"பெண்ணிலைவாதம்'' எல்லாம் வெறும் பேச்சில் மாத்திரமா

"பெண்ணிலைவாதம்'' எல்லாம்  வெறும் பேச்சில் மாத்திரமா

காலம் காலமாக நம்முடைய சமூகத்தில் கட்டுண்டு கிடக்கும் சில பழக்கவழக்கங்களை இன்றும் மாற்றமுடியாதுள்ளமையை நாம் பார்க்கின்றோம். பழக்கவழக்கம் என்பதை விட, சில அடிப்படையான மூடநம்பிக்கைகளை மனித நாகரிக வளர்ச்சியின் பின்னரும் கொண்டு சேர்ப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது.

அன்றிலிருந்து இன்று வரை இந்த அடிமைத்தனத்தை எம்மில் பலரும் மெச்சிய வண்ணமேயிருக்கிறார்கள், "ஆணுக்குப் பெண் அடிமை' என்பது ஆணுக்குள் ஊறிப்போன ஒன்றாகிவிட்டது. இதில் எல்லோரும் உடன்பட்டே ஆகவேண்டியநிலையாகிவிட்டது.

"அதென்ன ஆணுக்கு பெண் அடிமை?'' இப்போது அப்படியெல்லாம் கிடையாது, "எல்லா இடங்களிலும் பெண்ணுக்கு உரித்தான இடங்கள் வழங்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன'' என்று உள்ளுக்குள் கூறிக்கொள்வதெல்லாம் என்னுடைய அறிவுக்கு விளங்குகிறது.

நான் கூறவருவது பாரம்பரியத்தை அடிப்படையாக கொண்ட குடும்பங்களில் இன்னும் இந்த நிலை தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றன என்பதைத் தான், மாறிவிட்ட சூழ்நிலையை குறை சொல்ல வரவில்லை, உண்மையில் இன்னும் இந்த உண்மை விளங்காமல் பழைய புராணக்கதைகளை பேசிக்கொண்டிருக்கும் ஒரு பக்க சமூகத்துக்குத் தான் இந்தப் பகிர்வு.

மாற்றம் ஒன்று தான் மாறாமல் எம்முடன் இருப்பது. மாறவேண்டியது காலத்தின் கட்டாயங்களில் ஒன்றாகின்றது. "மாறமாட்டேன்' என அடம்பிடித்துக்கொண்டிருக்கும் புறம்போக்குவாதிகளைத்தான் எப்படி மாற்றுவது என்று தெரியாமல் எல்லோரும் தடுமாறிக்கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களுடைய கருத்தின் படி ஆண் பிள்ளைகள் தான் வீட்டில் முதன்மையானவர்கள், ஒரு குடும்பத்தில் அனைத்து மரியாதைக்கும் உரித்தானவர்கள் ஆண்கள் தான், "பெண்கள் காலின்மேல் கால் போட்டு அமரக் கூடாது, பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும் வீட்டு உற்சவங்களில் பெண்பிள்ளைகள் வந்து நிற்கக்கூடாது, பெண் பிள்ளைகள் என்பவர்கள் பொத்தி பொத்தி வளர்க்கப்படவேண்டியவர்கள், அதிகாலையில் எழுந்து வாசல் கூட்டி மெழுகிட்டு கோலம் போட்டு, காலை வேலைகளை முதலில் தொடங்கவேண்டியவர்கள் பெண்கள்' இந்த மாதிரியான கருத்துக்கள் பொதுவாக எல்லா இடங்களிலுமே பேசப்படுகின்றன.

ஆனால், கிராமப்புறங்களிலும், கிராமங்களிலிருந்து நகரத்தில் வசிக்கும் சிலராலுமே இவ்வாறான வரையறைகள் வகுக்கப்படுகின்றன. இன்னும் சில சம்பிரதாயங்கள் இருக்கின்றன. அதாவது திருமணத்துக்கு பின் பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது. சரி இதில் என்ன பெரிய பிரச்சினையிருக்கிறது? இத்தனை வருடங்களாக கற்ற கல்விக்கு புதிய பயனை பெண்கள் வேலைசெய்யும்போது தான் வெளிக்காட்டுகின்றார்கள்.

