Items filtered by date: Friday, 03 November 2017

வளர்ச்சியை நிலைபேறானதாக வைத்திருப்பதற்கும், தொழில்களை உருவாக்குவதற்கும், வறுமையைக் குறைப்பதற்கும் இலங்கை மேலும் அதிகமான தனியார் முதலீடுகளை நோக்கியும், வர்த்தகம் பண்ணக்கூடியதான துறைவழி வளர்ச்சி மாதிரியை நோக்கியும் நகர்வது அவசியமானது என உலக வங்கியின் புதிய அபிவிருத்தி நிலவர அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

நாட்டின் பொருளாதாரம் எதிர்கால முன்னோக்கிய பார்வை மற்றும் கொள்கை முன்னுரிமைகள் என்பவற்றை எடுத்துரைக்கும் விசேடத்துவமான அரையாண்டு அறிக்கையான இவ் அபிவிருத்தி நிலவர அறிக்கையில் இத்தகைய மாற்றத்தை நோக்கிய முன்னோக்கிய பாதை வழிகாட்டியை காண்பிக்கின்ற ஆவணமாக Vision 2025 ஐ அங்கீகரித்துள்ளது.

அபிவிருத்திக்கான அதிகமான வாய்ப்புக்களை திறந்துவிடுவதுடன் பாரம்பரியமான இடர்களுக்கு முகங்கொடுப்பதில் இலங்கை நெகிழ்வுடையதாக மாற்றும் அதேவேளை, இந்த புதிய வளர்ச்சி மாதிரியை நோக்கிய இலங்கையின் மாற்றத்திற்கு சிறப்பான இடர் முகாமைத்துவமானது ஒத்துழைத்து வழிகோலும் என்பதற்கான வலுவான தர்க்கத்தை இந்த அபிவிருத்தி நிலவர அறிக்கை முன்வைக்கின்றது.

குடும்பங்கள், நிறுவனங்கள், பொதுத்துறை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கான வாய்ப்புக்களை அதிகப்படுத்திக் கொள்வதற்காக இந்த இடர்களை நன்றாக முகாமைத்துவம் செய்வது அவசியமாகும்.

நிதியியில் மற்றும் வர்த்தக கொள்கை சீரமைப்புக்கள் செய்தல், பொதுக் கடன் மற்றும் உறுதியான கடன்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான இடர்களை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக அபிவிருத்தி நிலவர அறிக்கையின் நடப்பு பதிப்பானது அவதானம் செலுத்துகின்றது.

வெள்ளம் மற்றும் வரட்சி காரணமாக விவசாயத்தில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் கட்டடத் தொழிற்துறையிலும் வெளியகத்துறைகளிலும் ஏற்பட்ட பெரும் தாக்கம் காரணமாக 2017ம் ஆண்டின் முதலாவது அரையாண்டுப் பகுதியில் இலங்கையின் வளர்ச்சியானது 3.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.

மொத்த தேசிய உற்பத்தியுடன் பார்க்கையில் (2016ல் 79.3 சதவீதம்) ஒப்பீட்டளவில் அதிகமான பொதுக்கடன் காணப்படுகின்றமை, அரசிற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அரச முகவரமைப்புக்களிற்கு வழங்கப்படுகின்ற திறைசேரி உத்தரவாதங்கள் (2016ல் மொத்த தேசிய உற்பத்தியில் 7.1 சதவீதம்) ஆகிவற்றினால் நிதிய அபாயங்களானது 2017ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களிலும் தொடர்ந்தும் உயர்வானதாகக் காணப்பட்டது.

குறிப்பிடத்தக்க சவால்கள் காணப்பட்டபோதிலும் 2017ல் இலங்கை பரந்தளவில் திருப்திகரமான பொருளாதார செயற்திறனைக் காண்பிக்கின்றதுடன் 2017க்குள் பொருளாதார வளர்ச்சியானது 4.6 சதவீதத்தை அடைந்து நடுத்தர காலத்திற்குள்ளாக 5 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

2017 மே மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தக வரிச்சலுகையை இலங்கை மீளப் பெற்றுக்கொண்டது. இதேவேளை இலங்கை அரசாங்கமானது, பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் தொடர்பில் அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், கடந்த செப்டம்பர் மாதத்தில் புதியதொரு உள்நாட்டு வருமான சட்டம் நிறைவேற்றப்பட்டமையானது இதில் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

