இனியும் இணைந்து பயணிக்க முடியாது

இனியும் இணைந்து பயணிக்க முடியாது

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தான்தோன்றித்தனமாக செயற்பாடுகளே, தான் தனித்து இயங்குவதற்கு தீர்மானம் எடுப்பதற்கு காரணமெனத் தெரிவிக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாக சுரேஸ் பிரேமச்சந்திரன், மக்களின் நலன்கருதி புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கி செயற்படவுள்ளதாகவும் வலியுறுத்தினார்.

இலங்கை தமிழரசுக் கட்சியுடனான முரண்பாடு மற்றும் சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் “சுடர் ஒளி“க்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
அவர் வழங்கிய செவ்வி வருமாறு...

கேள்வி: இலங்கைத் தமிழரசுக்கட்சியுடன் முரண்படுவதற்கான காரணம் என்ன?

பதில்: தமிழரசுக் கட்சி, மக்களின் ஆணையிலிருந்து விலகிச்சென்று தன்னிச்சையாக செயற்படுகின்றது. பங்காளிக்கட்சிகளிடம் கருத்துகள் கோரப்படாமல் ஆலோசனை நடத்தப்படாமலேயே முடிவுகள் எடுக்கப்பட்டு அவை திணிக்கப்படுகின்றன. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல்கட்சியாகப் பதிவுசெய்வதற்கும், கூட்டமைப்புக்கென ஒரு பொதுவான சின்னத்தை உருவாக்குவதற்கும் தமிழரசுக் கட்சி விரும்பவில்லை.
வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்களில் மக்களின் ஆணையை மறந்து, அரசுடன் இணைந்துசெயற்படுகின்றது அக்கட்சி. எனவேதான், இனியும் இணைந்து பயணிக்கமுடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.

கே: உங்களது எதிர்கால அரசியல் செயற்பாடு மற்றும் கூட்டணி தொடர்பில் கூறுங்களேன்?

ப: அகில இலங்கை தமிழக் காங்கிரஸ் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து புதிய ஓர் அணியை உருவாக்குவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளன. உடன்படிக்கைகளும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளன. புதிய தலைமையுடன் புதிய கூட்டணி விரைவில் அறிமுகமாகும்.

கே: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் கட்சிகளுக்கு மக்கள் ஆணைகிடைக்காது. கடந்தகாலங்களில் அப்படித்தான் நடந்தும் உள்ளது. எனவே, உங்கள் அணியால் சாதிக்க முடியுமென நம்புகின்றீர்களா?

ப: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாங்களும் இணைந்தே உருவாக்கினோம். ஐக்கியமாக செயற்படவேண்டும் என்பதற்காகவே தமிழ்க் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்தக் கொள்கைகளுக்கு எதிராக தமிழரசுக் கட்சி செயற்படுவது மாத்திரமன்றி, ஏனைய உறுப்பினர்களையும் தம் பக்கம் இழுத்துக்கொள்ளும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது. ஆகவே, இவ்வாறான ஒரு சூழலில் மக்கள் சரியான கொள்கைகளுக்கே ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. அதற்காகவே ஒரு புதிய முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளில் மக்கள் ஏற்கனவே அதிருப்தியுடனேயே இருக்கின்றார்கள். தமிழரசுக் கட்சிக்கான ஆதரவு மக்கள் மத்தியில் இருக்கின்றதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்காலத் தேர்தல்கள் தீர்மானிக்கும். எங்களால் சாதிக்க முடியுமா, இல்லையா என்பதையும் எதிர்காலத் தேர்தல்களே தீர்மானிக்கும்.

கே: பிரச்சினையை பேசி தீர்த்திருக்கலாமே, பிரிவு அவசியமா?

