முஸ்லிம் காங்கிரசிடம் இருந்து கைநழுவுமா கல்முனை மாநகர சபை

முஸ்லிம் காங்கிரசிடம் இருந்து கைநழுவுமா கல்முனை மாநகர சபை

எதிர்வரும் உள்ளுராட்சித் தொடர்பில் நாடளாவிய ரீதியில் பல முன்னெ டுப்புக்களை ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் முன்னெடுத்து வருகின்றன. பெரும் பான்மைக்கட்சிகளின் கிராமியமட்டத்திலான பலத்தினை உரசிப்பார்க்கின்ற தேர்தலாக இந்த உள்ளூராட்சித்தேர்தலை கொள்ள முடியும்.

கடந்த காலங்களை விடவும் இம்முறை வித்தியாசமான முறையில் இத்தேர்தல் இருக்கப்போகின்றது. முன்னர் தனிப்பட்ட செல்வாக்கினை விடவும் கட்சியின் செல்வாக்கு மாத்திரமே ஒருவரின் வெற்றியில் தாக்கம் செலுத்திய பிரதானமான காரணியாகும். ஆனால், இம்முறை கட்சியின் செல்வாக்கினை விடவும் தனிப்பட்ட குடும்ப செல்வாக்கு, பரம்பரை செல்வாக்கு என்பன இத்தேர்தலில் தாக்கம் செலுத்தும் பிரதான காரணிகளாக அமையும்.

கடந்த முறை விருப்பு வாக்குகளின் அடிப்படையிலேயே வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இம்முறை முற்றுமுழுதாக வித்தியாசமான முறையில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படவிருக்கிறார்கள். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட  கிராமசேவையாளர் பிரிவுகளை ஒன்றிணைத்து ஒருவட்டாரமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, குறித்த வட்டாரத்தில் தனிப்பட்ட செல்வாக்கினை கொண்டவர்கள் எந்தக்கட்சியில் களம் இறங்கினாலும் அந்த வட்டாரத்தை வெற்றிகொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு அதிகமிருக்கின்றது. இது வெறும் அனுமானம் மட்டுமே. இந்தக் கணிப்பு மாறவும் இடமுள்ளது.

வட்டாரத்தேர்தல் முறையில் கட்சித்தலைமைகளுக்கு அதிக அதிகாரமும் ஆதிக்கமும் இருக்கும். தாம் விரும்பிய வேட்பாளர்களை வெற்றிபெறவைக்கவும் அவ்வாறே தவிசாளர் பதவிகளை வழங்கவும் முடியும். தனது கட்சி சார்பான ஒருவரை நீக்கிவிட்டு தாம் பிரேரிக்கின்ற இன்னொருவருக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்கவும் முடியும். எது எப்படியிருந்தபோதிலும் இந்த தேர்தல் முறையின் மூலம் குறித்த கட்சியின் சார்பில் ஒரு வேட்பாளரே களமிறக்கப்படுவார். அவரின் ஆளுமையும் செல்வாக்கும் அந்தத்தேர்தலில் பெரிய பாதிப்பினை உண்டு பண்ணும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தநிலையில் கல்முனை மாநகர சபை தொடர்பிலான அவதானத்தை செலுத்தினால், கல்முனை மாநகர சபையானது இதுவரைக்குமான எல்லா உள்ளூராட்சி தேர்தல்களிலும் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் கைகளிலேயே இருந்துவந்துள்ளது. வரலாற்றில் 1990களின் பின்னர் கல்முனை தொகுதியாகட்டும் அல்லது கல்முனை மாநகர சபையாகட்டும் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக இருந்துவந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும். ஆனால், அதனை தக்கவைப்பதற்கு வட்டாரங்கள் தோறும் அறிவும் ஆளுமையும் தகுதியும் மிக்க வேட்பாளர்களையும் தாண்டி மேற்சொன்ன தகைமைகளுடன் சிறந்த குடும்பப் பின்னணி மற்றும் அரசியல் பின்னணி போன்றவற்றை கொண்டவர்களை இனங்காண வேண்டும்.

சாய்ந்தமருந்துக்கான தனியான உள்ளூராட்சி மன்றக்கோரிக்கையின் பின்னணியிலிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான மறைவான சக்திகள் தமது வஞ்சத்தை தீர்த்துக்கொள்ள இந்த தேர்தலினை பயன்படுத்த முயற்சிகளை பரவலாக மேற்கொள்ளும். ஆனால், சாய்ந்தமருது மக்கள் மிகத்தெளிவான முடிவெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸின் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்ட வரப்பிரசாதங்களை நினைவில் வைத்தே செயற்படவேண்டும். இப்போதுள்ள அரசியல் போக்கினை ஆராய்கின்றபோது சாய்ந்தமருது மக்கள் அமைச்சர் ஹக்கீமின் கரத்தை பலப்படுத்தும் திடமான எண்ணத்தில் இருப்பது தெளிவாகின்றது.

