(சிறப்பு செவ்வி) நாடக இயக்குனரின் நாட்குறிப்பிலிருந்து

(சிறப்பு செவ்வி) நாடக இயக்குனரின் நாட்குறிப்பிலிருந்து

மனிதர்கள் பல வண்ணங்களில் படைக்கப்படுகிறார்கள். இதில் நல்லெண்ணம் கொண்டவர்கள்தான் பிறப்பால் உயர்ந்தவர்களாக கொண்டாடப்படுகின்றார்கள். இவ்வாறான மனிதர்களை இன்று நாம் காண்பது அரிது. இது சுயநல பூமி. தன்னுடைய நலனில் மட்டும் அக்கறை கொண்டவர்கள் தான் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் இருக்கின்றார்கள்.தானும் வளர்ந்து மற்றவரையும் வாழவைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் பெரும்பாலும் இப்போது குறைவு. பொதுவாக நாங்கள் எப்போதும் எங்களை உற்சாகப்படுத்தும், தன்னம்பிக்கையூட்டும் மனிதர்களுடன் தான் உறவை வைத்துக் கொள்ளவேண்டும் என்றொரு கருத்து உண்டு. மேலும், மற்றவர்களை குறைத்து மதிப்பிடும் மனிதர்களுடன் உறவை வைத்துக்கொள்ளவேண்டாம் என்றும் கூறுவர். இது உண்மையில் சரியான ஒரு விடயம் தான்.
இந்த வாரம் அப்படியொரு மனிதரைத் தான் இந்த கலைஞர்கள் சந்திப்பில் பார்க்கவிருக்கின்றோம். கே.செல்வராஜன் என்ற பெயரை சொன்னவுடன் சிலர் என்னுடன் பல விடயங்களை பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அதில் குறிப்பாக, அவர் மற்றவர்களை ஏற்றிவைத்து பார்த்தவர், நிறைய கலைஞர்கள் கலைத்துறையில் சாதிப்பதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் போன்றவற்றை பகிர்ந்திருந்தார்கள். இவ்வாறான தகவல்களை வைத்துக்கொண்டு அவருடன் தொடர்பை ஏற்படுத்தினேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த தருணத்தில், அவர் கூறிய வார்த்தைகள் இப்போதும் என் காதில் ஒலிக்கின்றன.
"சுடர்ஒளியில் கலைஞர்களின் நேர்காணல்களை பார்த்திருக்கிறீர்களா?'
"ஆமாம், எல்லோருடைய நேர்காணலையும் பார்த்திருக்கின்றேன். நானும் ஒரு கலைஞன் தான் என்னையும் பார்க்க வருவீர்கள் என்று எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன்'.
"அப்படியா? எப்படி இருக்கிறது அந்தக் கலைஞர்கள் பக்கம்?'
"மிகவும் அருமையாக இருக்கிறது. மூத்த கலைஞர்களுக்கு இப்படியும் அங்கீகாரம் கொடுக்கமுடியுமா? என்றொரு வினா என்னிடத்தில் எழுந்தது. சுடர்ஒளியால் மூத்த கலைஞர்களுக்கு மறுவாழ்வு பிறந்திருக்கிறது'.
இவ்வாறாக அவரது பேச்சு தொடர்ந்தது,
தொடர்ந்து பேசுகின்றார், அவரின் முழுமையான நேர்காணல் உங்களுக்காக இதோ...


கேள்வி :  நீங்கள் ஒரு நாடக இயக்குநர், தயாரிப்பாளர், கதையாசிரியர் என்ற பன்முகத் திறமை கொண்டவர். இது தவிர உங்களைப்பற்றி இன்னும் கூறுங்களேன்....

