Items filtered by date: Tuesday, 21 November 2017

இந்த வருடத்தின் கடந்த 10 மாதங்களில் ரயில் விபத்துக்களால், 180 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், ரயில் விபத்துகளின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது.

அத்துடன், குறித்த காலப் பகுதியில் ரயில் குறுக்கு வீதிகளில், வாகனங்களுடன் ரயில் மோதிய சம்பவங்கள் 84 இடம்பெற்றுள்ளதோடு, ரயிலில் இருந்து பயணிகள் தவறி வீழந்த சம்பவங்கள் 76 பதிவாகியுள்ளன.

மேலும், ரயில் வீதிகள் அல்லது ரயில் வீதிக்கு குறுக்காக பயணித்தமையால் ஏற்பட்ட விபத்துக்கள் 436 இடம்பெற்றுள்ளதாக, ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, வாகனங்கள் ரயில் குறுக்கு வீதிகளிலுள்ள வாயில்களில் மோதியமையால் ஏற்பட்ட பாதிப்பு சம்பவங்கள் 506 பதிவாகியுள்ளதாக அந்தத் திணைக்களம் கூறியுள்ளது.

அத்துடன், கடந்த 10 மாதங்களில் செல்பி எடுக்கும் முயற்சிகளால் ரயில் விபத்துக்களில் சிக்கி பலியான இளைஞர்களின் எண்ணிக்கை 24 எனவும் கூறப்பட்டுள்ளது.

Published in உள்நாடு

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி சாட்சியமளித்த பிரதமருக்கு நாம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். எவ்வாறாயினும் இந்தக் குற்றத்தினை மேற்கொண்ட குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும் என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

மருதானையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “பிணை முறி மோசடி குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது சாட்சியமளித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற பாரிய ஊழலாகவே இதனை நாம் பார்க்கிறோம்.

இதனாலேயே எமது கட்சியினாலும் இதனை ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுவும் தற்போது முறையாகவே தமது விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது. கடந்த காலங்களில் எல்லாம் அரசியல் பழிவாங்கல்களுக்காகவே ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், நாம் இந்த ஜனாதிபதி ஆணைக்கு குறித்து முழுமையான நம்பிக்கையடைகிறோம்.

இதனால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஊடாக தற்போது பல உண்மைகளும் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. இதன் மூலம் மோசடி இடம்பெற்றுள்ளமையும் உறுதியாகியுள்ளது.

அத்தோடு, இதில் ஆஜராகி சாட்சிகளை பதிவு செய்த பிரதமருக்கும் நாம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். எனினும், இதனுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். மேலும், எதிர்வரும் 8 ஆம் திகதி இதுகுறித்து கையளிக்கப்படும் அறிக்கைக்கு இணங்க ஜனாதிபதி நடவடிக்கைகளை ஆரம்பிப்பார் எனவும் நாம் கருதுகிறோம்.“ என்றார்.

Published in உள்நாடு

“ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் நீதிமன்ற கட்டமைப்பில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். எனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய விஜயத்தினை முடித்துகொண்டு நாடு திரும்பியவுடன் வெகு விரைவில் நீதிமன்ற கட்டமைப்பினை சீர்த்திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.“ என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்,

அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பில் முழுமையான மாற்றத்தினை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பயனாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டா அதிபர் திணைக்களத்தினுல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான தரப்பினரின் ஆதிக்கம் தொடர்ந்தும் நீடிக்கின்ற காரணத்தினால் ஊழல்,கொலை விவகாரங்கள் தொடர்பிலான வழக்குகளில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் ஆதாரங்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேற்படி வழக்குகள் தாமதமாவது தொடர்பிலான அறிக்கையொன்றினையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடத்தில் சமர்பித்துள்ளது. இதனை கருத்திற்கொண்டு நீதிமன்ற கட்டமைப்பில் சீர்திருத்தம் செய்யும் பணிகளை முன்னெடுக்குமாறு பிரமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் ஐ.தே.க பின்வரிசை உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசிய ஐ.தே.க வின் பின்வரிசை உறுப்பினர்கள் மேற்படி வழக்கு விசாரணைகளுக்காக தனியான ஒரு நீதிமன்றத்தை அமைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்த காரணத்தினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய வியஜத்தை முடித்துகொண்டு நாடு திரும்பியவுடன் நீதிமன்ற கட்மைப்பினை சீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது“ என அவர் தெரிவித்துள்ளார்.

