விழித்துக்கொள்வோம்

விழித்துக்கொள்வோம்

காலத்துக்குக் காலம் எத்தனையோ அசம்பாவிதங்களும், இயற்கைச் சீற்றங்களும் இடம்பெற்றுகொண்டுதான் இருக்கின்றன. சுனாமிக்குப் பின்னர் நாம் அனைவரும் இதுபோன்றதொரு அழிவு இனி ஏற்படக்கூடாதென பிரார்த்தனை செய்தோம். ஆனால், அதற்குப் பின்னரும் இயற்கைச் சீற்றங்கள் நம்மை விட்டபாடில்லை.

ஜனவரியிலிருந்து வறட்சியும் அதன்பின்னர் பருவமழை பெய்தால் வெள்ளமும், மண்சரிவும் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. எத்தனையோ மனித உயிர்கள் சுனாமிக்குப் பின்னர் இயற்கைச் சீற்றங்களால் மடிந்துபோயின. சுனாமிக்குக் கொடுத்த முக்கியத்துவம் அதற்குப் பின்னர் நடந்த எத்தனையோ இயற்கைச் சீற்றங்களுக்கு இலங்கை அரசு கொடுக்க மறுத்துள்ளது.

ஆனாலும், வருடாவருடம் பல மில்லியன்களை வரவுசெலவுத் திட்டத்தில் அனர்த்த முகாமைத்துவத்துக்கென ஒதுக்குகின்றது. கடந்த வருடம் மாத்திரம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின்கீழ் 117 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக பாதுகாப்பு அமைச்சின்கீழ் திடீர் அனர்த்த சேவைக்கான 60 மில்லியின் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிதி எந்தளவு அனர்த்த பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இவற்றையெல்லாம்விட 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் 5.8 பில்லியன் ரூபாவை ஒதுக்கியதன் மூலம் இலங்கை இயற்கைச் சீற்றத்தால் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர ஆரம்பித்துள்ளது என்றே கூறவேண்டும்.

வருடா வருடம் வெள்ளம், வறட்சி, சூறாவளி, மண்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்படுவோரின் தொகை அதிகமாக இருக்கின்றதே தவிர, குறைந்தபாடில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதற்கேற்றாற்போல 1960ஆம் ஆண்டிலிருந்து இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுவோரின் தொகை பன்மடங்காகியுள்ளது.

இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க இலங்கை அரசு இருவகையான கொள்கைகளைப் பின்பற்றுகின்றது. நிர்வாக முகாமைத்துவம், நிறுவனக் கட்டமைப்பு என்ற இரு துறைகளுமே இதுவரைகாலமும் அனர்த்த முகாமைத்துவத்திற்கு சிறப்பான பங்களிப்பைச் செய்யவில்லை.

அனர்த்த அவதான நிலையம், காலநிலை அவதான நிலையம் ஆகியன இயற்கை அனர்த்தங்களைப் பராமரிப்பதற்கான முக்கிய பங்காற்றும் நிறுவனங்களாகக் காணப்படுகின்றன. இதனோடு இனைந்து மகாவலி அபிவிருத்திச் சபை, காலநிலை மாற்றம் தொடர்பிலான அரச செயலகங்கள் ஆகியனவும் முக்கியமானவை. இவை அனைத்துக்கும் இணைத்தே வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுகின்றது.

இவ்வருட ஆரம்பத்தில் இலங்கையில் ஏற்பட்டிருந்த மிக மோசமான வெள்ள அனர்த்தத்தின்போது நிதி ஒதுக்கீட்டு பற்றாக்குறையை விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் காரணம் காட்டியிருந்தார். ஆனால், ஒதுக்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்படாத துறை என்பதை அவர் மறந்துவிட்டார்.

பருவ மாற்றங்களும் அனர்த்த கட்டுப்பாட்டு முறைமைகளும் தென்மேற்குப் பருவக்காற்று, வடகீழ் பருவக்காற்று என்ற இரண்டுமே கடுமையான மழைவீழ்ச்சியை மலைநாட்டுக்குக் கொடுக்கின்றன. இந்தக் காலப்பகுதியிலேயே மண்சரிவு அபாய எச்சரிக்கைகளும் நிலச்சரிவுகளும் மின்னல் தாக்கங்களும் அதிகளவில் ஏற்படுகின்றன.

இவற்றைவிட வடக்கு, கிழக்கைப் பொறுத்தமட்டில் மழைவீழ்ச்சி அதிகமாகப் பதிவானாலும், தொடர்ந்தும் வறட்சியான சூழ்நிலையே காணப்படுகின்றது. இந்த இரண்டும், முரண்பட்ட அனர்த்த சூழ்நிலைகளுக்கும் முகம்கொடுக்கும் வகையிலான தீர்வுத்திட்டங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

பெரும் அனர்த்த பாதிப்புகளுக்கு இலங்கை அரசு கொடுக்கின்ற அதே முக்கியத்துவம் தொடர்ந்து ஏற்பட்டுவரும் மழைவீழ்ச்சி வறட்சி பாதிப்புகளையும் இனங்கண்டு எதிர்கால செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். இல்லாவிட்டால் உயிர்காவுகையை மட்டுமே வைத்து அனர்த்தத்தின் அளவை தீர்மானிக்கும் ஒரு மட்டமான நோக்குகையிலேயே நாம் தொடர்ந்து தங்கியிருக்கவேண்டி ஏற்படும்.

