மஹிந்த மீண்டும் அரியணை ஏறினால் நாடு துண்டாகும்

மஹிந்த மீண்டும் அரியணை ஏறினால் நாடு துண்டாகும்

"எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகளை மைத்திரி செய்ய முற்படுகிறார். அப்படியாயின், அவர் பக்கமுள்ள திருடர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? மறுபுறம் மஹிந்த மூன்றாவது முறையாகவும் தேர்தலில் தோல்வியடைந்து, தான் பெரும் இனவாதி என்பதை நிரூபித்துவிட்டார். மஹிந்தா, ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நாடு பிளவடையும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் திருகுதாளங்களை மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனர். இவ்வாறு பிரதான கட்சிகளாக காட்டிக்கொண்டவர்கள் அனைவருமே சந்தர்ப்பவாதிகள் என்பது மக்களுக்குத் தெரிந்துவிட்டது. எங்களை விமர்சிக்க எவருக்கும் தகுதியில்லை. எங்களை விமர்சித்து வாக்குவங்கிகளை நிரப்பிக்கொள்ளும் தேவை அவர்களுக்கே உள்ளது. மாற்றுக்கட்சிக்கான தேவையை மக்கள் உணர்ந்துள்ளனர். எங்களின் அரசியல் பயணத்தைப் புரிந்துகொள்ளும் காலம் கனிந்துவிட்டது'' என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தற்கால அரசியல் கள நிலைவரங்கள் தொடர்பில் "சுடர் ஒளி ”க்கு அளித்த விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


செவ்வியின் முழு விரம் வருமாறு:

கேள்வி: மக்கள் விடுதலை முன்னணியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் எவ்வாறு அமைந்திருக்கும்?

பதில்: தற்போது நாட்டில் ஆட்சிசெய்யும் இரு பிரதான கட்சிகள் மீதும் நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அவர்களுக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு அரசியல்வாதிகள் ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளனர். அதனால் தற்போது மக்கள் எதிர்பார்ப்பதுபோன்று மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்றி அரசியல் கலாசாரத்திலும் நாட்டு மக்களுக்கு புதுவித மாற்று முறைமையொன்றை செயற்படுத்தி காண்பிப்பதே மக்கள் விடுதலை முன்னணியின் அடுத்தகட்ட இலக்காக உள்ளது.
பிரதான கட்சிகள் இணைந்து செய்த ஆட்சி பயனற்றதாக போயுள்ளதால் இந்தக் கட்சிகள் இரண்டும் பிளவுபட்டு தனித்தனிக் கூட்டங்களாக பிரிந்துசெல்லவேண்டிய நிலை தோன்றியுள்ளது. இவர்களின் ஏமாற்றுச் செயற்பாடுகள் இனிவரும் காலங்களிலும் மக்களிடத்தில் எடுபடும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. எனவே, மக்கள் ஒரு தரமான மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்பதே எமது நிலைப்பாடு.

கேள்வி: போதிய ஆதரவு கிட்டுவதில்லையே?

பதில்: பிரதான கட்சிகளின் ஆட்சிமீது மக்களுக்குப் பெரும் அதிருப்தி உள்ளது. அவர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே, மக்கள் பக்கத்தில் பிரச்சினை இல்லை. அரசியல் கட்டமைப்பே பிழையாக உள்ளதால் அதனை திருத்தியமைக்கவேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்துகின்றோம். மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடிய மாற்றங்களை நாம் எதிர்பார்க்கின்றோம். அதனால் உடனடி மாற்றத்தை எதிர்பார்க்காமல் படிப்படியாக மக்களிடத்தில் இடம்பிடித்து மாற்று சிந்தனைகளுக்கு வழிவகுக்கவேண்டும் என்ற கொள்கையை வைத்தே நாங்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றோம்.

கேள்வி: உள்ளூராட்சி சபைத் தேர்தலை மீண்டும் காலந்தாழ்த்தும் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக தே.சு.மு. குற்றஞ்சாட்டியுள்ளதே?

பதில்: ஒருபோதும் அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள நாங்கள் இடமளிக்கப்
போவதில்லை. தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட சிறிய குழுக்களுக்கு போலிக் கருத்துகளை மக்களிடத்தில் பரவச்செய்யவேண்டிய அவசியம் உள்ளது.
அவ்வாறான போலிக் கருத்துகளைப் பரவச்செய்யாவிடின் அவர்களின் இருப்பு நீண்ட நாட்களுக்கு சாத்தியப்படாது என்பதுதான் உண்மை நிலைவரம். அதேநேரம், இவ்வாறு குற்றஞ்சாட்டுகின்ற தரப்புகள்தான் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு வழக்குத் தாக்கல்செய்து தேர்தலை பிற்போட முயற்சிசெய்கின்றன.

