Items filtered by date: Sunday, 05 November 2017

நாட்டின் அபிவிருத்திக்கு வலு சேர்க்கும அரசாங்கம் உள்ளிட்ட நாட்டின் அனை்தது தரப்பினர்களுடனதுமான பேச்சுவார்த்தையொன்றினை நடத்தவுள்ளதாக பொது பல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.

அவ்வமைப்பின் இந்த முயற்சியை திரிபுபடுத்தி காணபிக்க சிலர் முயற்சித்து வருவதாகவும் அவ்வமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அமைப்பினால் முன்னெடுக்கப்படும் முனைப்புகளை திரிபுபடுத்தி காண்பிப்பதற்கு பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரினால் கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட உரைகளை பயன்படுத்திக்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஞானசார தேரரின் உரைகள் சர்ச்சைக்கு வித்திடுகின்றவையாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டும் வகையிலேயே அவருக்கு எதிரான கருத்துபிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருதாக பொதுபல சேன அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலாந்த விதானகே தெரிவித்துள்ளார்.

Published in உள்நாடு

மாத்தளை -  லக்கல - தெல்கமுவ ஓயாவில் நீராடச் சென்ற நிலையில் காணாமல் போன 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

மாத்தளை - தெல்கமுவ ஓயாவில் நேற்றைய தினம் பிற்பகலில் நீராடிக் கொண்டிருந்த 08 பேர், நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போயிருந்தனர்.

வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 12 பேர் சுற்றுலா சென்றிருந்த நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதனையடுத்து, தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், பொலிஸார், பிரதேச மக்கள, தம்புள்ளை உயிர் பாதுகாப்புப் பிரிவினர்ஆகியோர் இணைந்து, காணாமற் போனவர்களை தேடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், காணாமல் போனவர்களின் 5 பேர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டன. இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் 12 வயது பிள்ளையொன்றின் சடலங்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டன.

நாத்தாண்டியா பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய கிங்ஸ்லி ரத்னாயக்க, அவரது மனைவியின் தாயாகிய 59 வயதுடைய சந்ரா காந்தி, 38 வயதுடைய ரவிந்ர லசந்த உடவரகே, அவரது மனைவியான 38 வயதுடைய ருவணி தில்ருக்ஸி, அவர்களது மகளான 12 வயதுடைய வினிசா உடவரகே ஆகியோரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டிருந்தன.

அதனையடுத்து, விசேட அதிரடிப்படை மற்றும் கடற்படையின் சுழியோடி பிரிவினர் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், நீரில் அடித்துச்செல்லபட்ட சிறுமியின் சடலம், சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 4 கிலோமீற்றர் தூரத்தில் வைத்து நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.ஹிருணி தின்ஹாரா என்ற 4 வயது சிறுமியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், தொடர்ந்து தேடப்பட்டு வந்த 12 வயதுடைய மந்தினா ரத்னாயக்க  இன்று மீட்கப்பட்டதுடன் இவர் உயிரிழந்த கிங்ஸ்லி ரத்னாயக்கவின் மகளாவார்.
மேலும், உயிரிழந்த லசந்த உடவரகேவின் மற்றுமொரு மகளான 7 வயதுடைய விமாசி உடவரகேவின் சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

Published in உள்நாடு

ஹம்பாந்தோட்டையில் சீன - இலங்கை அரசாங்கங்கள் கூட்டாக இணைந்து ஆரம்பித்துன்ன தளபாடங்கள் மற்றும் கைத்தொழில் பணியகத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று திறந்து வைத்தார்.

ஜனவரி மாதம் உத்தியோகபூர்வமாக இயங்கவுள்ள 50 சதுர கி.மீ பரப்பளவுடைய கைத்தொழில் வலயத்தை இந்தப் பணியகம் மேற்பார்வை செய்யவுள்ளது.

இந்தப் பணியகத்தில் சீன, இலங்கை பணியாளர்கள் இணைந்து பணியாற்றுவர்.

இந்தப் பணியகம், சீன - இலங்கை உறவுகளில் முக்கியமானதொரு மைல் கல் என பிரதமர் தெரிவித்தார்.

இந்தியப் பெருங்கடலில் புதிய அத்தியாயம் ஒன்றின் ஆரம்பம் இது என்று வர்ணித்த சீனாவுக்கான இடைநிலைப் புள்ளியாக விரைவில் இலங்கை மாறும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங், ‘இந்த கைத்தொழில் வலயத்தில், முதலீடுகளை செய்ய விரும்பும் சீன மற்றும் ஏயை நாடுகளின் தொழிற்துறைகளுக்கு இந்தப் பணியகம் முக்கியமான ஒரு நகர்வாக இருக்கும்.