ப; 2002ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 15 வருடங்களாக தமிழ் மக்களுக்காக பல முயற்சிகளை நாங்கள் செய்திருக்கின்றோம். எனினும், எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. அதற்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைப்பு வழங்கவும் இல்லை. இதற்குப் பிறகும் அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை என்பதாலேயே வெளியேறினோம். அரசமைப்பொன்று வருமெனக் கூறப்படுகின்றது. அப்படி வந்தாலும் அந்த அரசமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமாயின் முதலில் வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும். அதனை அரசாங்கம் மறுத்துள்ளது. எனினும், வழிநடத்தல் குழுவில் இருக்கும் சம்பந்தனோ, சுமந்திரனோ இது தொடர்பில் எதுவும் கதைத்ததாகத் தெரியவில்லை. பௌத்தத்திற்கு முன்னுரிமை என்ற விடயத்தின் ஊடாக ஒட்டுமொத்த இலங்கை மக்களும் பௌத்த மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்கின்றோம் என்பதே அதன் பொருள். ஆனால், அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நாட்டில் பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருக்கலாம். எனினும், வடக்கு, கிழக்கில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களே மிக அதிகமாக இருக்கின்றார்கள். மிக மிக சொற்பமாக பௌத்தர்கள் இருக்கின்றார்கள். ஆகவே, குறைந்தபட்சம் வடக்கு, கிழக்காவது மதச்சார்பற்ற பிரதேசமாக இருக்கவேண்டும். வடக்கு, கிழக்கில் பௌத்தத்தை முன்மையான மதமாக ஏற்றுக்கொள்ளவேண்டுமெனக் கூறுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும். இதனூடாக வடக்கு, கிழக்கில் பௌத்த மேலாதிக்க திணிப்பாகவே இதனைப் பார்ககவேண்டும். தமிழரசுக் கட்சி இதனை ஏற்றுக்கொள்ளலாம். எனினும், அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதேபோல் சமஷ்டி பற்றி கதைத்தபோது ஒருமித்த நாடு என்று சொன்னார்கள். எனினும், அரசாங்கம் சொல்லியிருக்கின்றது. மூன்று மொழிகளிலும் "ஏக்கிய ராஜ்ய' தான் எனக் கூறியிருக்கின்றது. அதன் பொருள் ஒற்றையாட்சியே. ஆகவே, தமிழ் மக்களின் கோரிக்கைகள் முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையில் சிங்கள மேலாதிக்கத்தை ஆதரிக்கின்ற தரப்புடன் இணைந்து செயற்பட முடியாது என்பதே எமது கருத்து.

கே: வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி உள்ளிட்ட விடயங்கள் நடைமுறை சாத்தியமற்ற விடயம் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்து. இதனை எவ்வாறு நீங்கள் பார்க்கின்றீர்கள்?

ப: தமிழர்களின் அனைத்து கோரிக்கைகளுமே நியாயமற்றவை என்பதே சிங்களத் தரப்பின் கருத்து. நாங்கள் சொல்வதை மாத்திரமே கேட்கவேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். சிங்களவர்களும் பௌத்தர்களுமே இந்த நாட்டின் மைந்தர்கள் என்பது அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் சிந்தனை. இதுவொரு மஹாவம்ச சிந்தனை. தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அஹிம்சை ரீதியாக தீர்வு காண முயன்று முடியாமல்போன நிலைமையிலேயே ஆயுதம் ஏந்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்கக்கூடிய வகையில் ஒரு தனிநாடாக உருவாக்கப்பட வேண்டுமென்பதே ஆயுதப்போராட்டத்தின் நோக்கம். எனினும், ஒருமித்த நாட்டுக்குள் நாங்கள் இணைந்துவாழ விரும்புவதாகவும், தனிநாட்டைக் கோரவில்லை எனவும் சம்பந்தன் உள்ளிட்டவர்கள் கூறியுள்ளபோதிலும் அவர்களால் ஏன் இறங்கிவர முடியவில்லை.