Published in உள்நாடு

இலங்கையில் தமிழ் மக்கள் அநாவசியமாக கொல்லப்படவில்லை என நிரூபிக்கப்பட்டால் புதிய அரசிலமைப்புக்கு முட்டுகட்டையிட முடியுமென தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாஸ அமர சேகர தெரிவித்தார்.

சிறிசேன - ரணில் அரசாங்கத்தை உருவாக்கிய சர்வதேச சக்திகளுக்கு நன்றிக்கடனாக புதிய அரசியலமைப்பை உருவாக்கியாக வேண்டும் என்ற தேவை தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளதெனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்‍வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார், “இந்த நாட்டு மக்கள் ஒருபோதும் புதிய அரசியலமைப்பொன்று வேண்டுமென்று கோரவில்லை. சர்வதேச சக்திகளுக்கே பிளவு தேவைப்படுகின்றது. அதற்காகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது.

அதற்காகவே யுத்தகுற்றம் சுமத்தப்பட்டு இராணுவம் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிவில் மக்களை கொலை செய்ததாக இராணுவத்தின் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. மறுமுணையில் நல்லிணக்கம் என்ற பேரில் நாடு பிளவுபடுத்தப்படுகின்றது.

ஆனாலும் தற்போதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அரசிலமைப்பின் ஊடாக நாட்டை பிரிகிக்க வேண்டும் என்ற எண்ணம் மாறவில்லை. காரணம் யுத்த குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணர்தன் சில வழிமுறைகளை கூறியும் அதனை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.

யுத்தகுற்ற விவகாரம் இராணுவத்தின் பக்கமிருந்து நீக்கப்பட்டால் புதிய அரசியலமைப்புக்கு இலகுவாக முட்டுகட்டையிட முடியும். இந்த நாட்டின் அநாவசியமாக தமிழ் மக்கள் கொல்லப்படவில்லை என உறுதிப்படுத்தினாலே போதுமானது.

எவ்வாறாயினும் சிறிசேன - ரணில் அரசாங்கத்தை உருவாக்கிய சர்வதேச சக்திகளுக்கு நன்றிக்கடனாக புதிய அரசியலமைப்பை கொண்டுவரவேண்டிய தேவை தற்போதைய ஆட்சியாளர்களுக்கு உள்ளது. என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published in உள்நாடு

கொழும்பு முழுவதும் நேற்றை தினம் முதல் அச்சமற்ற பிரதமர் என்ற சுவரொட்டி பிரசாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பிதரம் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படத்துனேயே இந்த இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மத்திய வங்கி பிணைமுறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் நேற்றைய தினம் ஆஜராகி ஆணைக்குழுவின் கேள்விகளுக்கு பதிலளித்ததையடுத்தே இவ்வாறான சுவரொட்டி பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்த நிலையில் நேற்று இரவு முதல் இந்த சுவரொட்டி பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

கிந்தோட்டை சம்வங்கள் போல இன்னும் பல சம்வங்கள் நாட்டில் இடம்பெறலாமென பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நாட்டின் சகல பிரதேசங்களிலும் சுதந்திரமாக வாகனத்தை செலுத்திச் செல்லலாம் என் நிலைமை இருக்கையில் முஸ்லீம்கள் வாழும் பகுதியில் மாத்திரம் அதி அவதான வளையத்திற்கு செல்வது போல் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்ற நிலைமையே தற்போது காணப்படுகின்றது.

