மறுக்கப்படுகின்றது தமிழர்களுக்கு நீதி

மறுக்கப்படுகின்றது தமிழர்களுக்கு நீதி

தமிழ் அரசியல் கைதிகளை

பொதுமன்னிப்பில் விடுவிக்க!

நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. எடுத்துரைப்பு

""பல வருடங்களாக சிறைகளில் அடைக்கப்பட்டு தண்டனைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு இந்த அரசு பொது மன்னிப்பு வழங்கி விடுதலைசெய்து தனது நல்லிணக்கச் சமிக்ஞையை தமிழ் மக்களுக்கு வெளிக்காட்டவேண்டும்.''


இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சட்டமூலங்களைத் திருத்துவதற்கான இரண்டாம் வாசிப்பு நிலை விவாதத்தில் கடந்த 7ஆம் திகதி கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:

""இங்கு ஏற்கனவே வலியுறுத்தியுள்ள சில கோரிக்கைகளையும் முன்வைக்க விரும்புகின்றேன். உச்ச நீதிமன்றங்கள், மேல் நீதிமன்றங்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் போதியளவு தமிழ் மொழி மூலமான நீதிபதிகளை நியமிப்பதற்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செயற்படுகின்ற நீதிமன்றங்களில் மேலதிகமாக நீதிபதிகளை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். தமிழ் மொழி மூலமான மொழிப் பயன்பாட்டைக் கொண்டவர்களது பல வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்குத் தீர்வாக இந்த நடைமுறை அமையும் என்பது எனது எதிர்பார்ப்பாகும். அதுமாத்திரமல்லாமல் இனவாத நோக்கம் கொண்டதாக இக் கோரிக்கை தொடர்பில் எவரும் அவதானம் செலுத்தக்கூடாது எனக் கேட்டுக்கொள்வதுடன், அனைத்து நீதிமன்றங்களுக்கும் போதியளவு மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பது குறித்தும் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.


அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்தில் பல்வேறு வழக்குகள் பாரியளவில் குவிந்திருப்பதற்கு ஒரு பிரதான காரணம் சட்டத்தரணிகளின் பற்றாக்குறை என்றும் கூறப்படுகின்றது. எனவே, இவ்விடயம் தொடர்பிலும் உரிய அவதானங்கள் செலுத்தப்பட்டு, போதிய சட்டத்தரணிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.


வடக்கு, கிழக்கில் தங்களது அரசியல் உரிமைகளை வென்றெடுக்கப் போராடிய பல தமிழ் பேசும் இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு பிணை வழங்கப்படாமலும், குற்றப்பத்திரிகை பகிரப்படாமலும் வருடக்கணக்கில் சிறைக்கைதிகளாக உள்ளனர்.


விசாரணைகள் இன்னும் முடிவுறவில்லை என்ற காரணத்தால், இன்னுமொரு தொகையினர் சிறையில் வாடுகின்றனர். அவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு பிணை வழங்கப்படாமல் வழக்குகள் தாமதமாக விசாரிக்க எடுக்கப்படும்போது பல வருடங்கள் கடந்துபோகின்றன.


இறுதித்தீர்ப்பு வரும்போது பலவழக்குகளில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்றும் விடுதலை செய்யப்படுகின்றார்கள். அவ்வாறானவர்கள் வெளிவரும்போது தமது இளமையை இழந்தவர்களாகவும், வாலிபத்தை இழந்தவர்களாகவும், வயோதிபர்களாகவும், நோயாளிகளாகவும் வெளியே வருகின்றார்கள். இது மனிதாபிமான அடிப்படையில் பார்க்கும்போது ஒருபாவச் செயலாகும். அவர்களை வெளியில் எடுக்க சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் பல இலட்சக்கணக்கான ரூபாக்களை செலவிடுகின்றனர். குடும்பத்தவர்கள் நீதிமன்றங்களுக்கு ஏறி இறங்கியே காலத்தைக் கழித்து கடைசியில் அவர்களும் இறந்துவிடுகிறார்கள்.
கடந்த முப்பதாண்டு காலத்தில் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நீதி கிடைக்காமலும், உரிமையும், சமத்துவமும் கிடைக்காமலும் மண்ணுடனும், கடலுடனும் சங்கமமாகி விட்டார்கள். அரசுகள் இதற்குப் பொறுப்புக் கூறவேண்டும்.


அண்மையில் தமிழ் இளைஞர் ஒருவர் 18 ஆண்டுகள் அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டு, 18 ஆண்டுகளின் பின் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டுள்ளார். இவரின் இளமையையும் இழந்த வாழ்வையும் எவரும் மீளக்கொடுக்க முடியாது.


