Items filtered by date: Friday, 17 November 2017

நீதிமன்ற விசாரணைகளுக்காக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொதுச் சொத்துகள் கட்டளைச்சட்டத்தின் கீழ், தாம் கைதுசெய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரதானி காமினி சேதர செனரத் உட்பட மூவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களை நவம்பர் 24ஆம் திகதிக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.

2012ஆம் ஆண்டு அமைச்சரவையால் ஒதுக்கப்பட்ட 18.5 பில்லியன் ரூபாய் நிதியில் 4 பில்லியன் ரூபாயை சட்டவிரோதமாக முதலீடு செய்யதனர் என்று, இவர்கள் மூவருக்கும் எதிராக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட பி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்த கட்டுமான நிறுவனமொன்றால் கொள்ளுப்பிட்டில் ஹொட்டலொன்றை அமைக்கவே இந்த நிதி ஒதுக்கப்பட்டதாகவும் அதில் 4 பில்லியன் ரூபாயை ஹம்பாந்தோட்டை ஹொட்டல் திட்டமொன்றில் முதலீடு செய்தனர் என்றே அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தாம் கைதுசெய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி, காமினி செனரத், ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் பியதாஸ குடாபலகே, சமுர்த்தி நிறுவனத்தின் ஆணையாளர் நெய்ல் பண்டார ஹபுவின்ன ஆகியோரே இந்த மூன்று மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், சட்டமா அதிபர் உட்பட சிலர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனுக்கள், பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதியரசர் அனில் குணரத்ன ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையி்ல், நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மனுதாரர்கள், கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் எதிர்வரும் 21ஆம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று காமினி செனரத் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, நீதியரசர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

பிணை மனு தொடர்பான உத்தரவும் அன்றைய தினத்திலேயே வழங்கப்படவுள்ளதாகவும் மனுவை அதற்குப் பின்னர் எடுத்துக்கொள்ளுமாறும் கோரினார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துஷித் முதலிகே ஆஜராகியிருந்ததுடன், காமினி செனரத் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, சட்டத்தரணிகளான சுகத் கல்தேரா, நிரான் அங்கெடெல் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

Published in உள்நாடு

புதிய அரசமைப்புக்கு எதிரான செயற்பாடுகளை எதிர்கட்சிகள் ஒழுங்காக முன்னெடுப்பதில்லை என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பு குறித்து அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “19ஆவது அரசமைப்பு திருத்தின் மூலமாக நாட்டை பிளவுபடுத்துதற்கான அரசமைப்பினை உருவாக்குவதற்கு அரசமைப்பு சபை உருவாக்கப்பட்டது.

அதற்காக ஐக்கிய தேசிய கட்சி கூட்டாட்சியை உருவாக்கி சுதந்திர கட்சிக்கு மூன்று நிபந்தனைகளை முதலில் விதித்தது முதலாவது சுதந்திர கட்சியின் தலமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையிலெடுக்க வேண்டும் இரண்டாவது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மீது ஆனுதாபம் காண்பித்து உள்ளூராட்சி மன்ற தேர்தலை வெற்றிகொள்ளுதல் மற்றையது மூன்றாவது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கிடைக்கவேண்டிய பிரதமர் பதவியை இல்லாது செய்தலாகும்.

இந்த இலக்கு தற்போதும் அடையப்பட்டுள்ளது. இது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச சக்திகளிலின் சதி திட்டத்தின் வெற்றியென்பதையும் நாம் ஏற்றுகொண்டாகத்தான் வேண்டும். அதனாலலேயே மகாநாயக்க தேரர்களின் எதிர்ப்பின் மத்தியிலும் அரசமைப்பு சபை தொடர்ந்தம் நீடிக்கின்றது.