 

 

article-l-2015512717574864668000.jpg

 

அந்த வேலையை இல்லாமல் செய்வதில் ஏன் ஆண் வீட்டாருக்கு அத்தனை ஆனந்தம்? "ஒரு பெண் விவாகரத்துப் பெற்றுவிட்டால் அவள் தனித்து வாழமுடியாதா?' விவாகரத்துகள் சரியானவை என்பதல்ல என்பது என்னுடைய வாதம்.ஒரு விடயத்தை புரிந்துகொள்ளவேண்டும். பிடிக்காத ஒரு வாழ்க்கையை வாழ்வதில் என்ன சந்தோசம் வந்துவிடப்போகின்றது? "திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்' என்பது உண்மை தான்.

ஆனால், எல்லையைத் தாண்டும்போதும், பெண்ணுரிமை பறிக்கப்படும்போதும் அப்படியொரு வாழ்க்கை வாழ்வதில் தான் என்ன பயன் இருக்கிறது? "சுதந்திரம்' என்பது வரையறைகளை கொண்டது தான். ஆனால், பெண்ணுரிமை மறுக்கப்படும்போது அவள் தனக்கான சுதந்திர வாழ்வை நோக்கி சிறகடிக்க ஆரம்பித்துவிடுகின்றாள்.

நல்லாட்சி அரசாங்கத்தில் பெண்களின் பங்களிப்பு தற்போது ஓரளவுக்கேனும் வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், இதற்கு முன்னர் மலையகப்பெண்களை அரசியலில் நுழைய வைக்கப்போவதாக கூறிக்கொண்டு அவர்களின் கனவை அடியோடு கலைத்த ஸ்ரீரங்காவைப் பற்றி பேசி எந்தப் பயனும் இல்லை.

ஆனால், இனிவரும் காலங்களில் மலையகத்திலும் சரி, முழு இலங்கையிலும் சரி அரசியலில் பெண் பிரதிநிதித்துவங்கள் அதிகரிக்கப்படவேண்டும். அதற்கு ஸ்ரீரங்கா போன்றவர்களின் நப்பாசைக் கதைகளை கேட்டு ""மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய'' கதையாகிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

இந்தப்பெண் உரிமைகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.அதை எல்லா நேரங்களிலும் எல்லோரும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.ஒரு பெண்ணுக்கு உரிமை என்பது வீட்டிலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும். 

வெறுமனே "உரிமையில்லை உரிமையில்லை' என்று அறைகூவல் விடுப்பதை விட, அவள் எங்கு தோற்றம் பெறுகிறாளோ, அங்கிருந்து அவளின் உரிமைப்போராட்டத்தை ஆரம்பிக்கவேண்டும்.

முன்பு வழக்கிலிருந்த பெண்ணடிமைத்தனங்கள் எல்லாம் இப்போது அவ்வளவாக இல்லை. சவால்கள் நிறைந்த இந்த உலகில் ஏதோ ஒரு இடத்தில் ஒரு பெண் ஆணை விட, சாதித்துக்காட்டிக்கொண்டு தான் இருக்கிறாள். சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல, எமது அண்டைய நாட்டில் இந்த சாதனைகளுக்கு குறைவில்லை.

ஆனால், எமது நாட்டில் மாத்திரம் பெண்கள் சாதிப்பதற்கு எது தடையாக இருக்கிறது? ஏனைய நாடுகளைப் போன்று பெண்ணியல் பிரச்சினைகள் எல்லாம் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக எண்ணுகின்றேன். அதையும், மீறி கிராமப்புறங்களில் இடம்பெறும் சில பெண்ணியல் அத்துமீறல்கள் பொதுவாக வெளியில் வருவதில்லை. சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரால் அது மூடி மறைக்கப்பட்டு விடும்.