பதில் :  நீங்கள் கூறியதை தவிர, நான் ஒரு பாடலாசிரியரும் கூட. இலங்கையின் நிறைய மெல்லிசைப் பாடல்கள், பக்திப் பாடல்களையும் எழுதியிருக்கின்றேன். என்னுடைய பாடல்கள் அனைத்தும் இறுவட்டுக்களாக வெளிவந்துள்ளன. முன்பு ரூபவாஹினியில் ஒலிபரப்பாகும் "புஞ்சி கெக்குல' நிகழ்ச்சியை தமிழில் மொழிபெயர்த்து "இளந்தளிர்' என்ற பெயரில் வெளியிட்டேன். அதைத் தவிர, என்னுடைய பிள்ளைகள் மற்றும் அயலார்களை வைத்து "வெல்கம் போய்ஸ் வெல்கம் கேல்ஸ்' என்ற ஒரு நிகழ்ச்சியையும் தயாரித்திருந்தேன்.என்னுடைய வெள்ளிவிழாவில் 125 இற்கும் மேற்பட்ட கலைஞர்களை கௌரவப்படுத்தியிருந்தேன். என்னுடைய நாடகத்தை அரங்கேற்றி, அதில் வரும் நிதித்தொகையை நலிந்த கலைஞர்களுக்கு வழங்கியிருந்தேன். இவ்வாறாக என்னைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

