பியர் விலை குறைப்பு “குடி”மக்களுக்கானதா?

பியர் விலை குறைப்பு “குடி”மக்களுக்கானதா?

நாட்டில் என்னென்னவோ பிரச்சினைகள் இருக்கும்போது பியருக்கெல்லாம் பிரச்சினையாப்பா என்று ஒரு கும்பலும், ஏற்கனவே நாடு குடிபோதையால் சீரழிஞ்சிக்கிட்டிருக்கு இதுல பியருக்கும் விலைய குறைச்சா என்ன ஆகப்போகுதோ எனக் கேட்கும் இன்னொரு கும்பலும் தற்போது முட்டிமோதிக்கொண்டிருக்கின்றன.


தேர்தலுக்காக போட்டி போட்டுக்கொண்டிருந்தவர்கள் இன்று பியரின் விலையைக் குறைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போகின்றார்களாம். இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் முழுமையான மேற்குலகு சாயல் காணப்படுகின்றது எனக் கூறுகின்றனர். இலங்கையில் எந்தவொரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதனை எதிர்ப்பதற்கும் குறை கூறுவதற்குமென்றே ஒரு கூட்டம் நிச்சயம் இருக்கும்.

அதற்காக பியருக்கு வரி குறைப்பு செய்யப்பட்டமை நியாயமானது எனக் கூறவில்லை. மதுபாவனையில் முன்னணி வகிக்கும் இரு மாவட்டங்களுமே தமிழ் மக்கள் செறிந்துவாழும் மாவட்டங்களாகும். யாழ்ப்பாணம், நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் போதைப்பொருளைக் கட்டுப்படுத்த எத்தனையோ திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டும் அவை எவையும் நடைமுறைக்கு சாத்தியப்படவில்லை.
அப்படியிருக்கும்போது தற்போது பியரின் விலையைக் குறைக்க அரசு திட்டமிட்டிருப்பது, சாராயம் போன்ற செரிமானமிக்க மதுபானங்களைத் தடைசெய்ய வேண்டும் என்பதற்காகத்தான். அல்லது செரிமானமிக்க மதுபானங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க எடுத்த மாற்றுத்திட்டமாகவே பியர் விலைக் குறைப்பை அரசு பார்க்கின்றது.

அந்த மாற்றுத்திட்டம் எந்தளவுதூரம் நடைமுறைச் சாத்தியம் என்பதே தற்போது எமக்குள்ள மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி முதலாளித்துவத்தைத் தழுவிய கட்சி என்ற கணிப்பீடு உள்ள நிலையில், இம்முறை நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் முன்வைக்கப்பட்ட வரவு-செலவுத்திட்டமும் அதன் சாயலையே பிரதிபலித்துள்ளதென்பது அநேகரின் அபிப்பிராயம். காரணம், இதற்கு முன்னர் உள்ள அரசுகள் வழங்கிய வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்குப் புறம்பாக வரி அறவீடு, இயற்கைப் பாதுகாப்பு போன்ற துறைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

இதன்காரணமாகவோ என்னவோ பியர் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நேரடியான எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். ஆனாலும், பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சமரசம் செய்ததன் விளைவாகவோ என்னவோ தற்போது பிரச்சினை சுமுகமாகியுள்ளதாகத் தெரிகிறது. தற்போது கட்சிப் பிரச்சினையைப் பேசுவதை விடுத்து பியர் விடயத்துக்கு வருவோம்.

வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி பியர் வரி குறைப்புத் தொடர்பில் கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். மென்பானங்களில் சீனியின் விலை 20 சதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், பியருக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் பியர் தயாரிப்பின்போது ஒரு நாளைக்கு 300 பொதி சீனி பயன்படுத்தப்படுகின்றது என்று ஹந்துன்நெத்தி எம்.பி. குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் மங்கள சமரவீர, 'வெளிநாடுகளில் பொதுவாக அதியுச்ச காரம் கொண்ட மதுபானங்களுக்குப் பதிலாக குறைந்த காரம் கொண்ட பியரையே அருந்துகின்றனர். பியர் அருந்தும் வீதம் வெளிநாடுகளில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகத்தான் அதிகூடிய காரம் கொண்ட மதுபானங்கங்களின் விலையை அதிகரித்துள்ளதுடன், பியரின் விலையைக் குறைத்துள்ளோம். எனினும், மென்பானங்களைப் பொறுத்தவரை மாணவர்கள் அருந்தும் 40 மில்லிலீற்றர் மென்பானத்தில் 100 வீதம் சீனி சேர்க்கப்படுகின்றது. இது பாரதூரமான விடயம். மென்பானங்கள் அருந்துவதை விடவும் பியர் அருந்துவது சிறந்தது" - என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.

