ஆசைப்படும் மைத்திரி; ஆட்டம்போடும் ரணில்

ஆசைப்படும் மைத்திரி; ஆட்டம்போடும் ரணில்

நல்லாட்சி அரசாங்கத்தின் தோற்றத்தில் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன. கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுடன், மூன்று வருடங்களை இந்த அரசாங்கம் எப்படிக் கடந்தது என்று எண்ணுமளவுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையில் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தேவை வலுப்பெற்றுள்ளது. இவ்வாறு எத்தனையோ மாறுதல்களைத் தழுவி, முட்டி மோதிக்கொள்கிறது நல்லாட்சி அரசாங்கம்.

2018 ஆம் ஆண்டு மாற்றத்தை யார் விரும்புகிறார்களோ இல்லையோ நிச்சயம் அரச தரப்பினர் மாற்றத்தை விரும்புகின்றனர். தேர்தல் கால சுவாரஸ்யங்களை விட, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டுமென்ற ஒருசாராரின் எண்ணம் தற்போது வெளிப்படையாகத் தென்படுகிறது.

பிணைமுறி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டதிலிருந்து தேர்தல் தொடர்பான சர்ச்சைகள் குறைந்துவிட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து, கூட்டு எதிரணியினரும் சுதந்திரக்கட்சியினரும் பிரசாரம் செய்வார்கள் என்று நினைத்தால், அதுவும் நடந்தபாடில்லை.

பிணைமுறி அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர் என்ன எதிர்பார்த்தார்களோ, அதில் எதுவுமே இதுவரை நடக்கவில்லை.

பிரதான பேசுபொருளான நடனம் சர்ச்சைக்குரிய பிணைமுறி அறிக்கை வெளியிடப்பட்டவுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிவிலகுவார் என்று எதிர்பார்க்குமளவுக்கு பிரச்சினை தீவிரமடைந்திருந்தது. அப்படியிருக்கும்போது, பிரதமர் ரணிலின் நடனம் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியது.

பிரச்சினையைத் திசைதிருப்பும் வகையில், பிரதமரினால் வெளியிடப்பட்ட ஆவணம் என்று ஒருசிலரும், பொறுப்புமிக்க பதவியில் உள்ளவர் இவ்வாறு அநாகரிகமாக நடனமாடியது தவறா? என இன்னொரு சாராரும் வாதாடிக்கொண்டிருக்க, தனது சாமர்த்திய அரசியலை செய்துகாட்டிக் கொண்டிருக்கிறார் ரணில்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திருமண நிகழ்வொன்றில் மூத்த நடிகை ஐராங்கனி சேரசிங்கவுடன் நடனம் ஆடுவதாக வெளியான விடியோவை "பிரச்சினைக்குரிய சூழ்நிலையின் போது, இவ்வாறு செயற்படும் அமைச்சருக்கு எமது வாழ்த்துக்கள்'' என தலைப்புச் செய்தியில் பிரசாரம் செய்துகாட்டியிருந்தமையும் "அந்தச் சந்தர்ப்பத்தில் ரணில் தன்னுடைய உறவினராகவே தெரிந்தார்; பிரதமராக அல்ல என்று மூத்த நடிகை ஐராங்கனி சேரசிங்க தெரிவித்திருந்தமையும் ரணிலை நல்லவராக விளம்பரப்படுத்த வேண்டிய தேவை உணர்ந்தவர்கள் செய்ததாகவே பார்க்கப்படுகிறது.

அத்தோடு, "சிரிக்கக்கூடிய மற்றும் அழக்கூடிய சாதாரண மனிதனாகவே பிரதமரை நான் காணுகின்றேன். யாரோ ஒருவர் வந்து அங்கு நடனம் இடம்பெறுவதாக அழைத்தார். எனக்கு நடனமாட விருப்பம் என்று அவருக்குத் தெரியும் போல. நான் அங்கு சென்றதும், பிரதமரைக் காட்டி நடனமாடுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர்.