பள்ளிவாசல்களின் முன்னாள் அமைதியாக செல்ல வேண்டும் என்றும், வாகனங்கள் தரிக்க தடை என்றும் அறிவுருத்தல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இன்று அக்கரனை, கம்பஹா வரிசையில் புதிதாக கிந்தொட்டையும் இணைத்துகொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த நாட்டில் முஸ்லீம் அடிப்படைவாதம் உள்ளது என்பதே எமது நிலைப்பாடாகும். ஆனாலும் இந்த நாட்டில் இனிவரும் நாட்களில் கிந்தொட்டை போன்ற பல சம்வபங்கள் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளது.  தற்போது நாங்கள் அமைதியாக இருப்பதால் அரசாங்கம் எங்களை அமர்த்திவிட்டது என்று கருதக்கூடாது.

நாங்கள் உரிய தருணத்தில் முன்னிலையாவோம். தொடர்ச்சியாக எமது அமைதி நீடிக்காது. காரணம் சிலர் சிறு பிரச்சினைகளையும் பூதாகரமாக்க முயற்சிக்கின்றனர். விரைவில் முஜிபூர் ரஹூமான், முஜீபூர் ரஹ்மான் உள்ளிட்டோருக்கும் விரைவில் சாப்பாடு தயார் செய்து வைத்துள்ளோம். இவ்வாறிருக்கையில் தற்போது அரசாங்கம் நல்லிணக்கம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றது. நாட்டில் இடம்பெறும் சம்வங்களை பார்க்கையில் சிங்களவர்கள் வாயை மூடிக்கொண்டு அடிவாங்குவதான் நல்லிணக்கமா என்று கேட்கத்தோன்றுகின்றது.

எனவே அரசாங்கம் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு ஒரு குழுவை நியமித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கூறுகின்றோம்.“ எனக் குறிப்பிட்டார்.

Published in உள்நாடு

இராணுவ சேவையிலிருந்து தப்பிச்சென்ற நபர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் நாளையுடன் நிறைவுக்கு வருவதுடன், சரணடையாத வீரர்களை கைதுசெய்யும் நடவடிக்கை நாளை மறுதினம் முதல் ஆரம்பமாகும் என்று இராணுவம் அறிவித்துள்ளது.

இராணுவத்தில் இருந்து விடுமுறையின்றி சேவைக்கு சமூகமளிக்காத மற்றும் தப்பிச்சென்ற அதிகாரிகள், சிப்பாய்கள், பெண்கள் உள்ளிட்டவர்கள் தாம் கடமை புரிந்த படைபிரிவுக்கு சென்று சரணடைந்து பொதுமன்னிப்பு பெறுவதற்கான காலத்தை கடந்த 23ஆம் திகதி முதல் நவம்பர் 15ஆம் திகதி வரை இராணுவம் அமுல்படுத்தியது.

பின்னர், பொதுமன்னிப்பு காலம் இன்றுவரை நீடிக்கப்பட்டதுடன், நேற்றைய தினம் வரை 10,091 நபர்கள் தங்களது படையணி தலைமையகங்களிற்கு வந்து சட்டபூர்வமாக சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளதாக இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரட்ன தெரிவித்தார்.