‘இலங்கை அதன் தூரதரிசனப் பார்வையாக இலட்சிய வேட்கையுடன் வெளியிட்டுள்ள Vision 2025ல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மேல், நடுத்தர வருமானம் நிலையை ஈட்டும் பயணமானது நாட்டின் பொருளாதார போட்டித்தன்மையிலும், நாட்டிலுள்ள மிகவும் நலிவடைந்த தரப்பினரில் அதிகமானவர்களை ஒதுக்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்துகொண்டு ஏற்றுமதியை தலைமையாகக் கொண்டுள்ள வளர்ச்சி மாதிரியை முன்னெடுத்துச் செல்கின்ற இயலுமையிலுமே தங்கியுள்ளது.' என உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான வதிவிடப்பணிப்பாளர் ஐடா ஸ்வராய் ரிடில்கொவ் தெரிவித்தார்.

அபிவிருத்தி பிந்திய நிலவர அறிக்கைக்கு அமைவாக Vision 2025 ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள புதிய வளர்ச்சி மாதிரியானது, அரச முதலீட்டை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகம் செய்ய முடியாத துறைசார் வளர்ச்சி மாதிரியில் இருந்து தனியார் முதலீட்டை அடியொற்றி வர்த்தகம் செய்யக்கூடியதான துறைசார் வளர்ச்சி மாதிரியாக மாற்றம் பெறவேண்டும். இந்த நகர்வானது பெரியதும் விரைவாக வளர்ச்சி கண்டுவருகின்றதுமான உலக பொருளாதார வல்லரசுகளுக்கு அருகாமையில் இருக்கின்ற இடவமைப்பு சாதகத்தன்மையில் இருந்து பயன்களை இலங்கை பெற்றுக்கொள்வதற்கு வழிகோலும்.

வர்த்தகத்திற்கு சிநேகபூர்வமான சூழ்நிலையை மேம்படுத்துவதற்கும் தீர்வைகள், வினைத்திறனற்ற எல்லை அனுமதி நடைமுறைகள் போன்ற வர்த்தகத்திற்கு பங்கம் விளைவிக்கும் தடங்கல்களை நீக்குவதற்கும் தேவையான முக்கியமான சீர்திருத்தங்களை இந்த பிந்திய நிலவர அறிக்கையானது அடையாளங்கண்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக விரிவான பொது நிதி முகாமைத்துவ சட்டமொன்றை வரைதல், கடன் முகாமைத்துவ நிகழ்ச்சி நிரலில் அர்த்தபூர்வமான முன்னேற்றம் மற்றும் கணக்காய்வாளர் சட்டத்தை நிறைவேற்றுதல் ஆகியவற்றை முன்னுரிமைக்குரியதாக எடுத்து செயற்படுதலானது முன்னேற்றத்திற்கு அவசிமானது என பட்டியலிட்டுள்ளது.

'இந்த மாற்றமானது அதற்குரித்தான அபாயங்களையும் வாய்ப்புக்களையும் கொண்டுள்ளது. இது பல பேரண்டப்பொருளாதார அபாயங்கள் தொடர்பில் இலங்கையை மேலும் நெகிழ்வுடையதாக மாற்றும் ஆனால் புதியவற்றிற்கு ஆட்படுத்தும்.' என உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சிரேஸ்ட வதிவிட பொருளியலாளாரும் இந்த அறிக்கையின் படைப்பாளர்களில் ஒருவருமான ரல்ஃப் வன் டூர்ண் தெரிவித்தார். 'அடிக்கடி அதிகரித்துவருகின்ற இயற்கை அனர்த்தங்கள் மென்மேலும் தயாராகவிருக்க வேண்டியதன் அவசியத்தை கோரிநிற்கின்றது. சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் இடர் அபாயங்களை நன்கு முகாமைத்துவம் செய்வது முக்கியமானதாகும். பேரண்ட நிதியத்தில் ஸ்திரத்தன்மையைப் பேணுதல் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அதன் தயார்நிலைத் தன்மையை அதிகரித்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமாக இலங்கை அதன் இலக்கை அடைந்துகொள்ளமுடியும்.' என இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைதொடர்பில் உலக வங்கியின் அவதானிப்பை மேற்கொண்டு வன் டூர்ண் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஆக்கம் ; உலக வங்கி

தளபதி விஜய் நடிப்பில் திபாவளிக்கு வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது மெர்சல் திரைப்படம்.

