் அனைவரையும் அள்ளிக்கொண்டு சென்றுவிட்டது. இந்தக் கொடுரத்தை நேரில் பார்த்த கிங்ஸ்லியின் மனைவி அந்த அசம்பாவிதத்தை இவ்வாறு கூறுகின்றார்.

"குளிப்பதற்காக வந்தோம். அப்போது நீர் குறைவாகத்தான் இருந்தது. இரண்டு பிள்ளைகளையும் பிடித்துக்கொள்ளும்படி நான் எனது அம்மாவிடம் சொன்னேன். அப்பாவை அழைத்துவருவதாகக் கூறி நான் ஆற்றங்கரைக்கு வந்துவிட்டேன்.

தண்ணீர் உடைப்பெடுத்து வருகின்றது. ""சுதா, சுதா பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு வா'' என்று அப்பா சத்தமிட்டார். அவர்களை பிடிப்பதற்குச் சென்றபோது, பெரிஸ் அண்ணாவின் குழந்தைகளைப் பிடித்துக்கொள்ளுமாறு நான் கூறினேன். அப்போது அவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டனர்.

அவ்வளவுதான். அவர்கள் அவ்வாறே உடைத்துக்கொண்டு பள்ளத்துக்குள் வீசுப்பட்டனர். ஒவ்வொருவராக ஆற்றுநீரில் அள்ளிச்செல்லப்பட்டனர். எனது கணவர் கல்லொன்றில் ஏறி நின்றார். அப்படி நின்று ஐந்து நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். அவர் பாதுகாப்பாக இருப்பதால் பிள்ளைகளும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் என்று நினைத்து நான் ஓடிவந்தேன். அங்கு ஒன்றுமே தெரியவில்லை.
நான் மீண்டும் பழைய இடத்துக்கு ஓடிச்சென்றேன். அவரிடம் கம்பிபோன்றதொரு பொருளை அங்கிருந்தவர்கள் கொடுத்தனர். அதனைப் பிடித்துக்கொண்டு வந்தபோது கை விடுபட்டுவிட்டது. ஐயோ! இவரும் ஆற்றுடன் அடித்துச் செல்லப்பட்டுவிட்டார். எனக்கு எவருமே இல்லை. நான் தனித்துவிட்டேன். ஒன்றுமறியாத குழந்தைகள் இரண்டும். ஐயோ!''

இவ்வாறு சம்பவத்தைக் கேள்விப்பட்டு அங்கு ஓடிவந்தவர்களிடம் அந்தத் தாய் புலம்பிக்கொண்டிருந்தார். சம்பவத்தையடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அன்றையதினம் மாலையாகும்போது, ஐந்து பேரின் சடலங்கள் மாத்திரமே அவர்களின் கைகளில் கிடைத்திருந்தன.

40 வயதுடைய கிங்ஸ்லி ரத்னாயக்க, அவரது மனைவியின் தாயாகிய 59 வயதுடைய சந்ரா காந்தி, 38 வயதுடைய ரவிந்ர லசந்த உடவரகே, அவரது மனைவியான 38 வயதுடைய ருவணி தில்ருக்ஷி, அவர்களது மகளான 12 வயதுடைய வினிசா உடவரகே ஆகியோரின் சடலங்களே அன்றைய தினம் மீட்கப்பட்டிருந்தன.

நிலைமை மோசமடைந்த நிலையில், விசேட அதிரடிப்படை மற்றும் கடற்படையின் சுழியோடிப் பிரிவினரை சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்திருந்ததாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்திருந்தார்.

சடலங்களைப் பாரத்த அந்தத் தாய், தனது கணவரின் சடலத்தைப் பிடித்துக்கொண்டு கதறியதுடன், ""எனது இரண்டு பிள்ளைகளையும் மீட்டுத்தாருங்கள். அவர்களது முகத்தையாவது நான் பார்க்க வேண்டும்'' என்று அங்கிருந்தவர்களிடம் கையேந்திக் கதறியது பார்த்த அனைவரையும் ஒருகணம் உலுக்கிவிட்டது.

அவர்களுடன் வந்த மற்றைய குடும்பத்தில் எஞ்சியது 5 வயது சிறுவன் மட்டும்தான். அவனால், தனது தந்தையான 38 வயதுடைய ரவிந்ர லசந்த உடவரகே, தாயான 38 வயதுடைய ருவணி தில்ருக்ஷி, சகோதரியான 12 வயதுடைய வினிசா உடவரகே, 7 வயதுடைய விமாசி உடவரகே ஆகியோரை அதற்குப் பின்னர் சடலங்களாக மட்டுமே பார்க்கமுடிந்தது.

