Items filtered by date: Wednesday, 01 November 2017

"தேசிய பிரச்சினையானது உள்நாட்டில் தீர்க்கப்படாவிட்டால் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் மேலும் மோசமடைவதைத் தவிர்க்க முடியாது.'' என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பு நிர்ணய சபையில் நடைபெற்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

"நாட்டின் உயர்ந்த சட்டமான அரசமைப்பானது நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட வேண்டியிருப்பதுடன், சகலரது உரிமைகளையும் உறுதிப்படுத்துவதாகவும் அது அமைந்திருக்கவேண்டும். மக்களின் இறைமையானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாக இருக்கவேண்டும்.

இந்தச் செயற்பாடுகளில் சகல தரப்பினரும் உள்வாங்கப்படவேண்டும். நாட்டின் உயர்ந்த சட்டமான அரசமைப்பானது பிரிக்கப்படாத நாடு சகலருக்கும் உரித்தானது என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கவேண்டும். நாடு அபிவிருத்தியை நோக்கிச் செல்லக்கூடியதாகவும், நாட்டை அமைதியானதாக பேணக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.

சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதில் ஒற்றுமையான நாடாக உள்ளது என்ற அடிப்படையில் உலகத் தரத்தைப் பேணுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முயற்சிகளை எவராவது குழப்புவார்களாயின் அது நாட்டுக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். அவ்வாறானவர்கள் தேசிய நலனுக்காகவன்றி தனிப்பட்ட எதிர்கால அரசியல் நோக்கத்துக்காக குழப்பம் விளைவிப்பவர்களாகவே இருப்பார்கள்.

இலங்கையானது பல்லின சமூகத்தைக் கொண்ட நாடாகும். இவ்வாறான சூழ்நிலையில் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் பிரிக்கப்படாத நாட்டுக்குள் ஜனநாயகம், உரிமை, சகவாழ்வு மற்றும் ஒற்றுமை என்பவற்றை பலப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும்.

ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை என்பன ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ள விடயங்களாகும். ஒன்றோடு ஒன்றைப் பலப்படுத்தும் வகையில் இவை அமைக்கப்படவேண்டும்.

சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கு இவை இரண்டும் பலப்படுத்துவது அவசியமானதாகும். இவற்றின் ஊடாகவே பிரிக்கப்படாத நாட்டை உறுதிப்படுத்த முடியும். இதுவே சகல செயற்பாட்டினதும் அடித்தளமாகும்.

அதிகாரப் பகிர்வின்கீழ் மூன்று மட்டங்கள் உள்ளன. முதலாவது தேசிய மட்டம், இரண்டாவது மாகாண மட்டம், மூன்றாவது உள்ளூராட்சி மட்டம். இந்த மூன்று மட்டங்களிலும் அதிகாரங்கள் எவ்வாறு பகிரப்படவேண்டும் என்பது தெளிவாக குறிப்பிடப்படவேண்டும்.

நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கம் என்பன ஈடுசெய்யக்கூடிய வகையில் பகிரக்கூடியதாக இருக்கவேண்டும். அதிகாரப் பகிர்வு என்பது எந்தவொரு காரணத்துக்காகவும் குறைத்து மதிப்பிடப்படுவதாகவோ அல்லது மீளப்பெறக்கூடியதாகவோ இருக்கக் கூடாது.

ஏதாவது விசேட காரணங்களுக்காக குறிப்பிட்ட அரசமைப்புத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால் மாத்திரம் மாற்றங்கள் செய்வதாக இருக்கவேண்டும். அதிகாரப் பகிர்வு என்பது நீண்டகாலம் நிலைத்திருப்பதையும் அது உண்மையானது என்பதையும் உறுதிப்படுத்தும் ஏற்பாடுகள் நாடு முழுவதும் இருக்கவேண்டும்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த அரசமைப்பு உருவாக்கப் பணிகள், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட செயற்பாடுகளின் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றன.

25 வருடங்களாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இரு பிரதான கட்சிகளுக்கிடையில் தேசிய பிரச்சினை விடயத்தில் இணக்கப்பாடு ஏற்படாமையால் இழுபறிகள் காணப்பட்டு வந்தன.

