Items filtered by date: Friday, 01 December 2017

"வடக்கு - கிழக்கு இணைப்பு இல்லாத தீர்வு தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும். பௌத்த சிங்கள மக்களின் கையை ஓங்க வைக்கும். இதனால் தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையும் சீர்குலைந்து போகும். என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமக்குத் கிடைக்கும் கேள்விகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாராவாராம் பதில் தந்து வருகின்றார். இந்த வாரம் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கேள்வி:- வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை சிங்கள முஸ்லிம் தலைவர்களுக்கு எரிச்சலை மூட்டுவதாகக் கூறப்படுகிறதே. அதை விடுத்து இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெற முடியுமா?

பதில்:- நல்ல கேள்வி. முதலில் இனப்பிரச்சினை என்பது என்ன, அதற்கு எதற்காக ஒரு தீர்வைத் தேடுகின்றோம் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இனப்பிரச்சினை என்றால் என்ன? அது ஏன் ஏற்பட்டது? தமிழ் பேசும் மக்கள் நீர்கொழும்பில் இருந்து வடகிழக்கு ஊடாகக் கதிர்காமம் வரை தமது வாழ்க்கை முறையையும் மொழியையும் பாதுகாத்து வாழ்ந்து வந்தார்கள். அதே போன்று கண்டியச் சிங்களவர்களும் கீழ்நாட்டு சிங்களவரும் உருகுணைச் சிங்களவர்களும் தத்ததமது பிரதேசங்களில் வாழ்ந்து வந்தார்கள். வாணிபம், வணிகம் போன்றவை அவர்களை இணைத்தன்போது அல்லது யாராவது ஒரு அரசன் தன்னாட்சியை விரிவுபடுத்த எத்தனித்த போது போர்கள் வெடித்தன. பின்னர் அடங்கிப் போய்விட தமிழ் பேசும் பிரதேசங்களில் தமிழ் பேசுபவர்களே தொடர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இவர்களின் வாழ்க்கை முறை வெளிநாட்டுக்காரர்கள் உள்நுழைய மாற்ற மடைந்தது. முதலில் போர்த்துக்கேயர், அதன் பின் டச்சுக்காரர், கடைசியாக ஆங்கிலேயர் ஆகியோர் இங்கு வர மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டன. வேற்று மொழிகள் வேற்று மதங்கள் படிப்படியாக இங்கு வேரூன்றின. அவற்றின் ஆதிக்கத்தை அனுமதிக்க மறுத்த உள்ளூர் அரசர்கள் போரிட்டு முரண்படவும் தமக்குள் சேர்ந்து வெளியாருடன் போரிடவும் தலைப்பட்டனர்.

காலக்கிரமத்தில் ஆங்கிலேயர் ஆட்சி நிலை பெற்றது. 1833ம் ஆண்டில் முழு இலங்கையும் ஆங்கிலேயர் நிர்வாக ஒருமைப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. அதாவது 185 வருடங்களுக்கு முன்னர் தான் காலாதிகாலமாகத் தனித்து வாழ்ந்த இந்நாட்டின் வெவ்வேறு மக்கட் கூட்டங்கள் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர். நிர்வாக மொழியான ஆங்கிலம் ஓரளவு படித்தமக்களை ஒன்றிணைத்தது. மக்கள் நடமாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கின. வேற்று மதங்கள் இனங்களை ஒன்றிணைத்தன. நூற்றாண்டு காலமாக ஒரே இடத்தில் வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்கள் தொழில், வாணிபம் நிமித்தம் குடிபெயர ஆரம்பித்தார்கள்.

ஆங்கிலேயர் காலத்தில் தமிழர்கள் நாடு பூராகவும் பரந்து வாழ்ந்தார்கள். உதாரணத்திற்கு பல தமிழ்க் குடும்பங்கள் கிட்டத்தட்ட 100, 150 வருடங்களுக்கு முன்னர் வடகிழக்கில் இருந்து வந்து கொழும்பில் குடியேறின. கல்லூரிகளில் பல்லின மக்களும், பன்மொழி மக்களும், பல்மத மக்களும் ஒருமித்து கல்விகற்றனர். ஆனால், அவர்களை ஆங்கில மொழியே ஒன்று சேர்த்தது. என் இளமைக் காலத்தில் நான் சிங்களவர், தமிழர், பறங்கியர், இந்திய வம்சாவழியினர், முஸ்லீம்கள் மலாய்க்காரர், சீனர் என்ற பல்வித மாணவர்களுடன் சேர்ந்து கல்வி கற்றேன். ஆங்கில மொழி எம்மை இலங்கையர் என்று அடையாளங் காண வைத்தது.

