சுயரூபத்தை காட்டுவேன்

சுயரூபத்தை காட்டுவேன்
'விரும்பியோ விரும்பாமலோ கடந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. ஆனால், இனிவரும் ஒப்பந்தங்கள் அவ்வாறு இருக்கப்போவதில்லை. இனித்தான் வடிவேல் சுரேஷின் சுயரூபம் தெரியவரும். கூட்டு ஒப்பந்தத்தில் மக்களை ஏமாற்ற முடியாது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பணத்தை அவர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும். இதற்காக பெருந்தோட்டங்களிலுள்ள அனைத்து தொழிலாளர்களிடமும் கருத்துக்கணிப்புகள் பெறப்படும். இனி வேதன உயர்வைத் தாண்டி அதிகமான விடயங்கள் பேசப்படும்.  குறிப்பாக, தொழிற்சாலைகள் மூடப்படுவதை நிறுத்தல். 
தோட்ட நிர்வாகப்பணிகளுக்காக பெருந்தோட்ட இளைஞர்களை மாத்திரம்தான் உள்வாங்கவேண்டும். குளவித் தாக்குதல், தேயிலைத் தோட்டங்கள் காடாக்கப்படுதல் இவ்வாறு பல பிரச்சினைகளையும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்வாங்க நடவடிக்கை எடுப்பேன்."
 
 இவ்வாறு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் ~சுடர் ஒளி|க்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் கூறினார்.
அந்த நேர்காணலின் முழு விபரங்கள் வருமாறு:
 
கேள்வி : நீங்கள் அரசியலில்  சாதித்தவை என எதனைக் குறிப்பிட்டுச்சொல்வீர்கள்? 
(வடிவேல் சுரேஷ் பெற்ற பிள்ளைக்கு வேறு ஒருவர் பெயர் வைத்த கதை)
 
பதில்: 100 நாள் வேலைத்திட்டத்தில் மலையகத்தில் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுத்திருந்தேன். ஊவா மாகாணத்திலுள்ள படித்த இளைஞர்களுக்கு அவர்களின் தகுதியடிப்படையில் பல்வேறு தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறேன். பெருந்தோட்டப் பாடசாலைகளில் 140 மில்லியன் செலவில் நூலகம் மற்றும் விஞ்ஞான ஆய்வு கூடங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தேன். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, நான் பெற்ற பிள்ளைக்கு வேறு எவரோ பெயர் வைப்பது போல இந்தக் கட்டடங்களுக்கும் தற்போது வேறு எவரோ திறப்பு விழா செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஊவா மாகாணத்தில், மாட்டுத்தொழுவங்களாக இருந்த பெருந்தோட்டப் பாடசாலைகளை மாடிக்கட்டடங்களாக மாற்றியிருக்கிறேன்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 50 இலட்சம் ரூபா மாத்திரமே வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படுகின்றது. ஆனால், நான் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற இந்த இரண்டரை வருட காலப்பகுதியில் 228 கோடி ரூபாவுக்கு வேலை செய்திருக்கின்றேன்.
பதுளை ஹல்தமுல்ல பிரதேசத்திலிருந்து ரோபரி வரையில் பாதை சீரமைப்பில் நான்தான் நம்பர்வன் என்று மார்தட்டிக்கொள்ளமுடியும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் ஒரேநாளில் அடிப்படை சம்பளத்தை அதிகரித்திருக்கிறேன். அரிசிக்கு மானியங்கள் வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறேன். மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாடுகள் வித்தியாசமானவையாக இருக்கலாம். அவருடன் தேசிய அரசியல் செய்யவில்லை. ஆனால், அவரின் காலத்தில் அவருடன் நான் நெருங்கியிருந்ததால்தான் பதுளையிலுள்ள எத்தனையோ இளைஞர்கள் இன்று உயிரோடிருக்கிறார்கள்.
 