பிரதமரும் வாருங்கள் என்று அழைத்ததும், நான் நடனமாடினேன். சுற்றியுள்ளவர்கள் கேட்கும் போது எவ்வாறு மறுப்பது?'' என்று மூத்த நடிகை ஐராங்கனி சேரசிங்க குறிப்பிட்டதை அமைச்சர்களும் கோடிட்டுக்காட்டி பேசுமளவுக்கு இந்த நடனத்தை பிரதான கருப்பொருளாக்க என்ன தேவை எழுந்தது என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

நாடாளுமன்றில் பிரதமரின் மாற்றுருவம்

பிணைமுறி தொடர்பான அறிக்கை தொடர்பில் நேற்று கூடிய நாடாளுமன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடந்துகொண்ட விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் எம்.பிக்களை தனது பக்கம் வரவழைத்துக்கொண்டு ""மஹிந்த கள்ளன்'' என கோஷமிடுமாறு கேட்டு தானும் கையை உயர்த்தி கத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு எதிர்ப்பை வேறு எந்தவொரு எம்.பி. செய்திருந்தாலும் அது இவ்வளவுதூரம் பேசப்பட்டிருக்காது. காரணம் எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் தனதுபக்க நியாயத்தை வெளிப்படுத்தக்கூடியவர் பிரதமர் ரணில்.

அப்படியிருக்கும் போது கூட்டு எதிரணியினர் கூச்சலிடும் போது பிரச்சினையை சமாளிக்க முடியாமல் சிறுபிள்ளைத்தனமாக இவ்வாறு நடந்துகொண்டமை என்ன அரசியல் வியூகமென்று விளங்கவில்லை.

ஜனாதிபதியின் ஆசை உள்ள பிரச்சினையெல்லாம் போதாதென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலத்தின் நிறைவுக்காலம் எப்போது என எண்ணத் தொடங்கியிருப்பது மைத்திரியின் பேராசைக்கான அறிகுறியா? அல்லது சட்ட சீர்திருத்தங்களின் அவசியம் இந்நாட்டில் உணரப்படாமலிருப்பதா? என்று விமர்சிக்கப்படுகின்றது.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கமைய ஜனாதிபதியொருவரின் பதவிக்காலம் 6 வருடங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதும் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய அந்தக் காலப்பகுதி 5 வருடங்களாகக் குறைக்கப்பட்டது.

இதன்படி, அரசியலமைப்பு திருத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இருக்கும் ஜனாதிபதிக்கு இது பொருந்துமா என்ற சந்தேகத்திற்கு பதிலளிக்குமாறு கோரியுள்ளார். தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் இருக்குமாக இருந்தால் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2020ஆம் ஆண்டுடன் முடிவடையும்.

இல்லையேல் 2021ஆம் ஆண்டிலேயே முடிவடையும் எனக் குறிப்பிடப்படுகின்ற நிலையில் அவரின் சந்தேகத்துக்கு இன்று ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

பிணைமுறி அறிக்கைப் பிரச்சினைப் பற்றியெரிகின்ற நிலையில் அந்தச் சூட்டில் குளிர்காய எத்தனையோ தரப்புக்கள் காத்திருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் இந்த சந்தேகம் நீதியான அரசியல் சாணக்கியத்துக்கான தற்போதைய தேவையை உணர்த்தியுள்ளது.

2020 ஆம் ஆண்டு வரை தேசிய அரசாங்கத்தைக் கொண்டுசெல்வது இமாலய சாதனையாக அமைந்துள்ளது. இந்நேரத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் இருவேறு முரண்பட்ட அரசியல் கலாசாரத்தை வெளிப்படுத்துவது ஆரோக்கியமாக இருக்காது என்பதே உண்மை.

அதேநேரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையினரின் கோரிக்கையெல்லாம் மஹிந்த காலத்துக் கொள்ளைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில்தான் 10 பில்லியன் ரூபாய் இல்லாது போயுள்ளது. ஊழியர் சேமலாப நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4,000 பில்லியன் ரூபாய் நிதி சபையின் அனுமதியின்றி ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

"இந்த விடயங்கள் தொடர்பாக அவர்களிடம் கேட்க வேண்டும். யாரும் பயப்பட வேண்டாம் 10,000 பில்லியன் ரூபாய் கடனை மஹிந்த விட்டுச்சென்றுள்ளார். 10 பில்லியன் ரூபாய் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதனை விடவும் 10 மடங்கு அதிக திருட்டு முன்னர் நடந்துள்ளது. யார் அந்த 10,000 பில்லியன் ரூபாய் திருடியது? இதனைத் தேடவேண்டும்.

இது பற்றி நடவடிக்கையெடுக்க நானும் தயார். கடந்த காலங்களைப் பற்றி தேடும்போது 19 விடயங்கள் தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 40 விசாரணை நடவடிக்கைகளில் இருக்கின்றன. "நாங்கள் திருடனை பிடிப்போம்'' என, பிரதமர் தேர்தல் பிரசாரத்துக்காக மட்டும் கூறவில்லை.

பிணைமுறி தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பு பிரதமருக்கு தலையிடியைக் கொடுக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கெல்லாம் பிரதமர் தனது புன்னகையால் பதிலடி கொடுக்கப் பார்க்கின்றார். பிரச்சினையைத் திசைதிருப்பப் பார்க்கின்றார். "மிஸ்டர் கிளீன்'' என்றெல்லாம் புகழாரம் குவிகின்றபோது ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமான மோதல் அம்பலமாக ஆரம்பித்துள்ளது.

நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியொருவர் இலங்கையில் இதுவரையில் எவ்வாறு செயற்பட்டாரோ அதே மிடுக்கு மைத்திரியிடம் தென்பட ஆரம்பித்துள்ளது. தனது கட்சியை பாதுகாத்து, முழுமையான அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்ற கனவு தற்போது ஓரளவுக்கு பலித்துவிட்டது என்றே கூறவேண்டும். காரணம், பிணைமுறி அறிக்கையை காட்டி இனிவரும் நாடாளுமன்ற அமர்வுகள் ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்தும். கூட்டு எதிரணியினரின் கை ஓங்கும்.

இதனையெல்லாம் சுதந்திரக் கட்சியினர் வேடிக்கை பார்ப்பார்கள். ஆகமொத்தம் கட்சித்தாவல்கள், காட்டிக்கொடுப்புக்கள், அமைச்சரவை மாற்றங்கள் என அனைத்தும் முடிந்து இந்த வருடத்தை கடத்திவிட்டு அடுத்த வருடம் தெளிவான அரசியல் சாயத்தைப் பூசிக்
கொள்ள தயாராகிக்கொள்வார்கள். அந்தக் காலப்பகுதிவரையாவது, தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள இரு அரச தரப்பினரும் போராடுகின்றனர். அந்தப் போராட்டத்துக்கு பல்வேறு சுவாரஸ்யமான கதைகளை அரங்கேற்றுகின்றனர்.

மக்களை முட்டாள்களாக்கியோ, திசைதிருப்பியோ தனதுபக்க குற்றத்தை மறைத்துவிடலாம் என எண்ணுவது தவறு. இதனை சந்தர்ப்பம் என்று கருதி பழிவாங்கல்களை மேற்கொள்வதும் தவறு. நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியவர்கள் தங்களை எந்தளவு தூய்மையானவர்களாக வெளிக்காட்டிக்கொண்டார்களோ, அதனை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்துவிட்டனர்.

மக்களை துச்சமாகக் கருதி அவர்களின் அரசியல் விளையாட்டுக்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்கள் இவற்றுக்கெல்லாம் அடிபணிந்துவிடாது தெளிவான நோக்கோடு சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இது.

பா.ருத்ரகுமார்

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top