மக்கள் எம்மோடு உள்ளனர்

மக்கள் எம்மோடு உள்ளனர்

கேள்வி: வடக்கின் தேர்தல் நிலைமைகள் எவ்வாறு காணப்படுகின்றன?

பதல்: வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இருந்த ஆதரவு அமோகமாக இருப்பதை பிரசாரக் கூட்டங்களின்போது அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. அது தேர்தல் பெறுபேறுகளில் தெரியவரும்.

கேள்வி: வடக்கில் ஒரு புதிய கூட்டணி உருவாகியுள்ளது, ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி மாத்திரமன்றி, சுயேச்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன. இது கூட்டமைப்பிற்கு சவாலாக அமையுமா?

பதல்: ஒவ்வொரு முறையும் பல்வேறு வியூகங்களை அமைத்து கூட்டணிகளை அமைப்பது வழமை, எனினும், எவ்வாறான கூட்டணிகள் உருவானாலும் வீட்டு சின்னத்திற்கு மக்கள் வாக்களிப்பது உறுதி.

கேள்வி: வரவு, செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 கோடி ரூபா பணம் பெற்றுக்கொண்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாரே?

பதல்: அது ஒரு பொய்யான குற்றச் சாட்டு, அது நகைப்பிற்குரிய விடயம். தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வருவதால், மானநஷ்ட வழக்கு பதிவு செய்வதற்கு முன்பதாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கேள்வி: அப்படியெனின் என்ன நடந்தது? அதன் உண்மைத் தன்மை என்ன?

பதல்: வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான ஒதுக்கீடுகள் போதாது என்பதை நாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றோம். பிரத்தியேக நிதி ஒதுக்கீட்டை கோரியிருக்கின்றோம். 2017ஆம் ஆண்டு வழமையான ஒதுக்கீடுகள் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் நடந்த பிறகு. செப்டெம்பர் மாதமளவில். உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசாங்கத்திற்கு நிதிகள் கிடைக்கப்பெற்றதும் அதனை ஒதுக்கீடு செய்வது வழமை, செப்டெம்பரில் இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பில் வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்களுக்கு சுற்றுநிருபங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் ஆலோசனைகள் பெறப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. யோசனைகளை சமர்ப்பித்திருந்தோம். ஆகவே, அந்த நிதி எமது கைகளுக்கு வரவுமில்லை அப்படி அதனை செலவு செய்யவும் முடியாது. நாங்கள் நிதியை எவ்வாறு செலவிடலாம் என்பது தொடர்பில் சிபாரிசினை முன்வைத்திருந்தோம். இது நடைபெற்றது செப்டெம்பரில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் அனைத்து வரவு செலவுத் திட்டத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களித்தது. அதற்கு காரணம் பணம் வழங்கியமை அல்ல. இரண்டு கட்சிகள் இணைந்திருக்கின்ற அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது என்பதை வெளிக்காட்டுவதற்காகவே அன்றி, பணத்திற்காக அல்ல. புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். ஆகவே, யாப்பு உருவாக்கப் பணிகள் என்பது செய்ய முடியாத ஒரு காரியமல்ல, செய்யக்கூடிய ஒரு விடயமே என்பதை வெளிக்காட்டுவதற்காகவே நாம் வாக்களித்தோம். இதற்கு முந்தைய வரவு செலவுத்திட்டத்திலும் அவ்வாறுதான் சிவசக்தி ஆனந்தனும் இதில் வாக்களித்திருந்தார். 2010ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கும் நாம் வாக்களித்திருந்தோம். 2010ஆம் ஆண்டு தாம் பட்ஜட்டுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என கடந்த வியாழக்கிழமை (01.02.2018) சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருக்கின்றார். அவருக்கு மறதி அதிகம். ஆகவே, நிதியை பெற்றுக்கொண்டு எவரும் வாக்களிக்கவில்லை. கூட்டமைப்பின் தலைமையின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகின்றோம்.

கேள்வி:தேர்தல் பிரசாரக் கூட்டங்களின்போது விசேட அதிரடிப்படையினர் பொது மக்களை சோதனைக்குட்படுத்தும் விடயமானது, தமிழ் மக்களிடையே ஒருவித அதிருப்தியை தோற்றுவித்துள்ளது, வாக்களித்த தமிழ் மக்கள் மீதே பிரதிநிதிகளுக்கு நம்பிக்கையில்லையா?

