மாவீரர் தினம் வேண்டாம்

மாவீரர் தினம் வேண்டாம்
போரின்போது தமது உறவினர்களையோ நண்பர்களையோ இழந்திருந்தால் அவர்களை நினைவுகூருவது மக்களின் அடிப்படை உரிமையாகும். இதனை தவறென யாராலும் கூறமுடியாது. ஆனால், இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் தூண்டும்வகையில் புலிகளை நினைவுகூருவதை மட்டும் எம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தான் எமது நிலைப்பாடு என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின்  பிரசாரச் 
செயலாளருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
"சுடர்ஒளி' வாரஇதழுக்கு அவர் வழங்கிய செவ்வியின் போதே மேற்கண்ட கருத்தை வெளியிட்டார். இது உள்ளிட்ட மேலும் பல தகவல்கள் அடங்கிய விஜித எம்.பியின் முழுமையான நேர்க்காணல் வருமாறு,
 
கேள்வி :  உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளிவந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பின்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தான் உள்ளார்கள் என்று தொடர்ச்சியாக குற்றம் சுமத்திக் கொண்டு வருகின்றீர்களே. இதற்கு என்ன காரணம்?
 
பதில் : ஆம். இப்போதும் அதையேதான் கூறுகிறோம். 2015 ஆம் ஆண்டில் நடைபெற வேண்டியதே இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல். எனினும், அது சில காரணங்களினால் இல்லாது போனதையடுத்து, புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்காக எல்லை நிர்ணயங்கள் எல்லாம் செய்யப்பட்டன.
ஆனால், தற்போதோ அது தவறு என்று வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரி மஹிந்த தரப்பு என இரண்டாக பிளவடைந்துள்ளமையால், இத்தருணத்தில் தேர்தலை நடத்தினால் அது நிச்சயமாக இரண்டு தரப்புக்கும் பெரிய பாதிப்பாக அமைந்து விடும் என்ற காரணத்தினாலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள 6 பேரும் சுதந்திரக்கட்சியின் கைக்கூலிகள் என்பதே உண்மையாகும். இதனை இல்லையென சுதந்திரக் கட்சியினர் மறுக்கவே முடியாது.
 
கேள்வி :  எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரோ தாமும் தேர்தல் நடைபெற வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் கூறுகிறார்களே...
 
பதில் : அடிப்படையற்ற பொய்யானக் கருத்துக்களையே அவர்கள் கூறுகிறார்கள். தற்போது மைத்திரி மஹிந்த தரப்பை இணைக்கும் பேச்சுக்களை சுதந்திரக் கட்சியினர் ஆரம்பித்துள்ளனர். சுதந்திரக் கட்சி இரண்டாக உடைந்துள்ளமையும்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி புதிதாக உருவாகியுள்ளமையும் சுதந்திரக் கட்சிக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்தே இந்த இணைப்புப் பேச்சுக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இதற்குள் எப்படியாவது காலத்தை இழுத்தடிக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும்.
இதற்காக தமது கைக்கூலிகளை வைத்து வழக்குத் தாக்கல் செய்தே தற்போது இவ்வாறு மக்களை ஏமாற்றும் வகையில் கருத்துக்களை கூறிவருகிறார்கள். அந்த ஆறுபேரில் ஒருவர் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவின் மகனான சசந்த யாப்பா அபேவர்த்தனவின் செயலாளர் ஆவார். அடுத்தவர் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவின் கைக்கூலியாவார். இன்னொருவர்  சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவர் சாந்த பண்டாரவின் கைக்கூலியாவார். இவ்வாறு அந்த 6பேரும் சுதந்திரக் கட்சியுடன் தொடர்புடையோர்களே. இதனை இல்லையென அவர்களை மறுக்கச்  சொல்லுங்கள் பார்க்கலாம். நாம், இதுகுறித்து ஆரம்பத்தில் இருந்தே கூறிக்கொண்டுதான் வருகிறோம். இதற்கெதிராக பல்வேறு செயற்பாடுகளையும் நாம் மேற்கொண்டோம். தற்போது அதன் பலனாகத் தான் 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கேனும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல்கள்  ஆணைக்குழு அறிவித்துள்ளது. (குறித்த மனுவானது கடந்த வியாழக்கிழமை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது)
 
கேள்வி :  ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைவு கூட்டாட்சிக்கான ஒப்பந்தம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. உங்களைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் 
நீடிக்கப்பட வேண்டும் என்றா அல்லது இரத்து செய்யப்பட வேண்டும் என்றா கருதுகின்றீர்கள்?
 