யுத்தம் என்ற பாரிய தடை நீங்கியுள்ள சூழலில் நாம் தற்போது இருக்கின்றோம். யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளபோதிலும், யுத்தம் ஏற்பட்டமைக்கான காரணங்கள் இன்னமும் நிவர்த்திசெய்யப்படவில்லை.

யுத்தம் முடிவடைந்த பின்னரும் நேர்மையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாமலிருப்பது துரதிர்ஷ்டவசமானது. மூன்று ஜனாதிபதிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் கவனத்தில் கொள்ளப்படாது யுத்தம் தொடர்ந்தமை கவலைக்குரியது. தேசிய பிரச்சினைக்குத் தீர்வு வேண்டி யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்னமும் அவை தீர்க்கப்படாதிருப்பது துரதிர்ஷ்டவசமானதாகும்.

எமது நடவடிக்கைகள் சர்வதேசத்தால் அவதானிக்கப்பட்டுவருகின்றன என்பதை உணர்ந்துகொள்ளவேண்டியது இங்கு முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும்.

ஜனநாயகம் என்பது நாட்டில் உயர்வானதாக இருக்கவேண்டும். நிர்வாகக் கட்டமைப்புகள் அதற்கேற்ற வகையில் அமைக்கப்படவேண்டும். நாட்டிலுள்ள சகலருடைய ஜனநாயகமும் மேம்படுத்தப்படவேண்டும்.

இவற்றின் அடிப்படையில்தான் இந்த அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம். எமது நாட்டின் மீதான சர்வதேச அழுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் என நாம் விரும்புகின்றோம்.

எமது பிரச்சினைகள் உள்நாட்டில் தீர்க்கப்படவேண்டும் என விரும்புகின்றோம். பிரச்சினையை உள்நாட்டில் தீர்க்காவிட்டால் சர்வதேச அழுத்தம் மோசமடையும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும்.

புதிய அரசமைப்பை தயாரிப்பதாயின் பொதுவான விடயங்களில் தேசிய இணக்கப்பாடு அவசியமானது. அதிகபட்சம் சாத்தியமான ஒருமித்த கருத்துகளுடன் புதிய அரசமைப்பை தயாரிக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அது பொதுமக்களின் கருத்துகளையும் உள்ளடக்கியதாக அமையவேண்டும்.

யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்பேசும் மக்கள் அதியுச்ச அதிகாரங்களைப் பகிரக்கூடிய தீர்வொன்றை எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வொன்றை அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் பெடரல் கட்சியால் முன்வைக்கப்பட்ட யோசனை வடக்கு, கிழக்கு மக்களால் 1956ஆம் ஆண்டே தோற்கடிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் பல கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால் வன்முறைகள் அதிகரித்தன. விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்புப் பெறப்பட்டது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று முன்வைக்கப்படவேண்டும் என்பதை அரசே சர்வதேசத்துக்கு தெரிவித்திருந்தது. ஆகவே, அவ்வாறான தீர்வொன்றை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது கட்டாயமாகும்.

உலகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். சர்வதேச மட்டத்தில் இலங்கை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இந்த நிலைமை மோசமடையக்கூடாது. எனவே, தேசிய பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் அரசமைப்பு தயாரிக்கப்பட்டு, மக்களின் அங்கீகாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்'' என்றார்.

Published in உள்நாடு

"இந்த நாட்டில் தொடர்ந்து இரத்தம் சிந்தப்பட வேண்டுமா? அதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. எனவே, ஆட்சி அதிகாரத்தில் தமிழர்களையும் பங்கேற்க வைக்கவேண்டும். அத்துடன், நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் புதிய அரசமைப்பொன்று கட்டாயம் கொண்டுவரப்படவேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக இருக்கின்றது.'' என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

அரசமைப்பு நிர்ணய சபையில் இன்று நடைபெற்ற புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொணடு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

"புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்று 2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருந்தார். இதைப் பொது எதிரணியினர் இன்று மறந்துவிட்டனர். தாங்கள் வழங்கிய உறுதிமொழியை மறந்தது மட்டுமல்லாது, புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறவில்லை என்றும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இது வேடிக்கையான விடயமாகும்.