இப்படம் இந்தியா மட்டுமன்றி இலங்கை, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் வசூலை வாரிக்குவித்துள்ளது.

இதனால் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் அட்லி, ஒளிப்பதிவாளர் விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நேற்றிரவு விருந்தளித்திருக்கிறார் விஜய். இதில் படக்குழுவினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

அதேநேரம், சாதாரணமாக வசூலை ஈட்டிவந்த இந்த மெர்சல் படத்துக்கு தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியினர் கொடுத்த பிரச்சினையே மக்களிடம் இப்படம் குறித்த அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது என்பதும் எந்தினை பிற்போடும் அளவுக்கு 210 கோடி வசூலை மெர்சல் குவிக்க உதவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்துக்காக தயாராகி வருகிறார் விஜய். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.

“தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் ஐக்கிய தேசிய கட்சியையும் நாம் தீர்வினை வழங்குவது குறித்து பேசுவதற்கு அழைத்த போது அவர்கள் எனது அழைப்பை புறக்கணித்துவிட்டார்கள். காரணம் அவர்களுக்கு தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் என்னிடத்தில் தீர்வை பெற வேண்டாம் என வலியுறுத்தியது“ என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிடியவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் “இன்று சிலர் இந்நாட்டிலுள்ள பிக்குகளை தன்னினவாதிகளாக சுட்டிக்காட்ட முற்படுகின்றார்கள். ஆனால் எங்களுக்கு பிக்குகள் என்றுமே மரியாதைக்குரியவர்கள்தான். இதற்கு காரணம் சமூகத்தில் உள்ள தலைமைத்துவங்களே நாட்டில் உள்ள மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றார்கள்.

இவ்வாறிருக்க தற்காலத்தில் புதிய அரசியலமைப்பு குறித்து பேசப்பட்டுகொண்டிருக்கின்றது. இதனை யார் கேட்டார்கள் என்பது கேள்விக்குரிதான். புதிய அரசியலமைப்பு வேண்டும் என்று எவருமே கேட்கவில்லை. அதேநேரம் அரசியலமைப்பு சபையொன்றினை உருவாக்கவும் மக்கள் ஆதரவு தேவை. ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை.

யுத்தத்தினை நான் நிறைவு செய்த போது என்னிடத்தில் எவரும் உணவோ நீரோ கேட்கவில்லை யுத்தினை வென்றுமுடியுங்கள் என்றுதான் கூறினார்னார்கள். ஆனால் யுத்தம் முடிந்தபின்னர் வடக்கில் பின்னோக்கி நகர்ந்த பொருளாதார அபிவிருத்தியை மீள கட்டமைக்குமாறு கூறினார்கள். அதனாலேயே வடக்கு குறித்து நாங்கள் விசேட அவதானம் செலுத்தினோம்.

அவ்வாறிருக்கின்ற போது நான் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி உட்பட சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தேன். எவ்வாறு ஒரு தீர்மானத்திற்கு வருவது என்பது குறித்து பேசுவதற்கே அவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். அவை அனைத்தையும் அவர்கள் பபுறக்கணித்துவிட்டார்கள்.

காரணம் அவர்களுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் முன்கூட்டியே எனது அரசாங்கத்தின் கீழ் தீர்வை பெற்றுகொள்ள வேண்டாம் என மேற்படி கட்சிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது என்பதே உண்மையாகும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Published in உள்நாடு

ஜனவரி மாதம் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றிப்பெறும். அதற்கான மூலோபாய நடவடிக்கைகளை இப்போதே முன்னெடுத்து வருகின்றோம் என்று ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

ஹட்டன் நோர்வூட்டில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “இந்த நாட்டில் அரசியல் அமைப்பு மாற்றங்கள் ஆரம்ப காலங்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால், மக்களின் அபிப்பிராயங்கள் பெறப்படாமலே அவை கொண்டுவரப்பட்டன. இதனால் பல்வேறு பிரச்சினைகள் உருவானது. இன்று புதிய அரசமைப்பொன்றை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சகல மக்களினதும் ஆதரவுடன்தான் இதனை கொண்டுவர முடியும்.

