பட்ஜட் வரமா? சாபமா?

பட்ஜட் வரமா? சாபமா?

நாங்கள் வரலாற்றின் குறுக்குப் பாதைகளில் இருக்கின்றோம். சுதந்திரம் மற்றும் சுபீட்சம் என்பவற்றின் ஒரு புதிய யுகத்திற்கு எங்கள் வேற்றுமையில் இணைந்தவர்களாக முன்னோக்கி நடக்கப் போகின்றோமா அல்லது இருண்ட ஒரு கடந்த யுகத்திற்கு மீளவும் செல்லப் போகின்றோமா? தெரிவு எங்களுடையதே நிதியமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறே தனது கன்னி பட்ஜட் உரையை நிறைவு செய்தார்.

தேசிய அரசாங்கத்தின் அடுத்த வருடத்திற்கான வரவுசெலவுத் திட்டம் (பசுமை மற்றும் நீல பட்ஜட்) கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

சில ஏமாற்றங்கள் மற்றும் எதிர்பாராத அதிரடி அறிவிப்புகள், தூரநோக்கு மற்றும் சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறை போன்ற விடயங்களை வலியுறுத்துவதாக அடுத்த வருடத்திற்கான வரவுசெலவுத் திட்டம் அமைந்துள்ளது.

இலங்கையின் 71ஆவது பட்ஜட்டாக இது அமைந்துள்ளது. கடந்த ஆரம்பமான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் எதிர்வரும் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதோடு, அன்றைய தினம் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அதன் பின்னர் 17ஆம் திகதி முதல் டிசம்பர் 9 ஆம் திகதி வரை குழுநிலை விவாதங்கள் நடைபெற்று அன்றைய தினம் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்திற்கான மொத்த செலவீனம் 3,982 பில்லியன் ரூபாய்களாக காணப்படுகின்ற அதேவேளை, 2,175 பில்லியன் ரூபாய் வருமானமாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே, வழமையான வருமானத்தைவிட செலவு அதிகமாக காணப்படும் பாதீடே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதிக நிதி ஒதுக்கீடு

நாடாளுமன்றத்தில் கடந்த 9ஆம் திகதி முன்வைக்கப்பட்ட முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட சில துறைகளுக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமையவே கடந்த வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜட்டின் அறிவிப்புகளும் வெளியாகியிருந்தன. யுத்தம் முடிந்து ஒரு தசாப்தத்தை நெருங்கும் இந்த இந்த சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பிற்கு ஒவ்வொரு பட்ஜட்டிலும் கூடுதலான நிதி ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்ற நிலையில், அடுத்த வருடமும் பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, கல்விக்காக 48, 660 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனூடாக ஸ்மார்ட் கிளாஸ் ரூம் திட்டம் பல்கலைக்கழகங்களில் வைத்தியபீடங்களை ஆரம்பித்தல்,7 பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்பப் பிரிவுகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் தொடர்பிலான பல முன்மொழிவுகளை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அது மாத்திரமன்றி, சுகாதாரத் துறை சார்ந்தவிடயங்களில் மூலதனச் செலவு 44 மில்லியன்கள் எனவும், மீண்டு வரும் செலவீனங்கள் 134 மில்லியன்கள் எனவும் பட்ஜட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பிலும் பட்ஜட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தூரநோக்கு

நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த வருடத்திற்கான பட்ஜட்டில் அடுத்து பல ஆண்டுகளுக்கான முன்மொழிவுகளை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் 2030ஆம் ஆண்டளவில் அடைய எதிர்பார்க்கும் 17 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் அரசின் விசன் 25 திட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் பாதீட்டு அறிக்கை அமைந்திருந்தது. 2017 ஆம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சியினை சுமார் 4.5 சதவீதம் வரை வளர்ச்சியுறச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, 2020 ஆம் ஆண்டளவில் 6 சதவீத உயர்வான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியொன்றிற்கு படிப்படியாக நகர்வதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் தனது பட்ஜட் உரையில் குறிப்பிட்டிருந்தார். சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதை இலக்காகக் கொண்டு 2025ஆம் ஆண்டளவில், இலங்கை உயர் நடுத்தர வருமான மட்டத்தினை அடைவதற்கு பொருளாதார வளர்ச்சியொன்றின் அவசியத்தையும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இலங்கையின் தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி, தனிநபர் வருமானத்தை அதிகரித்தல், வேலைவாய்ப்பின்மையை குறைத்தல் உள்நாட்டு பிரஜைகளின் பிரச்சினையை தீர்ப்பதில் தூரநோக்குடன் செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, அதற்கான முன்மொழிவுகளும் பட்ஜட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நல்லிணக்க பட்ஜட்

வழமையாகவே பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்மாறான விமர்சனத்தையே முன்வைக்கும். காரணம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு தமிழ் மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்ப போதுமான நிதியை எந்தவொரு அரசாங்கமும் ஒதுக்கீடு செய்வதில்லை என்ற குற்றச்
சாட்டு முன்வைக்கப்படும். எனினும், கடந்த வியாழக்கிழமை முன்வைக்கட்ட பட்ஜட்டானது பல வருடங்களின் பின்னர் தமிழ்க் கூட்டமைப்பின் வரவேற்பை பெற்றதாக அமைந்திருந்து.