ஆகவே, ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரத்தைப் பகிர்ந்தால் இணைந்து வாழமுடியுமென அவர்களால் (அரசாங்கத்தால்) ஏன் சிந்திக்க முடியவில்லை. எனினும், தமிழ் மக்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதும் சாத்தியமான விடயமல்ல. அவர்களைப் பொறுத்தவரை ஒற்றையாட்சியில் இறுக்கமாக இருக்கவேண்டும். இலட்சக்கணக்கான உயிர்களை இழந்தது தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே. அவர்கள் அள்ளிப்போடக்கூடிய பிச்சை என்பது ஒற்றையாட்சிக்குள் ஒருசில அதிகாங்களை வழங்கி சமாளித்துவிடலாம் என்பதே அவர்களது எண்ணம்.

அதிகாரங்களும் பொலிஸ், காணி அதிகாரங்கள் என்பது அற்பசொற்ப அளவிலேயே கிடைக்கும். முழுமையாக கிடைக்கப்போவதில்லை. குறைந்தபட்சம் இந்தியாவில் காணப்படுவதுபோல் பொலிஸ், காணி அதிகாரங்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளனபோன்று வழங்கப்பட வேண்டும். யுத்தத்திற்குப் பின்னரும் கூட பல ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் தமிழர் பிரதேசங்களில் குடியேற்றப்பட்டுள்ளார்கள். தங்களது பிரதேசங்களிலேயே தமிழர்களை அழிக்கவேண்டுமென்பதே அவர்களின் நோக்கம். அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

நாங்கள் தனிநாட்டைக் கோரவில்லை. தமிழர்கள் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படவேண்டும். பண்டா, செல்வா ஒப்பந்தம் போன்றவற்றை அவர்களாகத்தான் கிழித்தெறிந்தார்கள். தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றியே வந்திருக்கின்றார்கள். அனைத்து மக்களும் இணைந்து வாழக்கூடிய ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு அவர்கள் ஏன் விரும்புகின்றார்கள் இல்லை என்பதே உண்மை. ஏற்கனவே ஏற்பட்ட இனக்கப்பாட்டிற்கு அமைய வடக்கு கிழக்கு இணைப்பைக் கோருவது இனவாதமா? வடக்கு, கிழக்கு என்பது தமிழ் பேசும் மக்கள் பெருமம்பான்மையாக வாழும் பிரதேசம். அதனை மதச்சார்பற்ற பிரதேசமாகக் கோருவது இனவாதமா? அது கடும்போக்கா? அதனை ஏன் சிங்கள அரசியல்வாதிகள் புரிந்துகொள்கின்றார்கள் இல்லை.

கே: அரசமைப்பு இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடியதா? நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு உரையாற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

ப: நிச்சயமாக இது தொடர்பில் எவ்வித கலந்துரையாடல்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செய்யவில்லை. அதேபோல் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. இடைக்கால அறிக்கை தொடர்பிலான ஒரு தெளிவுபடுத்தல் கூட்டத்திற்கு சிவசக்தி ஆனந்தன் சமுகமளிக்காத காரணத்தினாலேயே வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் காரணம் கூறப்பட்டுள்ளது.
எனினும், அது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமல்ல. அதற்கு போகவேண்டிய அவசியமும் இல்லை.

காரணம், இடைக்கால அறிக்கை தொடர்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஏற்கனவே ஆராய்ந்துவிட்டது. அதில் என்ன இருக்கின்றது? என்னென்ன விடயங்கள் இல்லை என்பது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றோம். தெளிவுபடுத்தல் என்பது ஏனைய கட்சிகளுக்குத் தேவையாக இருந்திருக்கலாம். எமது கட்சிக்குத் தேவையில்லை. எமது கருத்துகளை வெளிப்படுத்த எமக்கு சுதந்திரம் இருக்கின்றது. ஆகவே, இந்த நடைமுறையானது முற்றுமுழுதாக நாடாளுமன்ற நடைமுறைகளை மீறும் செயலாகும். கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான செயற்பாடாகவே நாம் இதனைப் பார்க்கின்றோம்.

கே: நல்லாட்சி பற்றி உங்கள் கருத்து?