பதில் : ஐயோ 70 களில் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் கோட்டைக் கட்டிப் பறந்தது. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவோம் மக்களின் வாழ்வாதாரத்தை குறைப்போம் என்று தம்பட்டம் அடித்தார்கள், ஆனால் இறுதிவரை நடக்காமல் போய்விட்டது.
பிறகு, சுதந்திரக் கட்சிக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தது. இவர்களும் ஐக்கிய தேசியக் கட்சி கூறிய அதே கதையை கூறினார்களே ஒழிய, ஒன்றையும் நாட்டில் செயற்படுத்தவில்லை. இப்போது பார்த்தால் இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றித்து நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்லப் போகிறார்களாம். ஆனால், இவர்களினால் இறுதிவரை ஒன்றைக்கூட செய்ய முடியாது என்பதை எம்மால் உறுதியாகக் கூற முடியும்.
இதுபோதாதென்று, மைத்திரி மஹிந்த இணைப்புக்கான பேச்சுக்கள் வேறு ஒருபக்கத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கூட்டரசின் ஒப்பந்தம் நீடிக்கப்படுமா அல்லது அப்படி நீடிக்கப்பட்டாலும் அது இறுதிவரை வெற்றிக்கூட்டணியாக  சாத்தியப்படுமா என்பது உறுதியில்லை. பார்ப்போம்! என்னதான் செய்வார்கள் என்பதை. நாமும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்.
 
கேள்வி : அடுத்தாண்டு பெப்ரவரியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜே.வி.பியின் தயார்படுத்தல் எந்தளவுக்கு உள்ளது?
 
பதில் : ஆம். இதற்காக நாம் தொடர்ந்தும் தயார் நிலையிலேயே இருக்கிறோம். வேட்பாளர்கள் தெரிவெல்லாம் இறுதி செய்யப்பட்டுவிட்டன. புத்தி ஜீவிகள், சமூக அக்கறையுடையோர் எனப் பலர் இம்முறை எம்முடன் இணைந்துள்ளார்கள்.
ஊழல் குற்றச்சாட்டுக்களால் இந்நாடே அழிந்துகொண்டிருக்கிறது. எம்மைப்பொறுத்தரை இது இல்லாத ஒரு நாட்டை உருவாக்குவதே இலக்காகும். இதற்கான அடித்தளத்தை நாம் பிரதேச மட்டத்திலிருந்து போட வேண்டும் என்பதற்காகவே இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பயன்படுத்தவுள்ளோம்.
எனவே, இதற்கு மக்கள் அனைவரும் எம்முடன் கைகோர்த்து எமக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று இவ்வேளையில் கேட்டுக்கொள்கிறோம்.
 
கேள்வி :  மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒருங்கிணைந்த எதிரணிணை ஒரே வரியில் விமர்சிப்பதாயின் எப்படிக் கூறுவீர்கள்?
 
பதில் :  ஹொர மெர கல்லி.(அடாவடிக் குழு) என்றே நான் கூறுவேன். இத்தரப்பினருக்கு இதனைவிடவும் ஒரு சிறந்த வரைவிலக்கணமே இல்லை. 
நீங்களே பாருங்கள்! கொலை, கொள்ளை மற்றும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் தொடர்புடையோர் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தான் இருக்கிறார்கள். (சிரிக்கிறார்.)
 
கேள்வி :  இத்தரப்பினரை தம்முடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி தரப்பினர் தற்போது தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்களே. இதுதொடர்பில் என்ன நினைக்கின்றீர்கள்?
 
பதில் :  இத்தரப்பினர் இணைந்தாலும் மக்களுக்கு பயனில்லை. இணையாவிட்டாலும் பயனில்லை. நாட்டில் தேங்காய் ஒன்றின் விலை தற்போது 120 ரூபாய், வடக்கில் மீள்குடியேற்றங்கள் இன்னும் பூரணமாக இடம்பெறவில்லை, பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது, அரசியல் கைதிகள் பல வருடங்களாகியும் சிறைச் சாலையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள், மலைநாட்டைப் பொறுத்தவரை அம்மக்கள் பாரிய துன்பங்களை மட்டுமே தமது வாழ்நாளில் அனுபவித்திருப்பார்கள், இப்போதும் அவர்கள் லயன் வீடுகளிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், அங்குள்ள வைத்தியசாலை, பாடசாலை என எதிலும் முன்னேற்றமோ அல்லது நவீனத்துவமோ இல்லை, அவர்களுக்கான காணி உரிமைப் பத்திரம் கூட முழுமையாக கொடுக்கப்படவில்லை, இவ்வாறு நாட்டிலுள்ள பிரச்சினைகள் எல்லாம் இத்தரப்பினரின் இணைவினால் தீர்க்கப்பட்டுவிடுமா? இல்லை.
 
