Items filtered by date: Saturday, 25 November 2017

பப்புவா நியுகினியில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் நடத்தப்பட்டு பிறகு மூடப்பட்ட, 'தஞ்சக் கோரிக்கையாளர்களின் தடுப்பு முகாம்' இருந்து வெளியேற மறுத்தவர்கள், மூன்று வாரகால இழுபறிக்குப் பின்னர் பலவந்தமாக புதிய இடத்துக்கு மாற்றப்பட்டதை அவுஸ்திரேலியா உறுதி செய்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி மனுஸ் தீவில் உள்ள குறித்த முகாம் மூடப்பட்டதையடுத்து, தஞ்சம் கோரி வந்தவர்கள், உள்ளூர் வாசிகளின் தாக்குதல்களுக்கு அஞ்சி அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டனர்.

இரண்டாவது தடவையாக பொலிஸார் அவர்களை பலவந்தமாக வெளியேற்ற முயற்சித்தனர். இந்நிலையில் பொலிஸார் தங்களை கட்டையால் தாக்கியதாக சிலர் தெரிவித்தனர்.

கைதிகள் தாக்கப்பட்டதாக கூறுவது தவறானது என்றும் அவை மிகைப்படுத்தப்பட்டது என்றும் அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் துறை அமைச்சர் பீட்டர் டட்டன் கூறியுள்ளார். தாங்கள் இது போன்ற எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்று அவுஸ்திரேலிய பொலிஸ் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களுக்கு ஏற்பில்லாத எந்தத் தீர்வுத்திட்டத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எற்காது இதில் எவரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார்

புதிய அரசமைப்புச் சட்டத்தின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடல் ஒன்று இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் “மகிந்த ராஜபக்சவும் சில சிங்கள அமைப்புக்களும் இந்த இடைக்கால அறிக்கையில் மறைமுகமான சமஷ்டித் தீர்வு தமிழர்களுக்கு வழங்கப்பட இருப்பதுடன் பின்னர் நாடும் பிரிக்கப்படும் எனப் பிரச்சாரம் செய்கின்றனர் .

இவ்வாறு சிங்கள மக்களை துண்டிவிட்டு துவசங்களை ஏற்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். தமிழ் மக்களுக்கு ஏற்பில்லாத எந்தத் தீர்வுத்திட்டத்தையும் தமிழ்க் கூட்டமைப்பு ஏற்காது இதில் எவரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. 1989ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டினாலும் கடும் முயற்சியின் பயனாலும் 13ஆவது சீர்திருத்தம் உருவாக்கப்பட்டது. மாவட்ட சபையைப் பெற தத்தளித்த எமக்கு வடகிழக்கு இணைக்கப்பட்டு மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது ஆனால் தமிழ்மக்களுக்கான சரியான தீர்வாக அமையவில்லை. இதனால் 13 சீர்திருத்தத்தில் பல முன்னேற்றங்கள் அடையவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம் அது பின்னர் நிறைவேறாமல் போய்விட்டது.

1970ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்க இடதுசாரி கட்சிகளின் உதவியுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்று முதலாவது குடியரசு அரசியல் சாசனத்தினை உருவாக்கினார்.

இன்று உருவாக்கிய அரசியல் சாசனத்தில் தமிழர் நலன் சார்ந்த விடயங்களை உள்ளடக்க வேண்டும் என்று தமிழரசுக்கட்சி மிகுந்த பிரயத்தனத்தினை மேற்கொண்டும் எதுவும் நடந்தேறவில்லை அன்றைய காலகட்டத்தில் தமிழர்களுக்கான சமட்சி ஆட்சி முறை, சகல அதிகாரங்களுடனும் கூடிய அதிகாரப்பகிர்வு மற்றும் பிராந்திய ஆட்சி முறை போன்ற ஆட்சி அதிகாரங்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அண்ணன் தர்மலிங்கமும், தந்தை செல்வாவும் எவ்வளவோ முயற்சித்தும் எதுவுமே கைகூடவில்லை.

இதே போன்ற ஒரு நிலைப்பாடுதான் 1978ஆம் ஆண்டு வர்த்தன ஜே.ஆர். ஜயவர்தன மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று ஆட்சியதிகாரத்தினை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். அந்தக்காலகட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக அண்ணன் அமிர்தலிங்கம் இருந்தார் அப்போது இந்த நாட்டிலே ஒற்றையாட்சி முறைதான் காணப்பட்டது.