கேள்வி: உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கன்னிப்பயணத்தை ஆரம்பிக்கவுள்ள பொதுஜன பெரமுன, நாடு பிளவுபடுதலை தவிர்க்க வந்துள்ளதாகக் கூறுகின்றது. நாடு பிளவுபடும் அறிகுறி தற்போதும் உள்ளதா?

பதில்: இதில் அவதானிக்கவேண்டிய முதல் விடயம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் பிரதமராக முடியும் என்று சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருக்கின்றனர். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்று மஹிந்தவால் பிரதமராக முடியாது. எனவே, அவர்களின் முதல் வாக்குறுதியே போலியானது.
அவ்வாறானவர்கள்தான் நாடு பிளவுபடுதலை தவிர்க்கப்போகின்றோம் என்கிறார்கள். குறிப்பாக, அக்கட்சியின் முதல் கூட்டத்திலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழீழம் உருவாகப்போகின்றது என்றார்.
எமது நாடு பல மதங்கள், இனங்கள் வாழும் நாடு என்கின்ற வகையில் நாம் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். இன்று பிளவுபடும் உலக நாடுகள் அனைத்தும் இன, மத வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தியே பிளவுபடுகின்றன.
இவ்வாறிருக்கின்றபோது, இலங்கையின் இனவாதத்தைத் தூண்டி பிளவுபடுத்துவதா அல்லது ஒன்றுபடுத்துவதா என்பதை ஆட்சியாளர்களே தீர்மானிக்கவேண்டும். மஹிந்த அணி முழுமையாக இனவாதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பாகவே உள்ளது.
10 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்த ஒருவர் சிறுபான்மை வாக்குகள் கிடைக்காமல் தோல்வியடைந்தபோதே அவர் இனவாதி என்பது வெளிப்படையாகிவிட்டது. மஹிந்த ஆட்சியில் சிங்கள இனவாதம் தூண்டப்பட்டதால் மறுமுனையில் தமிழ் இனவாதம் தலையெடுத்தது. எனவே, ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு பிளவுபடும் என்பதுதான் உண்மை.

கேள்வி: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்றாம்கட்ட வாள்வீச்சை ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறுகிறார். அது குறித்த ஜே.வி.பியின் நிலைப்பாடு எவ்வாறாக உள்ளது?

பதில்: (சிரிப்புடன்) பிரதான கட்சிகள் இரண்டுமே மூன்று வருடங்களாக இணைந்து செய்த ஆட்சியிலுள்ள தவறுகளை ஐக்கிய தேசியக் கட்சியின் மீது மாத்திரம் சுமத்திவிட்டு எதிர்க்கட்சியின் செயற்பாட்டை முன்னெடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அத்துடன், விவசாய அமைச்சு சு.க. உறுப்பினரிடம் இருக்கின்றபோது பிரதி அமைச்சு ஐ.தே.க. உறுப்பினரிடத்திலேயே உள்ளது. எனவே, இவர்கள் அனைவரும் ஓர் அணி என்பதால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அணியை எதிர்க்கட்சியாக அடையாளப்படுத்திக்கொள்ள இடமளிக்க முடியாது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் தஞ்சமடைந்துள்ள திருடர்கள்போல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்திலும் திருடர்கள் உள்ளனர். எனவே, திருட்டுச் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட துணைபோயுள்ளார்.அவ்வாறிருக்கின்றபோது, அவரின் வாள்வீச்சு விளையாட்டுகளை நம்பி நாட்டு மக்கள் ஏமாற்றமடைந்துவிடக்கூடாது.

கேள்வி: தேசிய அரசாங்கத்தால் நாட்டுக்கு எந்தவித பலனுமே கிடைக்கவில்லை என்ற நிலைப்பாட்டிலா ஜே.வி.பி. உள்ளது?

பதில்: அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கமைவாக பிரதி அமைச்சர்கள் தொகை 30 ஆகவும் இராஜாங்க அமைச்சர்கள் தொகை 40 ஆகவுமே உள்ளது. ஆனால், ஐ.தே.க. மற்றும் சு.க. உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கி முதல்கட்ட செயற்பாடாக அமைச்சுப் பதவிகளில் அதிகரிப்புச் செய்தமை வேடிக்கையானதாகும். மேலும், இதனால் நாட்டின் அபிவிருத்தியை இலக்காகக்கொண்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்படவில்லை என்பதும் அதிகாரப் பேராசைக்காகவே தேசிய அரசாங்கம் என்ற ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பதையும் விளங்கிக்கொள்ள முடியும்.

கேள்வி: 2020ஆம் ஆண்டு தேர்தலில் நீங்கள் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப் போவதாகக் கூறப்படுகின்றதே...

பதில்: 2020ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலொன்றை நடத்துவதற்கு தற்போதைய அரசாங்கத்துக்கு அதிகாரமில்லை. எவ்வாறாயினும் எமது நோக்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கவேண்டும் என்பதாகும். இவ்வாறான நிலைப்பாட்டில் இருந்துகொண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவாகப்போகும் தேர்தல் முறையில் போட்டியிடுவது பொருத்தமற்றது.