இதேபோல், அநுராதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர்களும், தமக்காக நீதிகேட்டு உண்ணாவிரதமிருக்கவேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது. சட்டமா அதிபருக்கு வவுனியாவிற்கு வழக்கை மாற்றுகின்ற அதிகாரமிருந்தும், அவர் அதைப் பயன்படுத்தத் தயங்குகின்றார். இதற்கு பின்னால் இருக்கும் தடை என்ன? தெற்கை சாந்தப்படுத்த வடக்கிலுள்ளவர்களை சிறையில் அடைக்கின்றார்கள். குற்றமிழைத்தால், சட்டத்தின் காவலர்களும், சட்டத்தை செயற்படுத்துபவர்களும் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும். 

காலந்தாழ்த்தி செய்யப்படும் விடுதலையால் எந்தவிதமான நன்மையும் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கிட்டாது. மக்களை உணர்ச்சிவசப்படுத்தாமலும், உசுப்பேத்தாமலும், மேலும் மேலும் காலந்தாழ்த்தாமலும் அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து கைதிகளை விடுதலைசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்களின் அமைதியின்மை, நாட்டுக்கு நல்லதல்ல. இதை அனுபவத்தில் நாம் அனைவரும் அறிவோம்.


மேலும், அநுராதபுரத்தில் மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் 41 நாட்களான உண்ணாவிரதப் போராட்டமானது, உரிய நோக்கை எட்டாத நிலையில் முடிவுக்கு வந்திருக்கிறது. மேற்படி கைதிகளின் கோரிக்கையானது தம்மீதான வழக்குகளை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றக்கூடாது என்ற நியாயமான கோரிக்கையாக இருந்தபோதிலும், அவர்களது போராட்டத்திற்கு ஆதரவாக பல்கலைக்கழக மட்டத்தில், மாணவர்கள் தங்களது கற்கைகளை நிறுத்தியும், தமிழ் மக்கள் தரப்பிலிருந்தும் பரவலாக பொது அமைப்புகள் தரப்பிலிருந்தும் கிடைத்திருந்தன.


எனினும், இந்தப் போராட்டத்தை வழிநடத்தியிருக்கவேண்டிய தமிழ் மக்களது அரசியல் பிரதிநிதிகள் தாமே என்போர் இந்த விடயத்தை தமது சுயலாப அரசியலுக்காக மாத்திரம் பயன்படுத்திக்கொள்ள முயற்சித்து செயற்பட்டதன் காரணமாகவும், மேற்படி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அல்லது இக் கைதிகளின் விடுதலைக்காக நேர்மையான முறையில் செயற்படாததன் காரணமாகவுமே 41 நாட்கள் தொடர்ந்திருந்த போராட்டம், அதற்கான நோக்கம் நிறைவேறாத நிலையிலேயே கைவிடப்பட நேரிட்டுள்ளது.


எம்மைப் பொறுத்தவரையில், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்படவேண்டும் என்பதே. இது தொடர்பில் உரிய அனைத்துத் தரப்பினரும் அவதானங்களைச் செலுத்த முன்வரவேண்டும்.


அத்துடன், 1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், அதற்குப் பின்னரான காலகட்டங்களில் பண்டாரகம, வவுனியா போன்ற பகுதிகளில் சிறைக்கைதிகள் மீதான படுகொலைகள் தொடர்பிலும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அடுத்ததாக, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும், சாட்சியாளருக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் இங்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பது காலத்தின் கட்டாய தேவையாகும்.


இலங்கையின் சனத்தொகை தற்பொழுது ஏறத்தாழ 22 மில்லியனை எட்டிப்பிடித்துள்ளது. இவர்களில், ஏறத்தாழ 1.5 மில்லியன் அல்லது 15 இலட்சம் பேர் கடந்த 30 வருட கால யுத்தத்தின் காரணமாக 1980களிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ்பேசும் மக்களாவர். இது தவிர, ஏறத்தாழ 7 இலட்சம் பேர் தொழில் காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரத்தின் சட்டங்களுக்கேற்ப வெளிநாடுகளில் தொழில்செய்யும் அனைத்து இனங்களையும் சேர்ந்த இலங்கையர்களாவார்கள்.
இவர்களுக்கிடையில் இலங்கையின் இனக்கலவரங்களின்போது பலியாக்கப்பட்டோரும், சாட்சியாளர்களும் உள்ளடங்கியுள்ளார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படும்போது, அவர்கள் தாம் தொழில்புரியும், வதியும் நாடுகளில் இருந்தவாறு, நீதிமன்ற விசாரணைகளில் சாட்சியமளிப்பதற்கு அல்லது கூற்றை வழங்குவதற்கு இத்திருத்தம் வழிசெய்கின்றமை வரவேற்கத்தக்கது.


