Items filtered by date: Thursday, 02 November 2017

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களில் அரசு மந்த கதியிலேயே செயற்பட்டுவருகின்றது என்று ஐரோப்பிய நாடாளுமன்றக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய நாடாளுமன்றக்குழு இன்று கொழும்பில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினரும், தெற்காசிய தூதுக்குழுவின் தலைவருமான ஜுன் லெம்பட் கருத்து வெளியிடுகையில், “2016 ஆம் ஆண்டு நாம் இலங்கைக்கு வருகைத் தந்தபோது பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசின் உயர்மட்ட உறுப்பினர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டமானது சர்வதேச தரத்துக் அமைவாக பதிலீடு செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தனர்.

எனினும், அந்தச் செயற்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இதுவரை தெரியவில்லை. அதேநேரம், வடக்கில் காணிவிடுவிப்பு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் செயற்பாடுகளும் மந்த கதியிலேயே இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த வருட விஜயம் முதல் தற்போதுவரை இலங்கை அரசின் சில செயற்பாடுகளில் ஆக்க
பூர்வமான முன்னேற்றங்களும், பல செயற்பாடுகளுக்கான அடித்தளங்களும் இடப்பட்டிருந்தாலும், அவற்றில் போதிய வேகம் இல்லாமையையும் எம்மால் உணரக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில், ஜீ.எஸ்.டி ப்ளஸ் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பதிலீட்டு செய்யும் அரசின் செய்றபாடுகள் குறித்து 2019ஆம் ஆண்டளவில் எம்மால் மீண்டும் மீள்பரிசீலனை செய்யப்படும்“ எனத் தெரிவித்தார்.

ஐரோப்பிய தூதுக்குழுவின் இந்த விஜயத்தில் அதன் தலைவர் ஜுன் லெம்பட், உபதலைவர் ரிச்சட் கோபட், உறுப்பினர்களான உள்ரிக் மூர், வஜிட் கான் ஆகியோர் அடங்குகின்றனர்.

இவர்கள், கடந்த முதலாம் திகதி வடக்குக்கு சென்று ஆளுநர் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனும், கொழும்பில், நிதியமைச்சர் மங்கல சமரவீர, சர்வதேச மூல உபாயங்கள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடன், இரண்டாம் திகதி சபாநாயகர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் செயன்முறையில் இலங்கை அரசு எவ்வித முன்னேற்றத்தையும் காட்டவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான அரசின் செயற்பாடுகளில் முன்னேற்றமில்லை என்று ஐ.நா. அறிக்கையாளர் தெரிவித்த கருத்து தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஐரோப்பிய தூதுக்குழுத் தலைவரான ஜுன் லெம்பட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'பொறுப்புக்கூறல் விவகாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. பொறிமுறைகளை கட்டமைப்பதிலும் சிக்கல் நிலைமையே தொடர்கின்றது. எனவே, இவற்றுக்கான நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டும்' என்றும் அவர் கூறினார்.

Published in உள்நாடு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தெலுங்கில் “ஒக்கடு மிகிலடு“ என்ற திரைப்படம் தயாராகிவருகிறது. இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் நாயகனாக நடித்து வருகிறார்.

அஜய் ஆண்ட்ரூஸ் நுதாக்கி இயக்கியுள்ள இப்படத்தின் திரைக்கதையை கோபி மோகன் எழுத சிவா ஆர்.நந்திகம் இசையமைத்துள்ளார்.

இத் திரைப்படம் உலகம் முழுக்க இம்மாதம் 10ஆம் திகதி பிரமாண்டமாக வெளியிடப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அத்திரைப்படத்துக்கான முதல் முன்னோட்ட காட்சி (ட்ரெய்லர்) கடந்த ஓகஸ்ட் 18 ஆம் திகதி வெளியிடப்பட்டபோது உலகம் முழுவதிலுமுள்ள தமிழீழ ஆதரவாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது அத்திரைப்படத்திற்கான இரண்டாவது வெளியிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் தஞ்சமைடந்துள்ள இலட்சக்கணக்கான அகதிகளை திரும்ப அனுப்பும் நடவடிக்கைகளில் அந்த நாடு மெத்தனம் காட்டுவதாக மியன்மார் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

'பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள அகதிகளை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக மியன்மார் அரசு ஏற்கனவே அறிவித்துவிட்டது. எனினும், இந்த விவகாரத்தில் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை பங்களாதேஷ் அரசு இன்னும் பரிசீலனை அளவிலேயே வைத்துள்ளது.

பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள அகதிகளின் பெயர்ப் பட்டியலை வழங்குமாறு நாங்கள் கேட்டிருந்தோம். எனினும், அந்த நாடு இதுவரை அந்தப் பெயர் பட்டியலை வெளியிடவில்லை" என மியன்மார் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பூமியை போன்று உயிரினங்கள் வாழக்கூடடிய 20 புதிய கிரகங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா மையம் கெப்லர் டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

சக்தி வாய்ந்த அதி நவீன டெலஸ்கோப் மூலம் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் பல புதிய கிரகங்களைக் கண்டு பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், உயிரினங்கள் வாழத்தகுதியுள்ள 20 புதிய கிரகங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் அயல் கிரகவாசிகள் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.

புதியதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளவைகளில் வாழக்கூடிய கிரகங்களில் கே.ஓ.ஐ-7923.01 என்பவையும் ஒன்று. இது பூமியைப்போன்று 97 சதவீத பரப்பளவு கொண்டது. எனினும் பூமியை விட குளிர் சிறிது அதிகமாகவுள்ளது.

அதிலுள்ள நட்சத்திரங்கள் சூரியனை விட சிறிது குளிர்ச்சியானவை. பூமியைப் போன்று இதமான வெப்பமும், குளிர்ச்சியான தண்ணீரும் அங்குள்ளதுடன் 70 முதல் 80 சதவீதம் திட படிவங்கள் உள்ளன.

புதிய கிரகங்கள் பலவற்றில் சூரியனைப்போன்று நட்சத்திரசுற்று வட்டார பாதைகள் உள்ளன. பல கிரகங்கள் நட்சத்திரங்களைச் சுற்றிவர 395 நாட்கள் ஆகின்றன. சில கிரகங்கள் 18 நாட்களிலேயே சுற்றி முடிக்கின்றன.

மலையகத்தில் பிரஜாசக்தி பணியாளர்கள் பலர் அரசியல் பழிவாங்கல் காரணமாக இடமாற்றங்கள் செய்யப்பட்டும், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹட்டன் நகரில் கறுப்பு பட்டியணிந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

மணிகூட்டு கோபுரத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பிரஜாசக்தி பணியாளர்களாகிய பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் கறுப்பு பட்டி அணிந்து, பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

2015ஆம் ஆண்டு இந்த நாட்டில் புதிய அரசியல் மாற்றம் ஏற்பட்டதன் பின்பு பிரஜாசக்தி நிறுவனத்தை உள்வாங்கிய அமைச்சின் ஊடாக பலர் இடமாற்றங்கள் செய்யப்பட்டதுடன், பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 100ற்கும் அதிகமானவர்கள் இடமாற்றத்திற்கு ஆளாகியிருப்பதுடன், சுமார் 15 பேர் வரை கடந்த ஒரு வருட காலமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, பிரஜாசக்தி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு எதிராகவும் வன்முறைகள் தூண்டப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியே இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

பிரஜாசக்தி நிறுவனம் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது. கடந்த ஆட்சியின் போது இன்றைய நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானின் இயக்கபாட்டில் இருந்த பிரஜாசக்தி நிறுவனத்தின் பணியாளர்களே இவ்வாறு அரசியல் பழிவாங்களுக்கு ஆளாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த அரசாங்கத்தில் மேற்குறித்த அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற பிரஜாசக்தி பணியாளர்கள் பலருக்கு தங்களின் முகநூலில் தகவல் பகிர்வு செய்தமையை சுட்டிக்காட்டி பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், போராட்டவாதிகளால் தெரிவிக்கப்பட்டது.

இவை அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தும், ஹட்டனில் இயங்கும் தொண்டமான் தொழில்பயிற்சி நிலையத்தில் தொண்டமானின் பெயரை அகற்றி விட்டு பூல்பேங்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்டமைக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் இந்த பணியாளர்கள் சுமார் 2 மணித்தியாலயங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த இரண்டு வருட காலமாக எவ்வித அறிவித்தலும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமையினால் பெருந்தோட்ட பகுதியை சேர்ந்த 175 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் இல்லாமல் போயுள்ளதுடன் ஆறு மாத சம்பளமும் வழங்கப்படவில்லை என ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இவ்வாறு தொழில் இன்றி நிர்கதிக்குள்ளான 175 குடும்பங்கள் தொடபில் ஐனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