எவ்வாறாயினும் அரசமைப்பு செயற்பாடுகளுக்கு தூய்மையானது என்ற நிலைப்பாட்டினை அரசாங்கம் காண்பிப்பதால் அதற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கவில்லை. இது மிகப்பெரிய தவறு என்பது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு புரியவில்லை. அதனால் புதிய அரசமைப்பு பிரிவினை வாதிகளை திருப்திபடுத்துவதாக மாத்திரமே அமையும் அதனை தடுப்பதற்கான செயற்பாடுகளை எதிரணிகள் ஒழுங்காக முன்னெடுப்பதில்லை“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published in உள்நாடு

காலத்துக்குக் காலம் எத்தனையோ அசம்பாவிதங்களும், இயற்கைச் சீற்றங்களும் இடம்பெற்றுகொண்டுதான் இருக்கின்றன. சுனாமிக்குப் பின்னர் நாம் அனைவரும் இதுபோன்றதொரு அழிவு இனி ஏற்படக்கூடாதென பிரார்த்தனை செய்தோம். ஆனால், அதற்குப் பின்னரும் இயற்கைச் சீற்றங்கள் நம்மை விட்டபாடில்லை.

ஜனவரியிலிருந்து வறட்சியும் அதன்பின்னர் பருவமழை பெய்தால் வெள்ளமும், மண்சரிவும் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. எத்தனையோ மனித உயிர்கள் சுனாமிக்குப் பின்னர் இயற்கைச் சீற்றங்களால் மடிந்துபோயின. சுனாமிக்குக் கொடுத்த முக்கியத்துவம் அதற்குப் பின்னர் நடந்த எத்தனையோ இயற்கைச் சீற்றங்களுக்கு இலங்கை அரசு கொடுக்க மறுத்துள்ளது.

ஆனாலும், வருடாவருடம் பல மில்லியன்களை வரவுசெலவுத் திட்டத்தில் அனர்த்த முகாமைத்துவத்துக்கென ஒதுக்குகின்றது. கடந்த வருடம் மாத்திரம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின்கீழ் 117 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக பாதுகாப்பு அமைச்சின்கீழ் திடீர் அனர்த்த சேவைக்கான 60 மில்லியின் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிதி எந்தளவு அனர்த்த பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இவற்றையெல்லாம்விட 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் 5.8 பில்லியன் ரூபாவை ஒதுக்கியதன் மூலம் இலங்கை இயற்கைச் சீற்றத்தால் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர ஆரம்பித்துள்ளது என்றே கூறவேண்டும்.

வருடா வருடம் வெள்ளம், வறட்சி, சூறாவளி, மண்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்படுவோரின் தொகை அதிகமாக இருக்கின்றதே தவிர, குறைந்தபாடில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதற்கேற்றாற்போல 1960ஆம் ஆண்டிலிருந்து இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுவோரின் தொகை பன்மடங்காகியுள்ளது.

இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க இலங்கை அரசு இருவகையான கொள்கைகளைப் பின்பற்றுகின்றது. நிர்வாக முகாமைத்துவம், நிறுவனக் கட்டமைப்பு என்ற இரு துறைகளுமே இதுவரைகாலமும் அனர்த்த முகாமைத்துவத்திற்கு சிறப்பான பங்களிப்பைச் செய்யவில்லை.

அனர்த்த அவதான நிலையம், காலநிலை அவதான நிலையம் ஆகியன இயற்கை அனர்த்தங்களைப் பராமரிப்பதற்கான முக்கிய பங்காற்றும் நிறுவனங்களாகக் காணப்படுகின்றன. இதனோடு இனைந்து மகாவலி அபிவிருத்திச் சபை, காலநிலை மாற்றம் தொடர்பிலான அரச செயலகங்கள் ஆகியனவும் முக்கியமானவை. இவை அனைத்துக்கும் இணைத்தே வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுகின்றது.