பிரச்சினைகளும் இடைவெளிகளும்
இலங்கையின் இயற்கை அனர்த்தங்களுக்கென கொள்கை நடைமுறைப்படுத்த ஆவணங்கள் பல காணப்படுகின்றன. 20142018இல் இணைந்த காலநிலை முகாமைத்துவத் திட்டம், தேசிய இயற்கைத் தழுவல், 20162025 காலநிலை பாதிப்பு தொடர்பிலான அறிக்கை, தேசிய இயற்கை பங்களிப்பு செயலாற்றுகை, அனர்த்துக்குப் பின்னரான தேவையும் முகாமைத்துவமும் போன்ற பல திட்டங்கள் சதாகாலமும் உருவாக் கப்படுகின்றன. ஆனால், இயற்கைச் சீற்றமொன்று ஏற்படும்போது இந்தத் திட்டங்கள் எல்லாம் எவ்வித பிரயோசனமற்றவை என்பதை நினைவுகூருகின்றன.

இதற்கு அடுத்தபடியாக இயற்கை அனர்த்தங்கள், அபிவிருத்தி கொள்கைத் திட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றது. இது இயற்கை தொடர்பிலான பரந்துபட்ட அறிவின்மை மற்றும் எதிர்காலத்தை நோக்கிய இலக்கற்றது என்பதை பல தடவைகள் நாம் உணர்ந்துள்ளோம். உதாரணமாக, மகாவலி "எச்' வலயத்தில் உருவாக்கப்பட்ட நகர அபிவிருத்தித் திட்டங்களும் மகாஓயா அபிவிருத்தித் திட்டத்திற்கு கொழும்பு சிறு நகர மேம்பாட்டு அபிவிருத்தித் திட்டங்களும் சாத்தியமற்றுப் போயின.

இலங்கையில் இயற்கை அனர்த்தங்களைப் பாதுகாப்பதற்கு ஏற்றவகையில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் அமைச்சுகளும் அது தொடர்பில் கண்டுகொள்வதாக இல்லை. அனர்த்த அபாய மத்திய நிலையம் எந்தளவு தூரம் குறித்த செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் மிக்கது என்பதை இலங்கை இதுவரையிலும் உணராமல் உள்ளது.

அனர்த்த பாதிப்பு வலயங்களை வெளியிடுவதிலும் இலங்கை அரசு சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறது. அனர்த்த வலயங்களை அடையாளப்படுத்தலானது. அனர்த்தத்தைப் பாதுகாப்பதற்கான மிக முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகின்றது. மேற்குலக நாடுகளைப் பொறுத்தமட்டில் உயர் தொழில்நுட்ப அறிவுடன் குறித்த ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன. வெள்ளம், மண்சரிவு, சூறாவளி, மின்னல், கரையோரப் பாதிப்புகள் என்பவற்றை அடையாளப்படுத்தும் உயர் தொழில்நுட்ப வரைபடங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த முறைமை என்னவென்றே அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்குத் தெரிவதில்லை. அனர்த்தம் ஏற்படுவதற்கான வலயத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளாவிட்டால் அனர்த்தம் ஏற்பட்டவுடன் நிலைமையை சமாளிப்பதற்காக போராடுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

என்ன செய்யலாம்?
இலங்கையில் சதாகாலமும் இடம்பெறும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் தேசியக் கொள்கைத் திட்டங்கள் ஏதும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதற்கு கூட்டுப் பொறிமுறை, பிரதேச அடிப்படையை அறிந்திருத்தல், காலநிலை தழுவலை ஒப்பிட்டுப் பார்த்தல், அபிவிருத்தி செயற்பாடுகளில் தர நிர்ணயம் போன்றன அவசியமாகின்றன. இது தொடர்பிலான தெளிவை பொது மக்களுக்கு ஏற்படுத்துவதற்கு முன்னர் இவ்விடங்களை அமுல்படுத்தும் அதிகாரிகள் இது தொடர்பில் பூரண அறிவுடையவர்களாகச் செயற்படவேண்டும். இலங்கை, இயற்கை அனர்த்தம் ஏற்பட்டவுடன் சமூகப் பொருளாதாரக் காரணியாக அதனை நோக்குகின்றதே தவிர, பௌதீக காரணியாக நோக்குவதில்லை.

வெள்ளம் ஏற்பட்டவுடன் அனர்த்த நிவாரணப்பொருட்களை வழங்குதிலும் பொதுமக்களை பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்புவதிலும் காட்டும் அக்கறை அதன் பின்னர் குறித்த பிரதேசத்தின் இடவரைவு மற்றும் அனர்த்த கொள்ளளவு தொடர்பில் எந்த விதமான பரிட்சார்த்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. மக்களும் காலத்திற்கு ஏற்றாற்போல் அதே பிரதேசங்களிலேயே சேர்ந்துவாழ பழகிக்கொள்கின்றனர். இதுவே அனர்த்த பாதிப்புகளுக்கு பிரதான காரணியாக அமைந்துவிடுகின்றது.

சூழல் பாதுகாப்புத் திட்டங்கள் நீண்டகால இலக்குடையதாக இருப்பதில்லை. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2025 இலக்கு, 2018 இலக்கு எல்லாம் வெறும் ஏட்டளவிலேயே இருக்கின்றன. இப்படியிருக்கையில் அனர்த்த பாதிப்புத் தொடர்பில் கதைப்பதைவிட அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் நாம் எவ்வளவோ கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது; செயற்படுத்தியும் காட்டவேண்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது அவசியமான தேவையாயினும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஓரளவேனும் எதிர்காலத் திட்டமிடலுக்காக ஒதுக்கீடு செய்தால் அனர்த்த பாதிப்புகளை வெகுவாகக் குறைத்துக்கொள்ளலாம்.

க.கமல்

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top