இதன் பிற்பாடு 1983ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டின் காரணமாகவும், ராஜீவ்காந்தியின் கடும் பிரயத்தனத்தின் மத்தியில் 13வது திருத்த சாசனம் இன்றைய காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது அதாவது வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் ஒன்றாக இணைக்கப்பட்டு வடகிழக்கு மாகாணங்களாக இணைக்கப்பட்டது இந்த இணைப்பிற்கு போதிய உறுதிப்பாடு இருக்கவில்லை கனிசமான முன்னேற்றம் மாத்திரமே இருந்தது இதனால் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ள வில்லை அந்த காலகட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டனி தேர்தலில் போட்டியிடவும் இல்லை.

இந்த காலகட்டத்தில் அண்ணன் சிவசிதம்பரம், அமிர்தலிங்கம், சம்பந்தன் ஆகிய நாங்கள் மூவரும் ஒரு கடிதத்தினை ராஜிவ்காந்திக்கு அனுப்பியிருந்தோம் 1983 கார்த்திகை மாதம் அவர் காத்மண்டுவிற்கு சென்று அங்கிருந்து இலங்கைக்கு திரும்பியபோது நாங்கள் அனைவரும் அவரை சந்தித்து 13வது திருத்த சாசனம் தொடர்பாக 4 நாட்களாக தங்கியிருந்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். அந்த நேரத்தில் 13ஆவது சாசனத்திற்கான 12 கருமங்களை அன்றிருந்த ஜே.ஆர். ஜயவர்தன ஏற்றிருந்தார்.

அதன் பிற்பாடு தமிழீழ விடுதலை புலிகளுக்கும், இந்தியப்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட போர் காரணமாக அந்த நடவடிக்கை இடைநடுவே கைவிடப்பட்டது அதன்பிற்பாடு நாங்கள் அது தொடர்பான பல விடயங்களை முன்னெடுத்திருந்தோம் அந்தவகையில் பிரேமதாசாவினுடைய காலத்திலும் பின்னரான சந்திரிக்காவினுடைய காலத்திலும் பாராளுமன்றத்தில் புதிய அரசியல் சாசன பகிர்வு கொண்டுவரப்பட்டது.

ஆனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்பை பலம் இல்லாமையினால் அது நிறைவேற்றப்படவில்லை. 2012ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒஸ்லோ பிரகடனம் வெளிவந்தது .அதாவது தமிழ்மக்கள் சரித்திரரீதியாக வாழ்ந்த பகுதியில் சமஷ்டி ரீதியான ஆட்சிடைபெறவேண்டும் என இலங்கை அரசு ஏற்றுக்கொண்டபோதும் அது நிறைவெற்றப்படவில்லை .

மகிந்த ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டி அந்தந்தப் பகுதிகளுக்கு அதிகப்படியான அதிகாரம் வழங்கவேண்டும் எனத்தெரிவித்தும் அதுவும் நடைபெறாமல்போன வரலாறுகள்தான் இருக்கின்றன.

இந்நிலையில்தான் தமிழ் பேசும் மக்கள் இணைந்து மைத்திரிபால சிறிசேனை தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிபிடம் ஏற்றி இருக்கின்றேம் இவ் அரசாங்கத்தில் பிரதமராக ஐக்கியதேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இருப்பதுடன் பெரும்பான்மைக்கட்சிகள் இரண்டுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வேறு சில கட்சிகளும் இணைந்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்துடன் புதிய அரசியல் சாசணத்தை நிறைவேற்றினால் அது முன்னேற்றகரமானதாக அமையும். இதனைக் குழப்பும் நோக்கில் சில தலைமைகள் செயற்படுகின்றனர்.“ எனக் குறிப்பிட்டார்.