ரவிந்ர லசந்த உடவரகே அனர்த்தத்துக்கு முகங்கொடுத்த அந்தநேரத்தில், அவர்கள் பயணித்த வானின் சாரதியிடம் சிறுவனை பிடித்துக்குக்கொள்ளுமாறு தூக்கி எறிந்ததால்மட்டுமே அவர்கள் குடும்பத்தில் ஒருவராவது தப்பிப்பிழைக்க முடிந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ஹிருணி தின்ஹாரா என்ற 4 வயது சிறுமியின் சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 4 கிலோமீற்றர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதுடன், தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, கிங்ஸ்லி ரத்னாயக்கவின் மற்றுமொரு மகளான 12 வயதுடைய மந்தினா ரத்னாயக்க மற்றும் லசந்த உடவரகேவின் மற்றுமொரு மகளான 7 வயதுடைய விமாசி உடவரகே ஆகியோரும் சடலங்களாகவே மீட்கப்பட்டனர். கற்பாறைகளுக்கிடையில் சிறைப்பட்டிருந்த நிலையில் இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

""இந்த இடம் மிகவும் அபாயகரமானது; இங்கு நீராடுவது குறித்த எச்சரிக்கைப்பலகை கூட இங்கு காட்சிப்படுத்தப்படவில்லை; சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வரும் இவ்வாறான இடங்கள் இப்பகுதியில் பல உள்ளன. இந்தச் சம்பவத்தை படிப்பினையாகக் கொண்டு எச்சரிக்கைப்பலகை மற்றும் அனர்த்தத்திலிருந்து பாதுகாக்கும் வகையிலான முன்னேற்பாடுகளையும் செய்ய உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்கிறார் அப்பிரதேசத்தில் செயற்படும் சூழலியல் அமைப்பின் தலைவர் நிமல் கன்னங்கர ஆராச்சி.

எனினும், குறித்த பிரதேசத்தில் நீரில் மூழ்கி இதற்கு முன்னர் 23 பேர் உயிரிழந்துள்ளதாக எச்சரிக்கை பதாகையொன்று அங்கு வைக்கப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், "வரும் முன் காப்பது' என்பதை அவர்கள் கவனத்திற்கொள்ளவில்லை என்றே கூறலாம். சில நேரங்களில் அந்த எச்சரிக்கைப்பலகை குறித்து அப்பகுதிக்கு புதிதாக வருபவர்களுக்கு எந்தளவு தூரம் புரிதல் உள்ளது என்பதும் சற்றுச் சிந்திக்கவேண்டிய விடயம்.

23 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் அந்த இடத்தில் அதனைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம். அவ்வாறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் இன்று இரண்டு குடும்பங்களின் இறுதித்தருணம் தண்ணீரில் கரைந்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

எதுவும் நடக்காது, நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் நினைத்திருப்பார்களோ என்னவோ, சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதாகக் கூறப்படும் இந்த இடத்தில் ஏற்பட்ட சோகம், இனி அங்கு வருபவர்களால் மறக்கமுடியாத ஒன்றாகவே இருக்கும். மலையகத்தில் இவ்வாறான பல இடங்கள் காணப்படும் நிலையில், இனியாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமை மாத்திரமல்ல, அங்கு செல்லும் ஒவ்வொருவரினதும் பொறுப்புமாகும்.
இந்த உயிரிழப்புகள் அப்பிரதேச மக்களுக்கு சில நாட்கள் பேசுவதற்காக "டொப்பிக்' ஆகவோ, நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்களுக்கு செய்தியாகவோ, ஊடகங்களுக்குத் தலைப்புச் செய்தியாகவோ மாத்திரமே காணப்படும் என்பதுதான் யதார்த்தம். அதேபோல, உயிரிழந்த தமது குடும்பத்தை நினைத்துத் தவிக்கும் அந்த இருவருக்கு மாத்திரம் வாழ்நாள் முழுவதும் அதன் வலி தொடரும் என்பதும் யதார்த்தமே!.

ஆறோ கடலோ ஆழமறியாமல் காலை விடாதே! இது அட்வைஸ் அல்ல... யதார்த்தம்!

ஆக்கம் - ஜே.ஏ.ஜோர்ஜ்

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top