கேள்வி : உங்களது போராட் டங்கள் காலத்திற்கு காலம் வேறு பட்டிருக்கிறதே! கறுப்பு ஆடை போராட்டம் பற்றி சொல்லுங்களேன்?
 
பதில்: கடந்த 2005ஆம் ஆண்டு ஐயப்பன் சாமிக்கு மாலை போடுபவர்கள் கறுப்பு ஆடைகள் அணிந்திருப்பதனால் அவர்களை கரும்புலிகள் எனக் கூறி  மட்டக்களப்பு, பதுளை மற்றும் ஹட்டன் நகரங்களில் பல இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டார்கள்.
இது தொடர்பில் நான் பல்வேறு தரப்பினர்களுடன் பேச்சுகள் மேற்கொண்டிருந்தேன். அப்போது நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். அவருடன் நேரடியாக பேச்சு நடத்தி, கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டிருக்கிறார்கள். அவர்கள் மலைக்கு  சென்று வரும்வரையில் கறுப்பு ஆடைதான் அணிவார்கள் என எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவர்கள் எனது பேச்சை கேட்பதாக இல்லை. இறுதியாக நான் ஒரு முடிவுக்கு வந்தேன். 
அப்போதே அளுத்மாவத்தைக்குச்  சென்று ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொண்டு நாடாளுமன்றத்திற்கு வந்தபோது சபாநாயகராக இருந்த லொக்குபண்டார, 'நீ ஒரு பிரதி அமைச்சர். நாடாளுமன்றத்திற்குரிய உடைகளை அணிந்திருக்கவில்லை. பாதணி அணிந்திருக்கவில்லை உன்னை உள்ளே அனுமதிக்கமுடியாது"  என்று சொன்னார்.
அதற்கு, 'இது எனது மதம் சார்ந்த விடயம். 43 நாட்களுக்கு நான் இப்படித்தான் ஆடை அணிந்து வருவேன்" என்று கூறினேன். என்னால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. எனக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அப்போது அமைச்சுப் பதவிகளில் இருந்த ஆறுமுகன் தொண்டமான் கூட இது தொடர்பில் பலருக்குத் தெளிவுபடுத்தியிருந்தார்.
ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது, மறுபடியும் சபாநாயகர், 'வடிவேல் சுரேஷ் தெரியாமல் இவ்வாறு அணிந்துகொண்டு வந்துவிட்டார். நாளை ஆடையை மாற்றிக்கொண்டு வருவார்" என்று கூறினார்.
இதன்போது உடனே நான் எழுந்து,  'இது நீங்கள் இல்லை வேறு எவர்  சொன்னாலும் நான் கேட்கமாட்டேன். அப்படியே நான் எனது கறுப்பு ஆடைகளை மாற்றவேண்டுமென்றால், நாடாளுமன்றத்தில் உள்ள 11 பிக்குமார்களையும் வெளியில் சென்று டை, கோர்ட் அணிந்து வரச்சொல்லுங்கள். நானும் எனது உடையை இப்போதே மாற்றிக்கொண்டு வருகின்றேன்"  எனக் கூறினேன். பின்னர் எனது மத நம்பிக்கைகளை ஏற்றுக்கொண்டு அந்த உடையிலேயே இருக்க சம்மதித்திருந்தார்கள். அப்போது நான், 'ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டு கறுப்பு ஆடை அணிந்திருக்கும் வடிவேல் சுரேஷை ஒரு ஐயப்பன் சாமியாக ஏற்றுக்கொள்கிறீர்களா" என்று சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினேன். 
'ஆம். ஏற்றுக்கொள்கின்றேன்" என்றார். 'ஐயப்பன் சாமியாக என்னை ஏற்றுக்கொள்ளமுடியுமாயின், நீங்கள் பதுளை, மட்டக்களப்பு, ஹட்டனில் கைதுசெய்திருந்த இளைஞர்களையும் ஐயப்பன் சாமியாக ஏற்று விடுதலைசெய்யுங்கள்"  எனக் கூறியதற்கு அவர்களின் தவறை உணர்ந்து அடுத்த சில மணித்தியாலங்களில் கைதுசெய்யப்பட்டிருந்தவர்கள் விடுதலைசெய்யப்பட்டனர்.
 