Published in உள்நாடு

அமைதியான உலகினை கட்டியெழுப்புவதற்கு சமயக் கோட்பாடுகளினால் வழங்கப்படும் வழிகாட்டல்கள் மிக முக்கியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெறும் சர்வதேச பௌத்த மகா சம்மேளனத்தின் ஏழாவது பௌத்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் இன்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பில் இவ்வருட மாநாடு இலங்கையில் நடைபெறுவதுடன், 47 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 300 பிரதான மகா நாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

”உலக சமாதானத்திற்கு பௌத்த சமயம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் இந்த பௌத்த மாநாடு இன்று முதல் 07 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், நவம்பர் 02, 03 மற்றும் 04ஆம் திகதிகளில் அலரி மாளிகையின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுவதுடன், நவம்பர் 05ஆம் திகதி இடம்பெறும் நிறைவு விழாவும் கலாசார நிகழ்வும் கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெறவுள்ளது.

ஆரம்ப விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி “உலகில் தற்போது காணப்படும் பல்வேறு பிரச்சினைகள், நெருக்கடிகள் என்பவற்றினைக் கட்டுப்படுத்தி அமைதியான உலகினை கட்டியெழுப்புவதற்கு சமயக் கோட்பாடுகளினால் வழங்கப்படும் வழிகாட்டல்கள் மிகவும் முக்கியமானவை“ எனத் தெரிவித்தார்.

பௌத்த மதத்தினால் போஷிக்கப்பட்ட மிகப் பழமையான வரலாற்றினை உடைய நாடாகிய இலங்கையில் இவ்வருட பௌத்த மாநாடு கோலாகலமான முறையில் இடம்பெறுகின்றமை தொடர்பாக தனது மகிழ்ச்சியை வெளியிட்ட ஜனாதிபதி இம்மாநாட்டின் மூலமாக உலக நாடுகளுக்கு வழங்கப்படும் செய்தியானது காலத்திற்கு உகந்ததாக அமைகின்றதென்றும் தெரிவித்தார்.

Published in உள்நாடு

“வடக்கு, கிழக்கு இணைப்பில் விட்டுக்கொடுப்பு என்ற பேச்சிக்கே இடமில்லை. இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வு வழங்கப்படுவதே எமது நீண்டகால கோரிக்கை. இந்த இறுதிச் சந்தர்ப்பமும் தோல்விக்காணும் பட்சத்தில் சர்வவதேச தலையீட்டை தவிர்க்க முடியாதென்பதுடன், நாங்கள சர்வதேசத்தை நாடுவதை தவிர வேறு வழியும் இல்லை“ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

புதிய அரசமைப்புக்காக வழிநடத்தல் குழுவில் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் இன்று நான்காவது நாளாக அரசமைப்பு நிர்ணய சபையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

“சுதந்திரத்திற்குப் பின்னர் 20 வருடங்கள் அஹிம்சை போராட்டம் 30 வருடங்கள் ஆயுதம் போராட்டம் என நடைபெற்றும் தென்னிலங்கை அரசியலின் மனநிலை இன்னமும் மாறவில்லை. ஆட்சியில் இருக்கும் போது அதிகாரப் பகிர்வு பற்றி பேசியவர்கள் அதிகாரம் இல்லாத போது எதிர்கின்றனர்.

சமஷ்டி கோரிக்கை இன்று நேற்று முன்மொழியப்பட்டது அல்ல. 50 வருடங்களுக்கு முன்னர் தந்தை செல்வநாயகம் முன்வைத்த கோரிக்கை. அந்தக் கோரிக்கையில் இருந்து நாங்கள் மாறி செயற்பட முடியாது. புதிய அரசமைப்புச் செயற்பாட்டை நாடாளுமன்றில் எவரும் எதிர்க்கவில்லை. ஆனால், வெளியில் அரசமைப்புக்கு எதிராக பாரிய விம்பத்தை உருவாக்கியுள்ளனர்.

கடந்த அரசில் தமழிர்களின் ஜனநாயகம் ஒடுக்கப்பட்டிருந்தது. இன்று இணக்கப்பாட்டுடன் தீர்வுகாண நிலை காணப்படுவதாலேயே கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கி வருகிறது. இதனை நாங்கள் இறுதியான சந்தர்ப்பமாகவே பார்கின்றோம். இந்தச் சந்தர்ப்பம் நழுவவிடப்பட்டு தோல்விகாணும் பட்சத்தில் சர்வதேசத்தை நாடுவதை தவர வேறு வழியில்லை.