இதில் 12 அதிகாரிகள் 09 கெடெற் அதிகாரிகள் உள்ளடங்குவதுடன், இவர்களுக்கு இன்று மாலை வரை கால அவகாசம் உள்ளதுடன், நாளை மறுதினத்திலிருந்து சரணடையாதவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்னும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவ வீரர்கள் சரணடையாமல் உள்ளனர். கடந்த வருடம் அமுல்படுத்தப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தில் சுமார் 8ஆயிரம்பேர் சரணடைந்ததுடன், சரணடையாத அதிகாரிகள் 14 பேர் மற்றும் சுமார் 5400 சிப்பாய்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற நபர்களுக்கு தஞ்சமளிப்பதோ அல்லது வேலை வாய்ப்பை வழங்குதல் குற்றவியல் தண்டனை பிரிவு 133 பிரவின் படி நீதிமன்றத்தில் தண்டிக்கப்படும் குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் பெயர்ப்பலகை நீக்கப்பட்டதாக தமிழகத்தில் இருந்து வெளியான அறிக்கைகளுக்கான தெளிவுபடுத்தலைச் செய்ததோடு அவர்களை மலையகத்திற்கு நேரில் வருகை தந்து நிலைமைகளை கண்டறியுமாறு அமைச்சர் திகாம்பரம் அழைப்பு விடுத்துள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோர் தமிழ்நாட்டுக்கு நேற்று முன்தினம் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தபோது இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ஆகியோரைச் சந்தித்து சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியமை தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

ஹட்டனில் இயங்கி வந்த தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் பூல் பேங்க் என பெயர் மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் நாட்டு தலைவர்கள் சிலர் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இது தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்காக அமைச்சர் திகாம்பரம் தலைமையிலான குழு ஒன்று இந்தியாவிற்கு சென்றுள்ளதுடன், ஊடக சந்திப்பொன்றையும் நடத்தி தொண்டமான் பெயர் நீக்கம் தொடர்பில் தெளிவுப்படுத்தியிருந்தனர்.

குறித்த ஊடக சந்திப்பில் உரையாற்றி நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ், “அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கையில் தேசிய தலைவராக அங்கீகரிக்கப்பட்டவர். அவருக்கு பழைய நாடாளுமன்ற முன்றலில் சிலையும் புதிய நாடாளுமன்றில் உருவப்படமும் வைக்கப்பட்டு இலங்கை அரசினால் கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிங்கள அரசு அவரின் பெயரில் அமைக்கப்பட்ட கல்லூரியின் பெயர்ப் பலகையை நீக்கியதாக தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் குறிப்பிட்ட நான்கு நிறுவனங்களையும் நிர்வகிப்பதாக ஏற்பாடு செய்து சௌமியமூர்த்தி தொண்டமான் என்பதற்கு பதிலாக தொண்டமான் எனும் பெயரே குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டுள்ளது.

அந்த தொண்டமான் என்ற பெயருடனேயே அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சி தமது அரசியலை குடும்ப அரசியலை முன்னெடுத்து வருகின்றது. எந்த இடத்திலும் சௌமியமூர்த்தி தொண்டமான் எனும் பெயர் நீக்கப்படவில்லை என்பதையும் அவர் பெயரிலான மன்றம் இயங்குவதில் இலங்கை அரசு எவ்வித தடங்கலையும் எற்படுத்தவில்லை.“ எனக் குறிப்பிட்டார்.

Published in உள்நாடு

இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து சுமார் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, கடனை திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியோடினார்.
மத்திய புலனாய்வுத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தன.

இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, தற்போது லண்டனில் தஞ்சமடைந்து வசித்து வருகிறார். அவரை நாடு கடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என இங்கிலாந்து அரசை மத்திய அரசு வலியுறுத்தியதுடன், இது தொடர்பாக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றில் வழக்கும் தொடர்ந்துள்ளது.

மல்லையாவை நாடு கடத்துவதற்கு தேவையான ஆதாரங்களையும் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது. இந்தியா கொடுத்த புகாரின்பேரில் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கைது செய்து, பின்னர் பிணையில் விடுவித்தனர்.
இந்நிலையில், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் மல்லையா ஆஜர் ஆனார்.

தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், நீதிமன்றத்தில் அனைத்தும் தெளிவாகும் என்றும் கூறினார்.

இதையடுத்து இவ்வழக்கில் அதிகாரப்பூர்வ விசாரணை டிசம்பர் 4ஆம் திகதி தொடங்கி 14ஆம் திகதி வரை நடைபெறும் என்றும், அதன்பின்னர் தீர்ப்பு திகதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top