Published in உள்நாடு

யாழ். பருத்தித்துறை பகுதியில், உழவு இயந்திரத்தில் மோதி, நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை - முதலாம் கட்டை பகுதியைச் சேர்ந்த, 3 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய சிதம்பரப்பிள்ளை சிவபாலன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், இன்று அதிகாலை 1.45 மணியளவில் அவரது நண்பர்களுடன் மதுபானம் அருந்திக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது ஏற்பட்ட தகராற்றின் பின்னர், அவர் அங்கிருந்துச் சென்ற சமயம், சந்தேகநபரான உழவு இயந்திர சாரதி, உழவு இயந்திரத்தால் அவரை மோதியுள்ளார். இதில், குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், 43 வயதுடைய உழவு இயந்திரத்தின் சாரதி, பருத்தித்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Published in உள்நாடு

பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிக்கும் 'குறள் 388' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் அவருடைய பிறந்த நாளில் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது. இந்த நிலையில் அரசியல் த்ரில்லர் படமான இந்த படம் தமிழகத்தின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் உள்பட பல தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்கள் படம் இடம் பெற்றிருந்ததால் அனைவரின் கவனத்தையும் பெற்றது. அறிமுக இயக்குனர் GS கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணுமஞ்சுவுக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் 'இவன் வேற மாதிரி', 'வேலையில்லா பட்டதாரி' போன்ற படங்களில் நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் 'குறள் 388' , தெலுங்கில் வோட்டர் ஆகிய தலைப்புகளில் வெளியாகும் இந்த படம், திருவள்ளுவர் எழுதிய குறளில் 388 வது குறளான, 'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்' என்ற குறளின் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

தேர்தலின் போது போலியான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலுக்குப் பின் அதை மறந்து விடும் போலியான அரசியல்வாதிகளின் முகத்திரைகளை தோலுரிக்கும் கதையே குறள் 388 படத்தின் கதையாகும். பிரபாஸ், மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் போலவே விஷ்ணுமஞ்சுவிற்கு இந்த படம் தமிழில் நல்ல ஒரு அறிமுகபடமாக அமையும் என்று கருதப்படுகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

தொடர்ச்சியாக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதன் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வருத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு அரசியல் கட்சிகளில் முரண்பாடுகள் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்படும் நிலையில் மக்களால் தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதால் அவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் அவருடை நண்பர்கள் அவரை சந்தித்த போது தேர்தல் இடம்பெறுமா என்று கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த மஹிந்த தேசப்பிரிய, “இருக்கின்றது.. இருக்கின்றது.. இல்லாமல் என்ன” என்று கூறியுள்ளார்.

“நீங்கள் அப்படி கூறினாலும் உங்களால் தேர்தலை நடத்த முடியுமா?” என்று அவரிடம் கேட்டதுக்கு, அடுத்த வருடத்துக்குள் தேர்தலை நடத்த முடியாவிட்டாள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்னதாக வீதியில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Published in உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் தமக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நான்கு முன்னணி தேரர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இந்த தகவலை உறுதிசெய்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைதுசெய்வதற்கு தயாராகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பான நிலை குறித்து கேட்பதற்காக நாயக்க தேரர்கள் ஜனாதிபதியை சந்தித்திருந்தனர்.

இந்த கலந்துரையாடலின்போது, ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து தேரர்களுக்கு ஜனாதிபதி விளக்கமளித்துள்ளதுடன், தனக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றதை வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் தொடர்பில் நீண்ட சுமூக பேச்சுவார்ததை இடம்பெற்றதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சந்திப்பு தொடர்பில் நாயக்க தேரரிடம் அவர் விளக்கமாக எடுத்து கூறியுள்ளார்.

இன்னாள் முன்னாள் ஜனாதிகளுக்கு இடையிலான இந்த சந்திப்பின் போது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பங்குபற்றியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உறவினரான வர்த்தகர் ட்டலி சிறிசேனவில் வீட்டில் இடம்பெற்றிருந்தாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

"வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. இதனை எவராலும் பிளவுபடுத்தவோ உடைக்கவோ முடியாது.'' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், திருகோணமலையில் நேற்று மாலை நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.