அதேநேரம், மஹிந்தவுடன் மைத்திரி இணைவாராயின் அது, 2015 இல் தனக்கு வாக்களித்த மக்களின் ஆணையை காலால் எட்டி உதைக்கும் ஒன்றாகவே கருதப்படும். ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்டவரே மஹிந்த. மேலும், பொது வேட்பாளராக களமிறங்கிய காரணத்தினால் தான் மைத்திரிபால சிறிசேனவுக்கும் வாக்களிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவை தமது பக்கம் சேர்க்க நினைப்பதானது மக்களின் ஆணையை மீறிய, சுயநலமிக்க செயற்பாடாகவே பார்க்கப்படும். இதனை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்.
 
கேள்வி :  புதிய அரசியலமைப்பு தொடர்பில் தற்போது பல்வேறு கருத்துக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதுதொடர்பில், இடைக்கால அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய அரசியலமைப்பினால் நாடே பிரிந்துவிடும் என்றெல்லாம் கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. இதுதொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாடு என்ன?
 
பதில் :  எம்மைப் பொறுத்தவரை புதிய அரசியலமைப்பொன்று நாட்டுக்கு அவசியம் என்பதே நிலைப்பாடாகும். தற்போது காணப்படும் அரசியலமைப்
பானது பழைமையானது என்பதால் சமகால சூழ்நிலைக்கு ஏற்றாற்போல அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும்.
இதில், பிரதானமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும். அத்தோடு, அனைவருக்கும் சமஉரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் எல்லாம் பாதுகாக்கப்படவும் உறுதிப்படுத்தப்படவும் வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக இருக்கிறோம். அதேநேரம், மொழிப்பிரச்சினைக்கும் இதன் ஊடாகத் தீர்வு எட்டப்படவேண்டும்.
அதாவது, சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் நாட்டில் அரச கரும மொழிகளாக மாற்றப்படவேண்டும். இவ்வாறான பல யோசனைகள் எம்மிடமுள்ளன. ஆனால், தற்போதைய சூழலைப் பார்க்கும்போது புதிய அரசியலமைப்பொன்று ஸ்தாபிக்கப்படுமா என்பதே உறுதியில்லாமல் இருக்கிறது.
ஏனெனில், சுதந்திரக் கட்சியினரோ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு எதிர்ப்பினையை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோல பல கட்சியினர் ஒவ்வொரு காரணங்களை முன்னிறுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆகவே, அரசியலமைப்பொன்றோ அல்லது அரசியலமைப்புக்கான வரைபோ இறுதிசெய்யும்வரை எதனையும் உறுதியாகக் கூறமுடியாத நிலைமையே தற்போது காணப்படுகிறது.
 
கேள்வி :  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க முடியாது என்று சுதந்திரக் கட்சியினர் தெரிவிக்கும் கருத்தை சமகால சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது, உங்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றதா?
 
பதில் :  இல்லவே இல்லை. ஜனாதிபதித் தேர்தலின்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்போம் என்று உறுதியளித்துத் தானே மக்களிடமிருந்து இவர்கள் வாக்குகளைப் பெற்றார்கள். 
ஆனால், தற்போதோ தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இம்முறைமையை நீக்க முடியாதெனக் கூறுகிறார்கள். இதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? தமது பலத்தை தக்கவைத்துக் கொள்ளவும் அடுத்தமுறை தமக்கு பலம் வேண்டும் என்பதற்காகவும் ஒரு கேம் (விளையாட்டு) தான் தற்போது இவர்களால் ஆடப்படுகிறது.
 
கேள்வி :  2018 ஆம் ஆண்டுக் கான வரவு செலவுத் திட்டம் திருப்திகரமானதாக உள்ளதா?
 