எது எப்படியோ, புதிய அரசமைப்பொன்று கட்டாயம் கொண்டுவரப்படவேண்டும் என்பதுவே ஜே.வியின் நிலைப்பாடு. புதிய அரசமைப்புக்கான சட்டமூலத்தை தயாரிக்க அடுத்தவருடம் மே மாதம் வரை செல்லும். எனினும், புதிய அரசமைப்பு தற்போதே கொண்டுவரப்பட்டுள்ளதென நாட்டில் பல்வேறு பொய்க்குற்றச்சாட்டுகளும், கருத்துகளும் வலுப்பெற்றுள்ளன.

நாடாளுமன்றத்துக்குள் ஒரு கருத்தையும் அதற்கு வெளியில் மற்றுமொரு கருத்தையும் வெளியிடுவதாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் அரசமைப்பொன்றைக் கொண்டுவரவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது கூறிவருகின்றது.

சு.கவின் தலைவர்களாக இருந்த ஸ்ரீமாவோ, சந்திரிகா, மஹிந்த போன்ற தலைவர்கள் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படவேண்டும் என்று கூறியிருந்தனர். அதேபோல் தற்போதைய சு.கவின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாகவே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளார்.

சு.கவின் கீழ்மட்ட அரசியல் பலம் மஹிந்தவிடம் உள்ளது. அத்துடன், 2020ஆம் ஆண்டு மைத்திரி சென்றுவிட்டால் தாம் அரசியல் அநாதைகளாகிவிடுவோம் என்ற அச்சத்தாலேயே சு.கவின் உறுப்பினர்கள் தற்போது நிறைவேற்று அதிகாரத்தை தூக்கிப்பிடிக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீண்டகாலத்திற்கு முன்னர் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தது. தமிழ் மக்களின் குரல் ஒருகாலத்தில் விடுதலைப்புலிகளிடம் அடிப்பணிந்திருந்தது. இதனால், உண்மையான குரல் வெளியாகவில்லை.
புதிய அரசமைப்புக்கு மேற்குலக நாடுகளின் மத்தியஸ்தம் காணப்படுவதாக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேற்குலக நாடுகள் பற்றி எமக்கு நீண்ட அனுபவம் உள்ளது.

மேற்குலகம் பற்றி பேசும் ஜி.எல்.பீரிஸ் போன்றோர் எவ்வாறு மேற்குலகுடன் செயற்பட்டனர் என்று அனைவருக்கும் தெரியும். பல வழிகளில் அவர்களிடம் நாம் பணத்தைப் பெற்றுக்கொள்கின்றோம். அதனடிப்படையில் சில அழுத்தங்கள் இருப்பதை நாம் நிராகரிக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கமையவே தேசிய இறைவரி சட்டம் நிறைவேற்றப்பட்டது. எமது நாட்டிலுள்ள பிரச்சினைகளைத்தான் மேற்குலக நாடுகள் பயன்படுத்திக்கொண்டு தலையீடுகளை மேற்கொள்கின்றன.

அனைத்து இன மக்களினதும் சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்டுதான் அரசமைப்பை உருவாக்கமுடியும். அதிகாரப் பகிர்வு அரசமைப்பின் ஓர் அங்கம் மாத்திரமே. அதிகாரப் பகிர்வு தொடர்பில் தெற்கில் ஒரு கருத்தும், வடக்கில் ஒரு கருத்தும் நிலவுகிறது. இந்த நாட்டைப் பிளவுபடுத்த முடியாது.

வடக்கில் தனிநாடொன்று அமைப்பதுதான் தேசத்துரோகச் செயல். 47 வீதமான இலங்கைத் தமிழர்கள் மாத்திரமே வடக்கில் வாழ்கின்றனர். 53 வீதமானவர்கள் தெற்கில்தான் வாழ்கின்றனர். பிரிவினைவாதத்தால்தான் யுத்தம் ஏற்படும்.

அரசமைப்பில் பிளவு ஏற்படாததற்கான அனைத்துப் பாதுகாப்புகளும் ஏற்படுத்தப்படவேண்டும். யுத்தத்தின் பின்னர் நாம் மேற்கொள்ளவேண்டிய நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதனால்தால் 2015ஆம் ஆண்டு மஹிந்த அரசு வீட்டுக்குப் போகவேண்டியிருந்தது.