அனைவருக்கும் உரிமைகள் கிடைக்கப்பெற்ற ஒரு அரசமைப்பு மாற்றம் தேவைப்படுவதனால் அவர்களுக்கு ஏற்ப ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும். இதற்கான இணக்கப்பாட்டை அனைத்து மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்துவதற்கு அரசு தீர்மானத்திருக்கும் நிலையில் இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றிபெறும்“ என்றார்.

Published in உள்நாடு

வடக்கு அரசியல்வாதிகள் எத்தகைய தீர்வை வழங்கினாலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அரசமைப்பு நிர்ணய சபையில் நேற்றைய தினம் நடைபெற்ற புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமர்தலிங்கம் கொலைசெய்யப்பட்ட போது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்து லலித் அத்துலத்முதலியிடம் போய் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அழுது புலம்பி சிங்களவர்களை தனது பாதுகாப்புக்கு நியமிக்குமாறு கோரியிருந்தார்.

அப்போது சிங்களவர் மீது நம்பிககை இருந்தது. அதேபோன்று அண்மையில் இளஞ்செழியன் மாணிக்கவாசகம் கொலை செய்ய முற்பட்ட போது அவரை பாதுகாத்தது சிங்கள பொலிஸ் உத்தியோகத்தராகும். இவர்களுக்கு பிரச்சினை என்ற ஒன்று இல்லை. வடக்கில் வாழும் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனினும் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு வடக்கு மாகாண சபைக்கு முடியாமல் போயுள்ளது.

நான் கிழக்கு மாகாண உறுப்பினராக இருந்தபோது எனக்கு ஒதுக்கீடு செய்யும் நிதி போதாது. ஏனென்றால் அந்தளவுக்கு வேலைகளை செய்வேன். நிதி முடிந்து போனால் திறைசேரிக்கு வந்து பலவந்தமாக நிதி பெற்று கொள்வேன். நான் செய்த சேவை காரணமாக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

வடக்கு மாகாண சபையின் நிலைமை சற்று பாருங்கள். ஒதுக்கீடு செய்யும் நிதி ஒதுக்கீடுகள் முழுமையாக திருப்பி அனுப்பபடுகின்றன. வடக்கு மக்களின் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏன் வடக்கு மாகாண சபையினால் முடியாமல் உள்ளது. அவர்களுக்கு வேறு நிகழ்ச்சி நிரல் உள்ளது. அவர்களுக்கு அரசியல் நோக்கம் உள்ளது.

தமிழ் மக்களுக்கு எத்தகைய தீர்வினை வழங்கினாலும் அவர்கள் அதனை ஏற்க போவதில்லை“ என்றார்.

Published in உள்நாடு

ஒரு குறிப்பிட்ட மாகாணத்தில் காணப்படும் நிதி, மூலவளங்கள் மற்றும் கனிய வளங்களை எடுக்கின்றபோது, அந்த மாகாணத்தின் அனுமதியுடன் அது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அவற்றில் கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிட்ட வீதத்தை அந்த மாகாணமே பயன்படுத்தும் நிலை ஏற்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீது அரசமைப்பு நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

உள்ளூராட்சி சபைகளுக்கு மாகாண சபைகள் நிதி வழங்குகின்ற செயற்பாட்டில் சமத்துவம் பேணப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கும் நகர சபைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அதுவே சமத்துவமான அதிகாரம் மற்றும் அபிவிருத்தியை சம்பந்தப்பட்ட பிரதேசங்கள் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்றும் கூறினார்.

Published in உள்நாடு

பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நான்கு நாட்கள் பயணமாக நாளை கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளது. கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பிஎஸ்என் சைய்ப் (PNS SAIF) என்ற, ஸ்வோர்ட் வகையைச் சேர்ந்த சீனத் தயாரிப்பு போர்க்கப்பலே கொழும்புக்கு வரவுள்ளது.

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில், நல்லெண்ணப் பயணமாக பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்பு வரவுள்ளது.

