Items filtered by date: Monday, 11 December 2017

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், கங்கொடவில் நீதவான் நீதிமன்ற விசாரணை அறிக்கைகளை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி இன்று உத்தரவிட்டார்.

சட்டபூர்வமான வருமானத்துக்கு மேலதிகமாக 75 மில்லியன் ரூபாய் சொத்துக்ககள் சேர்த்துள்ளமை தொடர்பிலேயே விமல் எம்.பிக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் 2014ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதி வரையான ஆறு வருட காலப்பகுதிக்குள்ளே சொத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று விமல் எம்.பிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலஞ்சச் சட்டத்தின் 23 அ (1) பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் 32 சாட்சியாளர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், 40 வழக்குப் பொருட்கள் உள்ளன என்றும் குற்றப்பத்திரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி விக்கும் களுஆராச்சி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றமையால் அவ்வழக்கு தொடர்பான விவரங்களை அறிவதற்கு, அந்த நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட நீதவான் விசாரணை அறிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என, நீதிபதி அறிவித்தார்.

அதன் காரணமாக, அந்த அறிக்கைகளை ஜனவரி 11ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அந்த அறிக்கையின் பின்னரே பிரதிவாதிக்கு அழைப்பாணை பிறப்பிப்பது தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.

இதேவேளை, தேசிய வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சராக இருந்த போது, 2011 - 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில், தனது அமைச்சுக்குக் கீழிருந்த, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட 40 வாகனங்களை தமது அரசியல் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தி, 91 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்ததாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விமல் எம்.பிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

நாடாளுமன்றம் சட்டரீதியாகவே அரசமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ச சபாநாயகர் அண்மையில் கரு ஜயசூரியவிடயம் கையளித்திருந்த முறைப்பாடு கடிதத்திற்கு சபாநாயகர் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்றம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று கூடியபோது தினப்பணிகளை தொடர்ந்து அரசமைப்புச் சபை விவாதம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, “நாடாளுமன்றம் சட்டத்திற்கு முரணான வகையில் அரசமைப்பு சபையாக மாற்றப்பட்டதாக உரிய காரணங்களை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ உங்களிடம் கடிமொன்றை கையளித்திருந்தார். இதற்கு நீங்கள் பதிலை வழங்கவில்லை” என எழுப்பிய விசேடக் கேள்விக்கே சபாநாயகர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.

சபாநாயகர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் “நாடாளுமன்றம் சட்டரீதியாகவே அரசமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளதென விஜேதாஸ ராஜபக்ஷவின் கடிதத்திற்கு நான் பதிலளித்துள்ளேன். இந்த விடயம் தொடர்பில் நான் ஊடகங்களுக்கு அறிவிக்காத போதிலும் அவருக்கு உரிய பதிலை அளித்துள்ளேன்“ என்றார்.

Published in உள்நாடு

“நாட்டு மக்களின் அத்தியவசிய சேவையாக புகையிரத சேவை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத சேவையாளர்கள் தொழிலுக்குத் திரும்புவது கட்டாயமாகும். சேவைக்கு தொடர்ந்து திரும்பாது இருப்பார்களாயின் சேவையை அவர்கள் தொழிலை விட்டுச்சென்றவர்களாக அறிவிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்“ என பிரதி போக்குவரத்து அமைச்சர் அசோக அபேசிங் தெரிவித்தார்.

புகையிரத சேவை அத்தியவசிய சேவையாக மாற்றப்பட்டமை குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியிருந்தது. இது குறித்து இன்று பாராளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் “நாட்டு மக்களை திசைதிருப்பும் நோக்கில் புகையிரத சேவையாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு இராணுவத்தினரை பயன்படுத்துவதுடன், தொழிற்சங்கப் போராட்டங்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக அரசு முற்படுவதாக பொய் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு எவ்வித நடவடிக்கையையும் அரசு இதுவரை முன்னெடுக்கவில்லை.

புகையிரத சேவையாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் குதித்துள்ளனர். என்றாலும், அவர்களுடன் மூன்று சுற்றுப்பேச்சுகள் நடத்தப்பட்டு தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்காத வகையில் கோரிக்கைகளுக்கும் தீர்வுகாணப்பட்டது.