தேசிய நல்லிணக்கத்தைக் கருத்தில்கொண்டு நாம் ஒரு பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இந்த நாட்டில் தொடர்ந்து இரத்தம் சிந்தவேண்டுமா? தமிழர்களையும் ஆட்சியில் பங்கேற்கச் செய்யவேண்டும். அதனைச் செய்யத் தவறினால் பிரச்சினைகளே தொடர்ந்து வலுப்பெறும்.

மக்களுக்காக உருவாக்கப்படும் அரசமைப்பில் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் இருக்கவேண்டும்'' என்றார்.

Published in உள்நாடு

புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாளை வியாழக்கிழமை நான்காது நாளகவும் நடைபெறவுள்ளது.

இடைக்கால அறிக்கை மீது கடந்த 30ஆம் திகதிவலை நேற்று புதன்கிழமை வரை மூன்றுநாள் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசமைப்பு நிர்ணய சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் நாளை வியாழக்கிமையும் அரசமைப்பு நிர்ணய சபை கூட்டப்படும் என சபாநாயகர் அறிவிப்பின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபைமுதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல எதிர்க் கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருடன் கரைந்துரையாடியதற்கு அமைய பல உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் அடிப்படையில் அனைவருக்கும் உரையாற்ற சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் இன்று அரசமைப்பு நிர்ணய சபை கூட்டப்பட்டுள்ளது.

Published in உள்நாடு

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் இடைக்கால முன்வைக்கப்பட்டுள்ளது கூட்டமைப்பின் யோசனை மாத்திரமே. இதனைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு வடக்கு, கிழக்கை இணைக்கப் போவதாக தென்பகுதி அரசியல்வாதிகள் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அரசமைப்பு நிர்ணய சபையின் புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறினார்.

“இடைக்கால அறிக்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யோசனையை முன்வைத்துள்ளது. இது வழிநடத்தல் குழுவின் நிலைப்பாடு அல்ல. கூட்டமைப்பின் தனிப்பட்ட கருத்தாகும். இதனை சிலர் தூக்கிப் பிடித்துக் கொண்டு தெற்கில் பிரசாரங்களை முன்னெடு வருகின்றனர்.

அவர்கள் மாற்று யோசனையையும் முன்வைத்துள்ளனர் கிழக்கு,முஸ்லிம் மக்களின் இணக்கப்பாட்டுடன்தான் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். கூட்டமைப்பின் கோரிக்கையை தூக்கிப்பிடிக்கும் தெற்கு அரசியல் வாதிகள் ஏன் ஜாதிக ஹெல உருமயவின் யோசனைகளை தூக்கிப்பிடிக்கவில்லை.

சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் இவ்வாறான பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இது விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வாயை மூடிக் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

இடைக்கால அறிக்கையில் பிரிக்கப்படாத நாடாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் நாடு பிளவுபடுவது பற்றி சட்டத்தரணிகள் சங்கம் அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளது. அவர்கள் என்ன நோக்கத்துக்காக செயற்படுகின்றார்கள் என்ற கேள்வி எழுகிறது.

தேசிய பிரச்சினையை அடுத்த சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லக் கூடாது. பௌத்த மதத்துக்கான முன்னரிமை வழங்கப்படும் அதேநேரம் ஏனைய மதங்களுக்கான கௌரவம் மற்றும் இரண்டாம் பட்சமான கவனிப்பு என்பவற்றை தடுக்கும் சட்ட ஏற்பாடுகள் இருக்க வேண்டும்“ எனக் என்றார்.