கொழும்பில் தரித்து நிற்கும் போது, இலங்கை கடற்படையினருடன் இணைந்து பயிற்சி, விளையாட்டு உள்ளிட்டவற்றில் பங்கேற்கும் என்றும், எதிர்வரும் 6ஆம் திகதி வரவேற்பு நிகழ்வு ஒன்றும் இடம்பெறவுள்ளது.

Published in உள்நாடு

ஈராக்கின் மொசூல் நகரில் நடைபெற்ற போரின்போது, இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நடத்திய கொலைகளில் குறைந்தது 741 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கிறது.

அதிக எண்ணிக்கையிலான ஆட்கடத்தல், பாதுகாப்பு கேடயங்களாக மக்களை பயன்படுத்துதல், வேண்டுமென்றே வீடுகள் மீது ஷெல் குண்டு தாக்குதல் நடத்துதல், தப்பி செல்ல முயல்வோரை இலக்கு வைத்து தாக்குதல் போன்ற குற்றச்சாட்டுக்களும் இந்த ஜிகாதிகள் மீது உள்ளன.

"அவர்கள் செய்திருக்கும் கொடூர குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் பதில் அளிக்க வேண்டும்” என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹுசைன் தெரிவித்திருக்கிறார்.

ஈராக் படைப்பிரிவுகளால் நடத்தப்பட்ட வன்முறை குற்றச்சாட்டுகளும் புலனாய்வு செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

போர் உக்கிரமாக நடைபெற்ற 2016 முதல் ஜூலை 2017 வரையான காலத்தில், ஈராக் இராணுவம் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் விமான தாக்குதல்களால், மேலும் 461 பொது மக்கள் இறந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

இராணுவ நடவடிக்கையின்போது, ஒட்டுமொத்தமாக குறைந்தது 2,521 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,673 பேர் காயமடைந்துள்ளனர்.

பெரும்பாலும் ஐ.எஸ் நடத்திய தாக்குதல்களால் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்று வியாழக்கிழமை வெளியான அறிக்கையில் ஈராக்கின் ஐநா உதவி சேவையும், ஐநா மனித உரிமைகள் பேரவையும் குறிப்பிட்டுள்ளன.

'மெர்சல்' தெலுங்கு பதிப்பான 'அதிரந்தி' படத்தின் தணிக்கை சர்ச்சை முடிவுக்கு வந்தது. விரைவில் வெளியீட்டு திகதி அறிவிக்கப்படவுள்ளது.

'மெர்சல்' தெலுங்கு பதிப்பான 'அதிரந்தி' திட்டமிட்டபடி தீபாவளியன்று வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டது.

ஒக்டோபர் 27ஆம் திகதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தணிக்கை அதிகாரிகள் 'அதிரந்தி' படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை.

ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா போன்ற வசனங்கள் இருப்பதால்தான் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக தணிக்கைக் குழு தலைவர் ப்ரஷன் ஜோஷி உள்ளிட்ட பலரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்போது 'அதிரந்தி' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு. இதற்கான சான்றிதழையும் தயாரிப்பு நிறுவனத்துக்கு வழங்கிவிட்டார்கள்.

விரைவில் வெளியீட்டு திகதி அறிவிக்கப்படு தேனானண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறது.

பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள 'அர்ஜுன் ரெட்டி' தமிழ் பதிப்பிற்கு ஒளிப்பதிவாளராக சுகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் மற்றும் மலையாள மீள் உருவாக்கம் மற்றும் மொழிமாற்றம் உரிமையை கடும் போட்டிக்கு இடையே இ4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன் தமிழ் படத்தில் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலா இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. 'நாச்சியார்' படத்தின் இறுதிகட்டப் பணிகளுக்கு இடையே, 'அர்ஜுன் ரெட்டி' தமிழ் ரீமேக்கின் முதற்கட்ட பணிகளையும் கவனித்து வருகிறார் பாலா.

நாயகி கதாபாத்திரத்துக்கு பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இதன் ஒளிப்பதிவாளராக சுகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விக்ரம் நடித்து வரும் 'ஸ்கெட்ச்' படத்தின் ஒளிப்பதிவாளராக சுகுமார் பணிபுரிந்து வருகிறார். அவருடைய பணி மிகவும் பிடித்துவிடவே, பாலாவிடம் சுகுமாரை சிபாரிசு செய்திருக்கிறார் விக்ரம்.

Page 1 of 3

Latest News

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top