இவ்வருட ஆரம்பத்தில் இலங்கையில் ஏற்பட்டிருந்த மிக மோசமான வெள்ள அனர்த்தத்தின்போது நிதி ஒதுக்கீட்டு பற்றாக்குறையை விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் காரணம் காட்டியிருந்தார். ஆனால், ஒதுக்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்படாத துறை என்பதை அவர் மறந்துவிட்டார்.

பருவ மாற்றங்களும் அனர்த்த கட்டுப்பாட்டு முறைமைகளும் தென்மேற்குப் பருவக்காற்று, வடகீழ் பருவக்காற்று என்ற இரண்டுமே கடுமையான மழைவீழ்ச்சியை மலைநாட்டுக்குக் கொடுக்கின்றன. இந்தக் காலப்பகுதியிலேயே மண்சரிவு அபாய எச்சரிக்கைகளும் நிலச்சரிவுகளும் மின்னல் தாக்கங்களும் அதிகளவில் ஏற்படுகின்றன.

இவற்றைவிட வடக்கு, கிழக்கைப் பொறுத்தமட்டில் மழைவீழ்ச்சி அதிகமாகப் பதிவானாலும், தொடர்ந்தும் வறட்சியான சூழ்நிலையே காணப்படுகின்றது. இந்த இரண்டும், முரண்பட்ட அனர்த்த சூழ்நிலைகளுக்கும் முகம்கொடுக்கும் வகையிலான தீர்வுத்திட்டங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

பெரும் அனர்த்த பாதிப்புகளுக்கு இலங்கை அரசு கொடுக்கின்ற அதே முக்கியத்துவம் தொடர்ந்து ஏற்பட்டுவரும் மழைவீழ்ச்சி வறட்சி பாதிப்புகளையும் இனங்கண்டு எதிர்கால செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். இல்லாவிட்டால் உயிர்காவுகையை மட்டுமே வைத்து அனர்த்தத்தின் அளவை தீர்மானிக்கும் ஒரு மட்டமான நோக்குகையிலேயே நாம் தொடர்ந்து தங்கியிருக்கவேண்டி ஏற்படும்.

பிரச்சினைகளும் இடைவெளிகளும்
இலங்கையின் இயற்கை அனர்த்தங்களுக்கென கொள்கை நடைமுறைப்படுத்த ஆவணங்கள் பல காணப்படுகின்றன. 20142018இல் இணைந்த காலநிலை முகாமைத்துவத் திட்டம், தேசிய இயற்கைத் தழுவல், 20162025 காலநிலை பாதிப்பு தொடர்பிலான அறிக்கை, தேசிய இயற்கை பங்களிப்பு செயலாற்றுகை, அனர்த்துக்குப் பின்னரான தேவையும் முகாமைத்துவமும் போன்ற பல திட்டங்கள் சதாகாலமும் உருவாக் கப்படுகின்றன. ஆனால், இயற்கைச் சீற்றமொன்று ஏற்படும்போது இந்தத் திட்டங்கள் எல்லாம் எவ்வித பிரயோசனமற்றவை என்பதை நினைவுகூருகின்றன.

இதற்கு அடுத்தபடியாக இயற்கை அனர்த்தங்கள், அபிவிருத்தி கொள்கைத் திட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றது. இது இயற்கை தொடர்பிலான பரந்துபட்ட அறிவின்மை மற்றும் எதிர்காலத்தை நோக்கிய இலக்கற்றது என்பதை பல தடவைகள் நாம் உணர்ந்துள்ளோம். உதாரணமாக, மகாவலி "எச்' வலயத்தில் உருவாக்கப்பட்ட நகர அபிவிருத்தித் திட்டங்களும் மகாஓயா அபிவிருத்தித் திட்டத்திற்கு கொழும்பு சிறு நகர மேம்பாட்டு அபிவிருத்தித் திட்டங்களும் சாத்தியமற்றுப் போயின.