தற்பொழுது இலங்கையின் சனத்தொகையில் பத்து சதவீதமாக உள்ள வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஏறத்தாழ 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருடாந்தம் நமது நாட்டுக்கு அனுப்புகின்றார்கள். இத்தொகை, நமது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்குமிடையிலான வணிகநிலுவையை சமன்செய்வதற்கு பேரளவு உதவிபுரிகின்றது. இவர்களுக்கு நாம் பாதுகாப்பும், சலுகைகளும் வழங்குவதுடன் மட்டும் நின்றுவிடாது, அவர்கள் தேசியமட்டத் தேர்தல்களில் வாக்காளர் தகைமை பெற்றிருப்பின் வாக்களிக்கவும் அவர்கள் வாழும் நாடுகளிலுள்ள நமது தூதரங்களில் வசதி செய்யப்படவேண்டும் என்று இச்சபையில் மீண்டுமொரு முறை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.


அதேநேரம், வெளிநாடுகளில் வாழ்பவர்களாகட்டும், உள்நாட்டில் வாழ்பவர்களாகட்டும் தாங்கள் சார்ந்த வழக்குகளில் தங்களது சாட்சியங்களை வழங்குகின்றபோது, குற்றங்கள் சுமத்தப்படுகின்ற நபர்களது பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கும், சமூகத்தில் அவர்களுக்கிருக்கின்ற நற்பெயரைப் பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும், பொய்யான குற்றச்சாட்டுகள் ஒரு நபர்மீது சுமத்தப்படுமானால் அதனை பகிரங்கப்படுத்தாது, அது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படுதலும் வேண்டும். குற்றம் சுமத்தப்பட்டவர் மீது வீண்பழிகள் சுமத்தப்படாத வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்வதும், பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துவோருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடிய சூழ்நிலைகளும் உறுதிப்படுத்தப்படவேண்டியது அவசியமாகும்.


அடுத்ததாக, குற்றச்செயல்களைத் தடுத்தல் திருத்தச்சட்ட மூலத்தைப் பற்றி பேச விரும்புகிறேன்.
ஜனநாயகத்திற்கு நான்கு தூண்கள் உள்ளன என்று சொல்லப்படுகிறது. சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை, ஊடகத்துறை என்பனவே ஜனநாயகத்தை தாங்கும் நான்கு தூண்களாகும். ஜனநாயகத்தின் தூண்கள் மக்களுக்கான மக்களின் உரிமைகளைக் காப்பாற்றும் தூண்களாக பிரச்சினைகளை முன்நிறுத்தும் நிறுவனங்களாக இருக்கவேண்டும்.


இந்த நான்கு தூண்களும் மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு வினைத்திறனுடன் செயற்படும்போதே, சட்டத்தின் ஆட்சி நிலவும், நாட்டுமக்கள் அனைவரும் சமாதானமாகவும் இன இணக்கப்பாட்டுடனும் வாழமுடியும்.


ஜனநாயகத்தின் முதன்மைத் தூணான எமது சட்டவாக்கத்துறைக்கு 70 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு நாம் அண்மையிலேயே பாராட்டிப் பேசினோம். இருப்பினும், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பிறகு, நாம் இன்னும் இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்கவில்லை. நமது நாட்டின் படுகடன்களை அடைப்பது பற்றியும், அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்துவது பற்றியும் சிலாகித்துப் பேசுகின்றோம். மிகவும் கஷ்டப்பட்டு ஒருவாறு உள்ளூராட்சித் தேர்தல் சட்டங்களையும், மாகாண சபைத் தேர்தல் சட்டங்களையும் திருத்தினோம். புதிய அரசமைப்பை இயற்றுவது, நாடாளுமன்றத் தேர்தல்கள், சட்டத்தைத் திருத்துவது, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது, நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவது, பொறுப்புக் கூறுவது, இழப்பீடு வழங்குவது போன்ற விடயங்கள் நம்முன் இன்னும் பாக்கியாகவே இருக்கின்றன.