இந்த நிலை சுதந்திரத்தின் பின்னரும் நீடிக்கும் என்றே பெரும்பான்மை இனம் அல்லாதோர் நினைத்திருந்தனர். அதற்கேற்றவாறே ஆங்கிலேயர்களுக்கு உத்தரவாதங்களைச் சிங்கள அரசியல்த் தலைவர்கள் கொடுத்தும் இருந்தனர். முதல் அரசியல் யாப்பின் உறுப்புரை 29ல் பக்கச் சார்பான பாகுபாடு காட்டும் சட்டங்களை நாம் இயற்ற மாட்டோம் என்ற உத்தரவாதத்தை பெரும்பான்மையினர் கொடுத்திருந்தனர். அவர்களை வெள்ளையரும் பெரும்பான்மையினர் அல்லாதோரும் வெகுவாக நம்பினர்.

நடந்தது என்ன? மலையக மக்களின் வாக்குரிமை சுதந்திரம் கிடைத்த அடுத்த வருடமே பறிக்கப்பட்டது. அரசாங்க சேவையில் பரவலாகப் பதவி வகித்த வடகிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் மக்களின் வயிற்றிலும், பறங்கியர்கள், இந்திய வம்சாவழியினர், மலாய்க்காரர், சீனர் போன்றோரின் வயிற்றிலும் அடிப்பது போல் 'சிங்களம் மட்டும் சட்டம்' 1956 இல் கொண்டு வரப்பட்டது. கிறீஸ்தவ மதத்தினர் பெரும்பான்மையாக நடாத்திய பல கல்லூரிகள் அரசால் 1964ஆம் ஆண்டளவில் கையேற்கப்பட்டன. 1970 களில் கல்வியில் சமநிலைப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டு வடமாகாணத் தமிழ் மாணவ மாணவியரின் மேற்படிப்புக்குத் தடைகள் போடப்பட்டன. வடகிழக்கு மாகாணக் காணிகளில் அந்தந்த மாகாண மக்களைக் குடியேற்றாது வெளியில் இருந்து சிங்களம் பேசும் மக்கள் கொண்டு வரப்பட்டு தொடர்ந்து வந்த அரசாங்கங்களினால் அவர்கள் அங்கு குறியேற்றப்பட்டார்கள்.

இவை யாவும் நடைபெற ஏதுவாக அமைந்தது நிலம்சார் பிரதிநிதித்துவமே. கூடிய நிலம் சிங்கள மக்களுக்குச் சொந்தமாக இருந்ததால் அவர்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினராகி தமிழ் மக்களுக்கு எதிராகவும் வேறு சிறுபான்மையினருக்கு எதிராகவும் சட்டங்களை ஆக்கவும் நடைமுறைப்படுத்தவும் வழி வகுத்தது. வடகிழக்கில் பெரும்பான்மையினரான தமிழ் பேசும் மக்கள் முழுநாட்டிலும் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டனர். சுதந்திரம் கிடைத்து பத்து வருடங்களுக்கு மேலாக மலையகத் தமிழ் மக்கள் வாக்கின்றி வாழ்ந்து வந்தனர்.

ஆகவே இனப்பிரச்சினையின் அடிப்படைக் காரணம் சிங்கள அரசியல்வாதிகள் அதிகாரங்களைத் தம்வசப்படுத்தி மற்றைய இனங்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வந்தமையே. ஆங்கிலேயர் நாட்டை விட்டு வெளியேறிய போது இருந்த நிலையை நீடிக்க விட்டிருந்தார்களானால் இனப்பிரச்சினை ஏற்பட்டிராது, பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்காது, நிர்வாகம் சீர்குலைந்திருக்காது. நாடு வெற்றி நடைபோட்டிருந்திருக்கும். இந்த நாடு பல் மொழி, பல்லின, பன்மதங்கள் உள்ள நாடு என்பதை ஏற்க மறுத்து சிங்கள பௌத்த நாடாக இந்நாட்டை மாற்ற எத்தனங்கள் எடுக்கப்பட்டன. சரித்திரமே திரிபுபடுத்தி வெளியிடப்பட்டது. இதனால்தான் இனப் பிரச்சினை கூர்மை அடைந்தது.

சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் தத்தமது இடங்களில் வாழ்ந்து வந்த மக்கட் கூட்டங்கள் ஆங்கிலேயர்களின் நிர்வாக ஏற்பாட்டால் இந் நாட்டில் இடம் பெயர்ந்து வாழத் தலைப்பட்டார்கள். ஆங்கிலத்திற்கு முதலிடம் கொடுத்து ஆங்கிலேயர் காலத்து நிர்வாகத்தைத் தொடரச் சிங்கள அரசியல்வாதிகள் சுதந்திரத்தின் பின்னர் முன்வரவில்லை. அவ்வாறு முன்வந்திருந்தார்கள் எனில் முன்னர் கூறியவாறு இனப்பிரச்சினை ஏற்பட்டிராது. நாம் யாவரும் இலங்கையர் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் சுடர்விட்டு எரிந்திருக்கும். சிங்கள மொழிக்கும் பௌத்தத்திற்கும் முன்னுரிமை கொடுக்க நினைத்ததால் சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்கள் பாதிப்புக்கு ஆளானார்கள். இப்பொழுதும் அதே மனோநிலையில்த்தான் அரசியல் நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன. பௌத்தத்திற்கு முதலிடம், சிங்கள மக்களுக்குப் பெரும்பான்மை அதிகாரத்தை அளிக்கும் ஒற்றையாட்சி என்பனவே அவர்களின் கோரிக்கை.

இந்தப் பின்னணியில்த்தான் வடகிழக்கு இணைப்பு நோக்கப்பட வேண்டும். இன்றைய வடகிழக்கின் நிலையை நோக்குங்கள். எமது மக்கள் பத்து இலட்சம் அளவில் வெளிநாடு சென்றுவிட்டார்கள். அரசாங்கம் வெளிமாகாணங்களில் இருந்து தமிழ் பேசும் மக்கள் அல்லாதவர்களை வடகிழக்கில் குடியேற்றி வருகின்றார்கள். முன்னர் காலத்திற்குக் காலம் மீன் பிடிக்க வந்த தெற்கத்தைய மீனவர்கள் இப்பொழுது நிரந்தர வசிப்பிடங்களை அமைத்து தமிழ்பேசும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரங்களை பாதிப்படையச் செய்துள்ளார்கள். அவர்கள் தமது புலம் விட்டுச் செல்ல வழிவகுத்துள்ளார்கள். இராணுவம் ஒன்றரை இலட்சம் பேர் 65,000 ஏக்கர் காணிகளில் வடமாகாணத்தில் நிலை கொண்டுள்ளார்கள். 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் எமக்குப் போதுமான அதிகாரங்கள் இல்லை. ஆளுநர் கூடிய அதிகாரங்களை வைத்துக் கொண்டுள்ளார். தெற்கில் இருந்து முதலீட்டாளர்கள், வணிகர், வாணிபர் என்று பலரும் வந்து எமது வளங்களைச் சூறையாடிச் செல்கின்றார்கள். உணவகங்கள் உள்ளிட்ட வியாபார ஸ்தலங்கள் பலவற்றை இராணுவத்தினரும் கடற்படையினரும் நடத்தி வருகின்றனர்.

போதைவஸ்த்துப் பாவனை எம் இளைஞர்களிடையே பரவி வருகின்றது. அதனால் வன்முறையும் பரவி வருகின்றது. பாலியல் குற்றங்கள் மலிந்து வருகின்றன. கட்டுப்படுத்த எமக்கு அதிகாரம் இல்லை. வடகிழக்கில் தற்போதைய நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது என்பதை நான் கூறி வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. எமது தொகை குறைகின்றது. மற்றவர்களின் தொகை கூடுகின்றது. தமிழ் மக்களுடைய சனப் பெருக்க வீதமே சகல இனங்களுக்குள்ளும் ஆகக் குறைந்தது என்று கூறப்படுகின்றது. ஆகவே தமிழ் மக்களின் தொகை படிப்படியாக வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ் பேசும் மக்கள் வடகிழக்கில் சேர்ந்து வாழ வேண்டுமா பிரிந்து வாழ வேண்டுமா? பிரிந்து வாழ்ந்தால் எமது நிலை சீர் கெட்டுவிடும். பறங்கியர்களுக்கு இந் நாட்டில் ஏற்பட்ட கதியே இன்னும் 25 வருடங்களில் எமக்கும் ஏற்பட்டுவிடும். எம்மவர் வெளியேறி விடுவார்கள். மிகுதி இருப்பவர்களைப் பெரும்பான்மைச் சமூகம் உட்கிரகித்துக் கொள்ளும். ஆகவே வடகிழக்கு இணைப்பு ஒன்றே எமக்குப் பலத்தை அளிக்கும். எமது மக்கட் தொகை அருகி வருவதைத் தடுக்கும்.