ப: நல்லாட்சி என்ற பெயரே சரியா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்திருக்கின்றதா? பல நூறு நாட்களாக வடக்கில் மக்கள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கோரி பல இடங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதுவரை இதற்கு அரசாங்கம் எவ்வித பதிலையும் வழங்கவில்லை. அரசியல் கைதிகளின் அற்பசொற்ப கோரிக்கைகளைக்கூட அரசாங்கம் தீர்ப்பதற்கு முன்வரவில்லை. காணிகளை விடுவித்தல், காணாமற்போனோர் விவகாரம், வடக்கில் இராணுவ பிரசன்னத்தைக் குறைத்தல் போன்ற விடயங்களுக்கு எவ்வித தீர்வுகளையும் அரசாங்கம் வழங்கவில்லை.
சிங்கள மக்களுக்கு இந்த அரசாங்கம் ஏதாவது செய்திருக்கலாம். ஒரு விடயத்தைக் குறிப்பிடவேண்டும்.

வெள்ளை வான் கலாசாரம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, முன்னாள் போராளிகள் இன்னமும் புலனாய்வாளர்களின் கண்காணிப்பிலேயே இருக்கின்றனர். அதனைவிட வட பகுதியில் ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவம் என்ற வகையில் இருக்கின்றனர். ஆகவே, அடக்குமுறைக்குள்ளும் ஆக்கிரமிப்புக்குள்ளும்தான் நாங்கள் இருக்கின்றோம். வேறு எந்தவொரு மாற்றமும் இல்லை. இவ்வாறான சூழலில் எவ்வாறு அதனை நல்லாட்சி எனக் கூறமுடியும்.

கே: தென்னிலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. இது உண்மையா?

ப: மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதா இல்லையா என்பது தொடர்பில் தெளிவாகக் கூறமுடியாது. எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை பயன்படுத்தி சிங்கள வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்துள்ளார்கள் என்பது உண்மை. அவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கின்றோம் என்பதை காட்டிக்கொள்ள முயல்வது உண்மையே. தற்போதைய மைத்திரி ரணில் ஆட்சியை இல்லாதொழிப்பதற்கும் முயற்சிக்கின்றார்கள்.

கே:பிணைமுறி விவகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துமா?

ப: பிரதமரைப் பொறுத்தவரையில் இலஞ்சம் ஊழலற்ற சுத்தமான ஒரு நபராகவே கருதப்படுகின்றார். எனினும், இந்தப் பிணை முறி விவகாரத்தில் அவரது பெயரும் சந்திக்கு இழுக்கப்பட்டுள்ளது. ஆகவே, குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு குறையும் என்பது உண்மையே.

கே: சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட சில வடபகுதி தமிழ் அரசியல்வாதிகளை தென்னிலங்கையில் இனவாதிகளாக அல்லது பிரிவினைவாதிகளாக நோக்கும் தன்மையை அவதானிக்கமுடிகிறது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

ப: வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி தொடர்பில் பேசினால் எம்மை இனவாதி என்பார்கள். நாங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைக்கக்கூடாதா? இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதால் எம்மை இனவாதிகள் எனப் பார்த்தால் அதனை நாங்கள் அந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து முன்வைப்போம். சிங்கள மக்களின் உரிகைளையோ அவர்களின் காணிகளையோ நாம் கேட்கவில்லை. எமது நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும்.

கே: சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்திய புலனாய்வுத்துறை அமைப்பான றோவின் வழிகாட்டுதலில் செயற்படுவதாக ஒரு குற்றச்சாட்டு காணப்படுகின்றதே?

ப: இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பவர்களிடம் முடிந்தால் அதனை நிரூபிக்கச் சொல்லுங்கள். வாயில் வந்ததையெல்லாம் எவர் வேண்டுமானாலும் கூறலாம். இதனூடாக அவர்களுக்கு வேறு ஏதாவது தேவைகள் இருக்கலாம். எனினும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளமுடியாது.

ச.பார்தீபன்

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top