கேள்வி :  முதல் நாடகப்பிரவேசத்தைப் பற்றி சற்று கூறுங்களேன்....
பதில் : நான் கொழும்பை பிறப்பிடமாகக் கொண்டவன். படித்தது தெமட்டகொட அரசினர் தமிழ் கலவன் பாடசா லையில்தான். (இப்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான் படிக்கும் காலத்தில் அந்தப்பாடசாலையில் பி.எச்.அப்துல் ஹமீத், கே.சந்திரசேகரன், போல் அன்டனி, வி.கே.டி.பாலன் இவ்வாறான கலைஞர்கள் பயின்றார்கள். அவர்கள் பாட
சாலை நாட்களில் சில மேடை நாடகங்களை அரங்கேற்றி இருந்தார்கள். அவர்களை விட சிறியவனாகிய நான் அவற்றை பார்த்து நானும் இவ்வாறு வரவேண்டும், நாடகம் மேடையில் செய்யவேண்டும் என நினைத்ததுண்டு.இவ்வாறு இருக்கையில், மேற்கூறிய கலைஞர்கள் எல்லோரும் பாடசாலையை விட்டு மேற்படிப்புக்காக சென்ற பிறகு நான் தரம் 10 இல் பயின்ற காலப்பகுதியில் பாடசாலை இலக்கியமன்றங்கள் போன்றவற்றில் என்னுடைய திறமையை காண்பித்திருந்தேன். பாட
சாலை நாட்களில் இது தான் நாடகம் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால், அதை விட்டு வெளியேறிய பின்பு தான் உண்மையில் நாடகம் என்றால் என்ன என்பது பற்றி தெரிந்துகொண்டேன். அதை இவ்வாறு கூறலாம். அதாவது, "கருவில் இருக்கும் பறவைக்கு அந்த முட்டை மட்டும் தான் உலகம் என்றிருக்குமாம், வெளியே வந்தபிறகு கூடு தான் தன்னுடைய உலகம் என்றிருக்குமாம், சிறகு முளைத்து பறக்கத் தொடங்கிய பின்பு தான் உண்மையில் உலகம் என்றாலே என்னவென்று தெரியுமாம்'. இது போல் நானும் வெளி உலகத்துக்கு வந்த பிறகு தான் எனக்கு எல்லாமே புரியத்தொடங்கியது.
என்னுடைய வீடு அமைந்திருந்தது ஒறுகொடவத்தையில். முன்பு அந்தப்பிரதேசம் கீரைத்தோட்டம் என அழைக்கப்பட்டது. அத்தனை அழகு. எங்கும் "பச்சை பசேல்'என காட்சியளிக்கும். அந்த இயற்கை சூழ்நிலை தான் என்னுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி
யிருந்தது. அப்போது சில ஹிந்திப்பாடல்களை கேட்டு அதன் இசைக்கேற்ப நான் தமிழ் வரிகளை சேர்த்து பாடல் எழுதி நானே பாடிக்காட்டுவேன். என்னுடைய குடும்பம் ஒரு வறிய குடும்பமாக இருந்ததால் அக்காலத்தில் எனது வீட்டில் இரவு வகுப்பு ஒன்றை நடத்திக்கொண்டிருந்தேன். என்னிடம்
30 மாணவர்கள் கல்வி கற்பதற்காக வருவார்கள். என்னிடம் கலையார்வமும் இருந்தது, படிக்கவேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனபடியால் என்னிடம் பயின்ற மாணவர்களை ஒன்றுசேர்த்து ஒரு தீபாவளி தினத்தில் ஒரு நாடகத்தை மேடையில் அரங்கேற்றினேன். அந்த நாடகத்துக்கு பெயர் "வீரபாண்டிய கட்டப்பொம்மன்'.அந்தப்பகுதிக்கே அந்த நாடகம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து சகோதர மொழிபேசும் இளைஞர்கள் ஒன்று
சேர்ந்து அவர்களும் மேடை நாடகங்களை நடத்தினார்கள். அந்நாட்களில் அப்பகுதி மக்கள் நல்ல ஒத்துழைப்பையும், ஆர்வத்தையும் எமக்கு ஏற்படுத்தி தந்தார்கள்.