"கூட்டமைப்பின் ஒற்றுமை அதன் பலம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெளிப்படும். இம்முறையும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் நாம் கொடிகட்டிப் பறப்போம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"நாட்டில் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வே வேண்டும். அதனை வென்றெடுக்கும் வரை எமது ஜனநாயகப் போராட்டம் தொடரும். "புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவால் அரசியலமைப்பு நிர்ணய சபையில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இடைக்கால அறிக்கையே. இது இறுதி வரைபு அல்ல. இறுதி வரைபு வரும்வரை அதற்கான ஒத்துழைப்புகளை நாம் வழங்குவோம்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

"புதிய அரசியலமைப்புக்கான இறுதி வரைபு தமிழ்பேசும் மக்களுக்கு உகந்ததாக இல்லை என்றால் அந்த இறுதி வரைபை நாம் அடியோடு நிராகரிப்போம்'' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Published in உள்நாடு

இலங்கை இந்தியத் தொடர்பை நாம் பொருளாதாரத்துக்குள் மட்டும் சுருக்கிப் பார்த்துவிடக்கூடாது. வரலாற்றுக் காலந்தொட்டே இலங்கை இந்தியத் தொடர்பு பின்னிப்பிணைந்துள்ளதென்பதை நாம் எத்தனையோ விடயங்களில் உணர்ந்துள்ளோம். எமக்குள்ள அடையாளங்கள் திடீரென தோன்றியதல்ல. அவை வரலாற்றோடும் நம்பிக்கையோடும் ஒன்றுசேர்ந்தவை.

இதற்கொரு சிறந்த ஆதாரமாக இராமர் பாலம் கருதப்படுகின்றது. இலங்கையையும் தமிழகத்தையும் இணைக்கும் கடலில் மூழ்கியுள்ள நிலத்திட்டுகளை இராமர் கட்டிய பாலம் என்றும், இந்தியாவாலும் இலங்கையாலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் இராமர் பாலத்தை எவ்விதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்றும் உணர்வுபூர்வமான கோரிக்கையை இருநாட்டு மக்களும் முன்வைத்து வருகின்றனர்.

இந்த அடிப்படை உணர்வை சீண்டிப்பார்க்கும் ஒரு திட்டமாகவே சேதுசமுத்திரத்திட்டம் கொண்டுவரப்பட்டது எனப் பலரும் கருதுகின்றனர். ஆனால், இத்திட்டத்தின் எதிர்கால அபிவிருத்திகளை இராமர் பாலத்தின் வரலாற்றோடு சமயம் சார்பாக நிறுவி தட்டிக்கழிக்கப் பார்க்கின்றனர். இந்தியா இந்துசமய அடிப்படைவாதத்தை அப்படியே தழுவிக்கொள்ளும் நாடு என்ற வகையில் இராமர் பாலத்துக்கு பாதிப்புகளை ஏற்படுத்த ஒருபோதும் அனுமதியாது என்பது அனைவரும் அறிந்ததே.

இப்படி நடந்துவிடுமோ அப்படி நடந்துவிடுமோ என்ற ஊகங்களால் இருநாட்டு அபிவிருத்தித் திட்டத்துக்கு முட்டுக்கட்டை
இடுவது தவறு. அவ்வாறானதொரு முட்டுக்கட்டைதான் சேது சமுத்திரத் திட்டத்திலும் நடந்துவருகின்றது. இதற்கேற்றாற்போல் மதவாதத்தை அடிப்படையாகக்கொண்ட கட்சிகளும், இயக்கங்களும் பிரச்சினையை பூதாகரமாக்கிவிட்டன.

இந்நிலையில், இராமர் பாலத்துக்கு சேதம் விளைவிக்கப்படாது எனவும், சேது சமுத்திரத் திட்டம் வேறு இடத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் இந்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டப்பட்ட அடிப்படையில் சேது சமுத்திரத் திட்டத்தை முன்னெடுத்தால் வரலாற்றுச் சிறப்புமிக்க இராமர் பாலத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்ற வியாக்கியானத்தையும் இந்திய அரசு வழங்கியுள்ளது.

சேது சமுத்திரத் திட்டம்

இந்து சமுத்திரத்தின் இராமேஸ்வரம் நாகபட்டினத்துக்கும் இடைப்பட்ட கடற்பகுதி பாக்குநீரிணை என்றும், கன்னியாகுமரி வரையிலான கடற்பகுதி பாக்குக் கடல் என்றும் அழைக்கப்படுகின்றன. இதில் பாக்குக் கடல் பகுதி கப்பல்கள் சென்றுவர தேவையான ஆழத்தோடு உள்ளது, இதனால் இங்கு கால்வாய் தோண்ட தேவையில்லை. பாக்குநீரிணை பகுதியும், அங்குள்ள மணல் திட்டுக்களும் கப்பல்கள் செல்வதற்குத் தேவையான ஆழமில்லாத பகுதிகள். இந்த பாக்கு நீரிணையையும், மணல் திட்டையும் ஆழப்படுத்தி ஒரு கால்வாய் அமைக்கும் பணியே சேது சமுத்திரத் திட்டமாகும்.