கேள்வி: உதவி ஆசிரியர்கள் போராடத் தொடங்கியுள்ளார்களே?
(மரத்தால் விழுந்தவனை மாடு முட்டிய கதை)
 
பதில்: ஆசிரியர் தொழிலுக்கே அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் உதவி ஆசிரியர்களாக 3,000 பேருக்கு நியமனம் வழங்கி, அவர்களுக்கு வெறும் 6000 ரூபா  சம்பளமாக வழங்கப்பட்டது. எனது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொள்ளாமல் வழங்கப்பட்ட இந்த நியமனத்தால் எனது பிள்ளைகள் இன்று வீதிக்கு இறங்கிப் போராடி வருகின்றதை பார்க்கின்றபோது வேதனையளிக்கின்றது.
இந்த உதவி ஆசிரியர்களின் நியமனத்தை மாற்றியமைக்கக்கூடிய அதிகாரங்கள் எனக்கு இல்லாதபோதிலும், ஊவாவில் 547 பேருக்கு பதுளை, மொனராகலை பிரதேசங்களில் நியமனம் வழங்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பற்றாக்குறை நிலவிவருகின்ற காலத்தில் அவர்களின் பிள்ளைகளுக்கும் குறைந்த சம்பளத்தில் தொழில் வழங்கப்பட்டமை வஞ்சிக்கப்பட்ட செயலாகும். அப்போதைய ஊவா மாகாண  முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் தொடர் பேச்சுகளை நடத்தி அவர்களுக்கு மேலதிகமாக 10000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தேன்.
எனினும், 'வேலியே பயிரை மேய்ந்தது போல" ஊவா மாகாணத்தின் தமிழ்க் கல்வி அமைச்சராக வந்த ஒருவர், நான் போராடி எனது பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுத்த 10000 ரூபாவை அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தாக்கல்செய்து அதனை உடனடியாக தடுத்து நிறுத்தினார்.'மரத்தால் விழுந்தவனை மாடு முட்டியது போல" நாங்கள் வழங்கியிருந்த 10000 ரூபாவை நிறுத்தியது மாத்திரமல்லாது, 10 ஆயிரம் ரூபாவை திருப்பிப் பெற்றுக்கொள்ளவும் இந்தியாவிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட கறுப்புக் கண்ணாடிக்காரர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
உதவி ஆசிரியர் நியமனங்கள் தொழில் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாத்திரமே வழங்கப்பட்டது. அதுதான் இந்த பிரச்சினைகளுக்கு காரணம்.
 
கேள்வி : பிரதி சுகாதார அமைச் சராக நீங்கள் இருந்தபோது தோட்டப் புறங்களிலுள்ள வைத்தியசாலைகளை அரச வைத்தியசாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுத்திருந்தீர்கள். ஆனால், பின்னர் கைவிடப்பட்டுள்ளதே?
(மஹிந்த கொடுத்த ஐடியா)
 