தரம் 11 இற்கு பிறகு உயர்தரத்துக்கு நான் செல்லவில்லை. காரணம், நான் முதலில் குறிப்பிட்ட குடும்ப வறுமை. அந்நேரத்தில் ஒறுகொடவத்தையில் இருந்த என்னுடைய குடும்பம் ஜிந்துப்பிட்டிப் பிரதேசத்தை நோக்கி இடம்பெயர்ந்தது. இந்த ஜிந்துப்பிட்டி பிரதேசம் இலங்கையின் கோடம்பாக்கம் என அழைக்கப்பட்டது.காரணம், இலங்கையின் பெரும்பாலான கலைஞர் கூட்டமே அங்குதானிருந்தது. இந்நிலையில், அத்தகைய கலைஞர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.குறிப்பாக, இலங்கை "நாடகத்துறையின் தந்தை' என அழைக்கப்படும் ராஜேந்திரன் மாஸ்டரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரைப் போல லட்டீஸ்வீரமணி, சுஹைர் ஹமீட், ஜோபு நஸீர் இவர்களும் அங்கு தான் இருந்தார்கள்.அந்நேரத்தில் தான் ஏ.சி.எம்.ஹூசைன் பாரூக் என்பவரை நான் பார்த்தேன். என்னுடைய கலையார்வத்தை பார்த்த அவர், தன்னுடன் என்னை வருமாறு அழைத்து வைத்துக் கொண்டார். அவரிடம் நான் நாடக நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். நாடகம் எழுதும் முறை தொடர்பான நிறைய விடயங்களை எனக்கு கற்பித்திருக்கிறார். என்னுடைய குருவாகவும் அவரே இருக்கின்றார்.
அதேவேளை, ஏ.சி.எம்.ஹூசைன் பாரூக்கின் குருவாக இருந்தவர் சுஹைர் ஹமீட். ஆகவே, இவருடைய நாடகங்களையும் பக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எனவே, இவ்வாறானவர்களின் அனுபவங்கள் மற்றும் வழிகாட்டல்களை கருத்தில்கொண்டு நான் எழுதிய முதல் நாடகம் "கேளுங்கள் தரப்படும்'. ஒரு கிறிஸ்தவ நாடகமாக அமையப்பெற்றிருந்த இந்நாடகத்தில் ஜோபு நஸீர், எம்.எம்.ஏ.லத்தீப், ப்ரியா ஜெயந்தி, ரட்ணகலா, ஆர்.பி.மகாராஜா, கே.வி.எஸ்.மணியம், லட்டீஸ்வீரமணி போன்ற இலங்கை கோடம்பாக்கத்தில் பிரபல்யமாக இருந்த கலைஞர்கள் இந்நாடகத்தில் நடித்தார்கள்.
இந்நாடகத்திற்கு கதை, வசனம் மட்டும் தான் நான்.இதை தயாரித்திருந்தவர் என்னுடைய குரு நாதர் ஏ.சி.எம்.ஹூசைன் பாரூக். அந்த நாடகம் எதிர்பார்த்ததை விட, மிகவும் நன்றாக மக்களிடையே பேசப்பட்டது.
அதைத் தொடர்ந்து என்னுடைய முதல்நாடகத்தில் நிறைய பெரிய கலைஞர்கள் நடித்திருந்தமையினால் அடுத்த நாடகத்தில் சிறிய அங்கீகாரம் தேடிக் கொண்டிருக்கும் நடிகர்களை நடிக்கவைக்கலாம் என்றெண்ணினேன். அதேநேரம், என்னிடம் வந்து நிறைய சிறிய கலைஞர்கள் "அண்ணா உங்களுடைய நாடகத்தில் எங்களுக்கும் வாய்ப்பு தருவீர்களா' என்று கேட்டவர்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். அத்தகையவர்களை கருத்தில் கொண்டு 1974 ஆம் ஆண்டு சிலோன் யுனைடட்ஸ் ஆர்ட்டிஸ்ட் என்ற கலையரங்கை நிறுவினேன். அதன் மூலமாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் "அரங்கேற்றம்' என்றொரு பாட்டு நிகழ்ச்சியை நடத்தினோம். அதற்கான வழியை லட்டீஸ் வீரமணி தான் ஏற்படுத்திக்கொடுத்தார். அதனைத் தொடர்ந்து "உறவுகள்' என்றொரு நாடகத்தை நான் எழுதினேன். "உறவுகள்' நாடகத்தில் டி.எஸ்.பிச்சையப்பாவுடன் ஏனைய புதுமுக நடிகர்களை அதில் நடிக்கவைத்தேன். இதில் குறிப்பிட்ட ஒரு
சிறப்பம்சம் என்னவென்றால் இந்நாடகத்தில் நடிகையாக நடித்தவர் ஜாவா மொழி பேசக்கூடிய ரெஜினா நைம் என்பவர். அவர் ஒரு சிங்களப்பட நடன ஆசிரியர். இவரையும் நான் தமிழில் அறிமுகப்படுத்தினேன். இந்நாடகமும் நல்ல வெற்றியை மக்களிடையே எனக்கு பெற்றுத் தந்தது.
அதில் நடித்த பலர் பிற்காலத்தில் இலங்கையில் தயாரான பல நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்தார்கள். அதைத் தொடர்ந்து ஸ்ரீதர் பிச்சையப்பா கதை எழுதிய "இதற்கு தானே ஆசைப்பட்டாய்' என்ற நாடகத்தை நான் தயாரித்திருந்தேன். அந்த நாடகமும் வெற்றிபெற்றது.அதைத் தொடர்ந்து நான் மேடையேற்றிய அனைத்து நாடகங்களிலும் தொடர்ந்து புது முகங்களை அறிமுகப்படுத்திக்கொண்டே சென்றேன். இப்படித் தான் என்னுடைய நாடக வாழ்க்கை ஆரம்பமானது.

