பெண்களை விலை பேசும் தரகு வலை

பெண்களை விலை பேசும் தரகு வலை

"உங்களில் பாவமில்லாதவன் முதலில் இவள் மேல் கல்லெறியக் கடவன்.''  இந்த வசனம் பைபிளில் வரும் விபச்சாரப் பெண் என்ற சம்பவத்தைப் படித்தவர்களுக்கு மிகப் பரிச்சயமானது. ஆண்கள் விரும்புவதை பெண்கள் விற்கிறார்கள் என்றுகூட விபச்சராத்தை சுருக்கமாக விளக்கிவிடலாம்.

விபச்சாரம் இன்று உலகம் முழுவதும் அதிகரித்து அல்லது பெருகிவருகின்ற ஒரு விடயமாக மாறிவருகின்றது. இதனை சாதாரண சம்பவமாக பார்க்காமல் சமூக பிரச்சினையாக பார்க்கவேண்டிய தருணத்தில் நாங்கள் இருக்கின்றோம்.

இப்படியே சென்றால் இன்னும் சில வருடங்களில் இலங்கையின் முக்கிய தொழிற்துறையாகக்கூட விபச்சாரம் மாறிவிடக்கூடும்  என்பதால், இந்த இடத்திலிருந்து விபச்சாரத்தைப்  பாலியல் தொழில் என்றும், விபச்சாரிகளுக்கு  பாலியல் தொழிலாளர்கள் என்ற பதத்தையும் பயன்படுத்தலாம் என்று நினைக்கின்றேன்.

உலகின் பல நாடுகளில் பாலியல் தொழிலை சட்டமாக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், பல நாடுகளில் இது சட்டபூர்வமானதாக காணப்படுகின்றது. இலங்கையிலும் இது தொடர்பான கருத்தாடல்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்ததையும் இங்கு குறிப்பிடமுடியும்.

இலங்கையில், வணிக ரீதியான சந்தையாக அண்மைய வருடங்களில் பாலியல் தொழில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெற்காசியாவில் பாலியல் தொழிலாளர் என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலியல் சந்தையானது உள்ளூர் ஆண்கள் மற்றும் சுற்×லாத்துறை ஊடாக ஏற்படுத்தப்படுவதுடன், சுற்றுலா வலயங்களைச் சுற்றி பாலியல் தொழில் பரிணமித்துவருகின்றது என்றும் அந்த அறிககையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர வர்த்தக வலயங்களில் பணியாற்றும் பெண்களுக்கு வழங்கப்படும் குறைந்த ஊதியம், சில பெண்கள் அடிக்கடி பகுதிநேரமாக பாலியல் தொழிலில் ஈடுபடக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்று தோன்றுவதாகவும்  பகுதிநேர தொழிலாக அது வளர்ச்சியடைந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெண்களில் அதிகளவானவர்கள் வர்த்தக நோக்கில் கடத்தப்பட்டவர்களாக உள்ளதாகவும் அதிர்ச்சித் தகவலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

இலங்கையிலுள்ள பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கணிப்பது கடினமான ஒன்றாக உள்ளதுடன், தெருவோர பாலியல் தொழிலாளர்கள் மற்றும் கொழும்பிலுள்ள மசாஜ் நிலையங்களிலும் அதிகளவில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் 50,000இற்கும் மேற்பட்ட விலை மாதர்களும், 30,000இற்கும் மேற்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களும், 30  40 ஆயிரத்துக்குமிடைப்பட்ட பாலியல் தொழிலாளர்களும் இருக்கின்றார்கள் என்பதை அறியும்போது உங்களுக்கு என்ன தோன்றுகின்றதோ அதே தான் இங்கும்.

பாலியல் தொழிலாளி தேவையா? தாய்லாந்துக்கு போ, சிறுவர் பாலியல் தொழிலாளி தேவையா? இலங்கைக்கு போ என்று சொல்லும் அளவுக்கு இலங்கை சிறுவர் பாலியல் தொழிலாளி விடயத்தில் பிரசித்தமாக சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் உள்ளமை உங்கள் எத்தனை பேருக்குத் தெரியும்?