பதில்: நிச்சயமாக அதனை ஏற்றுக்கொள்கின்றேன். 743 பெருந்தோட்டங்களில்  சுமார் 548 வைத்தியசாலைகளே இருக்கின்றன. அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திசாலைகள் நோயாளர்கள் தங்குமிட வசதிகளுடனேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், அவையெல்லாம் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால்,     சிறு சிறு நோய்களால் எமது மக்கள் உயிரிழந்த சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன.
நான் பிரதி சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் 2,250 மில்லியன் ரூபா செலவில் 51 தோட்ட வைத்தியசாலைகளை அரச வைத்தியசாலைகளாக உள்வாங்க நடவடிக்கை எடுத்திருந்தேன். இது வெறும் 5 சதவீதம் மாத்திரம் தான். மிகுதி 95 சதவீதம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
ஹந்தான, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, பதுளை, கண்டி, நுவரெலியா உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த வைத்தியசாலைகள் மலையக வரலாற்றில் இல்லாதவாறு அரச வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டன.
இந்த வைத்தியசாலைகளுக்கு வெளியிலிருந்து ஊழியர்களை எடுக்காமல் அதே பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களையே இதில் வேலைக்கமர்த்த நடவடிக்கை எடுத்திருந்தேன். 
குடும்பநல உத்தியோகத்தர்களை அந்த வைத்தியசாலைகளில் வேலைக்கு அமர்த்த திட்டமிட்டிருந்தபோது, விண்ணப்பம் அனுப்பியவர்களில் பெரும்பாலானவர்கள் விஞ்ஞானப் பாடங்களில் சித்தியடையாமல் இருப்பது தெரியவந்தது.
அப்போதைய ஜனாதிபதியின் கவனத்திற்கு இதனை கொண்டுசென்றபோது, 'கவலை வேண்டாம் சுரேஷ். நீங்கள் குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு விஞ்ஞானபாடம் கட்டாயமில்லை என அமைச்சரவையில் அனுமதியைப் பெற்றுக்கொண்டு வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடுங்கள்"  என்றார். அவர் வழங்கிய ஆலோசனையின்படி, அப்போதைய சுகாதார அமைச்சர் நிமல்  சிறிபால டி சில்வா இதனை எதிர்ப்பார் என தெரிந்துகொண்ட நான், அவர் வெளிநாடு செல்லும் வரை காத்திருந்தேன். 
காலம் வந்தது. அவர் ஜெனிவாவுக்குச் சென்றார். அந்த நேரத்தைப் பயன்படுத்தி பெருந்தோட்டப் பகுதிகளில் குடும்பநல உத்தியோகத்தர்களை உள்வாங்கும்போது  அவர்கள் விஞ்ஞான பாடத்தில் சித்தியடைந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என அமைச்சரவையில் அனுமதியைப் பெற்றுக்கொண்டுவிட்டேன்.
இவ்வளவு சிரமங்களுக்கும் மத்தியில் நான் முன்னெடுத்திருந்த பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என்பது கவலையளிக்கிறது. இது தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளேன்.  சுகாதார அமைச்சர்  ராஜித சேனாரத்னவுக்கு கவனத்திற்கொள்ள நிறைய விடயங்கள் இருப்பதால் இதனை மறந்துபோயிருக்கலாம்.
அவசர விபத்து சிகிச்சை பிரிவு 
(Accident Ward) ஒன்றை மலையகத்தில் நிர்மாணிக்கவேண்டும். நாம்தான் இரசாயனங்கள், கத்தி, மண்வெட்டி போன்ற ஆயுதங்களை தினமும் உபயோகித்து வேலை செய்கின்றNhம். ஆகவே, பெருந்தோட்ட மக்களுக்கு இது அவசியமான ஒன்று.
 
கேள்வி : தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது, கூட்டணியால் பதுளை மாவட்டம் புறக்கணிக்கப்படுகின்றதா?
(திகாவுடன் கூட்டு)
 