கேள்வி :  பொதுவாக உங்களைப்பற்றி நான் கேள்விப்பட்ட ஒரு விடயம் கே.செல்வராஜன் என்றாலே புதிய கலைஞர்களுக்கு மதிப்பளிக்கக் கூடியவர், நிறைய கலைஞர்கள் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு வழிசமைத்துக்கொடுத்தவர் என்கின்றார்கள். இந்த சிறந்த மனிதாபிமான இயல்பு சிறிய வயதில் இருந்து உங்களுக்குள் இருந்ததா?

பதில் : நல்லதொரு கேள்வி இது. உண்மையில் பாடசாலை நாட்களில் இருந்த ஏக்கம், அதே போல இலங்கையின் கோடம்பாக்கம் என்றழைக்கப்படும் ஜிந்துப்பிட்டியில் கலைஞர்களுடன் இருந்த ஆரம்ப காலங்களில் என்னை நாடகத்தில் நடிக்க கூப்பிட மாட்டார்களா? என்றிருந்த தவிப்பு. இவை எல்லாம்தான் என்னை இவ்வாறு வளர விரும்பும் கலைஞர்களுக்கு அடித்தளம் இட்டுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது. என்னுடைய முதல் நாடகத்திலே நான் உச்சம் தொட்டுவிட்டேன். பொழுதுபோக்கு சாதனங்கள் பெரிதாக எதுவுமில்லாத அந்தக்காலப்பகுதியில், நான் விரும்பியது ஒன்று தான்.எப்படியாவது மக்களை மேடை நாடகங்களின் பால் ஈர்க்கவேண்டும். இதற்கு நான் கலைத்துறையில் சாதிக்கவேண்டும் என்று விரும்பியவர்களுக்கு அங்கிகாரம் கொடுத்தேன். இந்த நேரத்தில் இன்னொரு விடயத்தையும் இங்கு கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். நடிகர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் கண்கள் ஒரு குண்டுவெடிப்பில் பறிபோக, சிகிச்சைக்காக இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். இரண்டு கண்களிலும் பார்வையற்ற அவருக்கு சத்திரசிகிச்சைக்காக பல இலட்சங்கள் தேவைப்பட்டன. அச்சமயத்தில் அவர் எழுதி குறையில் இருந்த நாடகமான "இதற்கு தானே ஆசைப்பட்டாய்' என்ற நாடகத்தை நான் தயாரித்து மேடையேற்றினேன்.அதன் மூலம் கிடைக்கப்பெற்ற இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட நிதியை அவரின் சத்திரசிகிச்சைக்கு கொடுத்து உதவினேன். அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையில் அவருக்கு ஒரு கண் மாத்திரமே தெரியவந்தது. ஒரு கண் பார்வை பறிபோனது. இந்நிகழ்வை என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு தருணமாக நான் நினைவுபடுத்தி பார்ப்பதுண்டு.
இவ்வாறாக, இந்தியாவின் கே.பாலச்சந்தர் போல் நானும் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதையே நானும் பின்பற்றி ஏனையோருக்கு, என்னால் முடிந்தவற்றை செய்தேன்.

 

IMG_20171128_155611.jpg

 

* கலை எனக்கு தொழிலும் அல்ல பிழைப்பும் அல்ல பொழுதுபோக்குமல்லகலை எனது ஆத்ம திருப்தி

* எனக்கு சிறிய வயதில் கிடைத்த புறக்கணிப்புகள்தான் மற்றையவர்களை அவ்வாறு செய்யாமல் ஏற்றிவிடவேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது

* பொழுதுபோக்கு சாதனங்களின் வருகைதான் மேடை நாடகங்களின் வீழ்ச்சிக்கு காரணம் என்று நான் கூறவில்லை

 

கேள்வி :  பொழுதுபோக்கு சாதனங்கள் குறைவாக இருந்த காலத்தில் மேடை நாடகங்கள் உயர்ந்த நிலையில் இருந்ததாக கூறியிருந்தீர்கள். ஆனால், இன்று அவ்வாறான ஒரு நிலை இல்லை என்பது கண்கூடு. மேடை நாடகங்கள் மறுபடியும் எழுச்சி பெறும் என்று நினைக்கின்றீர்களா?