தமிழ் மக்களுக்கும், நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில், அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு, செலவுத் திட்டம் அமைந்திருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருந்த அதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட விடயங்கள் அனைத்தும் புதிய வரவு செலவுத் திட்டத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்
சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். இதற்கு சான்று பகரும் வகையில், நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்ததோடு, இதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்காக மேலதிக நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களால் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு குறைந்த வட்டியில் வடக்கு மற்றும் வட மத்திய மாகாண மக்களுக்கு கடன் வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு 3000 மில்லியன் ரூபாவையும், மலையக மக்களின் குடியிருப்புப் பிரச்சினைகளுக்கு தீர்வாக 5000 வீடுகளைக் கட்டுவதற்காக 2000 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கியுள்ளதாக நிதியமைச்சர் தனது பட்ஜட் உரையில் தெரிவித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் நவீன பொருளாதார நிலையம், யுத்தத்தினால் கணவரை இழந்த பெண்களுக்கான உதவித்திட்டங்கள், வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை இந்த வருடத்திற்குள் செயற்படுத்துவதற்கு ஏதுவாக 1.4 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகளையும் நிதியமைச்சர் வெளியிட்டிருந்தார். இவைகள் செயல் வடிவம் பெறுமா என்பது வேறுகதை. எனினும், முன்மொழிவுகள் வரவேற்கத்தக்கவைகளாகவே இருக்கின்றன.

நீலப் பொருளாதாரம்

இலங்கையின் கடல் எல்லையானது நாட்டின் நிலப்பரப்பினை விட 26 மடங்கு பெரியதாக காணப்படுவதோடு, நாட்டின் பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பினையும் வழங்கி வருகின்றது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன் உள்ளிட்ட கடல் சார் உற்பத்திகள் இலங்கையின் மிக முக்கியமான வருவாய் மார்க்கமாகவும் காணப்படுகின்றது. அந்த வகையில் கடல்சார் பொருளாதாரத்தினை ஊக்குவிப்பதோடு, அதனை பாதுகாப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் கரிசனையை பிரதிபலிப்பதாகவும் அடுத்த வருடத்திற்கான பட்ஜட் காணப்படுகின்றது.

ஒருங்கிணைந்த கரையோர வலய முகாமைத்துவ பொறிமுறையொன்று அனைத்து அக்கறையுடையவர்களது பங்குபற்றுகையுடன் விருத்தி செய்யப்படவுள்ளதோடு, கரையோரங்கள் கடலரிப்பு மற்றும் மாசடைதல் போன்ற அபாயங்களுக்கு முகங்கொடுத்துள்ளமையால். கல்கிஸையிலிருந்து இரத்மலானை வரையிலான கடற்கரை மீள்நிரப்புகை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதோடு, சுற்றுலா மற்றும் மீன்பிடி துறைகளில் மேலும் முதலீடுகளை உருவாக்கும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் பட்ஜட் உரையில் நிதியமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

நீர்கொழும்பிலிருந்து மாரவில வரையிலான கரையோரத்தினை பாதுகாப்பது, அடுத்த வருடம் நாட்டில் அமைந்துள்ள 116 களப்புகளில் 10 இனை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முதலீடு செய்யவுள்ளதாகவும் பட்ஜட்டில் கூறப்பட்டுள்ளது. பொருளாதாரத்தினை சுற்றுச் சூழல் ரீதியாக நிலைபேறான அபிவிருத்தி உபாயத்தின் மீது கட்டியெழுப்புவதோடு, நீலப்பசுமைத் திட்டத்தின் கீழ் சுற்றாடலுக்கு உகந்த வாகன இறக்குமதி தொடர்பில் பாரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளையும் அமைச்சர் முன்வைத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