Published in உள்நாடு

சமுர்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

நாடு பூராகவும் உள்ள சமுர்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்களுக்கு இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

சமுர்தி உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய பிரச்சினை மற்றும் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கேற்ப சம்பளத்தினை குறைக்காது நிரந்தர நியமனங்களை வழங்குவது தொடர்பாகவும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, அதற்குரிய அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

சமுர்தி உத்தியோகத்தர்கள் தரம் உயர்த்தப்படுவதற்கான முறையொன்றினை தயாரித்தல். கடந்த வரவுசெலவு திட்டத்தின் மூலம் அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்பட்ட 10,000 ரூபாவினை பெற்றுக்கொள்ளல் அரசினால் கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 300 ரூபா கொடுப்பனவு மற்றும் 2000 ரூபா பிரயாண செலவினை பெற்றுக்கொள்ளல் போன்ற பல பிரச்சினைகள் இதன்போது முன் வைக்கப்பட்டதுடன், நிதி அமைச்சுடன் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொடுக்கல் வாங்கல்களில் ஏற்படும் தாமதத்தினை தவிர்த்துக்கொள்ளவும் வினைத்திறனை அதிகரித்துக்கொள்ளவும் சகல சமுர்தி வங்கிகளையும் கணனிமயப்படுத்தி நவீனப்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

Published in உள்நாடு

அரியாலை கிழக்கு - மணியம்தோட்டம், உதயபுரம் பகுதியில், இளைஞன் ஒருவரைச் சுட்டுக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன, யாழ். பண்ணையில் உள்ள சிறப்பு அதிரடிப்படை முகாமில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 22ஆம் நாள் உதயபுரம், கடற்கரை வீதிச் சந்தியில், டொன் பொஸ்கோ ரிச்மன் என்ற இளைஞன், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலலப்பட்டார்.

இதையடுத்து. நடத்தப்பட்ட விசாரணைகளில், கொலைக்கு முன்னதாக அந்த வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியன தொடர்பான காணொளிப்பதிவு காட்சிகள் கிடைத்தன.

இதன் அடிப்படையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் இந்த விசாரணைகளை காவல்துறை மாஅதிபர் ஒப்படைத்திருந்தார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் விரைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி தொடர்பாக நடத்திய விசாரணைகளில் அவையிரண்டும் சிறப்பு அதிரடிப்படையினரின் பயன்பாட்டில் இருந்தமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து. நேற்றுமுன்தினம் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நேற்றிரவு பண்ணையில் உள்ள சிறப்பு அதிரடிப்படை முகாமுக்குள் நுழைந்து தேடுதல் நடத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி, மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

எனினும், இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை.

Published in உள்நாடு

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய திறமையற்ற விளையாட்டு தொடர்ந்தும் நீடிக்கும் பட்சத்தில் 2019ஆம் ஆண்டு உலககிண்ணத்தை வெற்றிக்கொள்வது கனவாகிவிடும் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பெற்றோலியவள அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை கிரிகட்டுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை எதிர்காலத்திலும் தொடரும் பட்சத்தில் 2019 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள உலககிண்ண போட்டிகளில் வெற்றிபெற முடியாத நிலைமையே தோன்றும்.

2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ளன. 1999ஆம் ஆண்டு மிக பலமான அணி இலங்கை சார்பில் உலக கிண்ண போட்டிகளுக்காக களமிறங்கியிருந்தது. இருப்பினும் இரண்டாவது இடத்தினைக்கூட எம்மால் பிடித்துக்கொள்ள முடியாமல் போனது.

அதனால் இங்கிலாந்தில் விளையாடுவதும் சுலபமானதல்ல என்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும். இந்த விடயத்தை பொருத்தமட்டில் விளையாட்டு வீரர்களிடத்தில் எவ்வித குறைபாடுகளும் கிடையாது. மாறாக கிரிக்கெட் நிர்வாக குழுவிடத்திலேயே பிரச்சினை உள்ளது.

குதிரை பந்தையம் ஓடுகின்றவர்களுக்கு இங்கிலாந்தில் எவ்வாறு குதிரை ஓட்டலாம் என தெரியுமே தவிர எவ்வாறு கிரிக்கட் விளையாட முடியும் என்பது தெரியாது.

எனவே கண்மூடித்தனமான செயற்பாடுகளை முன்னெடுக்காமல் கிரிக்கட் விளையாட்டு குறித்து அவதானம் செலுத்த வேண்டும் முன்பை விடவும் அதிகளவிலான வேகபந்து வீச்சாளர்களும் உள்ளனர் எனவே அவர்களை பயன்படுத்தி உரிய வித்தில் கிரிக்கெட் விளையாட்டினை நடைமுறைப்படுத்திச் செல்ல வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் அணு ஆயுத சோதனை முயற்சி நடைபெற்ற சந்தர்ப்பத்தில் சுரங்கம் உடைந்து வீழ்ந்ததில் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு ஒக்டோபரில் வடகொரியா முதல்முறையாக அணு ஆயுத சோதனையை நடத்தியது.