இலங்கையில் இயற்கை அனர்த்தங்களைப் பாதுகாப்பதற்கு ஏற்றவகையில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் அமைச்சுகளும் அது தொடர்பில் கண்டுகொள்வதாக இல்லை. அனர்த்த அபாய மத்திய நிலையம் எந்தளவு தூரம் குறித்த செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் மிக்கது என்பதை இலங்கை இதுவரையிலும் உணராமல் உள்ளது.

அனர்த்த பாதிப்பு வலயங்களை வெளியிடுவதிலும் இலங்கை அரசு சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறது. அனர்த்த வலயங்களை அடையாளப்படுத்தலானது. அனர்த்தத்தைப் பாதுகாப்பதற்கான மிக முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகின்றது. மேற்குலக நாடுகளைப் பொறுத்தமட்டில் உயர் தொழில்நுட்ப அறிவுடன் குறித்த ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன. வெள்ளம், மண்சரிவு, சூறாவளி, மின்னல், கரையோரப் பாதிப்புகள் என்பவற்றை அடையாளப்படுத்தும் உயர் தொழில்நுட்ப வரைபடங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த முறைமை என்னவென்றே அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்குத் தெரிவதில்லை. அனர்த்தம் ஏற்படுவதற்கான வலயத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளாவிட்டால் அனர்த்தம் ஏற்பட்டவுடன் நிலைமையை சமாளிப்பதற்காக போராடுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

என்ன செய்யலாம்?
இலங்கையில் சதாகாலமும் இடம்பெறும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் தேசியக் கொள்கைத் திட்டங்கள் ஏதும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதற்கு கூட்டுப் பொறிமுறை, பிரதேச அடிப்படையை அறிந்திருத்தல், காலநிலை தழுவலை ஒப்பிட்டுப் பார்த்தல், அபிவிருத்தி செயற்பாடுகளில் தர நிர்ணயம் போன்றன அவசியமாகின்றன. இது தொடர்பிலான தெளிவை பொது மக்களுக்கு ஏற்படுத்துவதற்கு முன்னர் இவ்விடங்களை அமுல்படுத்தும் அதிகாரிகள் இது தொடர்பில் பூரண அறிவுடையவர்களாகச் செயற்படவேண்டும். இலங்கை, இயற்கை அனர்த்தம் ஏற்பட்டவுடன் சமூகப் பொருளாதாரக் காரணியாக அதனை நோக்குகின்றதே தவிர, பௌதீக காரணியாக நோக்குவதில்லை.

வெள்ளம் ஏற்பட்டவுடன் அனர்த்த நிவாரணப்பொருட்களை வழங்குதிலும் பொதுமக்களை பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்புவதிலும் காட்டும் அக்கறை அதன் பின்னர் குறித்த பிரதேசத்தின் இடவரைவு மற்றும் அனர்த்த கொள்ளளவு தொடர்பில் எந்த விதமான பரிட்சார்த்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. மக்களும் காலத்திற்கு ஏற்றாற்போல் அதே பிரதேசங்களிலேயே சேர்ந்துவாழ பழகிக்கொள்கின்றனர். இதுவே அனர்த்த பாதிப்புகளுக்கு பிரதான காரணியாக அமைந்துவிடுகின்றது.

சூழல் பாதுகாப்புத் திட்டங்கள் நீண்டகால இலக்குடையதாக இருப்பதில்லை. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2025 இலக்கு, 2018 இலக்கு எல்லாம் வெறும் ஏட்டளவிலேயே இருக்கின்றன. இப்படியிருக்கையில் அனர்த்த பாதிப்புத் தொடர்பில் கதைப்பதைவிட அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் நாம் எவ்வளவோ கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது; செயற்படுத்தியும் காட்டவேண்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது அவசியமான தேவையாயினும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஓரளவேனும் எதிர்காலத் திட்டமிடலுக்காக ஒதுக்கீடு செய்தால் அனர்த்த பாதிப்புகளை வெகுவாகக் குறைத்துக்கொள்ளலாம்.

