Items filtered by date: Friday, 10 November 2017

பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளராக கடமையாற்றிய ஒருவர் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணகை்களம் அறிவித்துள்ளது.

இரகசிய மற்றும் நிறுவன பரீட்சைகள் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஒருவரே இவ்வாறு பதவிநீக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றாமை செய்தல் மற்றும் தவறான நடத்தை போன்ற குற்றச்சாட்டு காரணமாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published in உள்நாடு

அரசமைப்பு நிர்ணய சபையில் அரசமைப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் (3/11/2017) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நா.உ ஈ.சரவணபவன் ஆற்றிய உரை

"இன்று நாடு பிளவுபடப்போகின்றதெனக் கூச்சலிடும் இனவாத சக்திகளை நோக்கி ஒரு விடயத்தைப் பொறுப்புடன் கூறிவைக்க விரும்புகின்றேன். இந்த நாடு எப்போதோ பிரிக்கப்பட்டுவிட்டது. அதைப் பிரித்தவர்கள் தமிழ் மக்களல்ல, முஸ்லிம் மக்களல்ல, மலையக மக்களுமல்ல, அதை மேற்கொண்டவர்கள் அரச அதிகாரத்துக்குள்ளிருந்த இனவாத சக்திகள்தான் என்பதை நான் இங்கு ஆணித்தரமாக முன்வைக்கிறேன். இந்த நாடு கடந்துவந்த பாதையில் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய ஒரு சாதனையின் அடித்தளமாக அரசமைப்பை ஏற்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையுடன் நான் எனது உரையை ஆரம்பிக்கின்றேன்.

கடந்த 60 வருடங்களாகத் தீர்க்கப்படாத நின்று நிலைத்து ஒடுக்குமுறைகளுக்கும் அதற்கெதிரான போராட்டங்களுக்கும் காரணமாயிருந்து இறுதியில் பெரும் போராக வெடித்து பெரும் எண்ணிக்கையிலான உயிரிழப்புகளையும் பேரழிவுகளையும் மாறாத வடுக்களாகப் பதிவு ஏற்படுத்தியுள்ள இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான நிரந்தரமான தீர்வு புதிய அரசமைப்புடன் எட்டப்படவேண்டும் என்ற இதய வேட்கையுடன் இன்று நான் உங்கள் முன் வந்துள்ளேன்.

தீர்க்கப்படாமல் இழுபடும் இந்த இனப்பிரச்சினை காரணமாகத்தமிழ் மக்கள் மட்டுமன்றி, சிங்கள, முஸ்லிம் மக்களும் பேரழிவுகளைச் சந்தித்தனர் என்ற அடிப்படையில் உங்களில் பெரும்பான்மையினர் ஒன்றிணைவீர்கள் எனத் திடமாக நம்புகின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய ஆளும் கட்சிகள் மட்டுமன்றி, எதிர்க்கட்சியினராகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் மலையகக் கட்சிகள் என்று அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கும் வாய்ப்பை இந்த அரசமைப்பு பெற்றிருப்பது நாட்டில் நிரந்தர சமாதானமும் அமைதியும் உருவாகுவதற்கான ஒரு நல்ல சகுனம் என்றே நான் கருதுகிறேன்.

சில இனவாத அரசியலில் இலாபம் காண முனையும் சக்திகள் இன்னும் இறுதி உருவம் பெறாத இந்த உத்தேச அரசமைப்பை நிறைவேறவிடாது தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் படுமோசமான பரப்புரைகளிலும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றன.

அவர்களில் ஒருசிலர் தங்கள் எதிர்ப்பின்போது வெளியிடும் கருத்துகள் மனித இரத்தத்தில் நீச்சலடிப்பதில் சுகம் கண்ட கடந்த காலத்தையே எமக்கு நினைப்பூட்டுகின்றன. சிங்கள இனத்தின் மேன்மையையும் பௌத்த மதத்தின் புனிதத்தையும் கறைப்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிடும் இவர்களை இந்தச் சபை ஒட்டுமொத்தமாகக் கண்டிக்கவேண்டுமென சபையின் மதிப்பின் பேரால் கேட்டுக்கொள்கின்றேன்.