பதில் : ஒரு விடயத்தை முதலில் நான் கூறிக்கொள்ளவேண்டும்.பொழுதுபோக்கு சாதனம் என்பது காலத்தின் கட்டாயத்தேவை. எனவே, இந்த மேடை நாடகங்கள் மறுபடியும் எழுச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் நிச்சயமாக இல்லை. இந்நிலை இலங்கையில் மாத்திரமல்ல, இந்தியாவிலும் இதே நிலைதான். அதே போல தமிழில் மாத்திரமல்ல, நமது சகோதர மொழியிலும் கூட இதே நிலைதான்.ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நாடகமேடைகள் இன்று எல்லா இடங்களிலும் வெறிச் சோடித்தான் கிடக்கின்றன.மேலும், இலங்கையில் சந்தைவாய்ப்புகள் குறைவு. நாடகத்தை தயாரிப்பதற்கும் முதலீடு செய்வதற்கும் யாரும் விரும்புவதில்லை. சினிமாவிற்கே முதலீடு செய்ய அஞ்சும் இந்தக் காலத்தில் நாடகத்திற்கு யார் பணத்தை செலவளிப்பார்கள்?
இன்று நாங்கள் எல்லோரும் இயந்திர வாழ்க்கைக்கு பழகிவிட்டோம். வீட்டிலே டிஸ் டிவி இருக்கிறது. நாங்கள் இதை விட்டு விட்டு வெளியே பணம் செலவழித்து நாடகம் பார்ப்பதை எப்படி விரும்புவோம்? அத்தோடு, நாடகத்தில் நடிப்பதற்கும் இப்போது பெரிதாக யாரும் விரும்புவதும் இல்லை.இந்நிலை இப்படித்தான்.வளர்ந்து வரும் காலமாற்றத்தில் மேடை நாடகங்கள் புத்துயிர் பெறும் என்பதை எப்படியும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

கேள்வி :  இதுவரையில் எத்தனை மேடை நாடகங்களை தயாரித்திருப்பீர்கள்?

பதில் : நான் கதை வசனம் எழுதியது 12 நாடகங்கள். 13ஆவது நாடகத்தை புத்தகமாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். அந்நாடகத்தின் பெயர் "ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்' இதைத்தவிர 28 நாடகங்களை தயாரித்திருக்கின்றேன்.இந்தியாவின் பிரபல எழுத்தாளர்களான சுஜாதாவின் இரண்டு நாவல்களான "கடவுள் வந்திருந்தார்' , "முதல் நாள்' மற்றும் கோமல் சுவாமிநாதனின் இரண்டு நாவல்களான "தண்ணீர் தண்ணீர்', "மனிதரெனும் தீ' வியட்நாம் சுந்தரத்தின் "ஞானஒளி' நாடகம் ஒன்றையும் இலங்கையில் நாடகமாக மேடையேற்றியிருக்கின்றேன்.
அது போல கவிஞர் கண்ணதாசனின் "அனார்க்கலி' நாடகத்தையும் ஓரங்க நாடகமாக அரங்கேற்றியிருந்தேன். அதே போல, கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணனின் "கவியும் கண்ணீரும்' என்ற நாடகம் ஒன்றையும் இங்கு அரங்கேற்றியிருந்தேன். இவ்வாறாக என்னுடைய எழுத்துக்களை மாத்திரமல்லாது, ஏனையவர்களின் நாடகங்களையும் இங்கு மேடையேற்றிய பெருமை என்னையே சாரும்.

கேள்வி :  பாடல்கள் எழுதும் பழக்கம் எவ்வாறு ஏற்பட்டது?
நீங்கள் எழுதிய பாடல்கள் சிலவற்றை கூறமுடியுமா?