இதனிடையே சாதாரண மக்கள், உயர்ந்து செல்லும் விலைவாசியாலும், நாட்டில் அதிகரித்துச்செல்லும் குற்றச்செயல்களாலும், இயற்கையின் அனர்த்தங்களாலும், வீதி விபத்துகளின் அதிகரிப்பு என்பனவற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இக்கட்டத்தில், நாம் நீதித்துறையை வினைத்திறனாக்குவதற்கு குற்றச்செயல்களைத் தடுத்தல் திருத்தச்சட்டத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். ஜனநாயகத்தின் இரண்டாவது தூணான நீதித்துறையிலுள்ள ஓட்டைகள் விரைவாக அடைக்கப்படவேண்டும்.


எனவே, குற்றச்செயல்களைத் திருத்தும் சட்டம் நீதித்துறையின் முக்கிய பதிவுகளான (கடைந) 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் சட்டத்தில் தோதான பிரிவுகளை நீக்கப்பட்ட குற்றவியல் சட்டக்கோவையின் பிரிவு இலக்கங்களைக்கொண்டு பிரதீயீடு செய்வதன் மூலம் திருத்துவதற்கு வழிவகை செய்வதும் காலத்தின் உடனடித்தேவையாகும். இங்கு முக்கியம் என்னவென்றால், இலங்கை குற்றவியல் சட்டம் இலங்கை மக்களுக்கு மட்டுமல்லாமல் இலங்கையில் வசிக்கின்ற சகலருக்கும் ஏற்புடைய சட்டமாகும்.


எனவேட் நீதித்துறையை வினைத்திறமையுடன் செயற்படுத்துவதற்கு ஏற்புடையதாக 22 ஆம் அத்தியாயமான குற்றச்செயல்களைத் தடுத்தல் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம், இந்த முதன்மைச் சட்டவாக்கத்தின் அட்டவணையைப் பொருத்தமானவாறு மாற்றீடு செய்வது காலந்தாழ்த்தாமல் செய்யப்பட வேண்டிய திருத்தமாகும்.


இதன் மூலம், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான தவறின் தன்மைகள், கணினி வழிக் குற்றச்சட்டத்தின் கீழான தவறின் தன்மைகள், போதையூட்டும் ஒளடதங்களினதும் உளமருட்சி ஏற்படுத்தும் பதார்த்தங்களினதும் சட்டவிரோதமான வியாபாரத்திற்கெதிரான சமவாயங்களின் கீழ் வரும் தவறுகள், சித்திரவதை மற்றும் வேறு கொடுரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்தல் அல்லது தண்டித்தல் என்பனவற்றுக் கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ்வரும் தவறுகள், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயச்சட்டத்தின் கீழான தவறுகள், சுடுபடைக்கலன்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான தவறுகள், குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின்கீழான தவறுகள், புலமைச் சொத்துச்சட்டத்தின் கீழான தவறுகள், பகிரங்க ஆதனச் சட்டத்தின் கீழான தவறுகள், தீங்கு விளைவிக்கும், ஆயுதங்கள் சட்டத்தின் கீழான தவறுகள், கொடுப்பனவு உபாயங்களின் மோசடிச்சட்டத்திற்கு கீழான தவறுகள், தண்டனைச்சட்டக் கோவையின் கீழான தவறுகள், நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் சட்டத்தின் கீழான தவறுகள், பணம் தூய்தாக்கல் தடைச்சட்டத்தின் கீழான தவறுகள், பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான தவறுகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தின் கீழான தவறுகள் என்று 107 வகையான தவறுகளின் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தின் தோதாதன பிரிவுகள் இலக்கம் மாற்றீடு செய்யப்படுகின்றது.


இவ்வாறான திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஜனநாயகத்தின் மூன்றாவது தூணான நிர்வாகத்துறையினருக்கும் மற்றும் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் நடவடிக்கைகளை இலகுபடுத்துவதுடன், நீதிமன்றங்களின் வழக்குகளின் தீர்ப்புகளை விரைவுபடுத்த உதவும். எனவே, இச்சட்டதிருத்தத்தைக் காலந்தாழ்த்தாது சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதை நாம் வரவேற்கின்றோம்.


இறுதியாக நான் பேசுவது உள்ளூர் அதிகாரசபைகள், விசேட ஏற்பாடுகள் சட்டத்தைப் பற்றியாகும்.
காலந்தாழ்த்தியேனும் இவ்விசேட சட்ட ஏற்பாடுகளை மாகாண சபைகள், மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் இச்சபையில் சமர்ப்பித்துள்ளதை வரவேற்கின்றோம். நீண்டகாலமாக, அசாதாரணமான சூழ்நிலைகள் காரணமாக வடமாகாணத்திலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று என்று மக்களால் அறியப்படும் மரிட்டைம்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பிலான அறிவித்தல்கள், தேர்தல்களைப் பிற்போடுதல், நியமனங்களை அளித்துள்ள ஆட்கள் இறந்தமை, புலம்பெயர்ந்தமை, கட்சி மாறியுள்ளமை, முப்பத்தைந்துக்கு குறைந்த அபேட்சகர்கள் 35 வயதுக்கு மேற்பட்டவராகியுள்ளமை காரணமாக இச்சட்டதிருத்தம் அவசியமாகின்றது.