பதல்: மக்கள் எம்முடன் இருக்கின்றார்கள் என்பது தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும். ஆனால், குழப்பம் விளைவிப்பதற்கு பாரிய மக்கள்கூட்டம் அவசியமில்லை. ஒரு தனிநபரே போதும். கூட்டத்தில் யாரும் குழப்பத்தை ஏற்படுத்தலாம். அப்படியான தகவல்கள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள். இதில் எமது தலையீடு எதுவும் இல்லை. அவர்கள் தமது கடமையை செய்கிறார்கள். நாங்கள் தடுத்து ஏதாவது விபரீதங்கள் நடந்தால் அது அவர்களுக்கு சான்றாக போய்விடும். மேலும், எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமென பொலிஸ் அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். அதன் ஒரு பகுதியாகவே புதுக்குடியிருப்பில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போதைய பிரதமர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சந்தர்ப்பத்தில் பொதுக் கூட்டங்களின்போது பொதுமக்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். அதற்காக அவருக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடு வருமெனக்கூற முடியாது. ஜனாதிபதிக்கும் இதே நிலைமைதான்.

கேள்வி: தமிழ்க் கூட்டமைப்பின் உள்ளூராட்சித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டிலிருந்து பெருமளவு நிதி கிடைத்துள்ளதாக ஒரு தகவல். உங்கள் கனடா விஜயத்தைக்கூட அதனுடன் தொடர்புபடுத்தி கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன. அதன் உண்மைத் தன்மை தொடர்பில் உங்கள் கருத்து...

பதல்: நான் கனடாவிற்குச் சென்றதே அதற்காகத்தான். தேர்தல் பிரசாரங்களுக்கு நிதி தேவைப்பட்டது. கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளை ஒன்று காணப்படுகின்றது. நான் அங்கு சென்று நிகழ்வுகளில் பங்கேற்று நிதி பெற்றுக்கொண்டமை உண்மையே. இதில் இரகசியம் ஒன்றுமில்லை. தேர்தல் காலங்களில் எமது கட்சியின் மூன்று வெளிநாட்டுக் கிளைகளும் உதவுவது வழமை. ஆகவே, கனேடியக் கிளை உதவி செய்தது உண்மையே. வட மாகாண சபைத் தேர்தலின்போது நானும் சம்பந்தன் ஐயாவும் கனடா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு சென்று 10 மில்லியனுக்கும் அதிகமாக நிதியை சேகரித்து வந்தோம். அந்த நிதியைக் கொண்டே சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சரானார். பின்னர் பாராளுமன்றத் தேர்தலின்போது விக்னேஸ்வரனைச் சென்று நிதி சேகரிக்கச் சொன்னபோது பாராளுமன்றத் தேர்தலுக்கு நான் ஏன் செல்லவேண்டுமென கேள்வி கேட்டார். எவ்வளவு நிதி அவரது கையில் கொடுக்கப்பட்டதென்று அவருக்குத் தெரியும்.

கேள்வி: இரண்டு பிரதான கட்சிகளுக்குள்ளும் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் அரசியல் யாப்பு உருவாக்கப் பணிகளில் பாதிப்பினை ஏற்படுத்தாதா?

பதல்: தேர்தல் முடிந்தவுடன் முரண்பாடுகளும் இல்லாமல் போய்விடும்.

கேள்வி: இந்த தேர்தலில், வடபகுதி, தென்பகுதியின் நிலைவரம் தொடர்பிலும் அரசியல் ஞானம் உள்ளவர் என்ற வகையிலும் உங்கள் பார்வை என்ன?

பதல்: இதுவொரு உள்ளூராட்சித் தேர்தல். முன்னைய காலங்களில் இந்தத் தேர்தலில், அரசியல் கட்சிகள்கூட போட்டியிடுவதில்லை. நாடளாவிய ரீதியில் நடைபெறுவதால் இதனை முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இதனைப் பார்க்கின்றார்கள். தெற்கில் நாட்டின் தலைவர் யார் என்ற விடயத்தை தீர்மானிக்கின்ற தேர்தலாக இது அமைந்துள்ளது. மும்முனைப் போட்டியொன்று காணப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ அணியும் தனியாக களமிறங்குகிறது. ஆகவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான தலைவர் யார் என்பதை தீர்மானிக்கின்ற ஒரு தேர்தலாகவே இது பார்க்கப்படுகின்றது. வடக்கு கிழக்கில் உள்ள சில கட்சிகள் அரசியல் அமைப்பு இடைக்கால அறிக்கையை நிராகரிக்கின்ற சர்வஜன வாக்கெடுப்பாக அதனை பயன்படுத்துமாறு கேட்டிருக்கின்றன. இடைக்கால அறிக்கையை ஏற்பதோ, அல்லது கைவிடுவதோ ஒரு விடயமே அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை இடைக்கால அறிக்கையின் பின்னிணைப்பாகவும் சமர்ப்பித்துள்ளோம். வரைபு வரவில்லை, தமிழ் மக்களுக்கு சாதகமான விடயங்களை நாம் முன்வைத்துள்ளோம். அதனை நாங்கள் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றோம்.

