அதிகாரப் பகிர்வு அவசியம்

அதிகாரப் பகிர்வு அவசியம்

அரசமைப்பு ஊடாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது. எனினும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறைகளை அரசமைப்பின் ஊடாக கண்டறிய முடியுமென அரசமைப்பு உருவாக்கம் தொடர்பிலான மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவரும், சட்டத்தரணியுமான லால்விஜயநாயக்க தெரிவித்தார்.
அரசமைப்பு நிர்ணய சபையின் இடைக்கால அறிக்கை, புதிய அரசமைப்பு உருவாக்கப் பணி ஆகியன தொடர்பில் "சுடர்ஒளி“ க்கு அவர் வழங்கிய செவ்வி வருமாறு:

மக்கள் கருத்தறிந்து, அவர்களின் விருப்பத்திற்கமைய புதிய அரசமைப்பு உருவாக்கப்பணிகள் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டாலும், ஒரு சில பிரிவினைவாதிகள் மற்றும் இனவாதிகளின் தேவைக்கே அரசமைப்பு உருவாக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றனவே?

பதில்: புதியதொரு அரசமைப்பு அவசியமென நாட்டில் தற்போது நடைமுறையிலிருக்கும் அரசமைப்பு உருவாக்கப்பட்ட 1978ஆம் ஆண்டிலிருந்தே கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. சந்திரிகாவும் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்று வாக்குறுதியளித்தே இரண்டு தேர்தல்களிலும் போட்டியிட்டார். எனினும், வழங்கிய வாக்குறுதியை அவரால் நிறைவேற்ற முடியாமல்போனது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை புதிய அரசமைப்பின் ஊடாக ஒழிக்கப்படும் எனக் கூறிவிட்டே ஆட்சிக்கு வந்தார். கடந்த காலத்தில் சோபித தேரரின் தலைமையில் ஒன்றிணைந்த சிவில் சமூக அமைப்புகளின் ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவும் நிறைவேற்று அதிகாத்தை ஒழிப்பதாகவே வாக்குறுதியளித்தார்.

2016ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் திகதி அனைவரது சம்மதத்துடன் புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்காக நாடாளுமன்றம் அரசமைப்பு சபையாக மாற்றப்பட்டது. ஆகவே, இவை அனைத்தும் பிரிவினைவாதிகளின் விருப்பத்திற்கமைய மேற்கொள்ளப்படவில்லை. மக்களின் விருப்பத்திற்கமையவே மேற்கொள்ளப்பட்டன.

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு எதிராக மகாநாயக்க தேரர்களே பிரச்சினைகளை ஏற்படுத்திவருகின்றனர். அவர்களுக்கு இது தொடர்பில் சரியான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படவில்லையா?

புதிய அரசமைப்பொன்று நாட்டுக்கு அவசியமில்லை என்ற கருத்தானது உண்மையில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் நிலைப்பாடல்ல. மேற்படி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் நாட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் இரண்டு சங்க சபைகளின் உறுப்பினர்கள் எடுத்த தீர்மானமே அது. அந்தத் தீர்மானம் மகாநாயக்க தேரர்களின் தீர்மானமல்ல. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 9 தேரர்களின் தீர்மானமே அது.
எனினும், நாட்டிற்கு அரசமைப்பொன்று வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பில் கருத்து வெளியிட எவருக்கும் உரிமையுள்ளது. அரசமைப்பு உருவாக்கத்தில் மகாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதம் அவசியம். இது தொடர்பில் பிரதமர் அலுவலகமும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களுக்கு அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் போதிய தெளிவுபடுத்தலை உங்கள் தலைமையிலான கருத்தறியும் குழு வழங்கவில்லை எனக் குற்றஞ் சாட்டப்படுகின்றதே?

நாட்டில் கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட இரண்டு அரசமைப்புகளின் போதும் பொதுமக்களின் கருத்துகள் அறியப்படவில்லை. எனினும், இந்தத் தடவை அப்படியல்ல. அரசமைப்பு உருவாக்கத்தின் முதலாவது பணியே மக்கள் கருத்தறிவதுதான். முடியுமானவரை அனைத்து மக்களதும் கருத்துகளைக் கேட்டறிந்துகொண்டோம். பல அமைப்புகள் பொதுமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தங்கள் கருத்துகளை முன்வைத்திருந்தன. 2,516 பேர் கருத்துகளை முன்வைத்தார்கள். அது இலட்சக்கணக்கான மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் தபால் மூலம் தமது கருத்துகளை முன்வைத்திருந்தார்கள். அனைத்து கருத்துகளையும் உள்ளடக்கியே இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆகவே, இது மக்களின் அறிக்கை அனைத்து தரப்பினரதும் கருத்துகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

உருவாக்கப்படவுள்ள புதிய அரசமைப்பு உண்மையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமா?

எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து அரை நூற்றாண்டைக் கடந்துவிட்டோம். எனினும், ஓர் அரசமைப்பின் ஊடாக அனைத்துமக்கள் மனங்களிலும் நாம் இலங்கையர் என்ற உணர்வைக் கட்டியெழுப்ப இதுவரை முடியாமல் போயுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசின் பங்காளியாகவில்லை. அனைத்து தேர்தல்களிலும் தேசிய அரசியல் ஒரு பாதையிலும், தமிழர்களின் அரசியல் இன்னொரு பாதையிலுமே பயணித்துள்ளது. நட்டில் இரண்டு அரசியல்கள் காணப்படுகின்றன. அதுவே பிரிவினைவாதத்திற்கு வித்திட்டது.
ஆகவே, ஆட்சியில் அனைவரும் பங்காளர்களாக வேண்டும். அதிகாரத்தின் பங்காளிகளாக அனைத்து இன மக்களும் இருக்கவேண்டும். அதிகாரத்தை அனைவரும் பங்கிட்டுக்கொள்ளவேண்டும். மத்தியிலும் அதிகாரங்கள் இருக்கவேண்டும். ஆட்சியின் பங்காளர்களாக அனைவரும் மாறும்போது பிரிவினைவாதமோ பிரச்சினைகளோ ஏற்பட வாய்ப்பில்லை. அனைத்துப் பிரஜைகளுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கவேண்டும். உருவாக்கப்படும் யாப்பு இலங்கை மக்களுக்கானதாக இருக்கவேண்டும்.

அதிகாரப் பரவலாக்கல், வடக்கு கிழக்கு இணைப்பு பற்றியெல்லாம் பேசப்படுகின்றது. உங்கள் அனுபவம் நாட்டின் பிரச்சினைகளை அடிப்படையாகக்கொண்டு பார்க்கையில் எவ்வாறானதோர் அரசமைப்பு உருவாக வேண்டும்? உங்கள் பதில் என்ன?

அரசமைப்பின் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது. எனினும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உபாயத்தையும், வாய்ப்பையும் ஏற்படுத்த முடியும். அதுவே எமது எதிர்பார்ப்பு.அனைவரையும் சமமாக மதிக்கின்ற அனைத்து மக்களுக்கும், அதிகாரங்களையும், உரிமைகளையும் அரசமைப்பின் ஊடாக உறுதிப்படுத்துவதன் ஊடாக பிரச்சினைகளைத் தீர்க்கலாம். ஆகவே, அரசமைப்பின் ஊடாக பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படவேண்டும்.

ச.பார்தீபன்

.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top