மதுபாவனையின் காரத்தின் அளவுக்கேற்ப வரி அறவிடும் சர்வதேச முறைமையை இலங்கையிலும் நடைமுறைப்படுத்திக் காட்டவேண்டும் என்பதே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்த பிரதான காரணமாக இருக்கின்றது.

 

 

மதுபானங்களின் வரி அறவீடும் ஆதிக்கம் செலுத்தும் கம்பனிகளும்

டிஸ்டிலரீஸ் தனியார் கம்பனி, அஅஅ கம்பனி, லயன் பிரேவரி கம்பனி ஆகியனவே பியர் உற்பத்திக்கான பிரதான நிறுவனங்களாக உள்ளன. இம்மாதம் 9ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத்திட்டத்தில் பியர் உள்ளிட்ட மென்போதை பானங்களுக்கு வரி 33 சதவீதத்தில் குறைக்கப்பட்டது. செரிமானம் கூடிய ஒவ்வொரு மதுபானத்துக்கும் 2 சதவீதத்திலிருந்து வரி அதிகரிப்பு விதிக்கப்பட்டதோடு, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியும் 2 சதவீதம் விதிக்கப்பட்டிருந்தது.

மொத்த மதுபானத்தின் நுகர்வைப் பொறுத்தவரை பியரின் சந்தைப் பங்கு, 2017 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் 24 தொடக்கம் 25 வீதம் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது பியருக்கான வரி குறைக்கப்பட்டுள்ளமை மேலும் பியரின் கொள்வனவை அதிகரிக்கும். காரம் கூடிய மதுபானங்களின் கொள்வனவுக்கான பங்குகள்தான் இதுவரையில் அதிகமாக காணப்பட்டன. இந்நிலை இனிமேல் மாற்றமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் பியர் விற்பனையில் லயன் கம்பனியே அதிகளவு உரிமை கோருகின்றது.இந்நிறுவனம் 80 சதவீதமான பங்குகளைக் கொண்டுள்ளது. பியர் வரி குறைப்பால் பியர் கம்பனிகள் நட்டமடையாத வண்ணம் வரி குறைப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே மதுபானத்தின் போதை செரிமானத்தின் அளவுக்கேற்ப வரி அறவிடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

 

 

செரிமானம் கூடிய மதுபானத்துக்கு மாற்றீடாக பியரைப் பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

மது ஒழிப்பு, மதுவால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மதுபானத்தைப் பயன்படுத்துவோரின் தெரிவு முறைமைகளை மாற்றியமைத்தால் பாதிப்புகளைக் குறைக்கலாம் என்பதுவே இந்த வரி அறவீட்டு முறைமையின் நோக்கமாக உள்ள நிலையில், ஒரு போத்தல் மதுபானத்தைக் குடிக்கும் அளவுக்கு 4 அல்லது 5 போத்தல் பியரை குடிக்க ஒருவர் பழகிக்கொண்டால் இந்த வரி அறவீட்டு முறைமையில் துளியளவும் பயனில்லாமல் போய்விடும்.

மதுபானம் அருந்தும் பழக்கம் கொண்டவரை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கச்செய்து மதுவை ஒழிக்கச் செய்வோம் என்ற விவாதத்துக்கப்பால் ஒட்டுமொத்த மதுபானங்களின் விலையையும் வரியையும் அதிகரித்து மதுபான கொள்வனவைக் குறைக்கலாம் என வாதிடுபர்களும் அதிகமாக இருக்கத்தான் செய்கின்றார்கள்.


இந்த வாதத்துக்கு நாம் ஒரு சிறந்த ஆதாரத்தை எடுத்துக்கொள்ளலாம். நல்லாட்சி அரசின் மதுஒழிப்புத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றியாகக்காட்டிக்கொள்ளும் சிகரெட்டுக்கு 90 சதவீத வரி அதிகரிப்பு முறைமைக்கு பின்னர் சிகரெட் பாவனையாளர்களின் வீதம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், தொடர்ந்தும் சிகரெட் பாவனையாளர்களின் தொகை அதிகரித்தவாறே காணப்படுகின்றது மாற்றம் பெரிதளவில் இல்லை. இப்படியிருக்கும்போது பியரின் விலைக்குறைப்பு சமூகத்தில் சாதகமான பெறுபேற்றைத்தான் தரும் என்பதில் எவ்வித உத்தரவாதமும் இல்லை.