ஆனால், வடக்கு - கிழக்கு இணைப்பு தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் உருவாக முடியாது. தமிழ் பேசும் வடகிழக்கு அலகில் முஸ்லிம் மக்களுக்குச் சமச்சீரில்லாத தனி அலகை உருவாக்குவதன் மூலமே வடகிழக்கு இணைப்பு இனிச் சாத்தியமாகும். இந்தியாவின் பங்கு இதில் இனி இருக்காது என்பது தெளிவு. 18 வருடங்களுக்கு வடக்கு - கிழக்கு இணைந்திருந்ததெனில் அது இந்தியாவின் உள்ளீடலால்தான்.

எனவே, இன்றைய நிலையில் வடக்கு - கிழக்கு இணைவு அவசியம் என்பது எம் மக்கள் யாவருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

வடக்கு - கிழக்கு இணைப்பு இல்லாத தீர்வு தமிழ்ப் பேசும் மக்களைப் பாதிக்கும். பௌத்த சிங்கள மக்களின் கையை ஓங்க வைக்கும். இதனால் தமிழ்ப் பேசும் மக்களின் ஒற்றுமையும் சீர்குலைந்து போகும்.

எமது அதிகாரங்கள் பாதிக்கப்பட்ட நிலையிலேயே நாம் இன்று உள்ளோம். வடக்கு - கிழக்கு இணைப்பு, சுயாட்சி, சமஷ்டி போன்ற கருத்துக்கள் வெறும் கருத்துக்கள் அன்று. எமது பாதுகாப்புக்கான கேடயங்கள். அவற்றை நாம் கைவிட்டால் எம்மை அடிபணிய வைப்பதும் அடியற்றுப் போக வைப்பதும் இலகுவாகிவிடும். இதனை எம்மக்கள் வரவேற்கின்றார்களா?

எமது மக்கள் தனிநாடு கோருவதையும் அதற்காக உணர்ச்சி மேலீட்டில் உரக்கக் கத்துவதையும் இனி நிறுத்த வேண்டும். இவ்வாறான கருத்துக்கள் அரசைக் கெட்டியடையச் செய்யுமே தவிர எம்முடன் சுமூகமாக நடந்து கொள்ள உதவாது. வடகிழக்கு இணைப்பு என்பது தனி நாடொன்றை உருவாக்க நாம் போடுஞ் சதி என்றே அரசாங்கம் பிறநாட்டு இராஜதந்திரிகளுக்குக் கூறிவருகின்றது. அதனால் சர்வதேச கருத்துக்கள் வடகிழக்கு இணைப்புக்கு எதிராகவே இருக்கின்றது. முஸ்லிம் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பும் அரசுக்குச் சார்பாகவே அமைந்துவிட்டுள்ளது. தனிநாடு என்பது பிற வல்லரசுகளின் தயவுடனேயே இயற்றப்பட முடியுமே தவிர நாம் கேட்டுப் பெறக் கூடியதொன்றல்ல.

அடித்துப் பறிக்க முடியும் என்ற கருத்தும் அண்மையில் மௌனிக்கப்பட்டுவிட்டது. நாம் தனித்து வாழத் தலைப்பட்டால் தலை நாடுகளின் சார்பாளர்களாகவே நாங்கள் மாற நேரிடும். என்றும் மாறாத பகைமையை எமது சிங்கள சகோதரர்களுடன் நாம் பாராட்ட வேண்டிய ஒருநிலை ஏற்படும். உண்மையில் ஆயுதங்கள் மௌனித்ததும் தனி நாட்டுக்கான கோரிக்கையும் அவற்றுடன் மௌனிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த எண்ணத்தைச் சிலர் இன்னமும் தம் உள்ளங்களில் சுமந்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் இந் நாட்டு மக்களிடையே சுமூக உறவு ஏற்பட முடியாது என்பதை எம்மவர் ஆய்ந்துணர்வார்களாக! எமது மக்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இங்கு எமது நிலைமையறியாமல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இங்கு இன சௌஜன்யம் வளர இடம் கொடுக்க வேண்டும்.