அதற்கான சான்றாக கடந்தவாரங்களில் தனியான உள்ளூராட்சிசபை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த பலர், இப்போது அமைச்சர் ஹக்கீமிடம் வந்து தேர்தலில் களமிறங்க வாய்ப்புக்கேட்டு வருவதை சுட்டமுடியும். இருந்தும், இம்முறை சாய்ந்தமருதில் தெரிவுசெய்யப்படுகின்ற வேட்பாளர்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இறுக்கமான நடைமுறையினை மேற்கொள்வதன் மூலம் தகுதியான, தளம்பலற்றவர்களை இனங்காணமுடியும்.

இருந்தும், கல்முனைப்பகுதியில் களமிறக்கும் வேட்பாளர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளும் என எதிர்பார்க்க முடியும். அந்தவகையில் கடந்த தேர்தலில் கல்முனைப்பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மாநகர சபைக்காக தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற்றவர்களோடு புதிதாக செல்வாக்குள்ள குடும்பப்பின்னணி கொண்டவர்களையும் களமிறக்க வேண்டும். அவ்வாறு களமிறக்கப்படுகின்றவர் கட்சிக்கும் தலைமைத்துவத்திற்கும் விசுவாசமானவராக இருப்பாரேயானால் கடந்த காலங்களில் சிராஸ்மீரா சாகிப் மற்றும் ஜெமீல் போன்ற பதவிக்காக செயலாற்றுகின்றவர்களை போன்று அல்லாமல் உண்மையான சமூகப்பற்றுள்ளவர்களை உருவாக்கமுடியும்.

அந்தவகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளராக இருக்கின்ற ரஹ்மத் மன்சூர் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் கவனத்தில் கொள்ள வேண்டும். கௌரவமான அரசியல் பின்னணியினையும், செல்வாக்குள்ள சிறந்த குடும்பப் பின்னணியையும் கொண்ட ரஹ்மத் மன்சூர் தந்தை மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் அரசியல் பாசறையில் வளர்ந்தவர்.ஆங்கிலேயர் காலத்தில் கேட் முதலியார் என்று அழைக்கப்பட்ட
எம்.எஸ்.காரியப்பரின் பேரன்தான் இந்த ரஹ்மத் மன்சூர். முதன்முதலில் முஸ்லிம் கட்சியொன்றினை பதித்தவர் எம்.எஸ்.காரியப்பர்தான் என்கின்ற வரலாறு நிறையப்பேருக்கு தெரியாத அரசியல் வரலாறாகும். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம், தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் அக்கறையுடன் செயற்பட்டவர். எம்.எஸ்.காரியப்பர் எனும் பெரும் அரசியல் தலைமையின் மருமகன் தான் அப்துல் ரசாக் மன்சூர். அந்த நாட்களில் பிரபலமான சட்டத்தரணி ஜி.ஜி.பொன்னம்பலத்தின் உதவிச் சட்டத்தரணியாக பணியாற்றியவர்.

மறைந்த அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் 1964ஆம் ஆண்டு கிராமிய சபைத் தேர்தலில் போட்டியிட்டார், பின்னர் 1970ஆம் ஆண்டு டட்லி சேனாநாயக்காவின் தலைமையிலான ஐ.தே.கவின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெறும் 569 வாக்குகளினால் தனது நாடாளுமன்றக்கதிரையை இழந்தார். இதன்பின்னர் 1977 ஆம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், தொடர்ந்தும், சுமார் 1994 ஆம் ஆண்டுவரை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.இதில் இவர் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக பதவிவகித்த காலம் அம்பாறை மாவட்டத்திற்கான பொற்காலமாகும்.

தமிழ் முஸ்லிம் உறவினை பலப்படுத்துவதிலும் இன,மத பேதங்களுக்கப்பால் அபிவிருத்திப்பணிகளில் முன்னின்று செயலாற்றுவதிலும் மறைந்த அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் இதயசுத்தியுடன் இயங்கியவர். 2000ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஸ்ரப்புடன் இணைந்து கட்சியை நெறிப்படுத்துவதில் அவருக்கு உறுதுணையாக இருந்தார். எனினும், தலைவர் அஸ்ரப்பின் அகால மரணத்தின் பின்னர் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீமின் கரத்தை பலப்படுத்துவத்தில் தனது மரணம் வரைக்கும் இணைந்தே செயலாற்றினார்.