க.கமல்

உலகின் அபிவிருத்தியடைந்த பல நாடுகளிலும் காணக்கிடைக்காத ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய சமூகம் இலங்கையில் காணப்படுவதற்கு பௌத்த மத கோட்பாடுகளினால் எமது சமூகம் போஷிக்கப்பட்டிருப்பதே காரணமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புத்தசாசனத்தின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றதெனவும் தெரிவித்தார்.

மாவனெல்ல - கெப்பட்டிபொல ஸ்ரீ அபய ராஜ மகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அடிக்கல் நாட்டல் நிகழ்வின் பின்னர் நிகழ்வினை நினைவுகூரும் முகமாக மரக்கன்று ஒன்றையும் ஜனாதிபதி நாட்டினார்.

குறித்த மூன்று மாடிக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிக்கான நிதியுதவியாக பொல்கஹவலை பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரி​யை​ ஒருவர் ஐந்து இலட்சம் ரூபா நிதி ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

Published in உள்நாடு

அர்ஜுன் அலோஸியஸ{டன் தொலைப்பேசியில் பேசியுள்ளேன் என்பதற்காக நான் சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடியுடன் தொடர்புப்பட்டுள்ளதாக எடுத்துக்கொள்ள முடியாது அவர் என்னுடைய நெருங்கிய நண்பன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய பிணைமுறி சோசடி விவாகாரம் தொடர்பில் அர்ஜுன் அலோஸியஸுடன் தொலைப்பேசியில் போசியதா ஐந்து எம்.பிகளின் பெயர் பட்டியல் ஒன்றையும் அவர்கள் அர்ஜுன் அலோஸியஸுடன் எத்தனைமுறை பேசினர் என்பது குறித்த அறிக்கையொன்றை நேற்று முன்தினம் ஜனாதிபதி ஆணைக்குவுக்கு எப்.சி.ஐ.டியினர் வழங்கியிருந்தனர்.

இதில் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன 27 முறை அர்ஜுன் அலோஸியஸுடன் தொலைபேசியில் பேசியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து இன்னு நாடாளுமன்றில் நடைபெற்ற 2018ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஹர்சன ராஜகருணா பதிலளித்தார்.

“மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி இடம்பெற்ற போது நான் நாடாளுமன்றத்திலேயே இல்லை. ஆனால், சுனில் அந்துநெத்தி தலைமையிலான கோப் குழுவில் நானும் அங்கம் வகித்திருந்தேன். அர்ஜுன் அலோஸியஸை சிறிய காலத்தில் இருந்து எனக்குத் தெரியும். எவர் நெருங்கிய நண்பர். எனது அப்பாவுக்கும் தெரியும்.

நண்பன் என்ற அடிப்படையில் பல தடவைகள் பேசியுள்ளேன். அவருடன் தொலைப்பேசியில தொடர்பு கொண்டேன் என்பதால் நானும் மோசடியில் தொடர்புபட்டுள்ளதாக கருத முடியாது. இது குறித்து விசாரணைகள் நடைபெறுகிறது. முன்னர் எப்போதும் இல்லாத ஜனநாயம் இப்போதும் உள்ளது. விசாரணைகள முடிந்தப் பின்னர் குற்றம் ஊர்ஜிதமானால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். சிலர் எங்களது கௌரவத்தை திட்டமிட்டு சீர்குலைக்க பார்க்கின்றனர்.

கடந்த அரசில் அவ்வாறு வெளிப்படைதன்மை இருக்கவில்லை. இன்று பிரதமர் என்றாலும் ஜனநாக ரீதியில் விசாரணைக்கு உதவியளிக்கும் வகையில் கலந்துகொள்கிறார். கோப் குழுவில் அலோஸியஸ் எனது நண்பன் என்று சிபாரிசுகளை முன்வைக்கவில்லை மக்கள் உறுப்பினராகவே சுனில் ஹந்துநெத்தி தலைமையில் சுபாரிசுகளை முன்வைத்திருந்தேன்“ என்றார்.