சுற்றுச்சூழலில் அக்கறை

காலநிலை மாற்றம் தொடர்பிலான பரிஸ் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டுள்ள நிலையில் அதனை அமுல்படுத்தும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசடைதலை தடுக்கும் வகையிலான சில அதிரடி அறிவிப்புகளை பட்ஜட் அறிவிப்பில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக நாட்டில் சுற்றுச் சூழல் மாசில் பாதியை தனக்கு சொந்தமாக்கியுள்ள காபனை முற்றாக கட்டுப்படுத்தும் வகையில் சில விடயங்கள் முன்மொழியப்பட்டிருந்தன. மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கரவண்டிகள் மற்றும் பஸ்களுக்கு வரி மானியம் வழங்குதல், 2500இஇவலுவிற்கு மேற்பட்ட வாகனங்களுக்கு அதிசொகுசு வரி விதித்தல், அடிணூ ஆச்ஞ் இல்லாத வாகனங்களை இறக்குமதி செய்ய தடை விதித்தல்,பாவனையில் உள்ள எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலான
சுற்றாடலுக்கு பொருந்தும் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்கான முன்மொழிவுகள். மின்சாரத்தில் இயங்கும் வாகன இறக்குமதிக்கு வரிச்சலுகை. குறிப்பாக, 2040ஆம் ஆண்டளவில் மசகு எண்ணெய்க்கு பதிலாக மாற்று வலுச்சக்திகளை கொண்ட வாகனங்களுக்கான பயன்பாட்டிற்கான வேலைத்திட்டம் போன்றன சுற்றுச்சூழலில் அரசின் அக்கறையை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தன.

2025ஆம் ஆண்டளவில் மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கரவண்டிகளும் மின்சார பஸ் வண்டிகளும் இறக்குமதி செய்யப்படவுள்ளதோடு, பயன்படுத்திய
முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தமது முச்சக்கர வண்டிகளை பங்களாதேஷ் போன்ற ஏற்றுமதி செய்ய ஊக்குவிப்புகளும் வழங்கப்படவுள்ளதாக ஒரு விசேட அறிவிப்பும் வெளியாகியிருந்தது. வாகனங்களுக்கான காபன் வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதிசொகுசு வாகனங்களுக்கு 25 இலட்சம் ஷரூபா வரி விதிக்கப்படவுள்ளதாகவும் வெளியான அறிவிப்புகள் காற்று மாசடைதலை தடுப்பதற்கான ஒரு உபாயமாகவும் இது பார்க்கப்படுகின்றது. .

நிவாரணம் எங்கே?

பட்ஜட் சமர்ப்பிக்கப்படப் போவதாக செய்திகள் வெளியானவுடன் சாதாரண பொதுமக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்? நிச்சயமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகுறைப்பு ஒரு அரசு அல்லது தனியார் ஊழியராக இருந்தால் சம்பள அதிகரிப்பு இது இயல்பானதே. எனினும், எதிர்பார்ப்பு நியாயமானதா என்றால் அதில் சிக்கலும் இல்லாமல் இல்லை. எனினும், சாதாரண குடிமகனை திருப்திப்படுத்தும் எந்தவொரு நிவாரண அறிவிப்புகளும் இந்த பட்ஜட்டில் வெளியாகவில்லை. பட்ஜட் சமர்ப்பிக்கப்படுவதற்கு முதல்நாள் புதன்கிழமை (நவம்பர் 8) மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாகவும், சில பொருட்களின் இறக்குமதி வரிகள் குறைக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது. என்றாலும், பட்ஜட்டில் எவ்வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

இது சாதாரண இலங்கை குடிமகனுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்த விடயம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடு பற்றி முழுமையாக ஆராயப்படவுள்ளதுஎன நிதியமைச்சர் தனது பட்ஜட் உரையில் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை, 500 பேருக்கும் அதிகமான அரச ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களை மையப்படுத்தி பிள்ளைகளுக்கான பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அறிவித்தார். இதனைத் தாண்டி வேறு எந்தவொரு மகிழ்ச்சியான அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது அரச மற்றும் தனியார் ஊழியர்களிடையே பலத்த ஏமாற்றத்தையே அளித்திருக்கின்றது என்றால் அது மிகையல்ல.

எது எவ்வாறிருப்பினும் தூரநோக்கை அடிப்படையாகக் கொண்ட பட்ஜட் ஒன்றை அரசு சமர்ப்பித்துள்ளது. இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து உருவாக்கியுள்ள பட்ஜட் என்பதால் தோற்கடிக்கப்படக்கூடிய அறிகுறிகள் குறைவாகவே காணப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் தாண்டி இவைகளை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல் காணப்படுகின்றன. இன்னும் 3 வருடங்களே தேசிய அரசாங்கம் பதவியில் இருக்கப்போகின்றது. அதன் பின்னர் எந்தக் கட்சி (கூட்டணி) ஆட்சியை கைப்பற்றப்போகின்றது என்பதை தற்போதைய அரசியல் சூழ்நிலையை வைத்து கணிப்பது மிகக்கடினம். இந்த சூழ்நிலையில் இந்த பட்ஜட்டின் முன்மொழிவுகள் எதிர்வரும் 3 ஆண்டுகளில் செயற்படுத்தக்கூடிய விடயங்களையாவது அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் என்பதே காலத்தின் தேவை.

ச.பார்தீபன்

.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top