இவ்விசேட ஏற்பாடு சட்டம் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு வழிசெய்திருப்பது வரவேற்கத்தக்கது.


இவ்விசேட ஏற்பாட்டுச் சட்டத்தில் தமிழ் மொழிபெயர்ப்பில் கரைத்துறைப்பற்று, மரிட்டைம்பற்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மரிட்டைம்பற்றை தமிழில் கரைத்துப்பற்று என்றே அப்பிரதேச மக்கள் அழைப்பதால் கரைத்துறைப்பற்று என்று அழைக்கப்படும் மரிட்டைம்பற்று என்ற ஆங்கிலச் சொற்பதத்திற்கு தமிழில் கரைதுறைப்பற்று என்று திருத்தம் செய்யுமாறு அமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.


இறுதியாக, ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகம், நான் ஏற்கனவே கூறிய மூன்று தூண்களையும், அவற்றில் என்ன நடக்கின்றன என்பதனைப் பற்றியும், உண்மைகளையும் அவற்றின் விமர்சனங்களையும் செய்தியாகவும், பகுப்பாய்வாகவும் மக்களிடம் கொண்டு'செல்லும் மகத்தான கடமையைச் செய்யவேண்டும். உண்மைகள் புனிதமானவை. கருத்துச் சுதந்திரமானது என்ற மூலமந்திரத்தைப் பதிகாலாக கொண்டு மக்களுக்கு ஊடகத்துறையினர் சேவையாற்ற வேண்டும். மக்களுக்கு உண்மைகள் கொண்டு செல்லப்படவேண்டும். அந்த வகையில், அவர்கள் நாட்டின் நலனையும், மக்களின் நலனையும் முன்னிறுத்தி ஜனநாயகத்தை இந்த நாட்டில் பலப்படுத்துவதற்காக செய்கின்ற பங்களிப்பை நாம் வரவேற்பதோடு, அவர்களின் சேவைக்காக எமது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


தமிழ் மக்கள் தமக்கான நீதிக்காக காத்திருக்கும் சூழலுக்குள்ளே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
போர்க்குற்ற விசாரணைகள், மனித உரிமை மீறல்கள், காணாமல்போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் ஆகியவற்றுக்கு நம்பகமான விசாரணைப் பொறிமுறையின் ஊடாக பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.


அத்தகைய விசாரணகளின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், பரிகாரமும் கிடைக்கச்செய்வது நாம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இவ்விடயங்களில் நீதி கிடைக்கவேண்டும் என்று காத்திருக்கும் மக்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைக்க வழி செய்யப்படாமல் காலந்தாழ்த்தப்படுமாக இருந்தால் அது நீதி மறுக்கப்படுவதற்கு ஒப்பானதாகும்.


அதேபோல் புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டபோது தன்னை கொலைசெய்ய முயன்றவர் என்று கூறப்பட்டவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கி தனது நல்லெண்ணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தினார்.


அதுபோல் 1998ஆம் ஆண்டு என்னைக் கொலைசெய்யும் நோக்கத்துடன் தாக்கியவர்களுக்கும், என்னை தற்கொலைத் தாக்குதல் நடத்தி கொலைசெய்வதற்கு முயற்சி செய்தவர்களுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கும் நீதிமன்றம் தண்டனைகளை வழங்கி தீர்ப்புகளை வழங்கியிருந்தாலும், அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டவர்கள் என்பதால் அவர்களை மன்னித்து பொதுமன்னிப்பு வழங்கப்படவேண்டும் என்று நானும் விரும்புகின்றேன். எனது விருப்பத்தை அடிக்கடி வெளிப்படுத்தியும் வந்திருக்கின்றேன்.


இவ்வாறான சூழலில் பல ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டு தண்டனைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு இந்த அரசு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலைசெய்து தனது நல்லிணக்கச் சமிக்ஞையை தமிழ் மக்களுக்கு வெளிக்காட்டவேண்டும் என்றும் இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக் கூறிவைக்க விரும்புகின்றேன்'' என்றார்.

Latest News

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top