 

download.jpg

 

உலகின் சிறுவர் தொழிலாளிகள் எண்ணிக்கையில் முன்னணியிலுள்ள 5 நாடுகளில் இலங்கையும் உள்ளதுடன், ஐக்கிய நாடுகள் தலையிட்டு சிறுவர் பாலியல்  சந்தையை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை சற்று ஆறுதலை அளித்தாலும். ஆண், பெண், சிறுவர் மற்றும் ஓரினச்சேர்கை ஆகிய நான்கு பிரிவுகளாக பாலியல் சந்தை கடந்த ஆண்டுகளைவிட அதிகரித்துச் செல்வது வேதனையான விடயமாகும்.  

இந்த வார ஆரம்பத்தில் பிலியந்தலை   மொரட்டுவை வீதியில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்படுகின்றது. அதன்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட 20  25 வயதுடைய 8 பெண்கள் மற்றும் விடுதியின் முகாமையாளர் ஆகியோர் கைதுசெய்யப்படுகின்றனர். இது வழமைதானே என்று தோன்றலாம்.

கைதுசெய்யப்பட்ட பெண்கள் அனைவரும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், கொழும்பில் வேலை பெற்றுத்தருவதாக பெற்றோரிடம் தெரிவித்து அழைத்து வரப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமைதான் இங்கு நான் சுட்டிகாட்ட வந்த விடயம். 

அதுமட்டுமின்றி, இலங்கையிலுள்ள பிரபல தொலைக்காட்சி நடிகைகள் மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபச்சார நிலையங்களை நடத்தி வந்தமை தொடர்பில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தது.

தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பதற்கு என நேர்முகப் பரீட்சை வைத்து வெளிமாவட்டங்களிருந்து அழகிய இளம்பெண்கள் வரவழைக்கப்பட்டு கவர்ச்சிகரமான சம்பளத்தைக் கொடுத்து அவர்களை இவ்வாறு பாலியல் நடவடிக்கைளில் ஈடுபடவைத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில்  அப்போது தெரியவந்திருந்தது.

நியுசிலாந்து, ஆஸ்திரேலியா, ஒஸ்ரியா,  பங்களாதேஷ், பெல்ஜியம், பிரேஸில், கனடா, கொலம்பியா, டென்மார்க், ஈக்குவடோர், பிரான்ஸ்,ஜெர்மனி, கிரிஸ், இந்தோனேஷியா, நெதர்லாந்து போன்ற நாடுகளில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது.

எனினும், பாலியல் தொழிலை இலங்கை போன்ற நாடுகளில் சட்டபூர்வமாக்கும்போது, பெண்கள் இன்னும் தவறான முறையில் பயன்படுத்தப்படக்கூடிய நிலை ஏற்பட்டுவிடக்கூடும். பெண்களின் வாழ்க்கை பாதுகாப்பு கேள்விக்குறியதாக மாறிவிடும் என்பதுடன், பெண்கள் மீதான துஷ்பிரயோகம் அதிகரிக்கவே இது வழிவகுக்கும்.

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில் இது முதன்மை தொழிற்றுறையாக பரிணமித்தாலும் ஆச்சரியமில்லை.

ஆனால், இலங்கை போன்ற பௌத்த கோட்பாடுகளைக்கொண்ட  கலாசாரங்கள் நிறைந்த நாட்டில் பாலியல் தொழில் சட்டபூர்வமானதாக்கப்படும் என்பது நிச்சயம் பகற்கனவே.

இருந்தாலும், இலங்கை போன்ற நாட்டில் இந்தத் தொழில் அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்கின்றமைக்கான காரணங்களை அலசவேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. தொழில் பெற்றுத்தருவதாகத் தெரிவித்து அழைத்து வரப்படும் அப்பாவி பெண்கள் வலிந்து இந்தத் தொழிலில் ஒருசிலரின் சுகபோக வாழ்கைக்காக ஈடுபடுத்தப்படுவது மிகவும் கொடுமையானது.