Published in உள்நாடு

நுவரெலியா - ஹாவாஎலிய பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் சடலத்தை நுவரெலியா பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 41 வயதுடைய பெரியசாமி சியாமலா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குடும்பத்தில் தகராறு காரணமாக கணவனை விவாகரத்து செய்துவிட்டு குறித்த பெண் தனது பிள்ளைகளுடன் தனித்து வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு வயது மற்றும் ஒன்பது வயது பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த பெண், ஹாவாஎலிய பகுதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபைக்கு காரியாலயத்திற்கு அருகில் கழுத்து மற்றும் கைகள் வெட்டப்பட்டு உயிரிழந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், உயிரிழந்த பெண்ணின் முன்னாள் கணவரான கணேசன் நஞ்சு அருந்திய நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண்னை அவரது கொலை செய்துவிட்டு தானும் நஞ்சு அருந்தியிரு தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Published in உள்நாடு

உள்ளுராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்களை தாக்கல் செய்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்ததிப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தினத்தில் இருந்து 14 நாட்களுக்கு வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் தெரிவித்தார்.

Published in உள்நாடு
சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பில் 2008, 2009 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுடன் ஒப்பீட்டளவில் பார்க்கையில் இவ்வாண்டு சிறுவர் தொழிலாளர்களின் தொகை கனிசமாக குறைவடைந்துள்ளதாக தொழில் மற்றும் தொழிற்சங்கள் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். 
 
ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற “சிறுவர்களை தொழில்களுக்கு உட்படுத்துவதை தடைசெய்தல்” தொடர்பான 4வது மாநாட்டில் உறையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
அவர் அங்கு மேலும் கூறுகையில், சில தினங்களுக்கு முன்பாக கல்விகற்கும் குறைந்தபட்ச வயதெல்லையானது 14 வயதிலிருந்து 16 வரையில் உயர்த்தப்பட வேண்டும் என இலங்கை அரசு தீர்மானித்தது.
 
அதேபோல வேலைவாய்ப்புகளுக்கான குறைந்தபட்ச வயதெல்லையும் 16 ஆக உயர்த்தப்பபட்டது.  குழந்தைகள் கட்டாயபடுத்தி வேலைகளுக்கு அமர்த்தல், குழந்தைகளை கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் தடுப்பு மற்றும் சட்டவிரோத செயல்களில் குழந்தைகளைப் பயன்படுத்துவதை தடை செய்தல் ஆகியவை நாட்டின் குற்றவியல் சட்டத்தில் ஏற்கனவே உள்ளீர்க்கப்படடுக்கமை வரவேற்புக்குரியது.
 
எவ்வாறாயினும் இன்று பாதுகாப்பற்ற நிலையில் வாழ்த்துவந்த சிறுவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை சூழல் ஏற்படுதிக்கொடுக்கப்பட்டுள்ளதாவே அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
Published in உள்நாடு

லியனார்டோ டாவின்சியால் வரையப்பட்டது என நம்பப்படும் 500 ஆண்டுகள் பழமையான இயேசுநாதர் ஓவியம் ஒன்று நியூயோர்கில் நடந்த ஏலத்தில் 450 மில்லியன் டொலர்கள் அளவுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

இந்த ஓவியம் “உலகின் ரட்சகர்“ என்று அழைக்கப்படுகிறது. கிறிஸ்டின் ஏல அறையில் இதுவரை எந்த கலைப்படைப்பும் பெறாத ஏலத்தொகையையும் வரவேற்பையும் இந்த ஓவியம் பெற்றுள்ளது.

1519இல் உயிரிழந்த லியனார்டோ டாவின்சியின் 20ற்கும் குறைவான ஓவியங்களே தற்போது மிஞ்சியுள்ளன.