பதில் :  (சிரிக்கிறார்.) அழகான வார்த்தைகள் அடங்கிய ஒரு அறிக்கையாகவே நாம் இதனை பார்க்கிறோம். இதில், அடுத்தாண்டில் 2 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ள அதேநேரம், 4 ஆயிரம் கோடிக்கு செலவுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அப்படியாயின், இதனை ஈடு செய்வதற்காக மீண்டும் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும்வகையில் கடனைத் தான் பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும், பொருட்களின் விலை அதிகரிப்பு, புதிய வரிகள் இணைப்புக்கு அப்பால் தற்போது காபன் வரி வேறு அறவிடப்படவுள்ளது. நாட்டில் வருமானத்தைப் பெற்றுக்கொள்ளவே வழி வகுக்காத இந்நிலையில்தான், அரசு இத்தனை வரிவிதிப்புக்களை அறவிடவுள்ளது. அதிலும், மத்திய தர வர்க்கத்தினரை தாக்கும் வரி விதிப்புக்களை அதிகரித்துவிட்டு, 
செல்வந்தர்களுக்கான வரி விதிப்புக்கள் குறைக்கப்பட்டும் உள்ளன.
இவ்வாறு அரசு, சர்வதேசத் திடமிருந்து கடனைப் பெற்றுக்கொள்ள மட்டும் முனைப்புக்காட்டி வருவதானது. நாட்டின் எதிர்காலத்துக்கு நிச்சயமாக ஆரோக்கியமாக இருக்காது என்பதோடு, மக்களும் ஒருபோதும் கரைசேர மாட்டார்கள் என்பதால் நாம் இந்த வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவே மாட்டோம்.
 
கேள்வி :  நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியானது தொடர்ச்சியாக ஜே.வி.பி. மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டு வருகின்றதே. குறிப்பாக, எதிர்க்கட்சியில் இருந்துக்கொண்டு உங்கள் கட்சி தமது வகிபாகத்தை மீறியுள்ளது என்று அவர்கள் கூறுகிறார்களே. இதுகுறித்து...
 
பதில் : அவர்கள் குறித்து கருத்து வெளியிடுவதே நேரத்தை வீணாக்கும் ஒரு செயற்பாடு என்றே நான் கருதுகிறேன். அவர்கள் தற்போது அரசியல் அநாதைகளாகிவிட்டார்கள். அவர்களின் கருத்துக்கள் எதுவுமே எடுபடாமல் போன காரணத்தினால்தான் போலி தேசியவாதிகளாக மாறி, இனவாதத்தை  பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில், விமல் வீரவன்ஸவை நினைக்கும்போது பரிதாபமாகத்தான் உள்ளது. அரசியல் மயானத்தை நோக்கியே அவர் தற்போது நகர்ந்துகொண்டிருக்கிறார். இதிலிருந்து விடுபடவும் தமது கடந்த காலத்தவறுகளை மூடிமறைக்கவும் என்ன செய்வதென்றே தெரியாமல், குழம்பிக்கொண்டிருக்கிறார். இதன் பலனாக தற்போது அந்தக் கட்சியும் பிளவடைந்துவிட்டது. பாவம் அவர்கள்.(சிரிக்கிறார்)
 
கேள்வி :  சரி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
 
பதில் : போரின்போது தமது உறவினர்களோ அல்லது நண்பர்களோ இறந்திருந்தால் அவர்களை நிச்சயமாக நினைவுகூர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இது அவர்களின் அடிப்படை உரிமையும் கூட. இதனை தடை செய்ய வேண்டும் என எம்மால் கூறமுடியாது.
ஆனால், தற்போது அமைதியாக போய்க்கொண்டிருக்கும் நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்தை தூண்டும்வகையில், புலிகளை நினைவுக்கூருவதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்தம் முடிவுற்றுள்ள இத்தருணத்தில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவது தொடர்பிலேயே சிந்தித்து செயற்பட வேண்டும். அதைவிடுத்து புலிகளை நினைவு கூருவதானது நிச்சயமாக நல்லிணக்கத்துக்கு பாதிப்பாகவே அமையும். இதனை நாம் அனுமதிக்கமாட்டோம்.
 
கேள்வி : இதன்போது, பிரபாகரனின் புகைப்படத்துடன் அஞ்சலி செலுத்தியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்த்தன தெரிவித்துள்ளாரே?
 
பதில் : ஆம். ஆரதம்பத்தில் கூறியதுபோல அமைப்பெனும் ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருவதை நாமும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அது தேவையில்லாமல் நாட்டில் பிரிவினைவாதத்தைத் தூண்டுவதுடன், இனங்களுக்கிடையிலான நல்லுறவிலும் விரிசலை ஏற்படுத்தி மீண்டும் பழைய நிலைமைக்கு நாட்டை கொண்டுசென்றுவிடும். எனவே, இவற்றுக்கெதிராக உடனடியாக சட்டநடவடிக்கையொன்று எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.
 
அ.அருண்பிரசாந்த்

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top