காலங்காலமாக இனப்பிரச்சினைகள் இருக்க வேண்டும் என்று பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் விரும்புகின்றனர். மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் ஏற்படக் கூடாது என்றுதான் நாங்கள் அரசுடன் ஒத்துழைத்துச் செயற்படுகின்றோம். இச்சந்தர்ப்பமும் தோல்வியடைச்செய்தால் மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் உருவாக முடியாது என்று எவராலும் கூறமுடியாதென்பதுடன், நாட்டில் இரத்த ஆறு ஓடுவதையும் தடுக்க முடியாது.

வடக்கு,கிழக்கு என்பது தமிழர்களின் தாயகமாகும். இதனை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. இந்த நாட்டின் தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், சிங்கள, மலையக மக்கள் ஒன்றுமையாக வாழ ஏற்பட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி ஆட்சிமுறை கட்டாயம் அவசியமாகும். இல்லாவிட்ட சர்வதேசத்தை நாடுவதை தவிர வேறு வழியே இல்லை“ எனக் குறிப்பிட்டார்.

Published in உள்நாடு

“மலையகத் தமிழர்கள் அரசமைப்பில் தேசிய இனமாக அங்கீகரிக்கப்படுவது கட்டாயமாகும். அப்போதுதான் அவர்களின் உரிமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்“ என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.

புதிய அரசமைப்புக்காக வழிநடத்தல் குழுவில் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் இன்று நான்காவது நாளாக அரசமைப்பு நிர்ணய சபையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

“புதிய அரசமைப்பில் மலையகத் தமிழர்களும் ஒரு தேசிய இனமாக அங்கீகரிப்பட வேண்டும் என்பதே தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு. ஆனால், இடைக்கால அறிக்கையில் நாங்கள் முன்வைத்த கோரிக்கை முன்மொழிப்பட்டிருக்கவில்லை.

மலையக தமிழர்கள் என்ற அடையாளத்தை நாங்கள் எதற்காக கோருகின்றோம். இடைக்கால அறிக்கையில் அனைத்து சிறுபான்மை மக்களின் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.ஆனால், யார் அந்த சிறுபான்மை இனங்கள் என்று அடையாளப்படுத்தப்படவில்லை.

இலங்கையில் நான்கு தேசிய இனங்கள் வாழ்கின்றது என அடையாளப்படுத்துவதே எமது கோரிக்கை. இலங்கைத் தமிழர்கள் என்று மலையகத் தமிழர்களை அடையாளப்படுத்த முடியாது. காரணம் இலங்கைத் தமிழர்கள் நீண்டகாலமாக தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து வந்தவர்கள். நாங்கள் இந்த நாட்டில் பிரஜாவுரிமைக்காகப் போராடிவந்தவர்கள்.

அத்துடன், மலையக தமிழர்கள் கலாசார ரீதியாக வேறு பண்பாட்டை கொண்டுள்ளனர். மலையகத் தழிழர்களுக்கு அரசமைப்பு ரீதியாக அங்கீகாரம் அளிக்கப்படும்போதுதான் அவர்களின் உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும்.

இதவேளை, முன்மொழியப்பட்டுள்ள இரண்டாம் சபைக்கு மாகாணசபை பிரிதிநிதிகளே உள்வாங்கப்படுவார்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் சபைக்கு சிறுபான்மை சமூகங்களின் பிரநிதிகளே உள்வாங்கப்பட வேண்டும். அதற்காகவே இரண்டாம் சபை முன்மொழியப்பட்டது. இது குறித்து தெளிவான இணக்கப்பாட்டை எட்ட பேச்சுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்“ எனக் குறிப்பிட்டார்.

Published in உள்நாடு

மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உள்ளிட்ட நால்வர் கைதின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான பி.சக்திவேல், பிலிப்குமார், நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மலர்வாசகன், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அருள் நாயகி ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

தலா 50 ஆயிரம் ருபாய் பெறுமதியான பிணையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டதுடன், இவர்களை எதிர்வரும் டிசெம்பர்மாதம் 4ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் பலகையில் தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிராக கடந்த 26ஆம் திகதி ஹட்டன் நகரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, வர்த்தக நிலையத்துக்கு கல்வீச்சு நடத்தப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய சந்தேகத்தின்பேரில் இ.தொ.கா உறுப்பினர்கள் நால்வர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு
Page 1 of 3

Latest News

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top