சாத்தியமான எல்லா தொழிற்துறைகளையும் இந்த வலயத்துக்கு ஈர்ப்பதற்கும், எதிர்காலத்தில், இலங்கை கைத்தொழில் மயமாவதற்கும் சீனா உதவும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

Published in வணிகம்

சீன நாட்டவர்கள் 150 பேருக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திருமணம் நடைபெறவுள்ளதோடு, கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

சுதந்திர சதுக்கத்தில் டிசம்பர் 17ஆம் திகதி இந்த திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று, 75 சீன திருமண ஜோடிகளுக்கு திருமணச் சான்றிதழ்களை வழங்கவுள்ளார்.

திருமணம் முடிந்த பின்னர், அன்றிரவு பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் விடுதியில் இராப்போசன விருந்து இடம்பெறும். மறுநாள், மூன்று குழுக்களாக சீன ஜோடிகள் யால, சீகிரியா, கண்டி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

இலங்கை பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு, பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம், சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியன இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

Published in உள்நாடு

"ஐக்கிய தேசியக் கட்சியின் பிடியிலிருந்து எப்போது ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன வெளி வருவாரோ, அன்றே அவருடன் நேரடிப் பேச்சு நடத்த முன்வருவேன். நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இன்னமும் இருக்கிறோம். எங்களைப் புறந்தள்ளிவிட முடியாது. எதிர்காலத்தை யோசிக்காது தீர்மானத்தை எடுத்தால் அதற்கான விலையை அவர்கள்கொ டுக்கவேண்டிவரும்.'' என நேற்று "சுடர் ஒளியிடம்' தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்று முன்தினம் நடத்திய நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

"நாங்கள் பேச்சுக்கு வரமாட்டோம் என்று ஒருபோதும் கூறவில்லையே. பேச்சுக்கு வர முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியின் பிடியிலிருந்து வெளியே வரவேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுக்குள் இருந்து எப்போது ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கட்சி வெளியே வருகிறதோ, அன்றே அவர்களுடன் நேரடிப் பேச்சுக்கு நாம் செல்வோம்.

ஐ.தே.கவின் எடுபிடியா கவே இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்படுகிறது. உண்மையான கட்சிப் போராளிகள் மனதளவில் என்னுடன்தான் உள்ளனர். இன்னும் சில வாரங்களில் யார் யாருடன் இருக்கிறார்கள் என்பதை நாடு அறிந்துகொள்ளும்'' என்றார் மஹிந்த எம்.பி

Published in உள்நாடு

2018ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மூன்றாண்டு அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு எதிர்வரும் 9ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

விவசாயத்தை அங்கீகரித்தல், சேவை மற்றும் கைத்தொழில் புத்துருவாக்கம் மற்றும் அபிவிருத்திக்கான சலுகைகளை உள்ளடக்கிய வரவு செலவுத் திட்டமே சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கான விவாதம் நடைபெறும் ஒரு மாதமும் நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி விசேட அதிரடிப் படையினரைப் பாதுகாப்புக்கு அரசு களமிறக்கவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மீது எதிர்வரும் 9ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 9ஆம் திகதிவரை 25 நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது. இந்த 25 நாட்கள் விவாத்தின்போது அனைத்து அமைச்சுகளினதும் அதிகாரிகள் மற்றும் செயலாளர்கள் நாடாளுமன்றத்துக்கு சமுகமளிப்பதுடன், புத்திஜீவிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் விவாதத்தைப் பார்வையிட வருகை தருவார்கள்.

இதனால் பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளனர் என அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

Published in உள்நாடு

புதிய அரசமைப்பு உருவாக்கும் நடவடிக்கைக்கு முடிவுகட்ட அரசமைப்பு நிர்ணய சபையில் பொது எதிரணியின் செயற்பாடுகளை வழிநடத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகக் களத்தில் குதிக்கத் தீர்மானித்துள்ளார்.

புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீது கடந்த திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நான்கு நாட்கள் விவாதம் அரசமைப்பு நிர்ணய சபையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த மஹிந்த ராஜபக்ஷ, அதிகாரப் பகிர்வு நடவடிக்கையை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்பதுடன், புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவருவதற்கான ஆணையை மக்கள் தற்போதைய அரசுக்கு வழங்கவில்லை எனக் கூறியிருந்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கும் செயற்பாட்டைத் தோற்கடிக்கவும், அதில் அரசியல் ஆதாயம் தேடவும் பொது எதிரணியினர் பாரிய வியூகங்களை வகுத்து வருகின்றனர். அதன் நிமித்தமே முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அரசமைப்பைத் தோற்கடிக்க 'எலிய' என்ற அமைப்பு உதயமாகியிருந்தது.

இனிமேல் நாடாளுமன்றம் அரசமைப்பு நிர்ணய சபையாகக் கூடும்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகக் களமிறங்கி பொது எதிரணியை வழிநடத்தவுள்ளார் என அறியமுடிகின்றது.

Published in உள்நாடு

சைட்டத்தை முற்றாக இல்லாதொழிக்கக் கோரி நாடு முழுவதும் நாளைமுதல் தொடர் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஆரம்பிக்கவுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. அத்தோடு கோரிக்கையை முன்வைத்து அரச பல்கலைக்கழகங்களின் மருத்துவபீட மாணவர்கள் நாளை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் செல்லவுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சைட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை ஏற்க முடியாது எனவும், சைட்டத்தை இல்லாதொழித்து இலவசக் கல்வியைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியே இந்தத் தொடர் போராட்டங்களுக்குச் செல்லவுள்ளதாக அனைத்துப் பல்கழைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும், சைட்டம் மருத்துவக் கல்லூரி தொடர்பாக அரசு வழங்கிய இறுதித் தீர்மானம் குறித்து எழுந்துள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி இணங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற சந்திப்பின்போது அவர் குறித்த யோசனைக்கு இணங்கியுள்ளார் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

ஏற்கனவே கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில், தொடர்ந்து ஏனைய பல்கழைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகளும் முடங்கும் நிலை ஏற்படும் எனத் தெரிகின்றது.

Published in உள்நாடு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதான கட்சிகள் பாரிய கூட்டணிகளை அமைப்பது குறித்து தீவிர முனைப்பில் ஈடுபட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் 18 கட்சிகள் கைகோர்க்கவுள்ளதாக பொது எதிரணியின் தகவல் அறியும் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

லங்கா சமசமாஜக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஸ்ரீலங்கா மாஜன பெரமுன, தேசிய சுதந்திர முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி உள்ளிட்ட கட்சிகளுடன் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் சங்கமிக்கவுள்ளன.

இக்கட்சிகளுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்திவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, கட்சிகளுக்கானத் தொகுதிகளை பிரித்துக் கொடுக்கும் செயற்பாட்டையும் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளது.

அடுத்தவாரம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் நடைபெறவுள்ள விசேட சந்திப்பில் தேர்தல் குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் கட்சிகளுக்கு இடையில் உடன்படிக்கையையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி செய்துகொள்ளத் தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டத்தில் பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் சு.கவின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் அதனை நிராகரித்திருந்தனர். இதன் காரணமாக கடும் அதிருப்பியடைந்துள்ள சு.கவின் தலைமைப்பீடம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Published in உள்நாடு

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டை முன்வைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உரிய நேரத்தில் உரிய இடத்தில் வைத்து தக்க பதிலை வழங்குவேன்.'' என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

"தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண பல தடவைகள் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசியிருந்தோம். ஆனால், அவர் அதனை நிராகரித்திருந்தார். அன்று சம்பந்தன், எங்களுடன் இணைந்து தீர்வுகாண முற்பட்டிருந்தால் சிறந்த தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கும்.

தீர்வுப்பொதியை முன்வைப்பதற்காக அன்று எம்மால் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைத்திருக்கவில்லை'' என்று முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

கடந்த வியாழக்கிழமை அரசமைப்பு நிர்ணய சபையில் நடைபெற்ற புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குற்றம்சாட்டியிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் இந்தக் கருத்து தொடர்பில் தங்கள் நிலைப்பாடு என்னவென்று 'சுடர் ஒளி' நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியது. இதற்கு அவர் பதிலளிக்கும்போது, "முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரையை நான் கவனமாக செவிமடுத்திருந்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டை முன்வைத்து அவர் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கான எனது தக்க பதிலை உரிய நேரத்தில் உரிய இடத்தில் வைத்து வழங்குவேன்'' என்றார்.

Published in உள்நாடு
Page 1 of 2

Latest News

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top