சமூகத்தில் மிகவும் கேவலமாக பார்க்கப்படும் இந்தத் தொழிலில் ஈடுபடுவதற்கு பெண்கள் நிச்சயம் தானாக விரும்பி முன்வருவார்கள் என்பது நிச்சயம் மறுதலிக்கப்படவேண்டிய ஒன்று. பல்வேறு கனவுகளுடன் தலைநகருக்கு வரும் பெண்கள், தங்களது காதலன்களால் ஏமாற்றப்பட்டு நடுவீதியில் வேறு வழியின்றி நிற்கும்போது, சில ஆண்களால் ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பில் கேள்விப்பட்ட கதைகள் ஏராளம்.

ஆண்களால் பாலியல் நிலையங்கள் நடத்திச் செல்லப்படுவதாக  பெரும்பாலானவர்கள் நினைத்துகொண்டிருக்கும் நிலையில், இன்று பெண்களின் தலைமையின்கீழ் இயங்கும் பல பாலியல் நிலையங்கள் தொடர்பில் அடிக்கடி செய்திகளில் கேள்விப்படமுடிகின்றது.

இப்படி யோசித்துப் பாருங்கள், பாலியல் தொழில் அதிகரிக்க பெண்களை விட ஆண்களே காரணம் என்பது புரியும். ஆண்  பெண் இணைந்துதான் விபச்சாரத்தில் ஈடுபடமுடியும். விபச்சாரி மகன் என்று சொன்னால்தான் கோபித்துக்கொள்கின்றார்களே தவிர, விபச்சாரனுடைய மகன் என்று சொன்னால் எவரும் கோபமடைவதில்லை.

ஆனால், அதே ஆண்களுக்கு தங்கள் மனைவிகள் மற்றும் திருமணம் செய்துகொள்ளாத மனைவிகள் (இதற்கு வேறு பெயரும் எம் நாட்டில் உள்ளது) ஆகியோரை தாசிகள் என்றோ விபச்சாரம் செய்பவர்கள் என்று சொன்னால் மாத்திரம் உடனே கோபம் கொப்பளிக்கின்றது.

பெண்களை  தங்களுடைய சம்மதத்தின் பேரில் தங்கள் சுயநலத்திற்காக விபச்சாரத்திற்கு விட இணங்குகிறான் என்றோ அல்லது  பெண்ணை அடக்க முடியாமல் ஊர்மேய விட்டுவிட்டான் என்றோ சொல்லுகின்றபோது இன்னும் அதிகமாக  கோபித்துக்கொள்கின்றார்கள். (இப்போது என்மீது கூட கோபம் வரலாம்)

 

RFDSexWorkDecrim-master1050.jpg

 

விபச்சாரம் என்பதை பெண்கள் ஆண்களின் அடிமைகள் என்றும், அவர்கள் ஆண்களுடைய போகப்பொருள் என்றும், விலைக்கு விற்கவும், வாடகைக்கு விடவும் கூடிய பொருள் என்றும் கருதியிருக்கின்றார்கள் என்று  நாம் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.

விபச்சாரம் என்பது ஏன் பெண்களை மாத்திரம் நோக்கி பயன்படுத்தப்படுகின்றது? ஆண்களுக்கு ஏன் அந்த வார்த்தைப்பிரயோகம் பயன்படுத்தப்படுவதில்லை? என்ற கேள்வி உங்களுக்கு எப்போதாவது எழுந்திருந்தால் அதில் தவறொன்றுமில்லை.

ஏனென்றால், விபச்சாரம் என்ற சொல் பார்க்கப்போனால் குற்றமுடைய சொல் அல்ல என்று கூட சொல்லலாம். ஏனென்றால், கற்பு என்பது பெண்களை அடிமையாக்க முயலும் ஆணாதிக்கத்தின்  கூரிய ஆயுதம் என்று முன்னதாக பலர் சொல்லியிருக்கின்றார்கள். 

கற்பு, விபச்சாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும், சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவையில்லாதது என்பது முன்னேறிய நாடுகளில் காணப்படும் பொதுவான கருத்து.

எம்மைப் போன்ற நாடுகளில் காணப்படும் கலாசாரம், கட்டுப்பாடு  என்பவற்றை மீறி கற்புக்கு விரோதமாகவும் விபச்சாரத்திற்கு அனுகூலமாகவும் உணர்ச்சியும் ஆசையும் ஏன் மக்களுக்கு உண்டாகவேண்டும் என்பதை சிந்திக்கத் தூண்டுகின்றது.