ஏ.ஆர்.மன்சூரைக் கௌரவிக்கும் முகமாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் குவைட் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பதவியினை அவருக்கு வழங்கிக் கௌரவித்தார். இவர் அங்கு பதவிவகித்த காலத்தில் 900 மில்லியன் நிதியில் ஒலுவில் பல்கலைக்கழகத்தில் தனியான மருத்துவபீடத்தை நிறுவினார். இந்த நிதியானது ஏ.ஆர்.மன்சூரின் வேண்டுகோளின்படி குவைத் அரசினால் வழங்கப்பட்டது. அத்தோடு, இவரது அரசியல் காலத்தில் சுமார் 9000 வேலைவாய்ப்புக்கள் அம்பாறை மாவட்டத்தில் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரைக்குமான ரயில் சேவையை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முதலில் முன்மொழிந்தவர் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் ஆவார். அதற்கான உத்தேசத் திட்டவரைபினை வரைந்து ஈரான் அரசிடம் கையளித்து அங்கீகாரம் பெற்றவர். ஈரான் அரசும் இந்த வேலைத் திட்டத்தை செய்துதருவதற்கான ஒப்புதலை வழங்கியிருந்தது. ஆனால், தற்போது அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பிலான முன்னெடுப்புக்களை அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கொள்வாராயின் இந்தவிடயம் நடைமுறை சாத்தியமாகலாம். இந்தவிடயம் தொடர்பில் அமைச்சர் ஏ.ஆர் .மன்சூரின் புதல்வர் ரஹ்மத் மன்சூரிடம் உள்ள ஆவணங்கள் இதற்காக உதவலாம்.

இவ்வாறான பலமான அரசியல் பின்னணியைக் கொண்ட ரஹ்மத் மன்சூர் போன்ற கல்வியியலாளர்கள் இனங்காணப்பட்ட வேண்டும். றோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவருக்கு மூன்று மொழிகளிலும் செயலாற்றும் திறனும், லண்டனில் தனது பட்டப்படிப்பை முகாமைத்துவத் துறையில் பூர்த்திசெய்தவர். தற்போது வகிக்கின்ற அமைச்சரின் இணைப்பு செயலாளரின் பதவியின் மூலம் அம்பாறை மாவட்டத்தின் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கு பல்வேறு அபிவிருத்திப்பணிகளை செய்து வருவதோடு, அமைச்சுக்கூடாக நடைபெறுகின்ற அபிவிருத்திப்பணிகளை துரிதமாக செயற்படுத்துவதற்கான தூண்டியாக இவர் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் கதை அடிபடுகின்றது.

அமைச்சுக்கு தமது தேவைகளுக்காக செல்கின்ற நாட்டில் பலபாகங்களையும் சேர்ந்தவர்களின் கோரிக்கைகளை செவிமடுப்பதோடு, அவர்களுக்கான திருப்தியான மனிதாபிமான உதவிகளையும் செய்து வருவதாக கல்முனைப்பிரதேசத்து மக்கள் ரஹ்மத் மன்சூர் தொடர்பில் பேசுகின்றனர்.காலாதி காலமாக கல்முனை நகரசபையை தன்வசம் வைத்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை மீண்டும் தக்கவைத்துக்கொள்ளும் வியூகங்களை வகுக்கவேண்டும். வங்குரோத்து மாற்று அரசியல் சக்திகளின் சதிகளில் இருந்து தன்னை காத்துக்கொள்ளும் உபாயம் பற்றி சிந்திக்க வேண்டும். எப்படியும் மாற்று அரசியல் சக்திகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலாக அமையாது. அதற்காக அவர்களினால் ஏற்படுத்தப்படுகின்ற தடைகள் தொடர்பில் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. கல்முனை மாநகர சபையை தன்வசப்படுத்தும் நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாக இருப்பது மிகத்தெளிவாக தெரிகின்ற உண்மையாகும்.அதனை இலகுபடுத்த ரஹ்மத் மன்சூர் போன்ற ஆளுமைகளை வட்டாரங்கள் தோறும் களமிறக்குவது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் சிந்திக்க வேண்டும்.

தனது தந்தையின் வழியில், தான் வாழுகின்ற பிரதேசத்திற்கு சுபீட்சமான அபிவிருத்தியையும்,இனரீதியான ஒற்றுமையையும் உறுதிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பத்தை ரஹ்மத் மன்சூர் போன்றவர்களுக்கு வழங்குவது எதிர்கால கல்முனை அரசியலின் தளத்தை புதிய தளத்திற்கு கொண்டு செல்லும்என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும். உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்படும் எனும் பரப்புரைகள் உலõவுவருகின்ற நிலையில் ஒருவேளை உள்ளூராட்சி தேர்தல் நடைபெறுமாயின் ரஹ்மத் மன்சூரையும் ஒரு வேட்பாளராக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கல்முனை மாநகர சபையானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கேந்திர நிலையமாகும் அவ்வாறே முஸ்லிம்களினதும் கேந்திர நிலையமாகவும் அது திகழ்கின்றது. இந்த கேந்திர நிலையத்தை சீரழித்து தமிழ், முஸ்லிம் உறவுகளைத் துண்டாட முனைகின்றவர்கள் தொடர்பில் பிரதேசத்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். கல்முனை மாநகர சபை மு.கா விடமிருந்து கைநழுவிப்போகும் எனும் கனவில் மிதக்கின்ற பச்சோந்திகளுக்கு மக்கள் நல்லதொரு பாடத்தை எதிர்வரும் காலங்களில் புகட்டுவார்கள் என நம்பலாம்.

 

மதியுகன்

.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top