பதில்: நாங்கள் சகோதரர்களாகவே இருக்கின்றோம். தமிழ் முற்போக்குக் கூட்டணியில் நானோ எனது தொழிற் சங்கமோ இல்லை என்றபோதிலும், அவர்களுடன் ஒற்றுமையாக பயணிக்கிறேன். இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரமடைந்தது. ஆனால், மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்கிய பின்னர் பாதி சுதந்திரம் கிடைத்தது, காணி உரிமை கிடைக்கும்போது மீதி சுதந்திரம் கிடைக்கும். அந்தவகையில் காணி உரிமைக்காக நாங்கள் மேற்கொண்ட பேராட்டங்கள் வெற்றியளித்துள்ளன. அமைச்சர் திகாம்பரத்துடன் இணைந்து வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றேன். 158 வீடுகளைக்கொண்ட பாரிய வீடமைப்புத் திட்டமொன்று அம்பிட்டிகல மற்றும் பூனாகலையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற அதேவேளை, அடாவத்த, கோணக்கல, நிவ்யுபேர்க் பிளக்வுட், ஒஹ்யா ஆகிய பிரதே சங்கள் உள்ளிட்ட பல பிரதேசங்களில் வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் பல வீடமைப்புத் திட்டங்கள் மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் எங்களது ஒற்றுமைக்கு கிடைத்த அபிவிருத்திகளே.
 
கேள்வி : நுவரெலியா மாவட்டத்தின் பிரதேசசபைகள் அதிகரிப்பட்டுள்ளபோதிலும், பதுளை மாவட்டத்திற்கான கோரிக்கைள் எதனையும் காணமுடியவில்லையே?
(முட்டையிடாத சேவல் கத்தித்திரிந்த கதை)
 
பதில்: நுவரெலியாவில் பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டமை உண்மையில் எமக்குக் கிடைத்த மாபெரும் வரலாற்று வெற்றியே. இதனையே நானும் அமைதியான முறையில் தனிநபராக  போராடி பசறைத் தேர்தல் தொகுதியில் செய்து நிரூபித்துக் காட்டியிருக்கின்றேன்.
லுணுகலையில் பிரதேசசபையையும், பிரதேச செயலகத்தையும் உருவாக்கியிருக்கிறேன். 'ஆமை ஆயிரம் முட்டைகளை இட்டுவிட்டு அமைதியாக இருக்குமாம். ஆனால், கோழி ஒரே ஒரு முட்டையை போட்டுவிட்டு ஊரிலுள்ள கூரைகளில் எல்லாம் ஏறி நின்று கொக்கரிக்குமாம்." முட்டையிடாத சேவலும் இப்போது கத்தி திரிகின்றது. 
 
கேள்வி: கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில்  நீங்கள் ஒரு முக்கிய தொழிற்சங்கமாக இருக்கும் போது பெற்றோல் கேன் மிரட்டல் அவசியம்தானா? அதுவும் நாடாளுமன்றத்திற்குள்?
 ( ஆடுற மாட்டை ஆடி கறக்கனும் பாடுற மாட்டை பாடி கறக்கனும்)
 
பதில்: மக்கள் பிரச்சினைகளைக் குரல் கொடுக்கவே நாடாளுமன்றம். ஆனால், குரல் கொடுத்துப் பயனில்லை என்கிறபோது வேறு எங்கு பெற்றNhல் கேனுடன் செல்வது?
பெற்றோல் கேனுடன் நான் நாடாளுமன்றத்திற்கு சென்ற பின்னர்தான் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் முழு உலகுக்குமே தெரியவந்தது. விஸ்கி, பிராண்டி போத்தல்களுடன் மல்லியப்பு சந்தியில் உட்கார்ந்து போராடிய போராட்ட வடிவத்தைவிட, எனது போராட்ட வடிவு சிறந்ததே. செங்கோலை தூக்கிப் போராடுகிறார்கள். நாடாளுமன்றில் விடிய விடிய குடித்து கும்மாளம் அடித்து தூங்கிப் போராடுகிறார்கள். அடித்துக்கொண்டு சட்டையைக் கிழித்துக்கொள்கிறார்கள். அவர்கள் எல்லாம் நல்லவர்கள். எனது மக்களுக்காக பெற்றோல் கேனுடன்   சென்ற நான் மட்டும் கெட்டவனா. சிவனு லெட்சுமணன், துப்பாக்கியால்  சுடப்பட்டிருக்காவிட்டால், பத்தனை தோட்டம் இருந்திருக்காது. முல்லோயா கோவிந்தன், கந்தலோயாவில் பிறப்புறுப்பில் சுட்டு படுகொலைசெய்யப்பட்ட ஆராயி இவர்கள் எல்லாம் மலையக மண்ணுக்காகவே வாழ்ந்தவர்கள். இவர்களின் போராட்டங்களுக்குப் பின்னரே அந்தந்தப் பகுதி மக்களின் பிரச்சினை வெளியுலகுக்குத் தெரியவந்தது.  அதுபோலவே எனது பெற்றோல் கேன் போராட்டத்திற்கு பின்னரே எல்லாப் பத்திரிகைகளிலும் கூட்டு ஒப்பந்தம்தான் தலைப்புச்செய்தியானது. இந்திய பத்திரிகைகளில் கூட அந்தச் செய்திகளைக் காணமுடிந்தது.  தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூட எனது போராட்டத்திற்கு பின்னர் கறுப்புப் பட்டியுடன் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்து எமக்கு ஆதரவு வழங்கியிருந்தனர். ஆடுற மாட்டை ஆடி கறக்கனும் பாடுற மாட்டை பாடி கறக்கனும்.
 