இயற்கையோடு இயைந்த வாழ்வு எது என்பதையும் இயற்கைக்கு மாறுபட்ட வாழ்வு எதுவென்பதையும் நடுநிலையிலிருந்து அனுபவத்தையும் மனதில் தோன்றிய  தோன்றும் உணர்ச்சிகளையும், ஆசைகளையும் உதாரணமாகவும் வைத்துக்கொண்டு உண்மையாக யோசித்தால், கற்பு, விபச்சாரம் என்னும் வார்த்தைகள் வெறும் புரட்டு என்பதும், மற்றவர்களை அடிமையாகக் கட்டுப்படுத்த உண்டாக்கப்பட்ட சுயநல சூழ்ச்சி நிறைந்தது என்பதும் விளங்கிவிடும்.

மனிதன் தன்கென்று ஒரு நியாயத்தையும் மற்றவர்களுக்கு ஒரு நியாயத்தையும் கற்பிக்கும் வரை இவ்வாறன பாலியல் தொழில்களைக் கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது என்றே தோன்றுகின்றது. எனினும், இளம்பெண்கள் இவ்வாறான ஆண்களின் வலையில் விழுந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதிலிருந்து தவிர்த்துக்கொள்வதே இந்தத் தொழிலை ஒழிக்க முதற்படி.

நல்ல சம்பளம், சிறந்த தொழில் சூழ்நிலை என்று நயவஞ்சகமாகப் பேசும் தரகர்களை நம்பி தன் பெண்பிள்ளைகளை தலைநகருக்கு அனுப்பும் பெற்றோர்கள் சற்றுச் சிந்தித்துப் பார்ப்பது சிறந்தது. "தலைக்கு மேல் வெள்ளம் போகும்போது சாண் போனால் என்ன முழம் போனால் என்ன' என்ற எண்ணம்தான் சிறு  ஊற்றாய் இருந்த பாலியல் தொழிலை இன்று ஆறாய் மாற்றிவிட்டுள்ளது.

உலகில் விபச்சாரத்துக்காக செலவிடப்படும் தொகை

சீனா  73 பில்லியன் டொலர்

ஸ்பெயின்  26.5 பில்லியன் டொலர்

ஜப்பான்  24 பில்லியன் டொலர்

ஜெர்மனி  18 பில்லியன் டொலர்

ஐக்கிய அமெரிக்கா  14.6 பில்லியன் டொலர்

தென்கொரியா  12 பில்லியன் டொலர்

இந்தியா  8.4 பில்லியன் டொலர்

தாய்லாந்து  6.4 பில்லியன் டொலர்

பிலிப்பைன்ஸ்  6 பில்லியன் டொலர்

துருக்கி  4 பில்லியன் டொலர்+

பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை (ஆகக் குறைந்தது 1,38,28,700)

சீனா  5 பில்லியன்

இந்தியா  3 பில்லியன்

ஐக்கிய அமெரிக்கா  ஒரு மில்லியன்

பிலிப்பைன்ஸ்  80,00,000

மெக்சிக்கோ  5,00,000

ஜெர்மனி  4,00,000

பிரேஸில்  2,50,000 சிறுவர்கள்

தாய்லாந்து  2,50,000

பங்களாதேஷ்  2,00,000

தென்கொரியா  1,47,000

இப்படியும் நடக்கிறது

பிரான்ஸில் 99 சதவீதமான ஆண் வாடிக்கையாளர்களில் 44 சதவீதமானவர்கள் திருமணமானவர்கள்.

இஸ்ரேலில் ஒவ்வொரு மாதமும் 10ஆயிரம் ஆண்கள் விபச்சார விடுதிகளுக்குச் செல்கின்றனர்.

ஐக்கிய அமெரிக்காவில் 9.1 சதவீத ஆண்கள் விபச்சார விடுதிகளில் (2012ஆம் ஆண்டில்) பணம் கொடுத்து உறவு வைத்துக்கொண்டுள்ளனர்.

இந்தோனேஷியா, பாலி தீவுகளில் 80,000 ஆண்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

ஜே.ஏ.ஜோர்ஜ்

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top