கேள்வி: மக்கள் விடுதலை முன்னணி வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் தேர்தல் காலங்களில் கால்பதிப்பதில்லையே?

பதில்: மக்கள் விடுதலை முன்னணி தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த எண்ணக்கரு தவறானதாக இருந்த காரணத்தால், மேற்படி சமூகங்களுடன் நீண்டகால அரசியல் பயணத்தை எங்களால் முன்னெடுக்க முடியாமல் போனது. இருப்பினும், தற்போது தமிழ், முஸ்லிம் மக்கள் இருக்கின்ற சில பகுதிகளில் போட்டியிடுகின்ற எமது வேட்பாளர்களுக்கு வெற்றிவாய்ப்பை அந்த மக்கள் பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கேள்வி: வடக்கு, கிழக்கு இணைப்புக்கு மக்கள் விடுதலை முன்னணி இன்றளவிலும் பெரும் எதிர்ப்பாக உள்ளது. இவ்வாறிருக்க, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிட்டுமா?

பதில்: பூகோள அடிப்படையில் வடக்கு, கிழக்கு இணைவுக்கான அவசியங்கள் தற்போது இல்லை என்பது எமது நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்துகளை கூறவும் முடியாது.

கேள்வி: மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திற்கு பக்கச்சார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளனவே?

பதில்: மஹிந்தவின் செல்லப்பிராணிகளாக இருக்கின்றவர்களுக்கு மக்கள் விடுதலை முன்னணியை பார்க்கின்றபோது அவ்வாறுதான் தெரியும். அவர்களை நியாயப்படுத்திக்கொள்ள மக்கள் விடுதலை முன்னணியை கைநீட்டுகின்றார்கள். எம்மை குற்றஞ்சாட்டுகின்றவர்கள் அவர்களின் கட்சியை ஒற்றுமைப்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றார்கள் என்பதே உண்மை.

கேள்வி: பிரதான அரசியல் கட்சிகளிடத்தில் மோதல் நிலைமை வலுப்பெற்றுள்ள நிலையில், மக்கள் ஜே.வி.பியை 3ஆம் தரப்பு கட்சியென ஏற்றுகொள்வார்களா?

பதில்: இன்றளவில் எமக்கு மிகப்பெரிய அரசியல் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும். காரணம், நாட்டு மக்கள் 3ஆவது பெரும் அரசியல் தரப்பாக மக்கள் விடுதலை முன்னணியை ஏற்றுக்கொள்ளும் நிலைமை தோன்றியுள்ளது. புத்திஜீவிகள் உட்பட மூவின மக்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்றக்கூடிய தரப்பாக தற்போதும் மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே உள்ளது.

கேள்வி: வடக்கு, கிழக்கில் முதன்முறையாக போட்டியிடுகின்ற ஜே.வி.பிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும் சவால் விடுக்கமுடியும் என்று கருதுகின்றீர்களா?

பதில்: இல்லை. அவ்வாறான எண்ணமில்லை. தமிழ்க் கூட்டமைப்புடன் போட்டியிட்டு அவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கமுடியும் என்று கருதவில்லை. காரணம், வடக்கு மக்களின் முதன்மையான தெரிவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
எனவே, வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தெற்கிலுள்ள ஓர் அரசியல் கட்சியைத் தெரிவுசெய்ய விரும்புவார்களாயின் அந்தத் தெரிவாக மக்கள் விடுதலை முன்னணி இருக்கவேண்டும் என்று கோருகின்றோம்.

கேள்வி: நீங்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோது சொகுசு ஆசனத்தை ஒதுக்கீடுசெய்து பயணித்த விடயம் குறித்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றதே?

பதில்: இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வேடிக்கையானவை. மஹிந்த, மைத்திரி, ரணில் உள்ளிட் டோர் மக்கள் பணத்தை சூறையாடியது குறித்து கூறுவதற்கு எங்களுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்நிலையில், ஓர் அரசியல் கட்சியின் தலைவனான நான் விமானத்தில் சொகுசு ஆசனத்தில் பயணிப்பதை குறை கூறுவார்களாயின் நாங்கள் தூய்மையானவர்கள் என்பதையே வெளிப்படுத்துகின்றார்கள். எமக்கு வருகின்ற வெளிநாட்டு அழைப்பிதழ்களின்போது விமானங்களில் சொகுசு ஆசனங்களை ஒதுக்கீடுசெய்து தருகின்றமையும் சொகுசு ஹோட்டல்களில் தங்குவதற்கான வசதிகளைப் பெற்றுத்தருகின்றமையும் இது முதன்முறையல்ல. எவ்வாறாயினும், இவற்றை நாங்கள் நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துச் செய்யவில்லை என்ற மன நிறைவு எங்களுக்கு உள்ளது.

க.கமல்

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top