முன்னாள் இராணுவ உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன புதிய அரசமைப்பை ஆதரிப்பவர்கள் அனைவரும் கொல்லப்படவேண்டியவர்கள் என்ற வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். இறுதிப் போரின்போது ஒரு படையணியை வழிநடத்தி ஆயுதங்களைத் தொட்டுக்கூடப் பார்த்திராத பல்லாயிரம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று தள்ளிய அனுபவம் அவருக்குண்டு.

அந்த இரத்த வெறி இன்று சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி எல்லோர் மேலும் திருப்பப்படுகிறது. இவருக்கும், இவரைப் போன்றவர்களுக்கும், இவர்களுக்குக் கட்டளைகளை இராணுவ மரபுகளை மீறி வழங்கியவர்களுக்கும் உள்ள போர் வெறிக்குப் பின்னால் அப்பட்டமான சுயநலம் உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்ம். நாட்டில் குழப்பங்கள், கலகங்கள், ஆயுத மோதல்கள் இடம்பெறும்போது அவர்கள் ஆயுதக் கொள்வனவு எனவும், போர் ஹெலிக்கொப்டர் கொள்வனவு எனவும், போர்த் தளபாடங்கள் கொள்வனவு எனவும் தரகுப்பணமாகவும் கணக்கில் வராத கறுப்புப்பணமாகவும் கோடி கோடியாகக் கொள்ளையடிக்க முடியும்.

ஆயிரமாயிரம் சிங்கள இளைஞர்கள் இராணுவத்தினராகவும், தமிழ் இளைஞர்கள் போராளிகளாகவும் ஏராளமான அப்பாவிகள் பொதுமக்களாகவும் சாவடைவதைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. இந்த நாட்டில் ஒரு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தக்கூடிய அரசமைப்பை நிறைவேற்றவிடாமல் தடுப்பதில் தீவிரங்காட்டி வருகின்றனர். அதை நிறைவேற்ற பௌத்த மதத்தின் முதன்மை பறிபோகிறதெனவும் நாடு பிளவுபடப்போகிறது எனவும் பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ நாடாளுமன்றத்துக்குக் குண்டுவைத்து நாட்டைப் பிளவுபடுவதிலிருந்து காப்பாற்றப் போகிறாராம்.

உறுப்பினரின் அரசியல் கைக்குண்டுடனும் துப்பாக்கியுடனும் ஆரம்பமாகியிருக்கலாம். ஆனால், அவர் ஜனநாயக வழிக்குத் திரும்பிவிட்டதாகக் கூறி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அவரது அரசியல் வாழ்வில் அவர் எப்போதுமே தமிழ் மக்கள் மீது இனவாத எறிகணைகளை ஏவத் தவறுவதில்லை. இப்போது கைக்குண்டின் வழிவந்த அவரின் அரசியலும், தமிழ் மக்கள் மீதான இனவாத எறிகணைகளும் புதிய பரிமாணம் பெற்று தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்று அனைத்துத் தரப்பினரும் அங்கம் வகிக்கும் நாடாளுமன்றத்தைத் தகர்க்கும் குண்டாக மாறிவிட்டது.