முஸ்லிம் தலைவர்கள் வடக்கு - கிழக்குக்கு வெளியில் இருந்து வரும் போது அவர்களின் தேர்தல் தொகுதியில் வடகிழக்கு இணைப்பு எடுபடாது என்ற காரணத்தினால் அவர்கள் வடக்கு - கிழக்கு இணைப்பை எதிர்க்கவே செய்வார்கள். முஸ்லிம் தனி அலகொன்றை உறுதி செய்த பின் வடகிழக்கு இணைப்பு பற்றிய கருத்தறியும் பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்புக்கும் தனித்துவத்தைப் பேணுவதற்கும் நாம் எடுக்கும் நடவடிக்கைகளில் தெற்கில் உள்ள சிங்கள மக்களை உள்ளடக்க வேண்டும் என்று அரசாங்கத்தில் உள்ள சிலர் எதிர்பார்ப்பது நியாயமான ஒரு கோரிக்கை அன்று. எமது வருங்காலத்தை நாம் தீர்மானிக்க எமக்கு உரித்து அளிக்கப்பட வேண்டும்.

ஆகவே, சிலருக்கு எரிச்சலை மூட்டுகின்றதோ இல்லையோ எமது பாதுகாப்புக்கும் நாம் தொடர்ந்து இங்கு வாழ்வதற்கும் ஏற்புடைத்தான ஒரு மார்க்கத்தை நாம் வலியுறுத்துவது எந்த விதத்திலும் பிழையாகாது.

இவ்வாறு வடக்கு - கிழக்கு இணைப்பில்லா இனப்பிரச்சினைத் தீர்வொன்றை நாம் நாடினால் எமது இனம் அழிய அது அடிகோலும் என்பதே உண்மை“ என குறிப்பிட்டுள்ளார்.

Published in உள்நாடு

இரா.சம்பந்தன் போன்று அரசுக்கு அடிப்பணிந்துப்போகும் ஒரு எதிர்க்கட்சித் தலைவரை வரலாற்றில் பார்க்கவில்லை என்று வெளிச்சம் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வெளிச்சம் அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பின் அருண் தம்பிமுத்து இவ்வாறு கூறினார்.

60 வருடகாலமாக தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்காகப் போராடிவருவதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் தீர்வுக்காக இளைஞர்களின் எதிர்காலத்தையும் தியாகம் செய்ய தயாராகவுள்ளதாக கூறியுள்ளார். 60 வருட போராட்டத்தின் மூலம் தமிழ் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துள்ளமையே இவர்கள் செய்துள்ளனர்.

வரலாற்றில் சம்பந்தன் போன்று அரசுக்கு அடிப்பணிந்து செயற்படும் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இருந்திருக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published in உள்நாடு

தொழில் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள 191 தொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

உழைக்கும் மக்களின் நன்மைக்காக ஆரம்பிக்கப்பட்ட பாரிய நிதியமான ஊழியர் சேமலாப நிதியத்தினை பலப்படுத்துவதற்கு புதிதாக நியமனம் பெற்ற தொழில் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

எண்பத்தைந்து இலட்சம் அளவிலான அரச மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்களுள் சுமார் இருபத்தாறு இலட்சம் பேர் மாத்திரமே தற்போது ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு வழங்குகின்றனர். கட்டாயமாக பங்களிப்பு வழங்க வேண்டிய மேலும் பத்து இலட்சம் பேர் அளவில் காணப்படுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இவர்கள் அனைவரையும் பங்களிப்பு வழங்கச் செய்வதற்காக புதியதாக நியமனம் பெற்றவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

உரிய போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி நியமனம் கிடைக்கப் பெறாதவர்களின் எதிர்ப்பு தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி;, ஏதேனும் வகையில் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பின் அது தொடர்பாக விசாரணையொன்றினை மேற்கொண்டு தவறினை சீர்செய்து அவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு உரிமைகளையும் வரப்பிரசாதங்களையும் உரியவாறு வழங்கி உத்தியோகத்தர்கள் சிறந்த சேவையை வழங்கக்கூடிய பின்னணியினை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Published in உள்நாடு

எழுது கருவிகளினால் கிறுக்கப்பட்ட, சேதப்படுத்தப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட, அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள், வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் செல்லுபடியாகாது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இவ்வாறான நாணயத் தாள்கள் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் வங்கிகளினால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும், அவை பெறுமதியற்றவையாகிவிடும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன், நாணயத்தாள்களின் மீது எழுதுதல், வரைதல், முத்திரையிடல், வெட்டுதல் அல்லது சேதப்படுத்தல் தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

Published in உள்நாடு

தேசிய அரசாங்கத்தை விட்டு விலகுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறுப்புத் தெரிவித்துள்ளதால், கூட்டு எதிரணியுடன் நடத்தப்பட்டு வந்த பேச்சுக்கள் முடங்கியுள்ளன.

உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், மஹிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியும் பேச்சுக்களை நடத்தி வந்தன.

கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, ஐ.தே.கவுடனான கூட்டு அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என்று கூட்டு எதிரணி நிபந்தனை விதித்திருந்தது.

எனினும், இப்போது உடனடியாக அரசாங்கத்தை விட்டு விலக முடியாது என்று சுதந்திரக் கட்சியின் சார்பில் பேச்சுக்களை நடத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில், அவ்வாறு விலகிக் கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து இரண்டு தரப்பும் இணைந்து தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பான பேச்சுக்கள் முடங்கியுள்ளன.

அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்ளாத வரையில் சுதந்திரக் கட்சியுடன் இனிமேல் பேச்சுக்களுக்கு வாய்ப்பில்லை என்று, கூட்டு எதிரணியின் தரப்பில் பேச்சுக்களில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Published in உள்நாடு

உள்ளூராட்சி சபைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீளப் பெறப்பட்டதையடுத்து, மேலும் 301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தக் கூடிய சூழல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அரச வர்த்தமானியில் ஏற்பட்ட அச்சுப் பிழைகளால் 40 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியாதுள்ளது.

திருத்தப்பட்ட வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னரே இந்த சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Published in உள்நாடு

புசல்லாவ ரொத்சைல்ட் தோட்டம் ஓ.ஆர்.சி பிரிவில் அதிக மழை காரணமாக மின்சார விநியோக கம்பி அறுந்து விழுந்ததில் சிக்குண்டு 28 வயதுடை கலு என்று அழைக்கப்படும் எஸ்.அருனசாந்த என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பிலான விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், சடலம் புசல்லாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டவுள்ளன.

Published in உள்நாடு

கடும் காற்றுடன்கூடிய அடைமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காணாமல் போயுள்ளதுடன், 52 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 18,752 குடும்பங்களைச் சேர்ந்த 61,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த 961 குடுங்பங்களைச் சேர்ந்த 3,509 பேர் 30 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தத்தால் 481 வீடுகள் முழுமையாகவும் 15, 780 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தொடர்ந்தும் கடும் காற்றுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டிற்கு மேற்கு பகுதியில் அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் கொழும்பிலிருந்து 600 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சரத் பிரேம்லால் தெரிவித்தார்.

எனினும் அதன்தாக்கம் இன்று முதல் குறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இன்று வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் இன்று இரவும் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கடற்பிரதேசங்களில் தொடர்ந்தும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்களை அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் குறித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்ககூடும் என்பதால் கங்கைகளின் இருமருங்கிலும் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Published in உள்நாடு

சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராக உள்ள படம் சங்கமித்ரா. படம் பற்றியும், படத்தின் நடிகர்களின் விபரங்களும் வெளியாகிவிட்ட நிலையில்,

எப்போது படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது என்ற விபரம் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த வருடம் ஏப்ரல் 14ஆம் திகதி தமிழ் வருடப் பிறப்பு முன்னிட்டு தொடங்கவுள்ளார்கள்.

இந்த பிரம்மாண்ட படத்தில் திஷா படானி, ஜெயம் ரவி, ஆர்யா என பலர்  நடிக்கின்றார்கள்.

படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றார்.

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தலதாமாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதோடு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் தலைமை பிக்குகளை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ஹம்பாந்தோட்டை துறைமுக ஊளியர்களின் தொழிற் பாதுகாப்பு தெடர்பாக நான் தனிப்பட்ட முறையில் சீன நிறுவனத்துடன் பேசியுள்ளேன். நான் ஒருவரை கூட தொழிலில் இருந்து நீக்க வேண்டாம் என்றேன் ஆனால் இன்று அந்த அமைச்சு எனக்குறியதல்ல.

இன்றும் நான் எனது கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிலுக்கு ஆபத்து ஏற்படுமாயின் நான் அரசாங்கத்தில் இருந்தவாரே அதற்கு எதிரான நடவடிக்கையை எடுப்பேன்.“ என அமைச்சர் தெரிவித்தார்.

Published in உள்நாடு
Page 1 of 4

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top