1505ஆம் ஆண்டிற்கு பிறகு வரையப்பட்டதாக கருதப்படும் இந்த சல்வேட்டர் முண்டி மட்டும்தான் தனியாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த ஓவியத்தின் இறுதி ஏலத்தொகை 400 மில்லியன் டொலர்கள் என்றாலும், மற்ற கட்டணங்களையும் சேர்த்து மொத்த தொகையானது 450.3 மில்லியன்களை தொட்டுள்ளது. தொலைபேசி வாயிலாக ஏலத்தில் பங்கேற்ற அடையாளம் தெரியாத நபரொருவர் இருபது நிமிடங்களில் இதை விலைக்கு வாங்கினார்.

இந்த ஓவியத்தில் இயேசுநாதர் ஒரு கையை மேலெழுப்பியும், மற்றொரு கையில் கோள வடிவ கண்ணாடியையும் ஏந்தியுள்ளார்.

இந்த ஓவியம் 1958ஆம் ஆண்டில் லண்டனில் நடந்த ஏலத்தில் 60 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டது. ஆனால், அப்போதுவரை இது லியனார்டோ டாவின்சியின் பின்தொடர்பாளர் ஒருவரால் வரையப்பட்டது என்றும், அது டாவின்சியால் உருவாக்கப்படவில்லை என்றும் கருதப்பட்டது.

ஓவியத்தின் மேற்பரப்பு "மந்தமாக, வார்னிஷ் செய்யப்பட்ட, செயற்கையாக, அழுத்தி தேய்த்து, மீண்டும் பல முறை வரையப்பட்டதால் ஒரே சமயத்தில் பழையதாகவும், புதியதாகவும் தெரிவதாக" ஓவிய கலைஞர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கிறிஸ்டி இந்த ஓவியத்தை நம்பகமானதாகவும், "20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கலை ரீதியான கண்டுபிடிப்பாகவும்" கூறியுள்ளது.

நோர்வே அரசாங்கமானது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக விடுவிக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் மீளக் குடியேறும் மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு 150 மில்லியன் ரூபாய்களை வழங்க முன்வந்துள்ளது.

இதற்கான உடன்படிக்கையில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நோவேத் தூதுவர் தூர்பியோன் கவூஸத்சேத்த மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி ஜோன் சொரென்ஸ்டன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

மயிலிட்டித் துறைமுகத்தை மீன்பிடிக்கான மூலோபாய மையமாக மாற்றுவதற்கும் உடனடி இடையீட்டின் ஊடாக வள்ளங்கள் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டமானது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளது.

இவ்வுதவியானது மீன்பிடி, விவசாய, கால்நடை மற்றும் மாற்று வருவாய் தரக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சமூகங்களுக்கு நின்றுநிலைக்கக்கூடிய வாழ்வாதார வாய்ப்புக்களை வழங்குவதற்கான வழிவகைகளை உருவாக்குவதனூடாக அவர்களின் பொருளாதார வாய்ப்புக்களை மீளமைக்க உதவுவதையும் நோக்காகக் கொண்டது.

இதற்காக சமூக மட்டத்தில் திறன் பயிற்சிகள் பயனுள்ள ஆலோசனைகள், கருவிகள், உபகரணங்கள், விதைகள் அத்தியாவசியமான கட்டுமானங்கள் மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை வழங்வுள்ளது.

இவ்வுதவியானது புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியமரும் 550 குடும்பங்களை நேரடியான பயனாளிகளாக்கத் திட்டமிட்டுள்ளது.

நவம்பர் 2015 முதல் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றம் ஆரம்பித்தது முதல் நோர்வே அரசாங்கமானது யாழ்ப்பாணத்தின் வளலாய் தெல்லிப்பளை பகுதிகளிலும் திருகோணமலையின் சம்பூர் பகுதியிலும் புதிதாகக் குடியேறிய மக்களின் வாழ்வாதாரங்களுக்காக ஏற்கனவே 290 மில்லியன் இலங்கை ரூபாய்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு
Page 1 of 3

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top