பதில் : சிறிய வயதிலிருந்து மெட்டுக்கு பாடல் எழுதும் ஆர்வம் இருந்தமையால் இலகுவாக என்னால் பாடல்கள் எழுத முடிந்தது. நூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், எழுதி வைத்திருக்கும் பாடல்கள் வெளிவந்த பாடல்களை விட அதிகம். இதில் 50 இற்கும் மேற்பட்ட பாடல்கள் இறுவட்டு வடிவில் வெளிவந்தன. ஐயப்பன் பாடல்களை வெளியிடும் சிதம்பரம் தியாகராஜனுக்கு நான் தான் பாடல்களை எழுதி அனுப்புவேன். இப்படி வானொலி நிகழ்ச்சிகள் மற்றும் மெல்லிசைப் பாடல்கள், காதம்பரி போன்ற இசைநிகழ்ச்சிகளில் பாடப்படும் பாடல்கள் என நிறைய பாடல்களை எழுதியிருக்கின்றேன்.

கேள்வி :  உங்களுடைய குடும்பத்தை பற்றி......

பதில் : என்னுடைய மனைவி,மூன்று பிள்ளைகள்.ஒரு பெண், இரண்டு ஆண்பிள்ளைகள்.எல்லோரும் திருமணம் முடித்துவிட்டார்கள். இப்போது என்னுடைய கடைசி மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றோம். உடல் நிலை நன்றாக இருந்தபோது நான் கணக்காளராக வேலைசெய்தேன்.இன்று என் உடல் நிலை எனக்கு ஒத்துழைக்கவில்லை. ஆகையினால் நின்றுகொண்டு வேலை செய்யமுடியவில்லை. இப்போது ஒரு லொட்ஜ் ஒன்றில் முகாமையாளராக வேலைசெய்கின்றேன். என்னுடைய மகன் தான் கவனித்துக்கொள்கின்றார். என்னுடைய வருமானம் மருத்துவ செலவுகளுக்கே செலவாகிவிடுகிறது.

கேள்வி :  கலைத்துறையில் 45 வருடங்களை கடந்துவிட்டீர்கள். நீங்கள் வாங்கிய விருதுகளைப் பற்றி கூறமுடியுமா?