புகையிரத பரிசோதகர்கள் மற்றும் புகையிரத பயிற்சி ஓட்டுனர்கள் இணைத்துக்கொள்ளப்படும் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளுமாரே அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தீர்க்கமாக கலந்துரையாடப்பட வேண்டியது. தகுதி இல்லாத பயிற்சி ஓட்டுனர்களை இணைத்துக்கொள்ளுமாறு அவர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். பரீட்சை நடத்தி தேர்வுசெய்ய வேண்டாம் என்பதுடன், வெளியில் இருந்தும் ஆட்களை இணைத்துக்கொள்ள கூடாது. உள்ளே இருப்பவர்களையே இணைத்துக்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகளையே முன்வைக்கின்றனர்.

கடந்த 6ஆம் திகதி இரவு ஜனாதிபதியின் செயலாளருடன் பேச்சுகளை ஒழுங்குச் செய்துதாருங்கள் தொழிற்சங்கப் போராட்டத்திற்குச் செல்லாது இந்த விவகாரத்திற்கு தீர்வுகாணுவோமென புகையிரத ஓட்டுனர் சங்கத்தில் ஒருவர் தொழிங்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டு எனக்கு தனிப்பட்ட ரீதியில் பேசியிருந்தார். அதன்படி நான் ஜனாதிபதி செயலாளருடன் கலந்துரையாடி நடத்தி பேச்சுகளுக்கு ஒழுங்கமைத்துக்கொடுத்தேன். இரவு 11 மணி முதல் 3.30 மணிவரை ஜனாதிபதியின் செயலாளர் புகையிரத ஓட்டுனர் சங்கத்தின் தலைவர் மற்றும் எமது அமைச்சின் (போக்குவரத்து அமைச்சு) செயலாளர் ஆகியோர் பேச்சுகளை நடத்தினர்.

இதில் முதலாவதாக 23ஆம் திகதி நடைபெறவிருந்த ஓட்டுனர் பயிற்சி பரீட்சை பற்றி பேசப்படடது. இதனை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்றுக்கொண்டு பரீட்சையை ஒத்திவைக்க இணக்கம் காணப்பட்டது. சம்பளப் பிரச்சினை குறித்தும் சம்பள நிர்ணய சபையுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என்று பேச்சில் இணக்கம் காணப்பட்து. அதற்காக அமைச்சரவைப் பத்திரமொன்றையும் தயாரித்திருந்தோம். என்றாலும், சுகாதார அமைச்சு இந்த அமைச்சரவை பத்திரம் ஏனைய துறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், இரண்டு வாரங்கள் கடந்து அமைச்சரவையில் சமர்பபிக்குமாறு கோரிக்கைவிடுத்திருந்ததை அவர்களுக்கு விளங்கப்படுத்தினோம். அத்துடன், நிதி அமைச்சருடன் பேசி கடந்த வியாக்கிழமை ஒரு மணித்தியாலய கலந்துரையாடலுக்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

இவை அனைத்தும் செய்தும் அவர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதித்தமையாலேயே புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாகப் பிரகடனப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. எடுக்கப்பட வேண்டிய அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்திருந்தோம். இரண்டாயிரம் பேர்வரை வரையான தொழிலாளர்களுக்காக அரசு இந்நடிவடிக்கையை எடுத்திருந்தபோது 18,000 வரையான தொழிலாளர்களை இது பாதிக்கும் என்று தெரியும். ஆனால், இந்தப் பிரச்சினைக்கு முங்கொடுக்க மாற்று வழிகள் இல்லாமையாலேயே புகையிரத சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டது.