ஆனால், நகர்ப்புறங்களில் ஏதோ ஒரு இடத்தில் அவ்வாறான சம்பவங்கள் இருந்தாலும், அவை பாரியளவில் இல்லை. இவ்வாறான ஒரு திறந்த கட்டமைப்பைக் கொண்ட நகர்ப்புறத்தில் இருக்கின்ற பெண்கள் ஏன் உலகின் சாதனைப் பெண்களாக தங்களை இணைத்துக்கொள்ள தயங்குகிறார்கள்? அல்லது அவர்களுக்கு தடையாக இருப்பதுதான் என்ன?

 

 

201711181020334282_1_Exercisesforthighs._L_styvpf.jpg

 

விளையாட்டுத் துறையை எடுத்துக்கொள்வோம், குறுந்தூர ஓட்ட வீராங்கனை "சுசந்திகா ஜெயசிங்க'வுக்கு அடுத்தபடியாக இலங்கையில் பெயர்சொல்லிக் கொள்ளும் அளவுக்கு யாருமே இல்லை. அதே போல, பெண்கள் கிரிக்கெட் அணியில் சமரி அத்தப்பத்து தவிர்ந்த எந்தப் பெண்ணையும் பெயர் குறிப்பிட்டு கூறமுடியாதுள்ளது.

அதை விடுத்து, இலங்கை கிரிக்கெட் அணியிலும் சரி, பொதுவாக விளையாட்டுத் துறையிலும் சரி, தமிழர் பிரதிநிதித்துவங்கள் இல்லாமல் போனமைக்கு எவ்வாறான காரணங்கள் இருக்கின்றன என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

விளையாட்டுத்துறையை பொறுத்தவரையில் இலங்கையில் சந்தை வாய்ப்புகளோ அல்லது விளம்பரப்படுத்துதலோ குறைவாகவே காணப்படுகின்றன. அதே போல, கிராமப்புறங்களில் அதிகளவான விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் திறமையானவர்களாக இருந்தபோதிலும், அதில் அங்குள்ளவர்கள் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன. இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தவிர்ந்த எந்தத் துறையினரும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க முன்வரவில்லை.

எனவே, இவ்வாறான நிலையில் விளையாட்டுத் துறையில் இலங்கை மகளிர் உலக அளவில் சாதிப்பதற்கு எது தேவையோ அதை செய்துகொடுக்க வேண்டும். இந்தியாவின் பி.வி.சிந்துவையும், மித்தாலிராஜையும் வைத்துக்கொண்டு பெருமைப்படத் தான் வேண்டியிருக்கும்.

அதேபோன்று, உலக அழகிகள் போட்டி போன்றவற்றிலும் பெண்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது எல்லோருடைய கடமையாகவும் இருக்கின்றது.

உள்ளூரில் சந்தர்ப்பங்கள் கிடைக்கப்பெற்றால்தான், அதை உலக சந்தைக்குள் கொண்டு சேர்க்கமுடியும். இங்கு ஒன்றுமேயில்லாத போது, இந்தியா போன்ற நாடுகளை உதாரணங்களாக எடுத்துக்கொள்ளவேண்டிய நிலையே தொடரும்.

இலங்கை ஒரு திறந்த பொருளாதாரக் கொள்கை கொண்ட நாடு. இங்கு எல்லாத்துறைகளும் காணப்படுகின்றன. இவற்றில் பெண்களுக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்கவேண்டும்.
வெறுமனே ஆணாதிக்கம் என்று வாதிடுவதில் எந்தப் பலனும் இல்லை.

ஆணாதிக்கம் நிறைந்த சூழலில் தனக்கான நிலையை தக்கவைத்துக்கொள்ளப் போராடுவதில் தான் பெண்மையின் தனித்துவம் தங்கி இருக்கிறது. ""தடை அதை உடை'' என்பதை வெறும் வார்த்தைகளாக பார்க்காமல் அதைத் தகர்த்தி வெற்றிகாண்பதில்தான் பெண்மை முழுமையடையும் என்பது சாத்தியமான உண்மை.

சிவசங்கரி சுப்ரமணியம்

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top