அதன்பின் 2009, 2013, 2016 ஜனவரி, செப்டம்பரில் அடுத்தடுத்து அணு ஆயுத சோதனைகளை நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஆறாவது முறையாக அணு குண்டைவிட அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையை கடந்த செப்டம்பர் 3ஆம் திகதி வடகொரியா நடத்தியது.

அதன்பிறகும் அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், “வடகொரியா- சீன எல்லைப்பகுதியில் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த வடகொரிய விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக அங்குள்ள மேன்டப் மலைப் பகுதியில் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.“என வடகொரிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஜப்பானிய தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி சுரங்கம் உடைந்து 10ற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மண்ணில் புதைந்துள்ளனர். அவர்களை மீட்க மேலும் 100 தொழிலாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களும் மண்ணில் புதைந்துள்ளனர்.

வடகொரியாவின் அணு ஆயுத சோதனை மையங்கள் அமைந்துள்ள மேன்டாப் மலையில் சுமார் 200ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக வடகொரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அணு ஆயுத சோதனை முயற்சியின்போதே சுரங்கம் உடைந்திருக்கும் என்று கருதப்படுகிறது.

இதன் காரணமாக அந்த மலைப் பகுதியில் கதிர் வீச்சு பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக அண்டைநாடான சீனாவுக்கு கதிர் வீச்சு அபாயம் அதிகம் உள்ளது.

மேன்டாப் மலையில் 6 இடங்களில் அணு ஆயுத சோதனை மையங்களை வடகொரியா அமைத்துள்ளது. அங்கு அணு ஆயுத சோதனை நடைபெறும் போதெல்லாம் அந்தப் பகுதியில் சுமார் 6.3 ரிக்டர் அலகில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அடுத்தடுத்து நிலஅதிர்வுகள் ஏற்படுகின்றன. பெருமளவில் நிலச் சரிவு ஏற்படுகிறது.

வடகொரியா அண்மையில் நடத்திய ஹைட்ரஜன் குண்டு 120 கிலோ டன் கொண்டதாகும். இந்த குண்டு கடந்த 1945இல் ஜப்பானின் ஹிரோஷிமாவில் பயன்படுத்திய அணு குண்டை விட 8 மடங்கு பெரியதாகும். இதனால் மேன்டாப் மலைப் பகுதியே சிதைந்துள்ளது. இனிமேலும் அங்கு அணு ஆயுத சோதனை நடத்துவது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை சதோச வர்த்தக நிலையங்களில்,இன்று முதல் அரிசி மற்றும் பருப்பினை குறைந்த விலைக்கு பெற்றுக் கொள்ள முடியும் என, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார். 

இதற்கமைய, சம்பா அரிசி ஒருகிலோ 78 ரூபாவுக்கும், நாட்டரிசி ஒருகிலோவுக்கு 73 ரூபாவுக்கும் பெற்றுக் கொள்ள முடியும் என்றும், ஒருகிலோ பருப்பினை 148 ரூபாவுக்கு சதோச நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்வும் அறிவித்துள்ளார்.

Published in வணிகம்

நியூயோர்க்கின் மான்ஹாட்டன் பகுதியில், சய்ஃபுல்லோ சாய்போவ் என்ற 29 வயது நபர், சைக்கிள் செல்லக்கூடிய பாதையில், டிரக் செலுத்தி நடத்திய தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டதோடு, 11 பேர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அர்ஜன்டீனா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இறந்தவர்களில் ஐந்து பேர் தங்களின் நாட்டை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளது.

அவர்கள் பத்துபேர் கொண்ட குழுவாக இருந்ததாகவும், பட்டம் பெற்று 30 ஆண்டுகள் கடந்துள்ளதை அவர்கள் கொண்டாடிக்கொண்டு இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் அர்ஜன்டீன ஊடகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சந்தேகநபர் கைதின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Latest News

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top