கேள்வி: எதிர்வரும் கூட்டு ஒப்பந்தங்களை எவ்வாறு கையாளப் போகின்றீர்கள்? இனியாவது தொகையைப் பெற்றுக்கொடுப்பீர்களா?
(என் வழி தனி வழி)
 
பதில்: கடந்த கூட்டு ஒப்பந்தத்தின்போது  நடைபெற்ற 21 பேச்சுகளில் 19 பேச்சுகளை குறித்த தொழிற்சங்கமொன்று முதலாளிமார் சங்கத்துடன் நடத்தி முடித்திருந்தது. இறுதியாக நடைபெற்ற இரண்டு பேச்சுகளிலேயே எனக்கு கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. நான் கலந்துகொள்ளாத அனைத்து பேச்சுகளிலும் பெரும்பாலான முடிவுகள் எட்டப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. விரும்பியோ விரும்பாமலோ எனக்கு அதில் கைச்சாத்திடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால், இனிவரும் ஒப்பந்தங்களில் அதற்கான வாய்ப்புகள் ஏற்படாது. இனித்தான் வடிவேல் சுரேஷின் சுயரூபம் தெரியவரும். கூட்டு ஒப்பந்தத்தில் மக்களை ஏமாற்ற முடியாது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பணத்தை அவர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும். இதற்காக பெருந்தோட்டங்களிலுள்ள அனைத்து தொழிலாளர்களிடமும் கருத்துக்கணிப்புகள் பெறப்படும். இனி வேதன உயர்வைத் தாண்டி அதிகமான விடயங்கள் பேசப்படும். குறிப்பாக, தொழிற்சாலைகள் மூடப்படுவது. தோட்ட நிர்வாகப்பணிகளுக்காக பெருந்தோட்ட இளைஞர்களை மாத்திரம்தான் உள்வாங்க வேண்டும். குளவித் தாக்குதல், தேயிலைத் தோட்டங்கள் காடாக்கப்படுதல்  இவ்வாறு பல பிரச்சினைகளையும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்வாங்க நடவடிக்கை எடுப்பேன்.
எல்லாவற்றிலும் நாங்கள் மாற்றம் செய்வோம். கூட்டு ஒப்பந்தம் தமிழில் கைச்சாத்திடப்பட வேண்டும். அதனை வீடுவீடாகக் கொண்டுசேர்க்க நடவடிக்கை எடுப்பேன். அவரவர்  உரிமையை அவரவர் தெரிந்துகொள்ளட்டும். இனி சூட்கேஸ்களுக்கும் நட்சத்திர ஹோட்டல்களுக்கும் நாம் அனுமதியளிக்க மாட்டோம்.  
 
பா.நிரோஸ்

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top