300 மீற்றர் அகலமும், 12.8 மீற்றர் ஆழமும் கொண்டது இந்த சேது சமுத்திரக் கால்வாய். இந்தக் கால்வாய் அமைக்கும் பணிதான் சேது சமுத்திரத் திட்டம் என்றழைக்கப்படுகின்றது. இந்தியாவின் கிழக்கு மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதிகள் இந்தத் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்படும்.

இதுவரையில் இந்தியாவில் மும்பை (மேற்கு), கொச்சின் (தென்மேற்கு) பகுதியிலிருந்து ஒரு கப்பல் சென்னை வரவேண்டுமெனில் அவை இலங்கையைச் சுற்றிக்கொண்டுதான் வரும். அதுபோல் இலங்கையிலும் திருகோணமலை, கொழும்பு, அம்பாந்தோட்டை துறைமுகங்களிலிருந்து இந்தியா நோக்கிச் செல்லும் கப்பல்கள் 32 கிலோமீற்றர் என்ற பாக்குநீரிணையில் பயணிக்காது இந்தியாவின் தென்மேற்குப் பகுதியினூடாகவே சுற்றிச்செல்லவேண்டி ஏற்படுகின்றது.

இந்திய ரூபாயில் 2,427 கோடி செலவில் சேது சமுத்திரத் திட்டப் பணிகளை 2005 ஜூலை 7 இல் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ஆரம்பித்துவைத்தனர். இத்திட்டம் 300 மீற்றர் அகலமும், 167 கிலோமீற்றர் நீளமும், 12 மீற்றர் ஆழமும் கொண்டது. திட்டத்தின் பெரும்பகுதிப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இன்னும் 23 கிலோமீற்றர் அளவுக்கே கால்வாய் தோண்டவேண்டியுள்ளது. சுமார் ரூ. 1,000 கோடி வரை செலவான நிலையில் இராமர் பாலத்தைக் காரணங்காட்டி இத்திட்டம் முடக்கிவிடப்பட்டுள்ளது.

இந்திய உயர்நீதிமன்றம் இராமேஸ்வரத்திற்கும், தலைமன்னாருக்குமிடையிலுள்ள மணல் திட்டுப் பகுதியில் கால்வாய் தோண்டுவதற்குத் தடை விதித்ததன் மூலம் 2007ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்தப் பகுதியில் கால்வாய் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. பாக்குநீரிணையில் கால்வாய் தோண்டும் பணியும் இந்தத் திட்டத்தை செயற்படுத்திவரும் இந்திய அகழ்வாராச்சி நிறுவனத்தால் 2009ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் முழுமையாக நிறுத்தப்பட்டது.

இந்திய அரசின் அறிவிப்பு

இராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக்கோரி பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.சுப்பிரமணியன் சுவாமி மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். இராமர் பாலத்தை இடிப்பதால் மத நம்பிக்கை பாதிக்கப்படும் என்றும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் என்பதால் இராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்றும், இராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இந்திய அரசு எந்தவொரு சூழ்நிலையிலும் இராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அரசியல் மற்றும் சுற்றாடல் காரணிகளைக் கருத்திற் கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள சேது சமுத்திரத் திட்டப் பணிகள் மூலம் இருநாட்டுப் பொருளாதார வர்த்தக சேவைகள் இலகுவாக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நீண்டகால பொருளாதாரக் கொள்கைகளை இலக்காகக்கொண்டு செயற்படும் இலங்கைd இந்தியாவின் செயற்பாடுகளில் இந்தத் திட்டம் பெரும் முக்கியத்துவமுடையதாகக் கருதப்படுகின்றது.