 

உள்ளுர் சந்தையில் பியருக்கான மவுசு குறைவு 

காரம் கூடிய மதுபானங்களின் விலையேற்றத்தால் கள்ளு, கசிப்பு, கள்ளச்சாராயம் போன்றவற்றின் உற்பத்தி அதிகரிக்கும் எனத் தெரிகிறது. தமிழ் மக்களிடத்தில் பொதுவாகவே விலையுயர்ந்த மதுபானங்களை நாடிச்செல்வதிலும் பார்க்க, உள்ர் மதுபானங்களுக்கே அதிக மவுசு. அப்படியிருக்கும்போது, பியர் விலைக்குறைப்பு, தமிழ் மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களுக்கு மதுபாவனையிலிருந்து விடுபடுவதற்கான எந்தவொரு முனைப்பையும் வழங்காது என்பதே உண்மை.

பியர் கொள்வனவாளர்களில் அதிகமானோர் இளைஞர்களாவர். அவர்களும் செரிமானம் கூடிய மதுபானங்கள் வாங்கக்கூடிய வசதியில்லாதபோதுதான் பியரை நாடுகின்றனர். பொதுவாக மதுபானங்களின் செரிமானம் 20 தொடக்கம் 45 சதவீதம் வரையில் காணப்படுகின்றது. ஆனால், பியரின் செரிமானம் 8 தொடக்கம் 15 சதவீதத்துக்குள்தான் இருக்கிறது. எனவே, 4 பியர் போத்தல்கள் வாங்குவது ஒரு சாராயப் 
போத்தல் வாங்குவதற்குச் சமம் என்ற மனோநிலையை கொள்வனவாளர்கள் பெறுவார்களாயின் மதுபாவனையைக் குறைப்பது என்பது முடியாத காரியமாகிவிடும்.

மதுபானங்களின் காரத்தன்மையைக் கொண்டு வரி அறவிடும் முறைமை சர்வதேச நாடுகள் பலவற்றிலும் உள்ள பொதுவான நடைமுறை என்றிருந்தாலும், அந்நாடுகளில் பியர் கொள்வனவு அதிகரித்து காரமான மதுபானங்களின் கொள்வனவு குறைவாக உள்ளது. இலங்கையில் உள்ர் சந்தையிலுள்ள மதுபானங்களின் பாவனையே அதிகமாக உள்ளது. இது மதுபாவனைக்கான மாற்றீட்டுத் திட்டமாக இருக்க முடியாது.
மது பாவிப்பவர்கள் பியருக்கு தன்னை பழக்கிக்கொண்டு மதுபாவனையைக் காவப்போக்கில் குறைத்து கைவிட ஆரம்பிப்பார்களாயின் அது நல்ல விடயமே. ஆனால், எப்படியும் அது நடக்கப்போவதில்லை. தற்போது பியருக்கான வரி குறைப்பு மதுபாவனைக்கான தூண்டுதலாக அமைந்துவிடக்கூடாது.

பியருக்கான வரிக்குறைப்பு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தோற்றம் பெற்றுள்ளன. இதனையொரு சமூகத்தை அழிப்பதற்கான பிரதான காரணியாக காட்டுகின்றனர். இந்தக் கருத்துக்கு மாற்றுக் கருத்தையும் நாம் கூறிவிடமுடியாது. மதுபாவனையற்ற சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஆனால், இந்த பியர் வரிக்குறைப்பு மட்டும் சமூகத்தை சீர்திருத்தும் காரணியாக அரசு அடையாளப்படுத்திவிடக்கூடாது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாளித்துவ மேம்பாட்டை பியர் வரி குறைப்பதிலும் மேற்கத்திய உடைகளை அணிவதிலும் வெளிக்காட்டாதிருப்பது நல்லது. நாம் முதலாளித்துவக் கொள்கைகளில் எவ்வளவோ நல்ல விடயங்களை தழுவவேண்டியிருக்கின்ற நிலையில் தற்போது பியருக்காக போராடுவதும் முட்டாள்தனம் என்றே கூற வேண்டும்.

இலங்கைளில் யுத்தத்திற்கு பின்னர் சமூக மாற்றம் மேம்பாடுடையதாக இருக்க வேண்டும். மலையக மக்கள் பியர் வரிக்குறைப்பை வெற்றியென நினைத்துவிடக்கூடாது. மதுபாவனையற்ற சமூகத்தை உருவாக்கும் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top