கேள்வி: தேர்தல் நடவடிக்கைகளில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஒத்துழைப்பு எவ்வாறு அமைந்திருக்கின்றது? பிரசார நடவடிக்கைகளில் அவரையும் இணைத்திருக்கலாமே?

பதல்: வட மாகாண முதலமைச்சர் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. அது மாத்திரமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும், அல்லது கூட்டமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அவதானிக்க முடிகிறது. பாராளுமன்றத் தேர்தலிலும் அவர் அதனையே செய்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சராக இருந்துகொண்டு, அவர் வெளியிடும் கருத்துக்களை ஜனநாயக மரபு தெரிந்த எமது மக்கள் நிராகரிப்பார்கள் என நம்புகின்றோம்.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, தமிழரசுக் கட்சியின் பேச்சுக்கிணங்க செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனவே, குறிப்பாக, இந்தக் குற்றச்சாட்டை சுரேஷ் பிரேமச்சந்திரன் முன்வைத்திருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனும் அதனை ஏற்றுக்கொள்வதுபோல் கருத்து வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் உங்கள் பதில்..

பதல்: கூட்டமைப்பின் தலையாய கட்சி தமிழரசுக் கட்சியே. அதில் மாற்றுக்கருத்தில்லை. தமிழரசுக் கட்சியின் உறுப்பினரே தமிழ்க் கூட்டமைப்பின் தலைமையாக இருக்கின்றார். அவருக்கென சில உரிமைகள் இருக்கின்றன. சில முடிவுகளை கலந்தாலோசித்து எடுப்பார், சில முடிவுகளை எடுத்துவிட்டுத்தான் அறிவிப்பார். இப்படியான சூழ்நிலைகளும் இருக்கின்றன. எனினும் தலைமையின் தலையீடின்றி எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படுவதில்லை. சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், நான் உட்பட அனைவருமே எந்தவொரு விடயம் தொடர்பிலும் ஐயாவுடன் (இரா.சம்பந்தன்) பேசிவிட்டுத்தான் செயற்படுவோம். பொதுவாக வெளிநாட்டு விவகாரங்கள் என்னுடைய பொறுப்பில் விடப்பட்டுள்ளன. ஆகவே நானும் ஐயாவும் தீர்மானிப்பதாக கூறக்கூடாது. தமிழரசுக் கட்சியின் தலைவர் சேனாதிராஜாவுடனும் தலைவர் கலந்துரையாடுவார். எனக்குத் தெரிந்த வகையில் அனைத்து விடயங்களும் 16 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்படுகின்றன என்பதே உண்மை.

கேள்வி: பிணை முறி விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

பதல்: பாரிய ஊழல் ஒன்று இடம்பெற்றுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அது மாத்திரமன்றி, இதுபோலவே மோசடிகள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளன. எனினும், அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு இந்த ஆணைக்குழுவிற்கு அதிகாரமில்லையென தெரியவருகின்றது. ஆகவே, அது தொடர்பிலும் விசாரணை செய்யப்பட வேண்டும், அதனைவிட 34 நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் மற்றுமொரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கேள்வி:பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் (06.02.2018) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து எவ்வாறான கருத்தை எதிர்ப்பார்க்கலாம்?

பதல்: அதில் நாம் பங்கேற்கப்போவதுமில்லை. கட்சித் தலைவர் கூட்டத்தின்போது இது தொடர்பில் நாம் தெளிவுபடுத்தியிருக்கின்றோம். விவாதத்திற்கான திகதி உடனடியாக நிர்ணயிக்கப்பட வேண்டும். எனினும்,அந்த திகதி தேர்தலுக்கு முன்னரான ஒரு நாளாக இருக்குமாக இருந்தால் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்பதில் சிக்கல் இருக்குமென்பதையும் தெளிவுபடுத்தினோம். காரணம் தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வடக்கு கிழக்கில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் வந்து செல்வதில் பிரச்சினை இருக்கின்றது. ஆகவே, பங்கேற்கமுடியாது என்பதை கூறியிருப்பதோடு, அதற்காக விவாதத்தை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

ச.பார்தீபன்

 

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top