பொருளாதார ரீதியான சவால்கள்

அதிகபட்சமாக 30,000 DMW கொண்ட கப்பல்கள் மட்டுமே சேது சமுத்திரக் கால்வாயினூடாக செல்லமுடியும். ஏனென்றால், சேது சமுத்திரக் கால்வாயின் ஆழம் 12.8 மீற்றர் மட்டுமே. கப்பல்கள் இந்தக் கால்வாய் வழியாகச் செல்வதற்கு இருநாடுகளுக்கிடையேயும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். இதன்போது கடல்மார்க்க
போக்கு வரத்துக்கு பெரும் பொருளாதார நன்மைகள் கிடைக்குமென எதிர்பார்த்தாலும் இலங்கைக் கடல்வளத்தில் இந்திய ஆதிக்கம் காலூன்ற இத்திடடம் வழிசமைத்துவிடுமோ என்ற பெரும் அச்சம் காணப்படுகின்றது.

ஏற்கனவே திருகோணமலை எண்ணெய்க்குதம் விவகாரத்தில் இந்தியா அபரிமிதமான செல்வாக்கு செலுத்தியிருந்தது. சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்கும் நேரங்களிலெல்லாம் இந்தியா விரைவாக மாற்றுத்திட்டத்தை நோக்கி நகர்ந்துவிடும். அந்த மாற்றுத்திட்டம் மற்றும் இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்தத் திட்டத்தை இந்தியா ஒரு கருவியாக உபயோகித்துக்கொள்ளும் எனத் தெரிகிறது. அப்படியிருக்கும்போது இலங்கைக்கு மிதமிஞ்சிய பொருளாதார இலாபம் என்பது கனவாகிவிடும்.

அத்தோடு இந்து சமுத்திரத் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டதன்படி குறித்த கால்வாய் பகுதியில் சர்வதேச கப்பலின் மாலுமி கப்பலை இயக்கக்கூடாது எனவும், இந்தக் கால்வாய் பகுதியின் நீரோட்டங்களை அறிந்த ஓர் உள்ளூர் மாலுமிதான் கப்பலை ஓட்டவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்தமட்டில் உள்ளூர் மாலுமிகள் கப்பலைச் செலுத்துவதில்லை. இதன்மூலம் இலங்கை பேரம்பேசும் சக்தியை இழக்க நேரிடும்.

மேலும், குறித்த கால்வாயின் வழியே ஒரு குறிப்பிட்ட வேகத்தில்தான் செல்லவேண்டும் என்ற நிபந்தனையும் உண்டு. இதன்மூலம் இத்திட்டம் நேரக் கட்டுப்பாட்டைக்கொண்டு விரைவான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துவிடலாம் என்பதுவும் வெறும் கற்பனைக்கதையாகவே உள்ளது.

கடற்பாதுகாப்பு

இலங்கைக் கடல்வள பாதுகாப்பு மற்றும் எல்லைப் பிரச்சினை காலாகாலம் தொடர்ந்து வருகின்றது. இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்தியப் படகுகள் வந்தால் கைதுசெய்வதும் இந்தியக் கடற்பரப்புக்குள் இலங்கைக் கப்பல்கள் வந்தால் கைதுசெய்வதுவும் வழமையான விடயங்களாகிவிட்ட நிலையில், சேது சமுத்திரத் திட்டம் இலங்கை இந்தியாவுக்கிடையே வளப்பகிர்வில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதனைவிட எல்லைப் பாதுகாப்பில் கட்டுப்பாடுகளை விதிக்கமுடியாமல் இரு நாடுகளுக்கிடையேயான கடற்பாதுகாப்பு தேசிய பிரச்சினையாகக்கூட மாற்றம் பெறலாம்.

இப்படியிருக்கையில், இராமர் பாலத்தைக் காரணங்காட்டி சேது சமுத்திரத் திட்ட அபிவிருத்தித் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டதற்கு பின்னால் மேற்குறித்த அனைத்துத் திட்டங்களும் செல்வாக்கு செலுத்தின. ஆனால், சூழல் பாதுகாப்பைக்
காரணங்காட்டியும் சில மதவாதக் கருத்துகளுக்கு துணைபோயும் இந்து சமுத்திரத்தின் பயன்தரக்கூடியதொரு திட்டம் முடக்கப்பட்டுவிடக்கூடாது. எதிர்கால இலக்குகளை அடையச்செய்வதில் இருநாடுகளும் இணைந்து செயற்பட்டு புரிந்துணர்வுமிக்க திட்டமாக உருவாக்கப்படுவதற்கு ஏற்ற வழிவகைகள் செய்யப்படவேண்டும்.

பா.ருத்ரகுமார்.

Page 1 of 3

Latest News

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top