பதில் : விருதுகள் எனும்போது 1992ஆம் ஆண்டு எம்.உதயகுமாரின் "சலங்கையின் நாதம்' என்ற நாடகத்தை நான் தயாரித்திருந்தேன். அந்த நாடகத்துக்கு ஆறு விருதுகள் கிடைத்தன. இதில் எனக்கு இரண்டு விருதுகள் கிடைத்தன. சிறந்த நாடகத் தயாரிப்பாளர், சிறந்த நாடக இயக்குநர். அதேபோல 1994 ஆம் ஆண்டு அரச நாடக விழாவில் மறுபடியும் எம்.உதயகுமாரின் ஒரு நாடகத்துக்கு பணப்பரிசு கிடைத்தது. அதைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு அரச நாடகவிழாவில் நீர்கொழும்பு முத்துநாகலிங்கத்தின் "மௌனத்திரை' நாடகத்தை அரங்கேற்றியிருந்தேன்.அந்நாடகத்துக்கு ஆறு விருதுகள் கிடைத்தன. அதில் சிறந்த தயாரிப்பாளராக நான் தெரிவு செய்யப்பட்டேன். அதைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு அரச நாடகவிழாவில் எஸ்.ஏ.நாகூர்கனியின் "இப்போ இதெல்லாம் சகஜங்க' நாடகத்துக்கு சிறந்த நாடக நெறியாளர் என்ற விருது கிடைத்தது. அந்த விருது என்னுடைய கனவு விருது . அது கிடைத்தது அத்தனை சந்தோசம் எனக்கு. பட்டம் எனும்போது "கலைமாமணி', "கலைச்சுடர்', "கலைக்கதிர்' , "கலைப்பேரொளி'. கலாபூஷணத்துக்கும் விண்ணப்பித்திருந்தேன். ஆனால், அது இன்னமும் கிடைக்கவில்லை.இரண்டு முறை விண்ணப்பித்திருந்தேன். பார்ப்போம் எப்போது கிடைக்கும் என்று.
இவ்வாறான அவரது உரையாடலில் தனக்கு இன்னும் "கலாபூஷணம்' விருது கிடைக்கவில்லை என்ற கவலை எதிரொலித்ததை காணமுடிந்தது. ""வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் விண்ணுலகில் தெய்வத்துள் வைக்கப்படுவான்'' என்பது வள்ளுவன் மொழி. உண்மையில் தன்னுடைய வாழ்நாளில் எவ்வாறான ஏக்கங்களை சுமந்திருந்தாரோ, அத்தகையவற்றை ஏனையவர்களுக்கு காட்டிடாமல் வந்தவர்கள் அனைவருக்கும் கலைத்துறையில் ஒரு பாதை அமைத்துக்கொடுத்திருக்கிறார் செல்வராஜன்.
சந்தோசமான தருணங்களை நாம் மறந்துவிடுவதுண்டு. ஆனால், கண்ணீர் விட்டு நின்ற நிமிடங்களை எம்மால் மறக்க முடியாது. சிறு வயதில் வறுமை ஒரு புறம் தன்னை வட்டமிட, கலைத்துறையின் மீதுகொண்ட காதல் ஒருபுறம் ஆட்கொள்ள, அத்தனை சவால்களையும் முறியடித்து தனக்கான உலகில் தனித்து ஜொலிக்கிறார் இவர்.
கே.செல்வராஜனை நான் சந்திக்க சென்றிருந்த தருணம், அவர் சற்று உடல் சுகவீனமுற்ற நிலையில் இருந்தார். ஒரு பிரச்சினை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு நடந்து செல்வதிலும் பிரச்சினையிருக்கிறது. இருந்தபோதிலும், தன்னுடைய அனுபவங்கள் அனைத்தையும் அவர் ஆர்வமாக வெளிப்படுத்திய விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. காரணம், நான் அவரிடம் கேள்விகளை தொடுக்கும் முன்பதாகவே அவர் தன் மனதில் இருந்த அத்தனை நினைவலைகளையும் பகிர்ந்திருந்தார். மாலைப்பொழுதில் அவரை சந்திக்க சென்றிருந்தமையால் நீண்டநேரம் உரையாடுவதற்கு நேரம் ஒத்துழைக்கவில்லை.இருந்தபோதிலும், தன்னுடைய மனைவி மற்றும் மகன் மருமகள் பேரப்பிள்ளைகள் சகிதம் அவர் என்னுடன் உரையாட ஆயத்தமாகி இருந்ததை காணும்போது உச்சி குளிர்ந்தது.
உண்மையில் "வாழ்க்கை என்பது ஒரு முறை வாழ்வதற்கான ஒரு வாய்ப்புத்தான்'. அந்த வாய்ப்பை நாம் எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதில்தான் வாழ்வில் அத்தனை சாதனைகளும் அமையப்பெற்றிருக்கின்றன. செல்வராஜன் போன்ற கலைஞர்கள் உண்மையில் சிகரத்தில் வைத்துப்பார்க்கப்பட வேண்டியவர்கள்.காரணம், பிறரை சிகரத்தில் ஏற்றி அழகு பார்த்தவர்கள் எல்லோருமே இவ்வாறான நிலையில் வைத்துப்பார்க்கப்பட வேண்டியவர்கள் தான். எப்போதும் சொல்வது போல இந்த கலைஞர்களை நோக்கி பயணம் செய்கின்ற ஒவ்வொரு தருணங்களும் எனது வாழ்வில் தினமும் ஒரு நல்ல சிந்தனையை விதைத்த வண்ணமேயிருக்கின்றன. இதைத் தவிர, ஏற்கனவே வெளிவந்த கலைஞர்களின் வாழ்த்துக்களும் என்னுடன் சேர்ந்து பயணிக்கின்றன என்பதில் பெருமை கொள்கின்றேன் நான்.

சிவசங்கரி சுப்ரமணியம்

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top