புகையிரத திணைக்களத்தின் ஊடாக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் காரணமாக இன்று மாலைக்குள் 50இற்கும் மேற்பட்ட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடும். நாயை பரீட்சை ஆரம்பமாகிறது. வர்த்தமானியின் மூலம் விடுமுறை இல்லாது போனமையால் சேவைக்கு வராதவர்கள் வேலையை விட்டுசென்றாக கடிதங்களை அனுப்ப வேண்டாமென அறிவித்துள்ளோம். என்றாலும், தொழிலுக்கு அவர்கள் வராது போனால் அதனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். நாட்டு மக்களு சேவை பெற்றுக்கொடுப்பதற்காக அதனை செய்ய வேண்டிவரும்.” என்றார்.

Published in உள்நாடு

தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த இருவரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துக்கொள்ளும் வகையிலேயே இந்த சந்திப்பினை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேயநாயக்க ஆகியோரே இவ்வாறு சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ளனர்.

Published in உள்நாடு

தலவாக்கலை நகரத்திற்கு பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த 14 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த இளைஞனை பிடித்த பிரதேச மக்கள், தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தலவாக்கலை கூம்மூட் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, சனிக்கிழமை நண்பகல் தலவாக்கலை நகருக்கு பிரத்தியேக வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.

சிறுமியை பின்தொடர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞன், கூம்மூட் தோட்ட வீதியில் வைத்து சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த முற்பட்டவேளை சிறுமி கூக்குரல் எழுப்பியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த இளைஞன் தப்பியோட முயற்சித்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த முச்சக்கரவண்டியின் சாரதி பிரதேச மக்களை அழைத்துள்ளார்.

அதனையடுத்து, தப்பியோட முயற்சித்த இளைஞனை தலவாக்கலை நகர சபைக்கு பின்னாலுள்ள வீதியோரத்தில் வைத்து பொதுமக்கள் மடக்கி பிடித்து தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இளைஞன் நுவரெலியா கந்தப்பளை பிரதேசத்தை சேர்ந்தவரெனவும் இவர் பல தடவைகள் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுப்பட்டு வந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனை கைது செய்த தலவாக்கலை பொலிஸார், நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Published in உள்நாடு

ஊவா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள இரண்டு மாநகர சபை, நகரசபை மற்றும் 15 பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பதுளை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் நிமால் அபயசிரியிடம் வேட்பு மனுக்கள் நேற்று சமர்ப்பிக்கப்பட்டன.

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

“இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அனைத்து பிரதேசங்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது சிறந்த வேற்பாளர்களை தெரிவுசெய்து தேர்தலில் போட்டியிடதயார்படுத்தியுள்ளது.” என, அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார்.

“அத்துடன், இத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசானது ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளதனால மென்மேலும் பலத்தை அதிகரித்துள்ளதுடன், அனைத்து பிரதேசங்களிலும் ஸ்ரீலங்கா சுகந்திர கட்சி வெற்றி பெறுவதற்கு இது வாய்ப்பாக அமைந்துள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

Published in உள்நாடு

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராஹில் காந்தி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உத்தியோபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 17 ஆண்டுகளாக அப்பதவியில் செயற்பட்டு வந்தார். சமீபகாலமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் துணைத் தலைவராக இருந்துவரும் ராஹுல் காந்தியை தலைவராக்க வேண்டுமென காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.

தலைவர் பதவிக்கு கடந்த முதலாம் திகதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ராஹுல் காந்தி கடந்த 4ஆம் திகதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். மொத்தம் தாக்கலான 89 வேட்புமனுக்களும் ராஹுலை தலைவர் பதவிக்கு அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் 16ஆம் திகதி தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ராஹுலைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது.

“காங்கிரஸ் தலைவராக ராஹுல் காந்தி தெரிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் 16ஆம் திகதி சோனியா காந்தியின் முன்னிலையில் ராஹுலிடம் வழங்கப்படும். அன்றைய தினமே அவர் தலைவர் பதவியை ஏற்கக்கூடும்.“ என காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் பொறுப்பாளர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவராக ராஹுல் காந்தி அறிவிக்கப்பட்டதை, டெல்லி உட்பட பல நகரங்களில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் திரண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ராஹுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0'. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

ஜனவரி வெளியீடாக இருந்த இப்படம் தற்போது ஏப்ரல் வெளியீடாக மாறியுள்ளது. இதற்கு படத்தின் கிராபிக்ஸ் தாமதம் தான் காரணம் என தகவல்கள் வெளியாகின.

உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து படக்குழுவினர் கூறியிருப்பதாவது,

அமெரிக்காவின் முன்னணி கிராபிக்ஸ் நிறுவனம் ஒன்றிற்கு '2.0' படத்தின் பிரதான காட்சிகள் கிராபிக்ஸை கொடுத்திருந்தோம். இதற்கான 90% பணமும் அளித்திருந்தோம். ஆனால், அவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடித்துக் கொடுக்கவில்லை. மேலும், அவர்கள் அளித்த பணிகளைப் பார்த்தபோது சுமார் 50% பணிகளைத்தான் முடித்திருந்தார்கள்.

தற்போது அவர்களுக்கு அளித்த காட்சிகளை, 100 ஷாட்களாகப் பிரித்து சுமார் 10 நிறுவனங்களுக்கு அளித்து மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதனால் மட்டுமே தாமதம். இரவு பகல் பாராது அனைவருமே ஏப்ரல் வெளியீட்டுக்கு உழைத்து வரும் சூழல் தற்போது ஏற்பட்டுவிட்டது.

தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பிலிருந்து, அமெரிக்க நிறுவனம் மீது வழக்கு தொடரவும் முடிவு செய்திருப்பதாகவும், பல்வேறு ஹாலிவுட் படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகள் செய்து, ஆஸ்கர் விருது வாங்கிய ஒரு நிறுவனம் இப்படி செய்யும் என நினைக்கவில்லை.

என தெரிவித்திருக்கிறார்கள்.

சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டு முதல் திரைப்படங்கள் திரையிடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு இன்றும் தடை விதிக்கப்பட்டே காணப்படுகின்றது.
குறிப்பாக திரைப்படங்களுக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை.

1980 களில் கலாச்சாரம் மற்றும் மத அடையாளங்களுக்கு திரைப்படங்கள் அச்சுறுத்தலாக இருப்பதாகக்கோரி சவுதி அரேபிய அரசாங்கம் திரைப்படங்களை தடைசெய்திருந்த நிலையில்,

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து திரைப்படங்கள் திரையிட அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு தகவல் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அவாத் பின் சலே அலாவாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

“திரைப்படங்களுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளோம். திரைப்படங்கள் திரையிட உரிமம் வழங்குவது குறித்து ஆடியோ வீடியோ ஊடக ஒழுங்குமுறை ஆணையம் பரிசீலனையை தொடங்கியுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட வாய்ப்புள்ளது” எனக் கூறியுள்ளார்.

 

படம் - ஏ.எப்.பீ மீடியா

நுவரெலியா மாவட்டம் வலப்பனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அருணோதயா இந்துக் கல்லூயிரின் (ரிலாமுல்ல தமிழ் மகா வித்தியாலயம் கல்லூரித் தின விழாவில் பெயர்மாற்றம் பெற்றது) “கல்லூரி தினம் 2016/17“ கல்லூரி அதிபர் கே.பாலகிருஷ்னன் தலைமையில் நடைபெற்றது.

மூன்று தசாப்தங்களாக ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ள இந்த பாடசாலையில் இவ்வாறான ஒரு நிகழ்வு நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.

பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தினர், வலயக் கல்வி பணிப்பாளர், வலய உதவிக் கல்வி பணிப்பாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பெற்றோர் என நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், பாடசாலையில் கற்று பாடசாலைக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்த பட்டதாரிகள், ஆசிரியர்கள், விளையாட்டு, ஊடகத்துறை மற்றும் பல்வேறு துறைகளிலும் சாதித்த சாதனையாளர்கள் சுமார் 150பேர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வின் விசேட அம்சமாக நு/வ ரிலாமுல்ல தமிழ் மகா வித்தியாலயமாக இருந்த பாடசாலை “நு/வ அருணோதயா இந்துக் கல்லூரி“ என பெயர் மாற்றம் பெற்றறமை குறிப்பிடத்தக்கது.

 

 

Published in உள்நாடு

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top