அவர்களும், இவர்களுடன் இணைந்து செயற்படும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பினரும், உத்தேச அரசமைப்பின் மூலம் நாடு பிளவுபடப்போகின்றதெனவும், பௌத்த மதத்தின் முதன்மை நிலை பறிபோகப்போகிறதெனவும் ஒப்பாரி வைக்கின்றனர். நாடு பரந்தரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இன்று நாடு பிளவுபடப்போகின்றதெனக் கூச்சலிடும் இனவாத சக்திகளை நோக்கி ஒரு விடயத்தைப் பொறுப்புடன் கூறிவைக்க விரும்புகின்றேன். இந்த நாடு எப்போதோ பிரிக்கப்பட்டுவிட்டது. அதைப் பிரித்தவர்கள் தமிழ் மக்களல்ல, முஸ்லிம் மக்களல்ல, மலை யக மக்களுமல்ல. அதை மேற்கொண்டவர்கள் அரச அதிகாரத்துக்குள்ளிருந்த இனவாத சக்திகள்தான் என்பதை நான் இங்கு ஆணித்தரமாக முன்வைக்கிறேன். 1948ஆம் ஆண்டு மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது, அவர்கள் இந்த நாட்டில் உரிமையற்றவர்கள் எனப் பிரிக்கப்பட்டார்கள். 1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது தமிழ்மக்கள் இந்த நாட்டில் மொழியுரிமை அற்றவர்கள் எனப் பிரிக்கப்பட்டனர். 1958ஆம், 1977ஆம், 1983ஆம் ஆண்டு காலகட்டங்களில் உயிர்கள் பறிக்கப்பட்டு சொத்துகள் சூறையாடப்பட்டு குடியிருப்புகள் எரிக்கப்பட்டு தமிழ் மக்கள் தென்பகுதியில் வாழவும், தொழில் செய்யவும் உரிமையற்றவர்கள் என்ற வகையில் வடபகுதிக்கு விரட்டப்பட்டனர்.
காலம்காலமாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இப்படியான நிலையில் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கில் மட்டுமே பாதுகாப்பாக வாழமுடியும் என்ற நிலை, சிங்கள இனவாத சக்திகளால் உருவாக்கப்பட்டது.

எனவேதான் நாடு ஏற்கனவே சிங்களப் பேரினவாதிகளாலும், இன ஒடுக்குமுறையாளர்களாலும் பிளவுபடுத்தப்பட்டது. அப்படி பிளவுபட்ட நாட்டைப் பிரிக்முடியாத ஒன்றிணைந்த தேசம் என்ற அடிப்படையில், புதிய அரசமைப்பின் மூலம் ஒன்றிணைக்க முற்படும்போது நாடு பிளவுபடப்போகிறது எனப் போலிக் கோஷம் எழுப்பி ஐக்கியம் உருவாவதை முற்றாகவே சிதைக்க முனைகின்றனர்.

பிரிக்கமுடியாத ஒன்றிணைந்த தேசமாக இன்று வாழ்வாலும் மனதாலும் பிளவுபட்டுப் போயுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் ஒன்றிணையும்போது இலங்கை நாடு சுதந்திரமும் சுபீட்சமும் கொண்ட ஒரு நாடாக எழுச்சிபெறும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.

1972ஆம் ஆண்டு, 1978ஆம் ஆண்டு என்ற காலங்களில் அரசமைப்புகள் உருவாக்கப்பட்டபோது அதில் தமிழ் மக்களின் பங்களிப்பு இருக்கவில்லை. அப்படியான அரசமைபுகள் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட காரணத்தாலேயே முரண்பாடுகளும், மோதல்களும் உருவாகி முற்றி இறுதியில் ஒரு பெரும்போராக வெடித்தது. அதன் பயனை நாம் அனைவருமே அனுபவித்துவிட்டோம்.

அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளப் பிடிவாதமாக மறுப்பது பேரழிவுக்கே இட்டுச்செல்லும் என்பது வரலாற்று அனுபவம். இன்றைய அரசமைப்பு சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக மக்களென அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்குவதாகும்.

இதை வெற்றிபெறாமல் தடுக்க முனைபவர்கள்தான் இந்த நாட்டின் பிரிவினைவாதிகள் என்பதை நான் இங்கு உறுதியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.“

Page 1 of 3

Latest News

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top